அண்ணன் காட்டிய வழியம்மா (படித்தால் மட்டும் போதுமா?)
செப்ரெம்பர் 23, 2010 5 பின்னூட்டங்கள்
சாரதா பாடல் பிறந்த கதைகள் சீரிஸில் இன்னும் ஒரு பாட்டைப் பற்றி எழுதுகிறார்.
1956ல் பதிபக்தியில் தொடங்கி 1970ல் நடிகர் திலகத்தை வைத்து கடைசியாக இயக்கிய பாதுகாப்பு வரையில் ‘ப’ மற்றும் ‘பா’ வரிசையில் மட்டுமே படங்களை இயக்கிய பீம்சிங் (விதிவிலக்கு: ராஜாராணி, சாந்தி) அந்த வரிசையில் இயக்கிய அற்புதப் படைப்புதான் படித்தால் மட்டும் போதுமா.
1962ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு 1961லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி.மு.க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார். அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது, கவிஞருக்கு அண்ணாதுரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து, உடனே விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.
அவர் பாடல் வரிகளைச் சொல்லச் சொல்ல இவர்களுக்கு சிவாஜியை ஏமாற்றிய பாலாஜியைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தார்கள். படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார், அது அண்ணாதுரையை தாக்கி நான் எழுதியது என்று. கவிஞரைப் பொறுத்த வரை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு சினிமா பாடல்களை பயன் படுத்திக்கொள்வது வழக்கம்.
அண்ணன் காட்டிய வழியம்மா – இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா – என்
கையே என்னை அடித்ததம்மாதொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்அடைக்கலம் என்றே நானிருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்அவனை நினைத்தே நானிருந்தேன் – அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை – அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது சுட்டி தெரிந்தால் கொடுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பாட்டுகள், சாரதா பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் 1
சொன்னது நீதானா – பாடல் பிறந்த கதைகள் 2
கேட்டவரெல்லாம் பாடலாம் – பாடல் பிறந்த கதைகள் 3
என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாடல் பிறந்த கதைகள் 4
Pingback: Indli.com
அண்ணன் காட்டிய வழியம்மா பாடல்…..
கண்ணதாசன் அண்ணாவை நினைத்து எழுதிய இப்பாடலை அண்ணாவிடம் சொன்னபோது அவர் சொன்னாராம்….”” அருமையா எழுதி இருக்கார் ….பாட்டை ரசித்து விட்டு போவேமே “”.
ராஜு-துபாய்
இதுதான் திராவிட இயக்கத்தலைவர்கள் மக்களை அணுகுகின்ற ஜனரஞ்சக அணுகுமுறை. எதற்கும் கோபப்பட மாட்டார்கள். பேச்சிலேயே மக்களை மயக்குவார்கள்.
1967-க்கு முன் தீவிர எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒருமுறை கலைஞர் கருணாநிதி, தேர்தல் நிதி திரட்ட ஏற்பாடான பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையை நோக்கி யாரோ வீசிய கல். அவர் அருகில் வந்து விழ, அதைக்கையில் எடுக்கொண்டு பேசினார். “யாரோ ஒரு நண்பர் நிதி கொடுக்கப்பணமில்லையென்று, ஒரு கல்லை நிதியாக அளித்திருக்கிறார். அந்தக்கல்லை இப்போது ஏலம் விடுகிறேன். கிடைக்கும் தொகையை அவர் சார்பில் நிதியில் சேர்த்துக்கொள்வோம்” என்று கூறி ஏலம் விட்டார். அந்தக்காலத்திலேயே அந்தக்கல் 300 ரூபாய்க்கு ஏலம் போனது.
இன்னொருமுறை கலைஞர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்மீது ஒரு செருப்பு வீசப்பட்டது. அப்போது அவர் சொன்னார் “இப்போது வீசிய செருப்பை அணிந்து பார்த்தேன். என் காலுக்கு சரியாக உள்ளது. எனவே இதன் ஜோடி செருப்பையும் வீசுமாறு அந்த நண்பரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். (நிச்சயம் இந்த பேச்சை, செருப்பு வீசியவர்கூட ரசித்திருப்பார்).
சாரதா, ராஜன் இதைப் படித்தால் கல்லைக் கூட விற்கும் கயவர்கள் என்று ஒரு கால் மணி நேரம் பொங்குவார்! ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கு போலிருக்கிறது.