நம் நாடு


நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

ஓர் உரையாடல்

வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா
ஜெயராஜ் ஓவியர்

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to நம் நாடு

 1. Pingback: Indli.com

 2. Pingback: Tweets that mention நம் நாடு « அவார்டா கொடுக்கறாங்க? -- Topsy.com

 3. சாரதா says:

  “ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி”
  (நம் நாடு)

  மெல்லிசை மன்னரின் இசைக்கோலத்தில் வாலியின் வரிகளில் அமைந்த நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்.

  எல்லாப்படங்களையும் போலவே, ஒரு படத்தில் எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதிலுள்ள சில பாடல்கள் ஓகோ என்று உச்சத்துக்குப்போக சிலபாடல்கள் நிழலுக்குள் தள்ளப்பட்டுவிடும். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அப்பாடல்களைக் கண்டு கொள்ளாது. அப்படி ஒரு சோகம் இந்த அருமையான பாடலுக்கும் கிட்டியது.

  (இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் கதாநாயகியின் ‘சோலோ’ பாடல்தான் அடிபடும். ‘இந்த நாடகம் அந்த மேடையில்’ (பாலும் பழமும்), ‘சொல்லவோ சுகமான கதை சொல்லவோ’ (சிவந்த மண்) இப்படி பல பாடல்கள்.)

  நம் நாடு படத்தில்….

  ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ உச்சத்தில் வைத்துப் பேசப்பட,
  ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்’ அதையடுத்து வர,
  ‘வாங்கையா வாத்தியாரையா’ மிகவும் பாப்புலராக,
  அவற்றுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இப்பாடல் வசதியாக மறக்கப்பட்டது. ஆம், ‘குடிகாரன் பேச்சு’ பாடலும், ‘ஏழு வயசில இளநி வித்தவ’ பாடலும் பேசப்பட்ட அளவுக்குக்கூட இப்பாடல் பேசப்படவில்லை…

  தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் படத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றும் சொல்லி குடிசைக்குள் போகும் எம்,ஜி,ஆர்., முகம் பார்க்கும் கண்ணடியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் காட்ட அதில் தன்னுடைய முகத்தையே கண்டு ஆனந்தம் பொங்க குதூகலத்துடன் குடிசைக்கு வெளியே ஓடும் ஜெயலலிதா அப்போது பெய்யும் மழையில் நனைந்து கொண்டே பாடுவதாக அமைந்த பாடல் இது….

  படத்தில் காணும்போது முன்னிசையுடன் துவங்கும் இப்பாடல், கேசட்டுகளில் சட்டென்று பி.சுசீலாவின் குரலோடு துவங்கும்.

  ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி – நெஞ்சில்
  ஆசை வெள்ளம் வழிய வழிய அலை அடிக்குதடி
  நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி – புது
  நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி
  அம்மம்மம்மம்மா…… அம்மம்மம்மம்மா…

  (ஆடை)

  இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளூட்டில் மெல்ல துவங்கி பின்னர் வயலினில் வேகம் பிடித்து அக்கார்டியன் பிட்டுடன் முதல் இடையிசை முடிய, சுசீலாவின் தேன் குரலில் முதல் சரணம்….

  கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
  கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
  கண்கள் பொன்னூஞ்சல் மன்னவன் ஆட
  நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
  பொங்குது பொங்குது எண்ணக்கனவுகள்
  சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
  ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ..

  இரண்டாவது இடையிசையில், முதலில் வயலினும் தொடர்ந்து ஃப்ளூட்டிலும் நீண்ட இடையிசை, தொடர்ந்து இரண்டாவது சரணம்…

  புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய
  புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
  தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
  பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
  உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது
  அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
  ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ..

  மூன்றாவது இடையிசையில் மனதைக் கொள்ளை கொள்ளூம் நீண்ட ஷெனாய் இசை, முடிக்கும்போது அந்த கடைசி பிட்டை மூன்று முறை வாசித்து நிறுத்தும் அழகு… அப்பப்பா இந்த மனிதரின் (MSV) கற்பனைத்திறன் நம்மை வியப்பிலாழ்த்தும்…

  மல்லிகை மலராடும் மங்கல மேடை
  மங்கை மணமாலை சூடிடும் வேளை
  இல்லறம் உருவாகும் நாள் வரும்போடு
  இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது
  சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும்
  கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
  ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ.. (ஆடை)

  கேட்கக்கேட்கத் திகட்டாத சுசீலாவின் இனிய குரலில் அமைந்த இப்பாடல் எனக்குப் பிடித்த சுசீலா ஃபேவரைட்களில் ஒன்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: