சிவாஜி–25


விமல் அனுப்பிய செய்தி. அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

சிவாஜி கணேசன்! இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…

 1. சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி!’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
 2. நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
 3. 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த பராசக்தியில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
 4. சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள் கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
 5. கலைஞரை ‘மூனா கானா’, எம்ஜிஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்!
 6. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
 7. தன்னை பராசக்தி படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
 8. திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
 9. தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் வணங்காமுடி!
 10. சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. மனோகரா நாடகத்தைப் பார்த்த கேரளா-கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
 11. தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதி வரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
 12. சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
 13. ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
 14. விநாயகர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
 15. சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. பராசக்தி படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
 16. ரத்தத் திலகம் படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி!
 17. படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
 18. சிவாஜியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
 19. விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
 20. தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்து வைத்தவர் எம்ஜிஆர்!
 21. ‘ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
 22. அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!
 23. பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்’ என்றாராம் தன்னடக்கமாக!
 24. பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
 25. கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to சிவாஜி–25

 1. BaalHanuman says:

  சிவாஜியைப் பற்றி தமிழ்மகன் கூறுகிறார்….

  அந்திமத்தில் அணையும் விளக்குகள்
  ========================================
  நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் ‘முதல்குரல்’ என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். (‘பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்’ டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.

  நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக ‘ஒன்ஸ்மோர்’, ‘என் ஆச ராசாவே’, ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘மன்னவரு சின்னவரு,’ ‘படையப்பா’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் ‘அலை ஓசை’ மணி, ‘குமுதம்’ செல்லப்பா, ‘தேவி’ மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்…? பதில்: “தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?”) கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.

  இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. “சாப்பிட்டோம் சார்” என்றால் “ஆமா. அதை முடிக்கணும் முதல்ல” என்பதில் கிண்டல்.

  ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே “நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?” என்றார். “உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்” என்றேன். “அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.” என்றபடி கமலம் அம்மாவை அழைத்து “பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்” என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து “இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு” என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை “நல்லா சூடா இருக்கா?” என்று வம்பு செய்தார்.

  பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.

 2. சாரதா says:

  நடிகர்திலகத்தின் 83-வது பிறந்த நாளை முன்னிட்டு, பம்மல் ஆர்.சுவாமிநாதன் தொகுத்திருக்கும் “சிவாஜி – 83”, இந்த இணைப்பில்….

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14569&start=450

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: