முரளி – அஞ்சலி


விமல் எழுதி இருக்கும் அஞ்சலி கீழே. ஓவர் டு விமல்!


இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே….

இந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை சொல்லாமலேயே போய் விடுவார் முரளி. இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென மறைந்து போய் விட்டார் முரளி.

முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக நடித்த, கெச்சலான உருவத்துடன், அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். யார் இந்தப் பையன், இவ்வளவு வேகமாக, அழகாக நடிக்கிறாரே என்ற ஆச்சரியம் அனைவருக்கும்.

முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அந்த வகையில் முரளிக்கு பூவிலங்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது.

1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்னத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.

அவரது நடிப்பில் வெளியான இன்னொரு சூப்பர் ஹிட் படம்தான் இதயம். இது முரளியின் கேரியரில் மிகப் பெரிய படம் என்பதில் சந்தேகமில்லை. காதலை கடைசி வரை சொல்லாமலேயே போகும் ஹீரோவாக அட்டகாசமான நடிப்பைக் காட்டியிருந்தார் முரளி.

கதையும், முரளியின் நடிப்பும், இசையும், பாடல்களும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைத்தது

சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று. பாசமுள்ள தம்பியாக அண்ணனுக்கும், மனைவியை விட்டுக் கொடுக்க முடியாத கணவராகவும் அவர் அருமையாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

பன்ச் டயலாக் வைப்பது, அதி புத்திசாலித்தனமாக பேசுவது என எதுவும் இல்லாமல் வெகு இயல்பான நடிகர் அவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தையும் முரளியை அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

பாணாவுக்கு அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி.

முரளியின் காதல் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது.

நான் 30 வருடங்களாக நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.

எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

முரளியின் மறைவு எதார்த்தமான, இயல்பான தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
முரளி பட லிஸ்ட்
நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to முரளி – அஞ்சலி

 1. Pingback: Indli.com

 2. விமல் says:

  ‘இதயம்’ துடிக்க மறுத்தது ஏனோ?
  ——————————-

  இதயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி! 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி… இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது.

  முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திருக்கிறது

  1984ம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகிமாகி 26 ஆண்டுகாலம் சினிமா வாழ்க்கையில் ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்தவர் முரளி.

  தமிழ்த்திரையுலகில் என்றும் மார்க்கண்டேயன், என்றென்றும் கல்லூரி மாணவர், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் ஒப்பற்ற நடிகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர் முரளி.

  இவர் பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன். தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். இவரது மனைவி ஷோபனா. மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ்.

  பெங்களூருவில் பிறந்த இவர், தமிழில் நடிக்க வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமைக்குறியவர் முரளி.

  ஒரு நடிகன் என்றால் நல்ல நிறம்,அழகு, உயரம், அப்படி இப்படி என்று கூறப்படும் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களும் இல்லாதவர். கறுப்பு, சாதாரண உயரம், மிகமிக எளிமையான தோற்றம் இதுதான் முரளி. ஆனால் அதுதான் அவரின் சிறப்பு.

  ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடலே அவருக்காகதான் உருவாக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்தினம் பகல் நிலவு படத்திற்கு நாயகன் தேடிய போது. முரளிதான் இந்தப் படத்திற்கு ஏற்ற நடிகன் என்று கூறி நடிக்கவைத்தார்.

  அந்தப் படத்திற்கு மட்டுமல்ல, காதல்(இதயம்), பாசம்(பொற்காலம்), நகைச்சுவை(சுந்தரா டிராவல்ஸ்), ஆக்‌ஷன்(அதர்மம்), என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற சிறந்த நடிகர் முரளி.

  001ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது கடல்பூக்கள் படத்தில் முரளியின் சிறந்த நடிப்புக்கு கிடைத்தது. கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

  சிவாஜி கணேசன்(என் ஆச ராசாவே), விஜயகாந்த்(என்னாசை மச்சான்), பிரபு(நினைவுச் சின்னம்,பாசக்கிளிகள்), சத்யராஜ்(பகல் நிலவு), பிரபுதேவா(அள்ளித்தந்த வானம்), சூர்யா(கதலே நிம்மதி), பார்த்திபன்(வெற்றிக் கொடிகட்டு), சரத்குமார் (சமுத்திரம்), மம்முட்டி(ஆனந்தம்) உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

  ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்தார் முரளி. இதயம் படத்தின் இவரது ‘ராஜா’ கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றும் அவரது மகன் அதர்வா நாயகனாக அறிமுகமாகியுள்ள ‘பாணா காத்தாடி’ படத்திலும் ‘இதயம் ராஜா எம்.பி.எஸ் நான்காம் ஆண்டு மாணவர்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

  இப்படி ஒரு முன்னணி கதாநாயகனாய் இருந்தாலும் முரளி இதுவரை யாரிடமும் மரியாதைக் குறைவாக நடந்ததில்லை. படப்பிடிப்பில் டீ கொடுப்பவராக இருந்தாலும் சரி, படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அனைவரிடமும் ஒரே மாதிரியான பரிவுடன் பழகக்கூடியவர்.

  அதுமட்டுமல்ல… கடந்த 2006ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலின் போது விஜயக்குமார், சிம்ரன், சினேகன் ஆகியோருடன் இணைந்து முரளியும் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது, சினேகன்கூட எதிர்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசினார். ஆனால், அந்த அரசியல் பிரச்சாரக் காலகட்டத்திலும்கூட அரசியல் நாகரீகத்துடன் பேசிய ஒருவர் முரளி மட்டுமே.

  இவர் சிறப்பான நடிகர் மட்டுமல்ல பொறுப்பான தந்தையும் கூட.

  தனது மகன் அதர்வாவை ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி ஒரு நடிகனாக்கிவிட்டார். அந்தவகையில் முரளியின் குடும்பம் மூன்றுத் தலைமுறை திரைக்குடுப்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இவரது மூத்த மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். தனது மகளின் திருமணத்தை வரும் மே மாதம் பிரமாண்ட விழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தார் முரளி.

  பாணா காத்தாடி படம் வெளிவத்திருந்த வாரத்தில் அதர்வாவுடன் நக்கீரன் அலுவலகம் வந்திருந்தார் முரளி.

  அதார்வாவை நக்கீரன் ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தி பேசிய முரளி, “ஒரு தந்தை என்ற முறையில் அதர்வாவை நடிகனாக்கி எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். இனிமேல் இவனோட வளர்ச்சி எல்லாம் உங்களிடம் தான் (பத்திரிகைதுறை) இருக்கு. இனி இவன் உங்கவீட்டு பிள்ளைங்க அண்ணா.

  இந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்புக்கு நிறையப் பாராட்டுக்கள் வருகிறது. கௌதம் மேனனின் அடுத்தப் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பிருக்கிறது. (முரளி அடுத்து நடிப்பதாக இருந்த அவரது நூறாவது படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.)

  எனது பகல் கனவு, இதயம் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே எனது பையனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கு எனது முதல் நன்றியை சொல்லியாகனும்” என்றார்.

  மனைவி ஷோபனா பற்றி சொல்லிய போது, “இவர் மனைவி மட்டுமல்ல, இன்னொரு தாய். இதுவரை எனது வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்திலும் என்னுடன் உற்றத்துணையாக இருப்பவர். நான் நேசிக்கும் அன்பான ஜீவன்” என்றார்.(முரளி-ஷோபனா காதல் திருமணம் செய்தவர்கள்.)

  இப்படி ஒரு அன்பான குடும்பம், இன்று முரளியின் பிரிவால் கண்ணீரில் மூழ்கி இருப்பது காண்பவர் அனைவரின் நெஞ்சத்தையும் உறையச் செய்கிறது.

  ‘தனது முதல் படமே தந்தைக்கு இறுதிப் படமாகிவிட்டதே’என்ற வேதனையின் உச்சத்தில் அழுவதற்கும் முடியாமல் விக்கித்துபோயுள்ளார் அதர்வா.

  உறவினர்கள், திரையுலகத்தினர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மட்டுமின்றி யார் ஒருவர் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த ஒப்பற்ற பண்பாளர் முரளி. இத்தகைய ஒரு நல்ல மனிதரின் இறப்பு அனைவருக்கும் பேரிழப்பு. இதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

  இதயம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி “தண்ணீர் பாட்டிலில் கண்ணீர் துளி ஒன்றை மட்டும் இட்டு” முரளியிடம் தருவார்.

 3. விமல் says:

  சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

  மரணம் அடைந்த முரளியின் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், வயதே ஆகாத ஒரு கலைஞன். பூ விலங்கு படத்தில் நடித்ததுபோலவே முரளி இருப்பார். வயதே ஆகாது. அப்படியே இருப்பார். அவருடைய பையன் நடித்த படம் அண்மையில் வெளிவந்துள்ளது. முரளி மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த திருமணத்தைக் கூட பார்க்க முடியாத நிலையில் முரளி மரணம் அடைந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கடவுளை சபிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை. வேறு எதுவும் சொல்ல தோணவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

  நடிகர் வடிவேலு, நடிகர் முரளி எப்போதும் மச்சான் மச்சான் என்றுதான் கூப்பிடுவார். நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பில் டென்ஷனாக இருந்தாலும், அதை ஈஸியாக குறைத்து விடுவார். இன்றைக்க்கு அவர் எல்லாத்தையும் டென்ஷனாக்கி விட்டு போய்விட்டார். முரளி மரணம் அடைந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் திரையுலகம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியாகியுள்ளது. அவரை இழந்தது கஷ்டமாக உள்ளது. கூட நடிச்ச எங்களுக்கே கஷ்டமாக இருக்கும்போது, அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை என்றார்.

  • RV says:

   வித்யாசாகர், மறுமொழிக்கு நன்றி!

   விமல், மேல் விவரங்களுக்கு நன்றி!

   விஜயன், சத்தியவான் திரைப்படம் நான் பார்த்ததில்லை; நீங்கள்தான் எழுதுங்களேன், இங்கே பதித்துவிடுவோம்!

 4. விமல் says:

  இன்னொரு ரஜினியாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று ஆனந்த விகடன் இவரது முதல் படமான பூவிலங்குக்கு விமர்சனம எழுதி வரவேற்றது.

  இந்த பூவிலங்கு பட விமர்சனம் சென்ற வாரம் வெளி வந்த ஆனந்த விகடனில் (01/09/2010) “விகடன் பொக்கிஷத்தில்” வந்துள்ளது.

  அதில் இருந்து முரளியை பற்றி சில வரிகள்

  “ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும் வீரத்தோடு சண்டை போடவும் வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு ‘பூவிலங்கு’ முரளி நல்ல ஆறுதல் !”
  (

 5. விமல் says:

  கேபிள் ஷங்கரின் இன்றைய பதிவில் இருந்து …..

  ஒரு வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து எல்லாரும் பேக்கப் ஆகிவிட்ட்ட பிறகு இயக்குனரும், முரளியும் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து அடுத்த கட்ட காட்சிகளை பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பேச்சு சுவரஸ்யமாய் போக சரி ஊருக்கு கிளம்பலாம் என்று வெளியே வந்து பார்த்தால் எல்லாரும் கிளம்பி போய்விட்டிருக்க, மேனேஜருக்கு போன் செய்தால்.. ஹீரோவும் நீங்களும் ஷூட்டிங் முடிந்த பின் காரில் கிளம்பி போய்விட்டதாக சொன்னார்கள்.. நாங்களும் பேக்கப் செய்து கொண்டு வந்துவிட்டோம் சுமார்.. 200 கிலோ மீட்டர் வந்தாகிவிட்டது. வேண்டுமானல் உடனே ஒரு வண்டியை மாற்றி அனுப்புகிறோம் என்று சொல்ல.. விஷயம் தெரிந்த முரளி.. டைரக்டரிடம் எதுக்கு வேஸ்டா அவங்க வண்டிய அனுப்பி, அது இங்க வர்ற வரைக்கும் நாம வெயிட் செய்யறது.. பேசாம பஸ்சுல போயிறலாம் என்று சொல்லி, கிளம்பிவிட்டாராம் சென்னைக்கு. பஸ்சில் அப்போதைய பிரபல ஹிரோவுடம் பயணம் செய்வதில் மக்கள் ரொம்பவே சந்தோஷமடைந்தார்களாம். அப்படிப் பட்ட அருமையான மனிதர்.. என்று முரளியின் மரணம் குறித்து கண்களில் தளும்பிய நீருடன் நினைவோடிக் கொண்டிருந்தார் எங்களுடன் இணைந்து பணியாற்றும் மஞ்சுவிரட்டு என்கிற அப்படத்தின் இயக்குனர்.

  சமீபத்தில் கூட ஒரு டிஸ்கஷனில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.. “இன்னைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல முரளின்னு சொன்னா நம்புறா மாதிரி இருக்கிற ஒரே ஆள் என்றார் நண்பர் ஒருவர். மக்கள் மனதில் மிகவும் யூத்தான் ஒரு கெட்டப்பிலேயே இருந்ததினால் என்னவோ.. மிகவும் யூத்தான வயதில் இறந்துவிட்டார் என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருந்துதான் இருந்தது.

  (நன்றி : கேபிள் ஷங்கர்)

 6. விமல் says:

  நடிகர் முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.

 7. விமல் says:

  முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற மகன்கள் மற்றும் காவ்யா என்ற மகள் உள்ளனர். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி. அதற்குள் இப்படியொரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது என்று முரளியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

 8. விமல் says:

  நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி:
  ——————————
  மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

  அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை. முரளியின் கடைசி பேட்டி விவரம் வருமாறு:-

  எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம். ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட… தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

  தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.

  என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்‌‌டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்‌பேன். அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா… நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.

  பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட்… நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோ‌ட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.

  நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்‌டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோ‌ட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாத‌டா… நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.

  இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா… 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பானா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் – அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன்ஷங்கர் ராஜாதான் இச‌ை. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.

  எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப்பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.

  அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.

  இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

  (நன்றி : தினமலர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: