குரு பார்வை I – நெல்லைத் தமிழும் தையத்தக்கா ஆட்டமும்


ராஜன் இந்த தளத்துக்கு வருபவர்களுக்கு தெரிந்தவர். அவர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்துக்கு இந்த விமர்சனத்தை எழுதி இருக்கிறார். கொஞ்ச நாள் முன்னால் அனுப்பினார், போட லேட் ஆகிவிட்டது. இந்த விமர்சனத்தில் எனக்கு முழு இசைவு கிடையாது. ஆனால் அவர் நக்கலை ரசித்தேன். இன்னும் ஒரு பகுதி வரும். ஓவர் டு ராஜன்!

எனக்கு குரு பார்வை சரியில்லை என்று ஜோசியத்தில் இருந்தது போலும், வெள்ளிக்கிழமை இந்தியன் ஸ்டோர்ஸுக்குச் சென்ற பொழுது என்னை பார்த்து விதி சிரித்துக் கொண்டிருந்தது தெரியாமல் அங்கு ஓசிக்குக் கிடைக்கும் ஒரு தமிழ்ப் பட டிவிடியை தொட்டுவிட்டேன். வழக்கமாகத் தமிழ் பட டிவிடி ஓசியில் கொடுத்தால் கூட இடது கையால் கூட தொடுவதில்லை. அந்த விரதத்தைத் தொடர்ந்திருந்தால் ஒரு மஹா துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தப்பியிருப்பேன். என் கெட்ட நேரம், நான் குருவைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. கிரக குருவை அல்ல குரு என்ற மணிரத்னத்தின் ஒரு பாடாவதியான படு திராபையான படு அபத்தமான திரைப் படத்தை. நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த மிகக் கொடுமையான மோசமான திரைப்படம் குரு. இந்த இயக்குனனரையா போயும் போயும் இந்தியாவில் சிறந்த இயக்குனர் என்கிறார்கள்? பரிதாபம். இவர்தான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் நிச்சயமாக இந்திய சினிமா தன் அந்திமக் காலத்தில் இருக்கிறது என்பேன் நான்.

நான் வழக்கமாக டப்பிங் படங்களைப் பார்ப்பது இல்லை. தெலுங்கு படங்களைத் தமிழில் “கொன்று விடுவேன் உன்னை நான் நேற்று’ என்ற ரீதியில் டப் செய்து கொல்லுவார்கள். அந்தக் காலத்தில் தமிழில் தனியாகத் தமிழினத் தலைவரின் வாரிசுகள் சன் டி வி ஆரம்பிக்கும் முன் , தூரதரிசனில் மத்தியான வேளைகளில் ஜூனூன் என்று தொடர் போடுவார்கள். தமிழை ஒழிக்க இந்திக் காரர்கள் திட்டமிட்ட போட்ட டப்பிங் சதி அந்தத் தொடர்கள். கேட்க்கக் கர்ண கடூரமாய் இருக்கும். அதையும் நம் தாய்க்குலங்கள் விடாது பார்ப்பார்கள். இவ்வளவு மோசமான தொடரையே இவ்வளவு மோசமான தமிழில் சலிக்காமல் பார்க்கும் நம் தாய்க்குலங்களைக் கண்ட தைரியத்தில்தான் அதை விட மோசமான சீரியல்களை அதை விட மோசமான தமிழில் கொடுத்து இன்று வரை காண்பித்து அழ வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சன், ஜெயா எல்லோரும். குரு டிவிடியைப் பார்க்க எடுத்தது ஒரு கெட்ட நேரம் என்றால் அதிலும் தமிழில் டப் செய்யப்பட்ட வெர்ஷனைப் பார்க்க எடுத்தது என் கெட்ட நேரத்தின் உச்சம். எனக்குக் கிடைத்த double whammy.

படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சிக் கிராமம் என்று போட்டுவிட்டு ஏதோ குஜராத்திக் கிராமத்தைக் காண்பிக்கிறார்கள். அதில் ஒருவர் குல்லா போட்டுக் கொண்டு, பஞ்சகச்ச வேஷ்டி கட்டிக் கொண்டு ஒரு ப்ளாக் போர்டைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு திறந்த வெளியில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு கரும் பலகையும் அதில் ஒரு கட்டம் முக்கோணம் வரையப் பட்டிருப்பதால் அவர் கணக்கு வாத்தியார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் கொடுமை, இப்படி ஒரு சிந்தனைப் பஞ்சம் அந்த இயக்குனருக்கு. அந்த வடநாட்டு பனியா நெல்லைத் தமிழில் பேசுவது அடுத்த தமாஷ். அவரைச் சுற்றி ஒரு பெஹன்ஜி வட நாட்டு மார்வாரி சேலையில், இரண்டு இளைஞர்கள் பைஜாமா குர்தாவில் இருந்து கொண்டு எல்லோரும் நெல்லைத் தமிழ் (அதுவும் சினிமாத்தனமான நெல்லை accent) பேசுகிறார்கள். இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் அழகிய கிராமம். அங்கிருக்கும் சுப்பிரமணிய சுவமி கோவில் பிரபலம்,. அங்கிருந்து பார்த்தால் குற்றால அருவி தெரியும். எங்கேயோ இருக்கும் குஜராத்/ராஜஸ்தான் கிராமத்ததக் காட்டி அதை ஏன் இலஞ்சி என்று அழைக்க வேண்டும்? அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே? இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி? அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும்? ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை? மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து? முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை படம் முழுக்க சுத்த அபத்தக் களஞ்சியம்.


மையா மையா பாட்டு

பையன் ஃபெயிலாகி விட்டதால் துருக்கிக்குப் போகிறான். துருக்கியிலும் பாருங்கள் எல்லோருமே நெல்லைத் தமிழில் பேசுகிறார்கள் 🙂 இப்படி இஸ்தான்புல் தென்காசிக்குப் பக்கத்து ஊர் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் வரை எனக்குத் தெரியாது அப்படி ஒரு நெல்லைத் தமிழ் கொஞ்சுகிறது. எல்லோரும் ஏலே எலே போட்டுப் பேசிக் கொள்கிறார்கள். அங்கு சென்றதும் இந்தப் பையன் என்ன செய்கிறான் என்பது எல்லாம் காட்டப்படுவதில்லை. ஒரு பெல்லி டான்சரின் ஆட்டதுக்குப் போய் விடுகிறான். அங்கு ஒரு பெண்மணி கடுமையான துணிப் பஞ்சத்தில் தன் நீண்ட இடுப்பையும் அதை விட நீண்ட கால்களையும், செழுமையான மேல்புறங்களையும் காண்பித்து காக்காய் வலிப்பு வந்தவர் போல் என்னவோ சொல்லிக் கொண்டு ஜிங் ஜிங் என்று குதித்துக் கொண்டிருக்கிறார். நடனமாம் அது. ஆனால் பாருங்கள் அவர் துருக்கியில் ஆடையில்லாமல் ஆடினாலும் கூட அவர் தன் தாய்த் தமிழை மட்டும் மறப்பதேயில்லை. அவர் பாடியதை உற்றுக் கேட்டதில் காதல், தேன், உயிர், என்று வையிற முத்துவின் வழக்கமான தமிழ் பாடல் வார்த்தை மாட்ரிக்ஸில் காணப்படும் வார்த்தைகள் கேட்க்க முடிந்தது. ஆக அவர் தமிழில்தான் பாடினார் அதுவும் துருக்கியில். அப்புறம் துருக்கிக்கு வேலைக்கு வந்த இந்த இலஞ்சிக்காரப் பையன் பெரிய பையனாகி ஏதோ பிசினஸ் பண்ணுகிறேன் என்கிறான் அது என்ன பிசினஸ் என்பதை இயக்குனரும் சொல்வதில்லை, நாமும் கேட்பதில்லை. அப்புறம் திடீரென்று ஒரு பெட்ரோல் ரிஃபைனரியைக் காட்டி அதன் ஆங்கில மேனேஜர் இந்தப் பையனைப் பாராட்டி ப்ரோமோஷன் கொடுத்து விடுகிறார். அவர் சொல்லுவதை ஒரு அதிகாரி பையனிடம் சொல்லுகிறார். வேறு எதிலே? திருநெல்வேலித் தமிழிலில்தான் 🙂 ஆக துருக்கியில் பாதி பேர் திருநெல்வேலித் தமிழ்தான் பேசுகிறார்கள் என்பது மட்டும் எனக்கு குன்ஸாகப் புரிந்தது. இவர்கள் எல்லோரும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு திரியும் பொழுது அந்தப் பெண்மணி மட்டும் பாவம் மேலே ஒரு சின்னத் துண்டு கீழே ஒரு சின்னக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுகிறார். எதற்காக ஆடுகிறார் அவருக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம், இவன் என்ன வேலை பார்க்கிறான் எப்படிச் சம்பாதிக்கிறான் என்றெல்லாம் யாரும் கேட்டு விடக் கூடாது மூச். அப்புறம் இந்தப் பையனும் மீண்டும் குஜராத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்து இலஞ்சிக் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகிறான்.

அப்புறம் ஊரில் அதுதான் குஜராத் இலஞ்சியில் எல்லோரு நெல்லைத் தமிழ் பேசி வரவேற்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் அருவி, குளம், ஆறு என்று ஓடிப் போய் ஓடிப் போய் ஒரு பாடலைப் பாடிக் கொண்டே பல்வேறு தினுசாக ஆடுகிறார். அவர் முதுகுப் பக்கத்தை மட்டும் அந்தப் பாழாய்ப் போன இலஞ்சிக் கிராமத்தில் மறைக்க துணியில்லாத கொடுமை பாருங்கள். முதுகு முழுக்க எப்பொழுதும் திறந்தே கிடக்கிறது 🙂 குளிராதோ பாவம்? கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும்? மணிரத்தினத்துக்கே வெளிச்சம். அப்புறம் ஒரு ரயிலில் ஓடிப் போய் அழுது கொண்டு எங்கோ போகிறார். ஆனால் அதே டிரெயினில் துருக்கிப் பையனும் திரும்பி வர அதே டிரெயின் மீண்டும் அதே ஊருக்கே வருகிறது அந்தப் பெண் அதே ஊரில் ஏறி அதே ஊரில் இறங்குகிறார் 🙂 இதெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகளில் சேர்க்க வேண்டும். அப்புறம் அந்தப் பெண்ணையே கலியாணம் செய்து கொண்டு அவரையும் அவரது தம்பியையும் கூட்டிக் கொண்டு பாம்பேக்குக் குடியேறிவிடுகிறார் குரு. அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டவுடன் ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து அப்புறம் இன்னும் ஒரு நூறு தடியன்களும் சேர்ந்து கொண்டு தும் தும் என்று குதிக்கிறார்கள் நடனமாம். எதற்கு அப்படி காக்கா வலிப்பு வந்தது போல் எல்லோரும் ஆட வேண்டும் என்பது எனக்குப் புரிவதில்லை. படத்தில் பத்து நிமிடத்துக்கொரு முறை இது போல காரண காரியம் இல்லாமல் ஒரு 100 பேர் சேர்ந்து கொண்டு இந்த குருவுடனும் அவன் மனைவியுடனும் என்று குதியோ குதி என்று குதித்துக் கொண்டே ஆடுகிறார்கள். இப்படி யாரேனும் நிஜ வாழ்வில் செய்தால் இடுப்பு சுளுக்கி கொண்டு விடும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். இப்படியாக கால்வாசிக் கதை நெல்லைத் தமிழும், துருக்கியும், அரைகுறை காக்கா வலிப்பு நடனமுமாகச் செல்கிறது. எனக்கு இதற்கு மேல் தாங்கவில்லை. மகா போர். கொட்டாவி கொட்டாவியாக வந்தது. இந்தக் கண்றாவியைத் தொடர்ந்து பார்ப்பதற்குப் பதிலாக ஏதாவது படிக்கலாம் என்று புத்தக அலமாரியில் கைக்குக் கிடைத்த இரும்பு குதிரைகள் எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டேன்.

அப்புறம் இன்று காலை எழுந்து மிகுந்த தயக்கத்துடன் மணிரத்தினம் படம் என்றால் ஏதாவது ஒரு சில காட்சிகளாவது நன்றாக இருக்கும் மனம் தளர வேண்டாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் டிவிடி ப்ளேயரை முடுக்கினேன். பம்பாய்க்குச் சென்ற ஹீரோ ஏதோ சந்தையில் எல்லோரும் கூச்சலாய் கத்திக் கொண்டிருக்கும் இடத்தில் போய் தான் பிசினஸ் பண்ண வந்திருக்கிறேன் என்கிறார். அதென்ன பிசினஸோ? அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதிபரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? அவர் மூலம் அந்தக் காண்டிராக்டரை எதிர்த்து ஏதோ நீயூஸ் போடுகிறார். ஒரு மண்ணும் புரியவில்லை. அப்புறம் அந்த காண்டிராக்டர் விலகி விட இவர் பிசினஸ் தொடங்குகிறார். ஏதோ சீமா சில்க் என்று ஏதோ சில்க் வாங்கி விற்கிறாராம் அதையெல்லாம் விபரமாகக் காட்டவில்லை. 100 பேரோடு சேர்ந்து குத்துப்பாட்டு டான்ஸ் ஆடுவதைக் காண்பிக்கவே டைரக்டருக்கு நேரம் பற்றவில்லை அதற்கு மேலே என்ன பிசினஸ் என்ற விபரம் எல்லாமா காட்டப் போகிறார்?

அப்புறம் அவர் ஒரு பாக்டரி கட்டப் போவதாகச் சொல்லுகிறார். பொண்டாட்டியும் மச்சானும் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போய் அங்கு அந்தப் பெண்டாட்டி மீண்டும் பரதம், கதக், கதகளி, வலிப்பு, ராப், ஒடிசி போன்று எல்லாவகை நடனங்களையும் திறந்த முதுகுடன் காடு ஏரி குளம் குட்டை எல்லாவற்றிலும் போய் போய் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பம்பாயில் இவர் பெரிய பணக்காரராகி பென்ஸ் கார் வாங்கி விடுகிறார். மீண்டும் ரெண்டு பேரும் சேர்ந்துவிட அதற்கு ஒரு டான்ஸ் ஆடுகிறார்கள். இவரை ஆரம்பத்தில் ஆதரித்த பத்திரிகை அதிபர் இவரது பிஸினஸ்ஸில் நேர்மையில்லை என்று சொல்லி பத்திரிகையில் இவரது நிறுவனத்தைக் கிழி கிழியெனக் கிழிக்கிறார். குருபாய் ஏதோ பெட்ரோல் கம்பெனி ஆரம்பித்து நடத்துகிறார் என்பது மட்டும் குன்ஸாகப் புரிகிறது அதையும் போகிற போக்கில் சொல்லுகிறார்கள். கம்பெனியின் போர்ட் மீட்டிங் திறந்த வெளியில் நடக்கிறது. அவரும் அரசியல்வாதி மாதிரி பேசுகிறார். மக்கள் கை தட்டுகிறார்கள் எனக்குத் தலை சுற்றியது. அப்புறம் இவருக்கும் அந்தப் பத்திரிகைக்கும் பெரிய லடாய். அந்தப் பத்திரிகைக்காரருக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவருக்கு ஏதோ நோய் அவளை ஒரு நிருபர் காதலிக்கிறார். மழையில் நின்று கொண்டு இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கஷ்டம்., அந்தப் பத்திரிகக நிருபர் ஏதோ துப்பறிந்து குருபாய் கம்பெனியைப் பற்றி எழுதி விட கம்பெனி மூடி விடுகிறார்கள் ஜெனரல் பாடி மீட்டிங் கொட்டும் மழையில் திறந்த வெளியில் நடக்கிறது. ஸ்டாக் ஹோல்டர்ஸ் எல்லோரும் குடையைப் பிடித்துக் கொண்டு குருபாயைத் திட்டுகிறார்கள். குருபாய்க்கு ஸ்டிரோக் வந்து பக்க வாதம் வருகிறது. அரசாங்கம் கமிட்டி போட்டு விசாரிக்கிறது. அப்புறம் அவர் வீராவேசமாக ஒரு நீண்ட வசனம் பேசியவுடன் விட்டு விடுகிறது. சுபம்.

கடைசி வரை அது என்ன பிசினஸ் அதில் என்ன ஊழல் செய்கிறார் எப்படி அரசாங்கத்தை விலைக்கு வாங்குகிறார் போன்ற எவ்வித விபரங்களும் தரப்படுவதில்லை. நாயகிகளுக்கு ஏற்பட்ட துணி பஞ்சம் போலவே இயக்குனருக்கு லாஜிக் பஞ்சம், கதைப் பஞ்சம் எல்லாம் வந்துவிட டான்ஸ் பாட்டு என்று கர்ண கடூரமான கொடுமையான பாடல்களுக்கு வலிப்பு நடனம் ஆடுவதுதான் படம் முழுக்க நடக்கிறது. இந்தப் படம் ஏதோ திருபாய் அம்பானியைப் பற்றியது என்று யாரோ சொன்னார்கள் என்று இதை எடுத்துப் பார்த்த என்னைப் பிஞ்ச செருப்பால் அடிக்க வேண்டும். எந்த கம்பெனி CEO வேலை வெட்டி இல்லாமல் எப்ப பார்த்தாலும் குலுக்கி குலுக்கி ஆடிக் கொண்டிருக்கிறான்? கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ? படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் படம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா? ஒரு மட்டமான பாப் ஆல்பத்தை எடுத்து விட்டு திருபாய் அம்பானியைப் பற்றி எடுத்திருக்கிறேன் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம். ஏ ஆர் ரஹ்மான் இசை, ஐஸ்வர்யா மற்றும் ஷரவாத்தின் சதை, குலுக்கல் டான்ஸ்களை மட்டுமே நம்பி ஒரு திராபை படத்தை எடுத்துள்ளார்கள். மணிரத்தினமும் ரஹ்மானும் பேசாமல் ரிட்டையர் ஆகி விடுவது நமக்கு நல்லது. கொஞ்சமும் ரசனையற்ற மூளளயற்ற ஒரு சினிமா. பிலிமுக்குப் பிடித்த கேடு.

உங்களுக்கு கடும் எதிரிகள் யாராவது இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

21 Responses to குரு பார்வை I – நெல்லைத் தமிழும் தையத்தக்கா ஆட்டமும்

 1. ramalingam says:

  பிராமணர்கள் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மணிரத்னம் இவைகளை விட்டுத் தர மாட்டார்கள்.

  • RV says:

   இதிலே பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

  • விமல் says:

   நல்ல கலைகளை மற்றும் நல்ல படங்களை ரசிக்க ரசனை இருந்தால் போதும். இதற்கு ஜாதி, மதம் போன்றவை தேவை இல்லை.

  • Bags says:

   ராமலிங்கம்

   நீங்கள் எந்த ”பிராமணரிடம்” போய் எனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுங்கள் இல்லை பரத நாட்டியம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்? அவர் “நீ ”பிராமணன்”னாக இல்லாவிட்டால் கற்றுக் கொடுக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார்? அல்லது உங்களை மறைமுகமாக ஒதுக்கியிருக்கிறாரா? இப்படி சம்பந்தமே இல்லாமல் பழி போடுகிறீர்களே? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! ஒரு ஆசிரியருக்கு தேவை நல்ல மாணவன் மற்றும் சேவைக்கு தகுந்த ஊழியமுமே. இன்னும் சிலருக்கு காசு மட்டுமே. காசு கொடுப்பதானால் எந்த ஜாதி என்ன? அப்படியே ஒரு பேச்சுக்கு நீங்கள் சொல்வது போல் இருந்தாலும், ”நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது?” என்பது தான் ய்தார்த்தம். என்ன செய்ய? காசு வேண்டுமே? இந்த ”காசு வேண்டுமே” என்ற பொருளியல் உணர்வே ஓரளவவாவ்து இந்த ஜாதிப் வேறு பாட்டை தணிக்க முயலுகிறது.

   ஒரு சில் ஜாதி வெறி பிடித்தவர்கள் தான் பிறருக்கு சொல்லி கொடுக்கமாட்டார்கள். இது எந்த ஜாதியென்றாலும் சரிதான். மதமென்றாலும் சரிதான். (யூதர்கள் ஒரு பகுதியினர் தங்களுடன் யாரையும் சேர்த்துக் கொள்ளக்கூட மாட்டர்கள்) எல்லாரும் ஜாதி வெறிபிடித்த்வர்க்ள் அல்ல.

   மேலும் கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் ”பிராமணர்கள்” சொத்து என்று உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? “பிராமணர்கள்” மற்றவர்களை விட எண்ணிக்கையில் கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முன் வருகிறார்கள். அதனால் அவர்கள் மட்டும் தான் அந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள் என்ற பக்க நோக்கு பார்வை பரவிவிட்டது. சொல்லப் போனால் “பிராமணர்களிடமும்” இந்த குழ்ந்தைகளுக்கு இசையை சொல்லிக் கொடுக்கும் போக்கு கவலைகிடமளிக்கும் வகையில் சரிந்துக் கொண்டுதான் வருகிறது. எல்லாம் பொருளியல் மனப்போக்கால். அதனால் வரும் நேரமினமையால்.

   இவ்வளவு ஏன்? http://www.onlinecarnaticmusic.com/ என்ற சுட்டியை பின் தொடருங்கள். (இது போல் பல நிர்வாகங்கள் இருக்கின்றது) அதன் நிர்வாகிகள் உங்களை எந்த ஜாதி என்று கேட்க மாட்டார்கள், அவர்கள் எந்த ஜாதி என்று சொல்லவும் மாட்டார்கள். கற்று கொள்ளுங்களேன்? உங்கள் பிரச்சனை தீர்ந்த்தல்லவா?

 2. sureshkannan says:

  யார் இந்த ராஜன்? செம நக்கல். மணிரத்னம் இத படிச்சுப் பார்க்க நேர்ந்தா நொந்து போயிடுவாரு. இன்னொரு பகுதியா? வெரிகுட். இவர நெறய எழுதச் சொல்லுங்க.

 3. அர டிக்கெட்டு! says:

  வாழ்த்துகள்…
  படத்தின் மேக்கிங்கில் ஓட்டை என்பது இதன் பிரதான பிரச்சனையல்ல.. பதிவு அதைப்பற்றியே பெரும்பாலும் பேசுகிறது… ஆனால் பதிவின் கடைசி பகுதி சொல்லியிருப்பதுதான் முக்கியமான ஒன்று.. அதை பற்றி விரிவாய் எழுதுங்கள் ராஜன்.. கூடுதல் தகவலுக்கு இந்த சுட்டியை கூட படிக்கலாம் http://www.vinavu.com/2008/12/12/cine2gu/

  பி.கு. குரு’வுக்கு பிறகு ரிலையன்சு மணிரத்தினத்துக்கு கொடுக்கும் ஆதரவை கணக்கில் கொள்ளவும்

  • ராஜன் says:

   அர டிக்கெட்டு

   மேக்கிங்கில் ஓட்டை என்பது பெரிதாகப் பொருட்படுத்தக் கூடியது அல்ல என்பது ஒரு சாதாரண டைரக்டருக்குப் பொருந்தும் மணிரத்தினம் போன்ற இயக்குனர் இமையங்களுக்கு அல்ல. மேலும் நான் அதை ஒரு கேலிக்காக, சற்று ஜாலியான டோனிலேயே சொல்லியும் உள்ளேன். படத்தின் மீதான என் கடுமையான விமர்சனங்கள் எல்லாம் மணிரத்தினம் போன்ற பெரிய இயக்குனர் எடுக்கும் ஒரு படத்தின் அவர் என்ன விதமான படம் எடுக்கிறார் என்ற genre குறித்த அறிவு தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒரு சில டைவர்ஷன்கள் இருந்த பொழுதிலும் முழுமையான படங்களாக இல்லாத போதிலும் கூட என்னால் நாயகன், ரோஜா, க மு இட்டால் போன்ற படங்களை ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அதில் உள்ள குறைகளையெல்லாம் ஒன்று சேர்த்து மீண்டும் மீண்டும் இப்படி ஆழமில்லாத, எந்தவிதமான களன், லாஜிக், யதார்த்தம் இல்லாத படங்களையே அவர் தொடர்ந்து எடுத்து வருகிறார் அதுதான் நல்ல படங்கள் என்று மக்களாலும் நம்பப் படுகிறது. அதைத்தான் நான் இங்கு கடுமையாக விமர்சித்துள்ளேன். நான் ஒரு பத்மராஜன் போலவோ, அடூர் கோபாலகிருஷ்ணன் போலவோ, ஜி வி ஐயர் போலவோ, மணிரத்தினம் சினிமா எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை குறைந்த பட்சம் ஒரு மதூர் பண்டார்கர் ஒரு பாஃசில் தரத்திலாவது அவர் சினிமாக்களைத் தர முயலலாம். அதற்கான திறமை உள்ளவர் அவர். மற்றபடி எனக்கு மணிரத்தினத்துடன் எந்தவிதமான வாய்க்கால் வரப்பு தகராறுகளும் கிடையாது.

   நீங்கள் குறிப்பிட்ட இணைய தளங்கள் எல்லாம் சமூகத்தில் இருந்து அழிக்கப் பட வேண்டிய ஒழிக்கப் பட வேண்டிய நச்சு மிருகங்கள் அவற்றுடன் என்னால் எந்த நாளும் ஒன்றுபட முடியாது.

   நான் மணிரத்தினம் முதலீயத்தைத் தூக்கிப் பிடிப்பதைக் கண்டிக்க வரவில்லை. அதை உருப்படியாக முழுமையாக அவர் செய்யவில்லை என்பதுதான் என் குறை. ரோஜா மூலம் தேசீய உணர்வை அவர் ஊட்டிய அளவு கூட குரு மூலம் முதலீயத்தை அவர் நியாயப் படுத்த முழுமையாக முயலவில்லை அதை வெற்று நடனம், அபத்தமான ஆழமற்ற காட்சிகள், களன் பற்றிய உணர்வின்மை, ய்தார்த்தமின்மை, நிஜத்தனம் இன்மை ஆகியவற்றினால் நீர்த்துப் போகச் செய்து விட்டார் என்பதே என் கண்டனங்கள். சினிமாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த எனது எதிர்பார்ப்புக்கள் வேறானவை. அதில்தான் எனக்கு மணிரத்தினம் அவர்களிடம் குறையே தவிர அவரது பிறப்பிலோ அவரது முதலீய ஆதரவிலோ (அப்படி ஏதேனும் இருக்கும் பட்சத்தில், அவருக்கு எதைக் குறித்தும் உறுதியான நிலைப்பாடு ஏதேனும் இருக்கிறதா என்பதிலேயே எனக்குச் சந்தேகம் உண்டு) எனக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது. காட்சிகளை கற்பனை செய்வதிலும் அழகாக அவற்றை அளிப்பதிலும் திறமையான ஒரு இயக்குனர் என்பதிலும் எனக்கு சந்தேகம் கிடையாது. அவருக்கு அவசியம் தேவை நல்ல கதாசிரியர்களும், நல்ல சினிமா பற்றிய உணர்வுள்ள உதவியாளர்களுமே.

   அன்புடன்
   ராஜன்

 4. விமல் says:

  இந்த மாதிரி ஒரு நல்ல நகைச்சுவை நிறைந்த விமர்சனத்தை படித்து ரொம்ப நாளாகி விட்டது. மிகவும் அருமை.

  இன்னும் ஒரு பகுதி அடுத்து எப்போது வரும் என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 5. M.G.R says:

  அன்பின் ராஜன்,
  நீங்க இப்பத் தான் முத முதல்ல வேற மொழியிலேர்ந்து தமிழ்ல டப் பண்ண படத்தைப் பாக்குறீங்களா?…..இது நியாயமான விமர்சனம் அல்ல!…..உங்களின் மேதமைத் தன்மையைக் காட்டுவதற்காக நீங்கள் செய்த முயற்சியே!….ஓசியில் கிடைத்த dvd பார்த்ததற்கே இப்படி என்றால் இன்னும் நீங்கள் காசு கொடுத்துப் பார்த்திருந்தால்?…..எல்லாவற்றிற்கும் விமர்சனம் மிக முக்கியம் தான் ஆனால் அது கொஞ்சமாவது நேர்மையானதாக இருக்க வேண்டும்!………

  • ராஜன் says:

   எம் ஜி ஆர்

   கொஞ்சம் பொறுங்கள். ஆர் வி ஒரு பார்ட் தானே போட்டிருக்கிறார். ரெண்டாவதையும் படித்து விட்டு நியாயமா நேர்மையா என்பதை பேசிக் கொள்ளலாம். நான் டப்பிங் படங்களைப் பார்க்க விரும்புவதில்லை. முடிந்தவரை எடுக்கப் பட்ட மொழிகளில் பார்ப்பதையே விரும்புகிறேன். ஐயா என் மேதமைத்தன்மையை எல்லாம் விமர்சனம் எழுதிக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சினிமா பார்க்கிறேன் பிடிக்கவில்லை என்று சொன்னால் அது மேட்டிமைத்தனமா? ஜோக் அடிக்கிறீங்களே? அப்படி நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் அப்படியே நினைத்துக் கொண்டு போங்கள்.

   அன்புடன்
   ராஜன்

 6. ராஜன் says:

  ஆர் வி

  நான் கடைசியாக அனுப்பிய டிராஃப்டைப் போடாமல் நான் உங்களுக்கு முதன் முதலில் அனுப்பிய வெர்ஷனைப் போட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் சரி செய்ய முடியுமா? அடுத்த பகுதியைப் போடுவதற்கு முன்னால் என்னுடைய லேட்டஸ்ட் வெர்ஷனில் இருந்து மட்டும் எடுத்துப் போடவும். எனக்கு கோர்ட்டுக்குப் போக இஷ்டமில்லை :))

  பாராட்டிய,ரசித்த மக்களுக்கு நன்றி. கண்டிப்பவர்கள் தயவு செய்து என் முழுப் பதிவையும் படித்த பின்னால் உங்களிடம் ஏதேனும் கண்டிக்க விஷயம் இருப்பின் சொல்லவும்.

  சுரேஷ் கண்ணன்: என்னை இப்படி அநியாயத்துக்கு மறந்து போகலாமா? இது அடுக்குமா? உங்களுடன் எத்தனை முறை சண்டை போட்டிருக்கிறேன், நேரில் சந்தித்து உட்லண்ட்ஸில் போண்டா சாப்பிட்டதில்லையா? ஆர் வி போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு பதிவு அனுப்பும் பொழுது பதில் போடும் பொழுது அவர்கள் என்னை அழைக்கும் ராஜன் என்ற பெயரிலேயே போட்டு விடுகிறார்கள் நானும் அந்தப் பெயரிலேயே பதிலும் போட்டு விடுகிறேன், என் முழுப் பெயர் ச.திருமலைராஜன்

  அன்புடன்
  ராஜன்

 7. ராஜன் says:

  ஆர் வி

  நான் இப்பொழுது ஒரு லேட்டஸ்ட் வெர்ஷன் அனுப்பியுள்ளேன் அதைத்தான் நீங்கள் போட்டிருப்பதாகவும் தெரிகிறது அப்படியாக இருந்தால் லீவ் இட். அடுத்த பகுதியை இந்த லேட்டஸ்ட் வெர்ஷனில் இருந்தே எடுத்துப் போடவும்

  நன்றி
  ராஜன்

 8. RV says:

  ராஜன், எனக்கு கடைசியாக வந்ததைத்தான் போட்டிருக்கிறேன், அது லேட்டஸ்ட் வெர்ஷனா இல்லையா என்று இப்போது குழப்பமாக இருக்கிறதே! நீங்கள் இன்று அனுப்பி இருக்கும் நீங்கள் அனுப்பி இருக்கும் வெர்ஷன் மாதிரிதான் இருக்கிறது. நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும்.

  அரை டிக்கெட், உங்களை ரொம்ப நாள் கழித்து இந்த பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி!

  • ராஜன் says:

   ஆர் வி

   உங்களுக்கு என் மீது ஏன் இந்த வெறி. அந்த இலக்கியவாந்தியின் பெயரைச் சொல்லப் போக எனக்கே தெரியாத என் மூதாதையர்களையெல்லாம் இழுத்து அசிங்கப் படுத்துவான் இதெல்லாம் எனக்குத் தேவையா? :)) முதலில் அந்த ஆளை எழுத்தாளர் என்று அழைத்து உண்மையான எழுத்தாளர்களையெல்லாம் வேண்டுமென்று இணையத்தில் ஒரு கும்பல் அவமரியாதை செய்து வருகிறது. ஆகவே இது போன்ற ஆபாச மிரட்டல் செய்யும் சாக்கடைப் பேர்வழிகளின் பெயரைச் சொல்லி அந்த ஆளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அதே நபர் தன்னை உலக சினிகாக்களையெல்லாம் விமர்சிக்கும் தகுதியுள்ள ஒரு மேதை என்று பலரும் நம்பிக் கொண்டிருப்பதால் அந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்ட வேண்டி வந்தது

   மற்றபடி நான் பெரிதும் மதிக்கும் விமர்சகப் பிதாமகரிடம் அவர் பெயரை வெளியிடலாமா என்று அனுமதி பெறவில்லை. அவர் அனுமதித்தால் அதைச் சொல்ல எந்தத் தயக்கமும் இல்லை. குரு குறித்த எனது பார்வையைச் சொல்லி ஒரு இரண்டு வருடம் இருக்கும். அதற்காக நண்பர்களின் கடுமையான சண்டைகளுக்கு நான் சொன்ன பதில்களை சுருக்கியே இங்கு அளித்துள்ளேன். முழு கடித போக்குவரத்துக்களையும் இங்கு இட முடியாது. அவை மணிரத்தினம் படங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேயப் பட்டவை. அதனால்தான் நான் உங்களை நான் கடைசியாக உங்களுக்கு அனுப்பிய சுருக்கிய வடிவத்தை மட்டும் போடுமாறு கேட்டுக் கொண்டேன்

   அன்புடன்
   ராஜன்

 9. ram says:

  //நான் குருவைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. கிரக குருவை அல்ல குரு என்ற மணிரத்னத்தின் ஒரு பாடாவதியான படு திராபையான படு அபத்தமான திரைப் படத்தை. நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த மிகக் கொடுமையான மோசமான திரைப்படம் குரு// ரொம்ப கடுப்பாயிடீங்க போல. ஆனா ஒரு படம் பிடிக்கலைங்கறத அந்த படம் ஓடின நேரத்துக்கு ரெண்டு மடங்கு நேரம் உக்காந்து டைப் பண்ணிருக்கீங்கன்னா எவ்வளோ கடுப்பாயிருப்பீங்க. நினைச்சாலே சிரிப்பு வருது. அடிக்கடி இப்படி படம் பாருங்க ராஜன். நாங்க கொஞ்சம் சிரிக்கனும்.

 10. ram says:

  திரு ராஜன், மணியின் ராவணன் பாத்திட்டீங்களா? உங்க பார்வையில் அந்த விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.

 11. ராஜன் says:

  ராம்

  இருவரை விட திராபையான ஒரு படத்தை யாருமே எடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தன் ரெக்கார்டை தானே ப்ரேக் செய்திருந்தா குரு எடுத்து. இப்பொழுது குருவை விட இன்னும் மோசமான ஒரு படம் எடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதையும் முறியடித்து விட்டார் ராவணன் எடுத்து. இனிமேல் நான் எதையுமே நினைக்க முடியாது :)) அது சரி என் மேல் ஏதாவது உங்களுக்குக் கோபம் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அதுக்காக ராவணன் கீவணன் எல்லாம் பார்க்கச் சொல்லி என்னைத் தற்கொலை செய்யத் தூண்டுகிறீர்களே நியாயமா சார்? மணி ரத்திரம் நாயகன், மொளனராகம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களையும் எடுக்கத்தான் செய்திருக்கிறார். அற்புதமான ஒரு டெக்னிஷீயன் ஆனால் சினிமா என்பது வெறும் பிருமாண்டமான காட்சிகளையும், இசையையும், தாண்டியது. அது மட்டும் ஏனோ ஒரு நாயகனுக்குப் பின்னால் அவருக்குப் பிடிபடவில்லை. அடுத்த பார்ட்டில் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். எனக்கு பக்கம் பக்கமாக அடிப்பது ஏதும் பிரச்சினையேயில்லை. இதை அடிக்க ஒரு அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது மனம் நினைப்பதை விட விரல்கள் வேகமாக அடித்து விடுகின்றன. ஆகவே நான் படம் பார்த்து நொந்து போன விஷயத்தை சென்ற வருடமே ஆர் வி யிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன் அவர் அதை எடுத்து இப்பொழுது போடுகிறார்

  அன்புடன்
  ராஜன்

 12. ram says:

  //அது சரி என் மேல் ஏதாவது உங்களுக்குக் கோபம் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அதுக்காக ராவணன் கீவணன் எல்லாம் பார்க்கச் சொல்லி என்னைத் தற்கொலை செய்யத் தூண்டுகிறீர்களே நியாயமா சார்?// வேனாம் வேனாம். நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்

 13. sureshkannan says:

  அடடே. திருமலை,

  நீங்கள்தான் அந்த ‘ராஜனா’? சரியாப் போச்சு போங்கள். ராயர்காப்பி கிளப் ‘திருமலை’ என்றால் சட்டென்று விளங்கியிருக்கும். 🙂 உட்லண்ட் ஓட்டல், போண்டா எல்லாம் திருப்பதி, மொட்டை போன்று பதிவுலகில் மிக பொதுவான சங்கேத வார்த்தைகள். நீங்கள் அப்பவே அந்நியன் படத்தை எல்லாம் உண்டு இல்லை என்று செய்தவராயிற்றே. அங்காடித் தெரு சர்ச்சை தொடர்பான உங்களின் பெரிய கடிதத்தையும் வாசித்தேன். (நீங்கள்தான் என்று தெரியாமல்) அதில் பெரிதும் எனக்கு உடன்பாடே. சரி. நிறைய எழுதுங்கள். உங்களுக்கென தனி வலைத்தளம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அதைப் பற்றின விவரங்களை பகிரவும்.

  சென்னைக்கு வந்தால் தெரியுவிங்கள். போண்டா ஓட்டலை மூடிவிட்டதால் வேறு எங்கேனும் சந்தித்து உரையாடலாம். மிக்க மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களுடன் பேசுவதற்கு. 🙂

 14. ராஜன் says:

  சுரேஷ்கண்ணன்

  அடையாளம் கண்டது குறித்து மகிழ்ச்சி. இல்லாவிட்டால் இதைப் போன்ற அபத்தங்களையெல்லாம் அபத்தம் என்று சொல்ல இணையத்தில் உங்களையும், என்னையும், ஹரன் பிரசன்னாவையும் இப்பொழுது வெ.சந்திரமோகனையும் விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஐஸ் அபிஷேக்கை முழுங்குகிறார் என்று எழுதுவதே ஆகச் சிறந்த விமர்சனமாகத் தெரிகிறது. எங்கு போய் முட்டிக் கொள்ள?

  நான் சென்ற டிசம்பரில் சென்னை வந்த பொழுது உங்கள் அலுவலக எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்,. ஏனோ கிட்டவில்லை அதன் பிறகு என்னிடம் செல்ஃபோன்கள் இல்லாதபடியினாலும் வழக்கமான சூறாவளிச் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட படியாலும் (இரண்டு வாரங்களில் இருபது ஊர்கள்) மீண்டும் உங்களை அழைத்துப் பேசவே முடியாமல் போய் விட்டது. மீண்டும் தொடர்பு கொள்கிறேன்

  தனி வலைத்தளம் எல்லாம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இன்னும் பெரிய ஆளாக வரவில்லை. ஏதோ நண்பர்களுடன் அவ்வப் பொழுது தனி மடல்களில் பகிர்ந்து கொள்பவைகளில் ஒரு 10% மட்டுமே இப்படி வெளி வருகிறது மற்றவை எல்லாம் தனி மடல்களில் மட்டுமே தங்கி விடுகின்றன. சொல்வனம்.காம், தமிழ்ஹிந்து.காம் ஆகிய இரு தளங்களிலும் மட்டும் தொடர்ந்து அரசியல், சமூகம், சினிமா, சூழல், புத்தகங்கள், பயணங்கள் பற்றி தொடர்ந்து எழுத முயற்சித்து வருகிறேன். லொளகீக பரிபாடிகளைத் தாண்டி, இழுத்துப் போட்டுக் கொண்டுள்ள சில பொது வேலைகளைத் தாண்டி படிப்பதற்கும் எழுதுவதற்குமான நேரத்தைப் பிடிப்பது பெரிய சவாலாக உள்ளது. உங்களது உலகப் பட விமர்சனங்களை படித்து வருகிறேன். முடிந்தவரை தேடிப் பார்க்கவும் முயல்கிறேன். ஜெயமோகனிடமும், ஆர் வியிடமும் நான் ராஜன் என்ற பெயரிலேயே அறிமுகமாகிப் பழகி வருவதால் அதே பெயரில் அவர்களிடம் தொடர்பு கொள்கிறேன். மற்ற இடங்களில் அதே ச.திருமலை சிக்னேச்சர் மட்டுமே.

  அன்புடன்
  ராஜன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: