சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு


1955-ம் ஆண்டு காவேரி, முதல் தேதி, உலகம் பலவிதம், மங்கையர் திலகம், கோடீஸ்வரன், கள்வனின் காதலி ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.

இவற்றில் மங்கையர் திலகம் மிகச் சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.

கள்வனின் காதலி கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

இந்த சமயத்தில், சிவாஜி கணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது:

நான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.

எனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே! யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா?” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.

உடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்ஜிஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்ஜிஆர் அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.

“எங்கே கணேசன், வரவில்லையா?” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.

அண்ணன் எம்ஜிஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப் பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி! ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.

நான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.

எனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.

இதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிவாஜி பக்கம்

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு

  1. Ganpat says:

    RV ji,
    இந்த பதிவு வெகு அண்மையில் வெளியாகி
    இதற்கு நான் பின்னூட்டமும் போட்டேன்
    (“நல்லவேளையாக பெருமாள் நம்மை காப்பாற்றினர்.திருநீறு இடாத சிவாஜி முகத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்று)
    இப்போ தேடினால் அது எங்கே உள்ளது என கண்டுபிடிக்கமுடியவில்லை.இதத்தான் நான் navigation கஷ்டம் என குறிப்பிட்டேன்
    நன்றி.

    • RV says:

      கண்பத்,

      நீங்கள் குழம்பிவிட்டீர்கள். இந்த பதிவு விமல் அனுப்பிய ஒரு மறுமொழி (சிவாஜி பக்கம் சென்று போய் பாருங்கள்), அதை இப்போது பதிவாகா போட்டிருக்கிறேன். விமலின் மறுமொழிக்கு நீங்களும் ஒரு பதில் எழுதி இருந்தீர்கள்.

      ப்ளாகை எப்படி தொகுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

      • Ganpat says:

        RV ji,

        நன்றி.

        இன்னும் விமலின் அந்த மறுமொழியை தேடிக்கொண்டிருக்கிறேன்.

        நான் வேண்டுவதெல்லாம் இதுதான்.
        எந்த பெயரை click செய்தாலும் அவர்கள் பதிவு மற்றும் மறுமொழி(இதுவரைப்போட்டது எல்லாம்) தெரியும்படி செய்யவேண்டும்.
        இது சாத்தியமா என்று எனக்குத்தெரியவில்லை.

      • RV says:

        கண்பத், வோர்ட்ப்ரஸ்சில் இது சாத்தியமில்லை.

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி