நடிகர் வீராசாமி மரணம்


வீராசாமி என்பதை விட “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி என்றால்தான் எல்லாருக்கும் தெரிகிறது. பல மிமிக்ரி ஷோக்களில் இடம் பெறும் குரல். சமீபத்தில் வல்லமை தாராயோ என்ற பார்த்திபன் படத்தில் தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது போன்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரை எனக்கு நினைவிருப்பது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் மட்டும்தான். அதில் அவருக்கு துப்புரவு தொழிலாளர் வேஷம். சிறு வேஷம்தான். ஆங்கிலத்தில் cameo என்று சொல்வார்களே அந்த மாதிரி.

அவருக்கு அஞ்சலி எழுதும் அளவுக்கு எனக்கு தெரியாது. அதனால் விமல், சாரதா, விஜயன், ராஜரிஷி, ராஜன் ஆகியோரின் மறுமொழிகளிலிருந்து தொகுத்திருக்கிறேன்.

பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் 22/08/2010 அன்று காலமானார். பணம் படைத்தவன், திருமலை தென்குமரி, முதல் மரியாதை, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்பட 500க்கும் அதிகமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஏ.கே.வீராசாமி. இவர் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து போனதால் கடந்த சில மாதங்களாக கை கால்கள் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வீராசாமி மரணமடைந்தார். வீராசாமியின் மனைவி ராஜலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலமானார். வீராசாமிக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

வீராசாமி எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவின் நடிகர். மிக நல்ல நடிகர்.. நாடகங்களில் இவரது பங்கு அபாரமானது. தமிழில் ஏராளமான படங்களில் ஏழையாகவும், வேலைக்காரத் தந்தையாகவும் நடித்திருக்கிறார். வசந்த் தயாரித்த தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படத்தில் தாத்தாவாக நடித்து கவனைத்தை பெற்றவர். (தக்கையின் மீது நான்கு கண்கள் சா. கந்தசாமி எழுதிய பிரபல சிறுகதை. இங்கே படிக்கலாம்.) குறும்படத்துக்கு ஒரு விமர்சனம் இங்கே.

வீராசாமி ஏ.பி.நாகராஜனின்வா ராஜா வா’ படத்தில் மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி ஆகியோரை வளர்க்கும் மாமாவாக வருவார். தொடர்ந்து திருமலை தென்குமரி, கண்காட்சி உள்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். மறைந்த கே.கே.சௌந்தர் போல கிராமப் பஞ்சாயத்துக் காட்சிகளில் நிறைய வருவார். பொதிகை தொலைக்காட்சியில் ‘அலோ உங்களுடன்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தொலைபேசியில் சாரதா அவருடன் பேசி இருக்கிறார். “எல்லோரும் முதல் மரியாதை பற்றியே கேள்வி கேட்கும்போது, நீங்க மட்டும்தான் பழைய படங்களப் பற்றி கேக்கறீங்க” என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். நல்ல பண்பாளர். சில நேரங்களில் சைக்கிளில் கூட படப்பிடிப்புக்கு வருவார் என்று சாரதா கேள்விப்பட்டிருக்கிறாராம். அவருக்கு வயது 84-ஆம்.

முதல் மரியாதை படத்தில் நடித்த வீராசாமியை அந்த படம் பார்த்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. சிறிய ஒரு பாத்திரம் ஆனாலும் நன்றாக நடித்து இருப்பார். அந்த படத்தில் அவரது வேடம் மிக முக்கியமானது. ஏன் என்றால், முன்பு வடிவுக்கரசி சத்யராஜிடம் ஏமாந்து போன பிறகு, வடிவுக்கரசியுன் அப்பா சிவாஜியுன் காலில் விழுந்து கேட்டதற்கு பின் சிவாஜி வடிவுக்கரசியை திருமணம் செய்த விஷயம் வீராசாமிக்கு மட்டும் தான் தெரியும். படத்தில் வீராசாமி வரும் இடங்களில் எல்லாம் பின்னணி இசை (உடுக்கை சத்தத்துடன்) கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். அதுவும் “சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி” என்று சிவாஜியுடம் பேசும் இடத்தில் ரொம்ப திகில் ஆக இருக்கும்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கூட ஒரு சிறிய வேடத்தில், floor சுத்தம் செய்யும் ஆளாக நடித்து இருப்பார். கமலை பார்த்து ஒரு இடத்தில “பார்த்து நடப்பா. தரையை அசுத்தம் செய்யாதே” என்று சொல்லுவர். பின்பு கமலின் கட்டிபிடி வைத்தியத்தில் மனம் நெகிழ்ந்து “தரையை சுத்தம் செய்யும் என்னை பார்த்து எல்லாரும் முகம் சுளிப்பார்கள். என்னை யாரும் இது வரை இந்த மாதிரி கட்டிபிடித்து பாராட்டியது இல்லை” என்று சொல்லுவார். பின்பு ஒரு காட்சியுள் பிரகாஷ்ராஜ் கமலை கல்லூரியை விட்டு வெளியுள் போக சொல்லும் போது பிரகாஷ் ராஜ் வீராசாமியை பார்த்து “யார் நீ ?” என்று கேட்பார். அப்போது வீராசாமி “நான் வருசமா இங்கே வேலை செய்கிறேன். என்னை உனக்கு தெரியாது. ஆனால் வந்து ஒரு வருஷம் கூட ஆகாத இந்த தம்பிக்கு என்னை நல்ல தெரியும்” என்று கமலை கை காமிப்பார். சூப்பர் சீன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

9 Responses to நடிகர் வீராசாமி மரணம்

 1. பிரபலமானவங்களுக்கு பதிவு எழுத நிறைய பேர் வருவாங்க…
  உங்க ஒரு பதிவு…
  பல அவர்டுகளுக்கு சமம்….
  சினிமாவுக்கு வெளியேயும்.. சினிமா இருக்கு (அதை இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டும்)
  என்னுடைய இரங்கல் செய்தி ஒரு உன்னமையான சினிமா கலைஞனுக்கு போய் சேரட்டும்…

  • RV says:

   ஆகாய மனிதன்,

   உங்கள் பாராட்டெல்லாம் ராஜனைத்தான் சேரும். அவர்தான் வீராசாமி இறந்ததற்கு ஏன் ஒரு பதிவும் போடவில்லை என்று கோபித்துக் கொண்டார்…

 2. ராஜன் says:

  ஆர் வி

  நன்றி. நான் சுட்டிக்காட்டியது வாழ்வின் யதார்த்தத்தினை. கொட்டை எழுத்தில் வருவது மட்டுமே நம்மை ரீச் ஆகின்றன. வீராச்சாமியை நீங்கள் தமிழின் ஆரம்ப கால 50-60களின் சினிமாக்களிலில் இருந்தே காணலாம். காதலிக்க நேரமில்லையில் ரவிச்சந்திரனின் அப்பாவாக இன்னும் அனேகமாக தமிழின் அந்தக் காலத்து அனைத்து சினிமாக்களிலும் இவர் தவறாமல் இருப்பார். இவரைப் போலவே இன்னொரு நபர் நடராஜன் என்று பெயர் அவர் இல்லாத தமிழ் சினிமாக்களே கிடையாது. அவர் பாடிய என்னடி முனியம்மா உன் கண்ணிலே மையி என்றொரு ஃபோல்க் சாங்க் பிரபலமானது. இப்படி எண்ணற்ற நடிகர்கள் சினிமாவில் ஒரு சில சீன்களில் நடிப்பதின் மூலமாகவே வாழ்க்கையை ஓட்டியவர்கள். காளி என் ரத்தினம், டி எஸ் துரைராஜ், எஸ் வி சுப்பையா, எஸ் வி சகஸ்ரநாமம், சாரங்கபாணி,சிவதாணு, மாலி, சாமிக்கண்ணு என்று நிறைய பேர்கள் மனதில் அவர்களின் உருவங்களுடன் தோன்றுகின்றன. ஆனால் இதில் எஸ் வி சுப்பையா, சகஸ்ரநாமம், வி எஸ் ராகவன் போன்ற ஒரு சிலரைத் தவிர உருப்படியாக அவர்கள் பெயரும் நடிப்பும் நினைவில் நிற்பது மாதிரியான சினிமாக்கள் அமைந்தவர்கள் மிகக் குறைவான பேர்களே. அதனால்தான் வீராச்சாமி போன்றவர்கள் நம் கவனத்தை கவருவதில்லை.

  மலையாள சினிமாவின் மாபெரும் பலமே அதன் நடுவாந்திர நடிகர்களே அதில் உள்ள எந்தவொரு சிறு நடிகரையும் நீங்கள் இக்னோர் பண்ணியிருக்கவே முடியாது. ஒரு மம்முட்டி, மோகன்லாலுக்கு உரிய சம இடத்தை அவர்கள் ஆக்ரமிப்பு செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஜகதி மம்மூட்டி மோகன்லாலை விட அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். இன்னசண்ட், ஜகதி, மணியம் பிள்ளை பாஸ்கரன், மம்மு கோயா, ஜனார்த்தனன், ஜகதீஷ், நரேந்திரன்,சுகுமாரி, லலிதா, கோபி, விஜயராகவன், ஒடுவில் உன்னிக்கிருஷ்ணன்,இந்திரன், மாலா அரவிந்தன் என்று ஏராளமான ஹீரோ அல்லாத நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளனர். ஒரு தமிழ் நாட்டுக்காரரான என் மனதிலேயே இவர்கள் அனைவரும் பெயர்களுடன் மறவா இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் இவர்களின் நடிப்புத் திறனை சற்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு சினிமாக்களில் இயக்குனர்களும் ஹீரோ நடிகர்களும் கொடுக்கப் பட்டுள்ள இடத்தினை சற்று சிந்தியுங்கள். இவர்களில் எவரையுமே ஒரு வீராச்சாமி போல, ஒரு மீசை முருகேஷைப் பொல, ஒரு சாமிக்கண்ணுவைப் போல நாம் யாருமே மறந்து விட முடியாத அழுத்தமாக பல படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்கள். இன்றும் ஜகதி மாபெரும் ஒரு நடிகரே. தமிழில் இப்படி இடைநிலை நடிகர்களுக்கு ஒரு அந்தஸ்து இல்லாமல் போனதற்கு நம் இயக்குனர்களுக்கும் ஆக்கிரமிக்கும் நடிகர்களும் பெரும் காரணம் சினிமாவில் 80% சீன்களின் ஃப்ரேம்களை எம் ஜி ஆரும், சிவாஜியும், கமலும், ரஜனியும் எடுத்துக் கொண்டு போன பின் ஒரு வீராச்சாமி உங்கள் மனதில் தங்குவது எங்கே? அவர் நடிக்கும் வெளிதான் ஏது? அதனால்தான் அப்படி 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் படங்களில் அவர் 500 படங்களுக்கும் மேலாக தலையைக் காண்பித்தும் ஒரு சில படங்களில் நடித்தும் கூட அவர் செத்துப் போனது கூட யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறது. உண்மையாக நடிக்கத் தெரிந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமா உரிய வெளியை அளிப்பது இல்லை என்பதே அதன் காரணம்.

  அன்புடன்
  ராஜன்

  • RV says:

   ராஜன், // காளி என் ரத்தினம், டி எஸ் துரைராஜ், எஸ் வி சுப்பையா, எஸ் வி சகஸ்ரநாமம், சாரங்கபாணி,சிவதாணு, மாலி, சாமிக்கண்ணு… // சாரங்கபாணியை இந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. சபாபதி, வேதாள உலகம், அலிபாபாவும் 40 திருடர்களும் மாதிரி பல படங்களில் அவர் முக்கியமான ரோல்களை செய்திருக்கிறார்.

   // உண்மையாக நடிக்கத் தெரிந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமா உரிய வெளியை அளிப்பது இல்லை // மிகச் சரி. இதை சாரதாவும் // 80 சதவீத இடத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆக்ரமித்துக்கொள்கிறார்கள் // ஆமோதிக்கிறார்.

  • Ganpat says:

   சாமிக்கண்ணு என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது.
   இதுவரை தமிழ் படகாட்சிகளில் ஒரு ஆண் தன அழுகையால் audience ஐ அழவைத்திருப்பது,
   1.சிவாஜி in தங்கப்பதக்கம்
   ௨.கமல் in மகாநதி
   3.சாமிக்கண்ணு in உதிரிப்பூக்கள்
   இதில் சாமிக்கண்ணு நாவிதராக வருவார்.
   தாயை இழந்த சிறுவனின் தலையை மொட்டை போடுவதற்கு கத்தியை வைத்துவிட்டு குலுங்கி குலுங்கி அழுவார் பாருங்கள்.!
   Oh My God!!

 3. சாரதா says:

  ராஜன்…

  உங்கள் ஆதங்கம் புரிந்துகொள்ள முடிகிறது. இடைநிலை நடிகர்கள் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாதவர்கள் அல்ல. ஓமக்குச்சி நரசிம்மன், தயிர்வடை தேசிகன், உசிலைமணி, லூஸ்மோகன், பசி நாராயணன் போன்ற எண்ணாற்றவர்கள் ரசிகர்களால் நன்கு தெரியப்பட்டவர்களே. ஆனால் அவர்களுக்கு மீடியாக்கள் கொடுக்கும் மதிப்பும், விளம்பரங்களும் மிகக்குறைவு. எல்லாமே வணிகமாகி விட்ட இக்கால சூழ்நிலையில் எந்தக் கவர்ச்சி நடிகையைப் பற்றி கிசு கிசு போட்டால் வியாபாரமாகும் என்பதே மீடியாக்களின் குறி.

  திரையுலகத்தினரும் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. திரைப்பட விழாக்களிலும் பிரபலங்களுக்கான பாராட்டு விழாக்களிலும் நேற்றுவந்த திரிஷாவையும், இன்று வந்த தமன்னாவையும் மேடையேற்றும் இவர்கள் ஒரு நிழல்கள் ரவியை, ஒரு டெல்லி கணேஷை மேடையேற்றத் தயாராயில்லை. அவர்களை அழைப்பது கூட இல்லையென்று கேள்வி. (ஆனால் ரஜினி, கமல், விஜய் மட்டும் தவறாமல் இருப்பார்கள், சிலசமயங்களில் அஜீத்தும்).

  படங்களில் 80 சதவீத இடத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆக்ரமித்துக்கொள்கிறார்கள் என்பது உங்கள் அடுத்த குற்றச்சாட்டு. அடுத்த மாநிலமானாலும் கேரளமும், தமிழகமும் இதில் நேர் எதிர். அங்கே வியாபாரத்தை நிர்ணயிப்பது கதை. அதனால் அவர்களுக்கு மம்முட்டியும் ஒண்ணுதான் மாமுகோயாவும் ஒண்ணுதான். ஆனால் இங்கு வியாபாரத்தை நிரணயிப்பது கதாநாயகர்களின் செல்வாக்கு மற்றும் விநியோகஸ்தர்களின் மனப்போக்கு. எல்லாப்படங்களும் ஒரே கட்டணத்தில் பார்க்கப்படுகிறது என்றாலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கும் விலை வேறு. அதற்கு ரசிகர்களின் மனப்போக்கும் ஒரு காரணம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் திரையிட்டால் பார்க்கத்தயாராக இருக்கும் இவர்கள் ஒரு முத்துராமன், ஒரு ஏ.வி.எம்.ராஜன் படம் போட்டால் பார்க்கத்தயாரா?. ரஜினியின் பழைய படம் பார்க்கத்தயாராக இருக்கும் இவர்கள், ஒரு தியாகராஜனின் படம் பார்க்கத்தயாரா?. ஆக ரசிகர்களே தரம் பிரித்து வைக்கும்போது யார் என்ன செய்ய முடியும்?.

 4. சாரதா says:

  Cine Playback Singer ‘Swarnalatha’ passed away in a private hospital.

  She is just 37 years Old.

  Very hard to believe.

 5. Bags says:

  முரளி, ஸ்வர்ணலதா, வீராசாமி – எல்லோருமே நல்ல கலைஞர்கள்

  தண்ணீர் தண்ணீரில் வரும் வீராசாமியின் ஒரு நகைச்சுவை காட்சியை மறக்கமுடியாது –

  நினைவில் இருந்து சொல்கிறேன் – வசனம் இப்படி போகும்

  ஒருவர் -”தண்ணி வேணும் – குடிக்கிறதுக்கு ஒரு குடம், சமையலுக்கு ஒரு குடம், குளிக்க ஒரு குடம்…”
  வீராசாமி – “அந்த ஆடம்பரச் செலவுக்கெல்லாம் இங்கே கட்டுப்படியாகாது ஆமா சொல்லிட்டேன்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: