பாட்டும் பரதமும் – சாரதா விமர்சனம்


சாரதா பாட்டும் பரதமும் திரைப்படத்துக்கு ஒரு அருமையான அறிமுகம் செய்து வைக்கிறார். ஓவர் டு சாரதா!

கலை, நாட்டியம் இவை பற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டிய மங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக்காரராக மாறி, கடைசி வரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.

தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர் திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் “அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்”. ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற ராதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தை மகன் விஜயகுமாரிடம், “ஏண்டா, நாமும் இது போல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?” என்று கேட்க அதற்கு விஜயகுமார் ‘மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?”)

நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, ‘ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்டம் இல்லை. சொல்லப் போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று பேசப் போக, அடுத்து பேசும் ராதா, ரவிசங்கரை ரசிப்புத்தன்மையையற்ற மனிதர் என்று குத்திக் காட்ட இவருக்கு மனது சுருக்கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவிசங்கரிடம், அவரைத் தன் நாட்டியக் கலைக்கு அடி பணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் ராதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை ராதாவின் நாட்டியத்தைக் காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள்பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. ராதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச் சென்று பார்க்கத் துவங்குகிறார். ஒரு முறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின் மீது வந்து நின்று பார்க்கும், ராதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

ரவிசங்கருக்கு தன் மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து ராதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகியதன் விளைவாக ராதா கருவுறுகிறாள். ரவி ராதா காதல் மட்டும் ராதாவின் தந்தைக்குத் தெரிய வர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இனி மேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக் குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியதுதான். (அந்தப் பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

அப்போது அவரைப் பார்த்து ராதவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவியிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்பு கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒரு நாட்டியப் போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் ராதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக் கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக் கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் ராதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத் தவறி விட, போட்டியில் ராதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி ராதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் – ராதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒரு பக்கம் ராதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொரு பக்கம் ரவி அழைப்பதாக ராதாவிடம் சொல்லி வரவழைக்க, ராதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத் தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு ராதா நிற்க…… அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப் படங்களுக்கு மூணாவது ரீலுக்குப் பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத் தேடி வரும் ராதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் ‘ரவிக்குத்தான் திருமணம்’ என்று தப்பாகச் சொல்ல மனமுடைந்து போன ராதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்தபோதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி ராதாவைத் தேடியலைகிறான். ரவி வீட்டை விட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். ராதாவின் நினைவாக நாட்டியப் பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். ராதாவைத் தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப் பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் ராதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக் கேலி செய்துவிட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப் போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் ராதாவைக் கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.

படம் முழுவதிலும் ஒரு விதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர் திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த கடைசிப் படமும் இதுவே. இப்படம் சரியாகப் போகததன் விளைவாக நடிகர் திலகத்தைப் பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த ‘சித்ரா பௌர்ணமி‘ படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ்-மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

பாட்டும் பரதமும் படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டு விழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய ‘மழைக் காலம் வருகின்றது, தேன் மலர்க் கூட்டம் தெரிகின்றது‘ என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத் தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக் கவரும்.

இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும். ‘மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்
டிஎம்எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. ‘மயக்கம் என்ன‘, ‘மதன மாளிகையில்‘ பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப் பாருங்கள்).

மூன்றாவது பாடல், நடிகர் திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்.

சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே – கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே
தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன் – அந்த பாக்கியம் நான் காணுவேன்

இதுவும் டிஎம்எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.

இதே மெட்டில் அமைந்த ‘தூங்காத விழிகள் ரெண்டு‘ பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கி வைத்து ஆடும் மைலாப்பூர் காம்பியர்களுக்கு, இப்படி ஒரு பாடல் வந்திருப்பது தெரியுமா?.

நான்காவது பாடல், தன்னை விட்டு மறைந்து போன கதாநாயகியைத் தேடி நடிகர் திலகம் பாடும் ‘கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டுவிட்டேன்‘ என்ற தொகையறாவோடு துவங்கும் ‘தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு’ என்ற மனதை உருக வைக்கும் பாடல். டிஎம்எஸ் தனித்துப் பாடியிருப்பார்.

இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர் திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக் கொண்டே போவார். இதனிடையே காலமாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக்கொண்டே போவார்கள்.

ஐந்தாவது பாடல், இளம் பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப் பார்க்கும்போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத் தோன்றும். ‘உலகம் நீயாடும் சோலை உறவைத் தாலாட்டும் மாலை‘ இனிய அழகான மெலடி. பாடலின் இறுதியில் பெண் மயிலை வல்லூறு பறித்துக் கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர் திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டு கொள்ளாமலே விடப்பட்டது).
இவை போக இரண்டாவது நடிகர் திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

நடிகர் திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர் திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப் பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், சாரதா பதிவுகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to பாட்டும் பரதமும் – சாரதா விமர்சனம்

 1. நல்ல விவரிப்பு. படம் பார்த்து உணர்வை உங்கள் எழுத்து தருகிறது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

 2. சாத்தான் குட்டி says:

  மனசாட்சியே இல்லைங்க….அந்த ஆளு நடனமாட சொன்னா கையை மேலயும் கீழையும் ஆட்டிட்டு….பெரிய நடன மேதைன்னு சொல்றதெல்லாம்….எப்பா…?
  இந்த படமும் மிருதங்கச்சக்கரவர்த்தியும்..back-to-back பாத்துட்டு வயிறு வலிச்சுபோச்சுங்க….
  அந்த படத்துல இத விட கூத்து….மிருதங்கத்தை வாயில வாசிச்ச மொத ஆளு சிவாசி சார்தான்….பின்னிட்டாரு போங்க….

  • RV says:

   சாத்தான்குட்டி, ரவிசங்கர், பா. பரதமும் பற்றிய மறுமொழிகளுக்கு நன்றி!

   நான் படம் பார்த்ததில்லை, ஆனால் சாரதாவின் அறிமுகம் படத்தை பார்க்க தூண்டுகிறது.

 3. இதில் கதாநாயகன் பெயர் என் பெயர் காரணத்தால் புல்லரித்துப் பார்த்தேன்.அப்போது ரசித்தேன்.காரணம் காலக்கட்டம்.

  ஆனால் நான் அந்த காலகட்டத்தை சேர்ந்தவன் என்பதால் இப்போது அந்தப் படத்தைச் செல்லம் கொஞ்ச முடியாது.இப்போது சுத்தமாக ரசிக்க முடியவில்லை.மிகை நடிப்பு.

  நானும் சிவாஜியின் ரசிகன்தான். ஆனால் மிகை நடிப்பு இல்லாத படங்கள்தான் என்னால் ரசிக்க முடிகிறது.(கல்யாணம் பண்ணியும், பலே பாண்டியா,அறிவாளி,தில்லான etc.,)
  //(இப்படத்தில் மணி மணியான பாடல்கள் ……..வெளியில் தெரியாமலே போய்விட்டன. //
  வெளியில் ஹிட் ஆச்சுங்க.சாரதா சொல்வது போல் அருமையானபாடல்கள்.
  உழைத்துப்போட்டது.இன்றும் என் தொகுப்பில் உள்ளது.
  .//இதே மெட்டில் அமைந்த//
  ஆனால் ஒரே ராகத்தில் பாடல்(சிவகாமி ஆட) இல்லை.”ரத்தினகிரி வாழும்” என்ற இடத்தில் ராகம் மாறுகிறது

  // ‘தூங்காத விழிகள் ரெண்டு‘ பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கி வைத்து ஆடும் மைலாப்பூர் //

  ஆஹா…!

  ”சிவகாமி ஆட வந்த” MSVயின் டிபிகல்
  stereotype இசையில் போட்டது.தூங்காத விழிகள் வித்தியாசமான இசைக்கோர்ப்பு.classical touch plus
  rich orchestration.

  நன்றி.

 4. சாரதா says:

  அன்புள்ள ரவிசங்கர் அவர்களே,

  நடிகர்திலகத்தின் நடிப்பு என்றாலே அது மிகை நடிப்பு (செம்மொழியில் சொன்னால் ‘ஓவர் ஆக்டிங்’) என்பதாக பலர் மனதில் பதிந்துவிட்டது. ஆனால் தற்போதைய நடிகர்கள் படு ஓவராக கத்துவதைப்பார்க்கும்போது, சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கெல்லாம் (அப்படி இருப்பதாகத் தோன்றினால்) ஒண்ணுமேயில்லைன்னு தோணுகிறது. (சில ஆண்டுகளுக்கு முன் வந்த ‘சுள்’ளென்ற ஒருபடத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒல்லியான ‘ஸ்டார்-மாப்பிள்ளை’ தன் எதிரில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “அவன் இப்போ இங்கே வரணும்” என்று கத்திக்கொண்டிருந்தார்). சிவாஜி எதிர்ப்பாளர்கள் இவற்றை பார்ப்பதில்லையா, அல்லது பார்க்காதவர்கள் போல பாசாங்கு செய்கிறார்களா தெரியவில்லை. இதுமாதிரி ஏராளமாக உள்ளன. சும்மா நசுக்கிப்பார்க்க ஒரு சோறு மட்டும் எடுத்தேன்.

  அந்த கால கட்டத்தில் சிவாஜி அலட்டிக்கொள்ளாமல் சுமாராக நடித்த படங்களுக்கு விமர்சனம் எழுதிய அப்போதைய பத்திரிகைகள், ‘இப்படத்தில் சிவாஜி நடிப்பு ஒண்ணுமில்லை. ஏமாற்றிவிட்டார்’ என்று கூசாமல் எழுதின. அதைத்தான் இன்றைய ரசிகர்கள் யதார்த்த நடிப்பு என்று கொண்டாடுகிறார்கள் (உதாரணம் உங்கள் பட்டியல்). இதில் இன்னொரு வேடிக்கை, உங்களுக்கு யதார்த்தமாக தோன்றும் தில்லானா, சிலருக்கு மிகை நடிப்பாக தோன்றியதாக எழுதியுள்ளனர். இன்றைக்கு சில ‘பிரகாசமான வில்லன்’கள் செய்யாத ஓவர் ஆக்டிங்கை எல்லாம் சிவாஜி செய்துவிடவில்லை. எல்லா படத்திலும் ஒரே மாதிரி நடித்துவிட்டுப்போவதற்கு (அதாவது ‘சும்மா வந்து போவதற்கு’) ஒரு சிவாஜி தேவையில்லை. என் கணவர் கூட கேமரா முன்னால் ‘நடந்துவிட்டு’ போவார்.

  மிகை நடிப்புன்னா வெறுமனே சத்தம்போட்டு பேசுவது மட்டும் இல்லீங்கோ. ‘அவர்காலத்து நாயகர்கள்’ சண்டை என்ற பெயரில் ஒரே குத்தில் பத்துபேரை வீழ்த்தியதும், இன்றைய நாயகர்கள் நாலு தெரு தாண்டி பறந்து சென்று அடிப்பதும், ‘பைக்’கில் வானத்தில் டைவ் அடிப்பதும் எல்லாம்கூட மிகை நடிப்புத்தாங்கோ.

  இன்றைக்கு புதுமை என்ற பெயரில் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?. கிராஃபிக்ஸை கையில் வைத்துக்கொண்டு அன்றைய விட்டலாச்சார்யா படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறோம். அன்றைக்கு பூதம் அடித்ததற்குப்பதிலாக, இன்றைக்கு கார் பறந்துபோய் அடிக்கிறது. அவ்வளவுதான்.

  ‘சிவாஜி படத்துக்கு மட்டும் பூதக்கண்ணாடி’ என்ற தலைப்பில், அவரல்லாத மற்ற படங்களின் குறைகளை பட்டியலிட்டு, ஒரு தொடர் கட்டுரை தயாரித்து வருகிறேன். இதுவரை 39 அத்தியாயங்கள் முடிந்திருக்கின்றன. முழுதும் முடிந்ததும் வெளியிடுகிறேன். அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் கண்டுகொள்ளாத (அல்லது) மூடி மறைத்த பல விஷயங்களை சொல்லியிருக்கிறேன். வெளிவந்தால் பல நடிகர்கள், இயக்குனர்களின் முகத்திரைகள் கிழியும்.

  • RV says:

   சாரதா, உங்ககிட்டே வச்சிக்க வேணாம்னுதான் பார்க்கிறேன். 🙂 ஆனாலும்…

   சிவாஜியின் மிகை நடிப்பு என்றுதான் குறை சொல்ல முடியும். எம்ஜிஆரின் நடிப்பு என்றே சொல்ல முடியாத நிலையில் மிகை நடிப்புக்கு எங்கே போவது? சிவாஜியத்தான் நடிப்பின் சிகரமாக கொண்டாடுகிறார்கள், அதனால் அவரின் நடிப்பை பலரும் அலசுகிறார்கள், நான் உட்பட்ட சிலர் அவரது நடிப்பு ஒரு ஸ்டீரியோடைப் பாணியில் போய்விட்டது என்று குறைப்படுகிரார்கள். எம்ஜிஆரின், தனுஷின் நடிப்புக்காக யார் அவர்களை புகழ்கிறார்கள்? நீங்கள் சிவாஜியை நடிப்புக்காக compare செய்வது என்றால் அவர் காலத்தில் நடிக்கக் கூடியவர்களான ஜெமினி கணேசன், முத்துராமன், எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, இன்றைக்கு நடிகர்கள் என்று பேர் வாங்கி இருக்கும் கமல், மம்முட்டி, மோகன்லால், இல்லை நீங்கள் போகிற போக்கில் சொல்லி இருக்கும் பிரகாஷ் ராஜ், அன்றைய பிற மொழி நடிகர்களான திலீப் குமார், சஞ்சீவ் குமார், பால்ராஜ் சாஹ்னி(கவனிக்கவும், தேவ ஆனந்த், ராஜ் கபூர் போன்றவர்களை நான் இந்த லிஸ்டில் கவனமாக சேர்க்கவில்லை) போன்றவர்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்வது காவஸ்கரை ஆகாஷ் சோப்ராவுடன் ஒப்பிடுவது மாதிரி இருக்கிறது!

   அப்புறம் ஒரு curiosity கேள்வி. நீங்கள் ஏன் பிற நடிகர்களை பேர் சொல்லி குறிப்பிடுவதை தவிர்க்கிறீர்கள்? குறை சொல்வது என்று ஆரம்பித்தாயிற்று, அப்புறம் எங்களோடு ஜோதியில் கலந்துவிடுங்கள்! 🙂

 5. V Srinivasan says:

  என்னைப் பொறுத்தவரை இது (பாட்டும் பரதமும்) நல்ல படமே..! மிகை சில இடங்களுக்கு தேவைதான்..! நடிகர்த்திலகத்தின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள்..! வயலின் மேதை குன்னக்குடி அவர்கள் வாசிக்கும்போது எப்படியெல்லாம் முகபாவம் கொடுக்கிறார் என்பதை பாருங்கள்..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: