நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!
பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
`அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
`அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
டைரக்ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்.
பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
`சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
`நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
`தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
இதுவும் விமல் அனுப்பியதுதான், அவருக்கும் விகடனுக்கும் நன்றி!
புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண்டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!
துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம்- இது கதாநாயகன் ரவி (மோகன்). ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவனைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்). இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
‘முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ‘ பாடலும், டி.விக்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும்எஸ்பிபியும் இவருக்கு அசைக்க முடியாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறிமுகமாறது – பின் பகுதி விவகாரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான்சர், வாழ்வே மாயத்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் அந்த 7 நாட்கள் பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!
இதுவும் விமல் அனுப்பியதுதான். அவருக்கும் விகடனுக்கும் நன்றி!
மினி! – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.
மாக்ஸி! – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.
சட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி! ஆனால், அண்ணன்(!) ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்!
இடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார்! கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது!
மேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.
கோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.
முழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள்! சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்!
விமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி!
சிவாஜி கணேசன்! இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…
சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி!’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தியில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள் கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
தன்னை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் வணங்காமுடி!
சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தைப் பார்த்த கேரளா-கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதி வரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
விநாயகர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. பராசக்தி படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
ரத்தத் திலகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி!
படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
சிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்ஜிஆர்!
‘ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!
பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக!
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
சாரதாநான் பேச நினைப்பதெல்லாம் பாடல் பற்றி படித்த ஒரு விஷயத்தை இங்கே எழுதுகிறார். ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னதாம். பேராசிரியையின் வார்த்தைகளில்:
ஒரு முறை சென்னை வானொலியில் ‘இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறு முனையில் “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
கண்னதாசன் தொடர்ந்து பேசினார். “சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?” என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது”.
இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படம்.
1970ல் வந்த பாதுகாப்பு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசை கட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.
சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக மாற்றிய படம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் முதல் சாய்ஸாக தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக் கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.
‘நடிகர் திலகத்தின் படங்களைக் காணச் செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கேலி பேசிய தருக்கர்களின் முகத்தில் கரியைப் பூசிய படம்.
கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம்.
ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.
இளைஞர்களைக் கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் ஆலயமாகும் மங்கை மனது பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. ‘என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா? அப்படீன்னா இந்தப் படத்திலும் நடிகர் திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?’ என்று மனம் சோர்ந்து போகும் நேரத்தில்தான், பாடிக் கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ‘கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு’ என்று தொடரும்போது, ‘அடடே இது ஏதோ வேறே’ என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் “கட்” என்று சொல்லிவிட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, ‘அடடே ஷூட்டிங்தான் நடந்ததா’ என்று நாம் ஆசுவாசப்பட… (“யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”) கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்…
தேயிலை எஸ்டேட்டில், கொழுகொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், பிங்க் கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க் கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான நடிகர் திலகம் அறிமுகம்.
(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர் திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, ‘எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்’ என்று கணக்குப் போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர் திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். கலாட்டா கல்யாணத்தில் துவங்கினாய், சுமதி என் சுந்தரியில் அதை முழுமையாக்கினாய். ராஜாவிலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்.)
காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது(நடிகர் திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.
ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு… இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.
பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக் கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் டச்சப் பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப்பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்?) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.
பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப் பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் ‘சு’ வரையில் வந்துவிட்டு சட்டென்று சுந்தரி என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை ‘சு..சுந்தரி’ என்று அழைப்பார்).
பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில் பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப் போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்துவிட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க, அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.
ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைப் போலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், ‘ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்’ என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப் பார்த்து, ‘இவரைப் பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?’ என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக் காட்ட, பயந்துபோன வி.கோ. ‘அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்’ என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).
ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச் செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக் காட்டி விவரத்தைச் சொல்ல, மதுவின் தலையில் பேரிடி.
‘இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?’ என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் ‘நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப் போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தைக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப் போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப் போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்து கொண்டு வாழப் போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக் கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப் போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) “மதூ….” என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப் பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடி வரும் சுமதியைப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடி வர, படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக… திரையில் வணக்கம்.
வரிசையாக நடிகர் திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த ‘சுமதி என் சுந்தரி’. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப் புத்தாண்டு) வெளியான ‘பிராப்தம்’ (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.
அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்.
அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக் கவரும் எல்லா அம்சங்களும்.
அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
(நடிகர் திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).
மெல்லிசை மன்னரின் மனதைக் கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல் காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் “ஆலயமாகும் மங்கை மனது” பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் ‘ஷெனாய்’ கொஞ்சும்.
படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் “எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும் வருவது என்ன வழியோ” ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)
எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டிஎம்எஸ், ஈஸ்வரி பாடும் ஏ புள்ளே சஜ்ஜாயி பாடலில் நடிகர் திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக் கொள்ள, நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த LADIES CHORUS HUMMING)
எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றி பாடும் ஓராயிரம் பாவனை காட்டினாள் பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித் தள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ண அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப் படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ்! காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).
வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர் திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச் செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத் தனிமை பாடலுக்கு என்ன குறை? “ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்” பல டூயட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டிஎம்எஸ், சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.
கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு “கல்யாணச் சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது” சுசீலாவின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் “ஆயிரம் நிலவே வா”வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர் திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது “பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ” என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 ‘டாப் டென்’ பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர் திலகம் மற்றும் அழகான கலைச் செல்வி… மொத்தத்தில் அழகு.
இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.
பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (HUMMING) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்எஸ்வி அவர்கள்.
தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. (‘தரையோடு வானம் விளையாடும் நேரம்’ என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)
இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப் பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் ‘சிவாஜி ரசிகர்களின் டார்லிங்’. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
உண்மையில் இந்தக் கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக் காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.
‘சுமதி என் சுந்தரி’ படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
சாரதா இன்னொரு பாடல் பிறந்த கதையை அனுப்பி இருக்கிறார்.
தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.
ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்’ என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.
‘இந்தியாவின் ஜனாதிபதியைப் போல சம்பாதித்து ம்கூட, இந்தியாவைப் போல கடன் வாங்கியவர் கண்ணதாசன்‘ என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு.
மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார். ‘அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லை’ என்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.
அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த ‘பணக்கார குடும்பம்’ படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்…
பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக – நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கவிஞருக்கு நிகர் அவர்தான்.
நல்லி குப்புசாமி செட்டியார்எம்எஸ்விக்கு ஏதோ விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் இதை சொல்லி இருக்கிறார் – இரவெல்லாம் ரெகார்டிங் முடித்துவிட்டு எம்எஸ்வி களைத்துப் போய் தூங்கிவிட்டாராம். ஆனால் அவருக்கு காலை ஏழு மணிக்கு கண்ணதாசனோடு அடுத்த ரெகார்டிங் இருந்திருக்கிறது. எம்எஸ்வி எழுந்து அவசர அவசரமாக ஸ்டுடியோவுக்கு போய்ச் சேரும்போது ஒன்பது மணி ஆகிவிட்டதாம். கண்ணதாசன் ஒரு பேப்பரில் இந்தப் பாட்டை எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம் – அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா?
ஹிந்துவிலிருந்து:
After a recording that went on till the wee hours of the morning, the composer came home and hit the sack to catch some sleep before he left for the next recording at 7. When he woke up and rushed to the studio it was 9. But by then Kannadasan, who was to provide the lyric, had left leaving a sheet of paper behind. On it were the lines to be tuned – ‘Avanukkenna Thoongi Vittaan Agapattavan Naan Allava’ – a dig at the composer for having overslept! This and a couple of other anecdotes from MSV’s life, which Nalli Kuppuswamy Chetti narrated, were enlivening.
என்ன படம், யாருக்காவது நினைவிருக்கிறதா?பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்.
அண்மைய பின்னூட்டங்கள்