பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்


இப்போதுதான் படித்தேன், அதற்குள் விமலும் செய்தி அனுப்பி இருக்கிறார்.

முரளியின் நடிப்பைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் அபிப்ராயம் இல்லை. அவரது ஆரம்ப காலத் திரைப்படங்களில் – பூவிலங்கு, புதியவன், பகல் நிலவு மாதிரி படங்களில் – அவரிடம் ஒரு எனர்ஜி தெரிந்தது. கல்லூரி மாணவன் என்ற க்ளிஷேக்குள் புகுந்தவர் வெளியே வர விரும்பவே இல்லை. கடைசி படமான “பாணா”வில் கூட மகன் ஹீரோ, இவர் கல்லூரி மாணவராம்!

அவர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது பொற்காலம். அது சேரனின் படம், முரளியின் படம் இல்லை.

46 எல்லாம் ஒரு வயதே இல்லை. அவர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

ஓவர் டு விமல்!

நல்ல எளிமையான ஒரு நடிகர்.
அலட்டல் இல்லாத நடிப்பு.

முரளியுன் அன்றும் இன்றும் படங்கள் பாதி அளவு தான் தயார் செய்து வைத்து இருந்தேன். முழுமை செய்து வெளி இடுவதற்குள் இந்த மாதிரி ஒரு செய்தி …….

தமிழ் திரை உலகிற்கு இது ஒரு பெரிய இழப்பு.
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோமாக.
————————————–
ஏராளமான தமிழ்ப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த முரளி(46 வயது), நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.

இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்து வந்தார்.

கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த இவரது மகன் அதர்வா நாயகனாக நடித்த பாணா திரைப்படம் தற்போது வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முரளி, ‘’30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘பகல் நிலவு’, ‘இதயம்’ படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது.

‘பூவிலங்கு’ படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. அதர்வா நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்துவிடுவான் என நம்புகிறேன்’’என்று கூறியிருந்தார்.

பணம் முக்கியமல்ல; நல்ல படம்தான் முக்கியம் என்று அதர்வாவுக்கு அறிவுரை கூறி தனது மகனின் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சுவலியால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

அவரது நினைவில் மூன்று பாட்டுகள் கீழே:

பூவிலங்கு படத்திலிருந்து ஆத்தாடி பாவாட காத்தாட


இதயம் திரைப்படத்திலிருந்து பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா


வெற்றிக்கொடி கட்டு படத்திலிருந்து கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
முரளி – அஞ்சலி
முரளி பட லிஸ்ட்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

27 Responses to பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்

 1. விமல் says:

  அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தவை.

  ஆனந்தம்
  பொற்காலம்
  வெற்றி ‌கொடி கட்டு
  தேசிய கீதம்
  இதயம்
  புது வசந்தம்

  நடிகர் முரளி நடித்த படங்கள் (எனக்கு தெரிந்த) :

  பூவிலங்கு
  பகல் நிலவு
  தங்கமணி ரங்கமணி
  பொற்காலம்

  புது வசந்தம்
  பாலம்
  வெற்றி மலை
  புதியவன்
  சிலம்பு
  நானும் இந்த ஊருதான்
  நாங்கள் புதியவர்கள்
  சிறையில் சில ராகங்கள்
  புதிய காற்று
  நம்ம ஊரு பூவாத்தா
  சாமி போட்ட முடிச்சு
  இதயம்
  குறும்புக்காரன்
  தங்க மனசுக்காரன்
  சின்ன பசங்க நாங்க
  தங்கராசு
  என்றும் அன்புடன்
  தாலி கட்டிய ராசா
  மணிக்குயில்
  தங்க கிளி
  மஞ்சு விரட்டு
  அதர்மம்
  என் ஆசை மச்சான்
  சத்யவான்
  ஆகாய பூக்கள்
  தொண்டன்
  ‌பொம்மை
  காலமெல்லாம் காதல் வாழ்க
  ‌போர்க்களம்
  ரோஜா மலரே
  காதலே நிம்மதி
  தினந்தோறும்
  வீர தாலாட்டு
  ரத்னா
  பூந்தோட்டம்
  என் ஆசை ராசாவே
  உன்னுடன்
  தேசிய கீதம்
  பூவாசம்
  கனவே கலையாதே
  ஊட்டி
  இரணியன்
  வெற்றி ‌கொடி கட்டு
  மனு நீதி
  கண்ணுக்கு கண்ணாக
  சொன்னால்தான் காதலா
  ஆனந்தம்
  சமுத்திரம்
  அள்ளித்தந்த வானம்
  கடல் பூக்கள்
  சுந்தரா டிராவல்ஸ்
  காமராசு
  நம்ம வீட்டு கல்யாணம்
  காதலுடன்
  அறிவுமணி
  பேசா கிளிகள்
  எங்க ராசி நல்ல ராசி
  நீ உன்னை அறிந்தால்
  பானா காத்தாடி

 2. விமல் says:

  நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

 3. விமல் says:

  இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே….

  இந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் [^] முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை சொல்லாமலேயே போய் விடுவார் முரளி. இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென மறைந்து போய் விட்டார் முரளி.

  1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக நடித்த, கெச்சலான உருவத்துடன், அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். யார் இந்தப் பையன், இவ்வளவு வேகமாக, அழகாக நடிக்கிறாரே என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.

  முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில் முரளிக்கு பூவிலங்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.

  1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

  பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம்.

  தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.

  அவரது நடிப்பில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படம்தான் இதயம். இது முரளியின் கேரியரில் மிகப் பெரிய படம் என்பதில் சந்தேகமில்லை. காதலை கடைசி வரை சொல்லாமலேயே போகும் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பைக் காட்டியிருந்தார் முரளி.

  கதையும், முரளியின் நடிப்பும், இசையும், பாடல்களும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்தது

  சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

  ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று. பாசமுள்ள தம்பியாக அண்ணனுக்கும், மனைவியை விட்டுக் கொடுக்க முடியாத கணவராகவும் அவர் அருமையாக நடித்திருந்தார்.

  தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர் [^]களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

  பன்ச் டயலாக் வைப்பது, அதி புத்திசாலித்தனமாக பேசுவது என எதுவும் இல்லாமல் வெகு இயல்பான நடிகர் அவர்.

  2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி.

  கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் [^] பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி.

  முரளியின் காதல் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

  மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.

  எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

  முரளியின் மறைவு எதார்த்தமான, இயல்பான தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

 4. முரளி நல்ல நடிகர்..யாதார்த்தின் அடையாளமாக அவர் நடிப்பு இருந்தது..ரகுவரனைப்போல இவரும் போதை என்னும் வலையில் விழுந்து மூழ்கிப் போனவர்.

 5. நடிகர் முரளியின் இழப்பு.. அவரது குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு எனபது உண்மையானாலும்…. அதைவிட அதிக இழப்பு தமிழ்சினிமாவுக்குத்தான்.. காரணமானது.. பொதுவாக வட்டாரத்தன்மையை சார்ந்த தமிழ்சினிமாத்தொழிலுக்கு முரளி போன்ற சின்ன நடிகர்களே அத்தொழிலை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.. முரளி போன்று.. ஜெயசங்கர், முத்துராமன், ஜெமினிகணேசன்,ராமராஜன்,மோகன்,விஜயன்,
  சுதாகர்,விஜயகுமார்,ரவிச்சந்திரன்,பரத்,பிரசன்னா
  பிருத்விராஜ்,போன்ற நடிகர்கள்தான் ஒரு புதிய தயாரிப்பாளர் உருவாகவும்.. ஒரு புதிய இயக்குநரின் நல்ல கதைகளை திரைப்படமாக்கப்படவும்.. பெரும் ஒத்துழைப்பை தருகிறார்கள்.. பண விஷயத்திலும் ஒரளவு இலகுவான தன்மையுடன் நடந்துகொள்வார்கள்..பெருமளவில் இப்படிபட்ட நடிகர்களே த
  மிழ் சினிமாவுக்கு..உதவியாக இருக்கிறார்கள்… பெரிய நடிகர்கள் பெரும்பாலும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு உவப்பாக இருந்த்தில்லை. எனவே முரளி போன்ற நடிகர்களின் இழப்பு.. தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பே.

 6. thaiprabu says:

  அன்பு நண்பர் முரளி , இவ்வளவு விரைவில் விடைபெற வேண்டுமா ? கலை உலகில் முரளிக்கும் எனக்கும் உள்ள நட்பு பூவிலங்கு அறிமுக நாட்களில் இருந்து நேற்று வரை நீடித்தது . அன்புடன் மச்சான் என கூப்பிடும் முரளி இனி என்னை அப்படி அழைக்க இல்லை

  • RV says:

   தாய்பிரபு, முரளியைப் பற்றிய உங்கள் நினைவுகளை எழுதுங்களேன்! ஒரு நண்பரின் கோணம் வேறாக இருக்கும் இல்லையா!

   வேந்தன், இரண்டாம் நிலை ஸ்டார்களைப் பற்றி நீங்கள் சொல்வது மிகச்சரி.

   ராஜரிஷி, முரளி பதிவுக்கு மறுமொழிக்கு நன்றி!

 7. ராஜன் says:

  முரளியின் மறைவுக்கு வருந்துகிறேன். இளம் வயதில் காலமாகியுள்ளார். போன வாரம் தமிழின் முக்கியமான நல்ல நடிகர் ஒருவர் காலமானார் அவரைப் பற்றி ஏதாவது ஒரு ப்ளாகாவது ஏதாவது இரண்டு வார்த்தைகள் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவார்டா கொடுக்கிறாங்க கூட அவரைக் கண்டு கொள்ளாமல் போனது வருத்தமே, ஒரு வேளை செத்தாலும் ஹீரோவாக நடித்துச் சாக வேண்டும் போலிருக்கிறது.

  அந்த நடிகரின் பெயர் வீராச்சாமி. சேவா ஸ்டேஜ் குழுவின் நடிகர். உங்களுக்கு எல்லாம் புரிய வேண்டும் என்றால் முதல் மரியாதை படத்தில் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்று தன் சிவந்த கண்களை உருட்டிக் கொண்டு வரும் வீராச்சாமி. தமிழில் ஏராளமான படங்களில் ஏழையாகவும், வேலைக்காரத் தந்தையாகவும் நடித்திருக்கிறார். வசந்த் தயாரித்த தக்கையின் மீது நான்கு கண்கள் படத்தில் தாத்தாவாக நடித்து கவனைத்தை பெற்றவர். தமிழில் நல்ல குணசித்திர (அப்படின்னா என்ன) நடிகர்கள் குறைவு. வீராச்சாமி, சாமிக்கணு இப்பொழுது பாஸ்கர் என்று அபூர்வமாக சிலரே அப்படி நடிக்கிறார்கள். தனது முதுமைக்காலத்தில் வறுமையில் கஷ்டப் பட்டு இறந்திருக்கிறார். அப்படி பட்டவர்களைக் குறைந்தது இந்த ப்ளாக்காவது நினைவு கூர்ந்திருக்க வேண்டும். கேட்டால் எங்களுக்கு தெரியவே தெரியாதே அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தாரா அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்ப்பீர்கள் இருந்தாலும் சொல்லி வைக்கிறேன் அருமையான நடிகர் வீராச்சாமியின் மறைவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  வருத்தங்களுடன்
  ராஜன்

  • RV says:

   என்ன ராஜன், எனக்கு தகவல் கொடுத்துவிட்டா எல்லா தமிழ் நடிகர்களும் இறக்கிறார்கள்?

   சரி அப்படியே கொடுத்திருந்தாலும் ஒன்றும் எழுதி இருக்க மாட்டேன். ஏனென்றால் அவரைப் பற்றி எதுவும் தெரியாது. உங்களுக்கு தெரியும் போலிருக்கிறது, நீங்கள் எழுதுங்கள், போட்டுவிடலாம்!

  • விமல் says:

   முதல் மரியாதை படத்தில் நடித்த வீராசாமியை அந்த படம் பார்த்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. நான் அந்த படத்தை பல முறை பார்த்துள்ளேன். அதில் வீராசாமி பேசிய வசனங்கள் இன்னும் நினைவில் உள்ளது.

   மேலும் அந்த படத்தில் அவரது வேடம் மிக முக்கியமானது. ஏன் என்றால், முன்பு வடிவுக்கரசி சத்யராஜிடம் ஏமாந்து போன பிறகு, வடிவுக்கரசியுன் அப்பா சிவாஜியுன் காலில் விழுந்து கேட்டதற்கு பின் சிவாஜி வடிவுக்கரசியை திருமணம் செய்த விஷயம் வீராசாமிக்கு மட்டும் தான் தெரியும். படத்தில் வீராசாமி வரும் இடங்களில் எல்லாம் பின்னணி இசை (உடுக்கை சத்தத்துடன்) கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும்.

   அதுவும் இந்த இடத்தில ரொம்ப திகில் ஆக்க இருக்கும். அந்த இடம் “சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி” என்று சிவாஜியுடம் பேசும் இடம். படத்தில் வீரசாமியுன் பெயர் செங்கோடன் என்று நினைக்கிறன்.

   இந்த படம் தமிழில் ஒரு மறக்க முடியாத ஒரு படம். மேலும் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நல்ல பெயர் வாங்கி குடுத்த ஒரு படம்.

   குறிப்பாக,
   ராதா – நன்றாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் ராதாவுக்கு நடிகை ராதிகா குரல் (dubbing) குடுத்து இருப்பார். இந்த ஒரு காரணத்தினாலே சிறந்த நடிகை விருது ராதாவுக்கு கிடைக்காமல், பார் என்ற ஹிந்தி படத்தில் நடித்த சபானா அஜ்மிக்கு (shabhana azmi) கிடைத்தது.

   சிவாஜி – மலைச்சாமி என்ற பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார். (இயல்பான நடிப்பு – அதுவும் அந்த மீன் சாப்பிடும் இடத்தில ” எங்க ஆத்தா செஞ்ச மாதிரியே இருக்கு. இன்னும் கொஞ்சம் போடு.” என்று ராதாவிடம் கேட்டு வாங்கி சாப்பிடும் இடம். நம் கண்களை கண்ணீரால் நிறைய வைக்கும்)

   சத்யராஜ் – இறுதி காட்சியுள் வந்து கலக்கி இருப்பார்.
   வடிவுக்கரசி – பொன்னாத்தா – நடித்த படங்களில் நல்ல ஒரு பெயர் வாங்கி தந்த ஒரு படம்.

   வீராசாமி – நல்ல ஒரு சிறந்த நடிப்பு. சிறிய ஒரு பாத்திரம் அனாலும் நன்றாக நடித்து இருப்பார்.

   இந்த படத்தை பற்றி பின்பு வேறு ஒரு இடத்தில மேலும் எழுதுகிறேன்.

   • விமல் says:

    பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் 22/08/2010 அன்று காலமானார். பணம் படைத்தவன், திருமலை தென்குமரி, முதல் மரியாதை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உள்பட 500க்கும் அதிகமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஏ.கே.வீராசாமி. இவர் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து போனதால் கடந்த சில மாதங்களாக கை- கால்கள் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வீராசாமி மரணமடைந்தார். வீராசாமியின் மனைவி ராஜலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலமானார். வீராசாமிக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

   • விமல் says:

    வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கூட ஒரு சிறிய வேடத்தில், floor சுத்தம் செய்யும் ஆளாக நடித்து இருப்பார். கமலை பார்த்து ஒரு இடத்தில “பார்த்து நடப்பா. தரையை அசுத்தம் செய்யாதே” என்று சொல்லுவர். பின்பு கமலின் கட்டிபிடி வைத்தியத்தில் மனம் நெகிழ்ந்து “தரையை சுத்தம் செய்யும் என்னை பார்த்து எல்லாரும் முகம் சுளிப்பார்கள். என்னை யாரும் இது வரை இந்த மாதிரி கட்டிபிடித்து பாராட்டியது இல்லை” என்று சொல்லுவர்.

    பின்பு ஒரு காட்சியுள் பிரகாஷ்ராஜ் கமலை கல்லூரியை விட்டு வெளியுள் போக சொல்லும் போது பிரகாஷ் ராஜ் வீராசாமியை பார்த்து “யார் நீ ?” என்று கேட்பார். அப்போது வீராசாமி “நான் வருசமா இங்கே வேலை செய்கிறேன். என்னை உனக்கு தெரியாது. ஆனால் வந்து ஒரு வருஷம் கூட ஆகாத இந்த தம்பிக்கு என்னை நல்ல தெரியும்” என்று கமலை கை காமிப்பார். சூப்பர் சீன்.

    இந்த வீராசாமியை எப்படி மறக்க முடியும் ?

 8. தங்களது பதிலுக்கு மிக்க நன்றி ..ஆர்.வி.

 9. ராஜன் says:

  ஆர் வி

  முரளி மட்டும் என்ன உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி விட்டா இறந்தார் ? நாம் எப்பொழுதுமே வீராச்சாமி போன்றவர்களை கவனிப்பதில்லை. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கவனத்திற்கு வராமல் ஆனால் என் கவனத்தில் எப்பொழுதுமே படும் படி இப்படி நிறைய தமிழ் நாட்டில் நடக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டவே இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். ஆனால் உங்களுக்குத் தெரியாமல் நடக்கும் விஷயங்களில் நீங்கள் கருத்து மட்டும் வைத்திருக்கிறீர்கள் :)) வீராச்சாமி பற்றி நீங்கள் அறியாமல் போனதும் அதே போன்ற ஒரு துரதிருஷ்டமே. சாராதா அவரைப் பற்றிய மேல் விபரங்களை அறிந்திருக்கலாம்.

  அன்புடன்
  ராஜன்

  • RV says:

   ராஜன், முரளிக்கு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய தேவை இல்லை – அவரது மரணச் செய்தி கொட்டை எழுத்தில் எல்லா பத்திரிகைகளிலும் வருகிறது. // அவார்டா கொடுக்கிறாங்க கூட அவரைக் கண்டு கொள்ளாமல் போனது வருத்தமே, // என்று எழுதி இருந்தீர்கள், கண்டு கொள்வதற்கு தகவல் தேவைப்படுகிறது என்பதைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன்.

   உங்களுக்கு அவர் கண்டு கொள்ள வேண்டிய நடிகர் என்று தோன்றினால், (நான் அவரை வசூல் ராஜா படத்தில் மட்டும்தான் ஓரளவாவது சொல்லிக் கொள்ளும் காரக்டரில் பார்த்திருக்கிறேன்.) நீங்கள் எழுதுங்கள், போட்டுவிடலாம்! ஒரு மரணச் செய்திக்கு எழுதும் மறுமொழியில் எதற்கு இந்த மாதிரி எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

   • ராஜன் says:

    ஆர் வி

    ஒரு இறப்புச் செய்தியில் நான் தவறாகச் சொல்லி விடவில்லையே. உங்களைக் குற்றம் சொல்லவில்லை. இப்படி பிரபலமான விஷயங்கள் அது இறப்பானாலும் கூட பிரபலமான விஷயங்கள் மட்டுமே உங்கள் கண்களில் படுகின்றன என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன். வேறு அர்த்தம் ஏதும் இல்லை. முரளி இறந்தது அனைவருக்கும் தெரியும் ஆனால் வீராச்சாமி என்றொரு பண்பட்ட நடிகர் இறந்தது நம் கண்களில் படுவதில்லை இதுதான் நம் மனித இயற்கையும் வாழ்க்கையும் கூட இந்த முரணை சற்றே இந்த தருணத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் அவ்வளவுதான். இதைப் போலவே தமிழ் நாட்டில் உங்கள் கண்களில் படாத விஷயங்கள் நல்லதும் கெட்டதுமாக ஏராளமாக உள்ளன ஆகவே ஒரு கருத்து சொல்லும் பொழுது முழுதாக ஆராய்ந்து சொல்ல வேண்டும் புரிந்து சொல்ல வேண்டும் என்பதே நான் சொல்ல வருவது. அதற்கான இடம் நேரம் இதுவல்ல என்ற பொழ்திலும் கூட்.

    வீராச்சாமி பற்றி இங்கு விமலும், சாராதாவும் சொல்லியிருக்கிறார்கள். சகஸ்ரநாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ் ஒரு பிரபலமான நாடகக் குழு அதன் தயாரிப்பு அவர். வசந்த் சா.கந்தசாமியின் சிறுகதை ஒன்றை சினிமாவாக எடுத்திருக்கிறார் அதில் அவர்தான் ஹீரோ அலல்து முக்கிய வேடம். அவர் இறந்த பொழுதே யாரேனும் அவரைப் பற்றி எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் காத்திருந்தேன். பிரபலங்கள் மட்டும் தான் எங்கும் எப்பொழுதுமே கவனிக்கப் படுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். அதை தவறான இடத்தில் சொல்ல நேர்ந்தத்திற்காக வருத்தமடைகிறேன்.

    அன்புடன்
    ராஜன்

   • RV says:

    வரதராஜன், சாரதா, விமல், மறுமொழிகளுக்கு/மேல் விவரங்களுக்கு நன்றி!

 10. மரணத்தின் கொடுமை நிகழாத மண்ணில்லை
  எனினும் –
  மரணத்தின் மண்ணிலும் மின்னுகின்றன; நட்சத்திரங்களே!!!!!!!!!!!!
  அனுதாபம், நமக்கும் தேவைபடுகிறது.

  என்னசெய்ய, ரசிக்கவைத்தார்கள், பாராட்டாத வாய்களை தான்டியேனும்
  கண்ணீர் வடிக்கிறது கண்கள்; கண்களில் உறுத்துவது மரணமென்பதால்!

  அதிலும் அமைதி பூத்த நல்ல மனிதராகவே காட்சி தந்த இள(ம்) வயது கதாநாயகர், நடிப்பினால்
  ‘இதயம்’ சிறப்பினால் இதயம் நிறைந்தவர்,
  இழப்பு இழப்பு தான் எனினும், கலைஞர் என்பதால்; அது இரட்டிப்பு!

  அவரின் ஆத்ம மேன்மைக்கும் நன்மைக்கும் இறையருளும் – நம் வேண்டுதல்களும் துணை இருக்கட்டும்!

  அறியத்தந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஆர்.வி. ஐயா!

  வித்யாசாகர்

 11. knvijayan says:

  சத்யவான் என்ற முரளி நடித்த படம் பற்றி யாரேனும் எழுதுங்கள், அது கொஞ்சம் வித்தியாசமான நகைச்சுவைப்படம்.

 12. நடிகர் வீராசாமி மறைந்தது தற்போது தான் அறிந்தேன்..மிக நல்ல நடிகர்.. நாடகங்களில் இவரது பங்கு அபாரமானது..என்ன செய்ய..புட்டன்ன கணகல் எனற ஓர் அற்புதமான டைரக்டர் – கர்ணாடகத்தில் – ஒரு முறை மைசூரில் பார்த்தேன்..உடன் யாருமில்லை..தன்னந்தனியாக அமர்ந்திருந்தார்..அவரது “ரங்கநாயகி” படம் கன்னடத்தில் வெளிவந்தது..அருமையான படம். பாரதி மிகவும் அருமையாக அந்தப்படத்திற்கு உயிரோற்றம் கொடுத்திருப்பார்..கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் பார்த்த படம்..நெஞ்சை விட்டு அகலவில்லையே..!

 13. knvijayan says:

  ராஜரிஷி அவர்களுக்கு,ரங்கநாயகியின் நாயகி ஆர்த்தி அவர்கள்.பாரதியைவிட திறமையான நடிகை.AP .நாகராஜனின் குமாஸ்தாவின் மகள் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.ரங்கநாயகி கன்னட திரைவரலாற்றில் ஒரு மைல் கல்,புட்டண்ணா ஒரு அற்புதமான படைப்பாளி.

 14. சாரதா says:

  இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது…. என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கும் கலைஞர்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, அந்த வரிசையில் உலகநாயகன் கமல், நடிகர் முரளி, பாடகர் மனோ போன்றோரைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம்.

  அதற்குள் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.

  பல படங்களில் சிறப்பாக நடித்திருந்த அவர் இங்கு பலரும் குறிப்பிட்ட படங்களோடு ‘வாட்டாகுடி இரணியன்’ படத்தில் ஆக்ரோஷமான நடிப்பைத் தந்திருந்தார். நடிகர்திலகத்தின் மகனாக ‘என் ஆசராசாவே’ படத்தில் கரகம் ஆடி பரவசமூட்டினார்.

  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம்.

 15. சாரதா says:

  சமீபத்தில் மறைந்த துணை நடிகர் ‘திரு கே.எஸ்.வீராச்சாமி’யை நான் முதன்முதலில் பார்த்தது ஏ.பி.நாகராஜனின் ‘வா ராஜா வா’ படத்தில்தான். மாஸ்ட்டர் பிரபாகர், பேபி சுமதி ஆகியோரை வளர்க்கும் மாமாவாக வருவார். (ரொம்ப நாள் வரையில் அவர்தான் டி.என்.சிவதாணு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்). தொடர்ந்து திருமலை தென்குமரி, கண்காட்சி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். மறைந்த கே.கே.சௌந்தர் போல கிராமப் பஞ்சாயத்துக் காட்சிகளில் நிறைய வருவார்.

  பொதிகை தொலைக்காட்சியில் ‘அலோ உங்களுடன்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தொலைபேசியில் அவருடன் பேசியிருக்கிறேன். “எல்லோரும் முதல் மரியாதை பற்றியே கேள்வி கேட்கும்போது, நீங்க மட்டும்தான் பழைய படங்களப்பற்றிக் கேக்கறீங்க” என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். நல்ல பண்பாளர். சில நேரங்களில் சைக்கிளில் கூட படப்பிடிப்புக்கு வருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மறைந்தார் என்று தொலைக்காட்சி செய்தியில் அறிந்தபோது மிகவும் வருத்தம் அடைந்தேன். அவருக்கு வயது 84 என்று சொன்னார்கள். அதனால் அகால மரணம் என்று சொல்ல முடியாது. பொருளாதாரத்தில் குறைவாக இருந்தபோதிலும், வயதைப்பொறுத்தவரையில் நிறைவான வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறார்.

 16. விமல் says:

  நடிப்புத் திறன், அவர் ஏற்ற பாத்திரங்கள், அந்தப் பாத்திரங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த மென்மை இமேஜ், வாழ்ந்த காலத்தில் அவரது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையின் சிக்கல்கள் இல்லாத சித்திரங்கள் இவைகள்தான் முரளியை மக்கள் மனதில் நிற்பவராக ஆக்கியது. இப்படிப்பட்ட இமேஜ்தான் அவருடைய மரணத்தை ஒரு பெரும் இழப்பாக உணரச் செய்திருக்கிறது.

  தமிழ் சினிமாவின் போக்கில் திருப்பம் ஏற்படுத்திய புது வசந்தம், காதலை இதயத்துக்குள் ஒரு நோயைப் போல் வைத்து உருகிய ஒரு இளைஞனின் இதயம் என்று ஆற்றல் மிக்க கலைஞனாக முரளியை நமக்கு அடையாளம் காட்டிய படங்களின் எண்ணிக்கை அதிகம். நம்மைப் போலவே நம்மைச் சுற்றிலும் வாழும் கருப்பு நிற மனிதர்களின் பாத்திரங்களை வாழ்ந்தவர் என்பதால் முரளி நம்மை அறியாமலேயே நமக்குள் ஊடுருவியிருக்கிறார். இவற்றுக்கு அப்பால் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், சேரன் போன்ற இயக்குனர்களின் சாய்ஸாக இருந்த ஒரு கலைஞன், வாழ்வின் இரண்டாவது பாதி தொடங்கும் முன்பே மறைந்துவிட்டார். அவரைக் குடித்த இதய நோயின் பின்னனிக் காரணமாகத் தீவிர மதுப் பழக்கம் இருந்துவந்திருக்கிறது என்பதை அறியவரும்போது சக மனிதர்களுக்காகவும், கலைஞர்களுக்காவும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

 17. knvijayan says:

  நல்ல நடிகர்கள் எல்லோரையும் நாம் கௌரவபடுத்தவேண்டும்.A .K .வீராசாமி பற்றி சில நினைவுகள்.S .V .சகஸ்ரராமின் சேவா ஸ்டேஜில் இருந்து வந்தவர். நாலு வேலி நிலம்,ப்ரெசிடென்ட் பஞ்சாட்சரம்,தேரோட்டி மகன் (கர்ணன் திரைப்படத்தின் முன்னோடி)போன்ற நாடகங்களில் நடித்தவர். முத்துராமனின் contemporary .1965 -ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வெள்ளி பதக்கம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னை போல் ஒருவன்” திரை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார்.(கதாநாயகன் சிட்டியின் ஐஸ் கடை முதலாளி அண்ணாச்சியாக).

 18. Pingback: நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மரணம் « அவார்டா கொடுக்கறாங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: