இதயக்கனி – விகடன் விமர்சனம்


திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த (1975 செப்டம்பர்) விமர்சனம். நன்றி, விகடன்!

தேனிலவுக்குப் போய் வந்த அவசரத்தில் காபி எஸ்டேட் முதலாளி மோகனுக்கு போலீஸ் இலாகாவின் அழைப்பு வருகிறது. தன் கணவன் எஸ்டேட் முதலாளி மட்டுமல்ல, உளவு போலீஸ் அதிகாரி என்பதும் அப்போதுதான் தெரிகிறது இளம் மனைவிக்கு. துப்பு துலக்குவதற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கொலை வழக்கில், கொலையின் தொடர்பில் தேடப்படும் பெண் தன் மனைவியே என்பது தெரிந்ததும் மோகனுக்கு அதிர்ச்சி! மனைவியின் கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியும் முயற்சியில் மோகன் முனைய, ஒரு சதிகாரக் கும்பலே அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆரிடம் இளமை துள்ளுகிறது. காதல் சுவை சொட்டச் சொட்ட ராதா சலூஜாவுடன் ஆடிப் பாடுவதும், குறும்பு செய்வதும் கொள்ளைக் கவர்ச்சி! போலீஸ் அதிகாரியாகக் கடமையில் ஈடுபடும் போது எஸ்டேட் முதலாளிக்கு நேர் எதிரான ஒரு பாத்திரமாக எம்.ஜி.ஆர். மாறி விடுகிறார். சதிக் கும்பலுக்குள் புகுந்து அவர்களின் ரகசிய இடங்களுக்குச் சென்று வளைத்துப் பிடிக்கும் காட்சிகள் ‘திரில்’ மூட்டுகின்றன.

கதாநாயகி ராதா சலூஜாவின் தமிழில் மழலை கொஞ்சுகிறது. ஆனாலும், சாதுரியமாகச் சமாளித்திருக்கிறார். இந்தி நடிகை என்று எண்ண முடியாதபடி, காதல் நெருக்கத்திலும் உருக்கத்திலும் உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார்.

கொலையில் சம்பந்தப்பட்ட மாலாவும் கதாநாயகி லட்சுமியும் இரட்டையர்கள் என்று கதையை அமைக்காமல் இருவரும் ஒருவரே என்பதை நம்ப வைத்திருப்பது நல்ல டெக்னிக். இறந்து போனதாகச் சொல்லப்படும் மாலா, உயிருடன்தான் இருக்கிறாள் என்று ராதா சலூஜாவை சதிக் கும்பலின் முன் கொண்டு வந்து வீரப்பா நிறுத்துகிறாரே, அங்கிருந்து தொடரும் சஸ்பென்ஸ், கடைசியில் அருமையாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு டயலாக் பேசி தேங்காய் சீனிவாசன் குலுங்க வைத்திருக்கிறார்.

மெர்க்காராவின் பசுமையும், பிச்சாவரம் உப்பங்கழியின் பயங்கரமும் படமாக்கப்பட்டுள்ள நேர்த்தி நெஞ்சை நிறைக்கிறது. ஒளிப்பதிவோடு இசையும், கலரும் போட்டியிட்டிருக்கின்றன.

இதயக்கனி இனிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

4 Responses to இதயக்கனி – விகடன் விமர்சனம்

  1. சாரதா சொல்லுகின்றார்:

    //மெர்க்காராவின் பசுமையும், பிச்சாவரம் உப்பங்கழியின் பயங்கரமும் படமாக்கப்பட்டுள்ள நேர்த்தி நெஞ்சை நிறைக்கிறது. //

    …..சரி அப்படி சிறப்பாக படமாக்கிய பரிதாபத்துக்குரிய ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணன் என்று போட்டுவிட்டால், விகடன் விமர்சனக்குழுவின் தலையில் இருந்து கிரீடம் இறங்கிவிடுமா என்ன?.

    அதுபோல மணிமணியான பாடல்களை இசைத்துக்கொடுத்த இன்னொரு பரிதாபத்துக்குரிய ஜீவன் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ஒரு வரிகூட இல்லை. வெறுமனே இசை என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே இருக்கிறது. (இன்றைக்கு இளையவர் அல்லது இசைப்புயல் பெயர்களை விட்டுவிட்டு விமர்சனம் எழுதி விடுவார்களா என்ன?). இவ்வளவு சதிகளுக்குப்பின்னும் அந்த மனுஷன் நிற்கிறாரே அதைப்பார்க்கணும்.

    கதாநாயகனும், கதாநாயகியும் மட்டும்தான் படம் என்று நினைக்கும் பாமரனுக்கும், விகடன் விமர்சனக்குழுவுக்கும் என்ன வித்தியாசம்…?.

    • RV சொல்லுகின்றார்:

      // கதாநாயகனும், கதாநாயகியும் மட்டும்தான் படம் என்று நினைக்கும் பாமரனுக்கும், விகடன் விமர்சனக்குழுவுக்கும் என்ன வித்தியாசம்…?. // சாரதா, நல்ல கேள்வி. அன்னக்கிளி பட விமர்சனத்தில் கூட ராஜாவைப் பற்றி ஒரு வரி கிடையாது.

  2. சாரதா சொல்லுகின்றார்:

    டியர் ஆர்.வி.,

    இங்குதான் நாம் எல்லோரும் தப்பு பண்ணுகிறோம். அன்னக்கிளி, ராஜாவின் முதல் படம். முதல் இரண்டு வாரங்கள் சரியாகப்போகாத நிலையில் பல சிறிய நகரங்களில் தியேட்டரை விட்டு படம் தூக்கப்பட்டு விட்டது. பின்னர் விவித்பாரதியில் பாடல்கள் (குறிப்பாக ‘மச்சானை’) ஃபேமஸ் ஆனபின்னர் படம் சூடு பிடிக்கத்துவங்க, எடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் திரையிடப்பட்டது. ஆனால் விமர்சனங்களோ படம் ரிலீஸாகி நாலைந்து நாட்களில் பிரசுரமானவை. ஆக முதல் பட விமர்சனத்தில் மட்டும்தான் அவர் பெயர் இல்லை. இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளி’யிலிருந்தே, விமர்சனங்களில் ராஜா பெயர் இடம் பெறத்துவங்கிவிட்டது. இன்றுவரையாகட்டும், படத்தின் பெயர் இல்லாமல்கூட விமர்சனம் எழுதுவார்களே தவிர, இளையவர் பற்றி எழுதாமல் எந்த விமர்சனமும் வருவதில்லை.

    ஆனால் ‘இதயக்கனி’ எம்.எஸ்.வி.க்கு முதல் படம் அல்ல. அதற்கு முன்பே பலநூறு படங்களில் அவர் தன் அபார திறமையை நிரூபித்துவிட்டார். அப்படியிருந்தும் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை என்றால் என்ன அர்த்தம்.

    செய்தித்தாள்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், மற்ற மீடியாக்களாகட்டும், எப்போதுமே எம்.எஸ்.வி. – இளையராஜா விஷயத்தில் ‘ஒருகண்ணில் வெண்ணெயும்ம், மறுகண்ணில் சுண்ணாம்பும்’ தடவும் பாலிஸிதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது (மத்திய அரசு விருதுகள் உட்பட).

    • RV சொல்லுகின்றார்:

      சாரதா, // முதல் இரண்டு வாரங்கள் சரியாகப்போகாத நிலையில் பல சிறிய நகரங்களில் தியேட்டரை விட்டு படம் தூக்கப்பட்டு விட்டது. // படம் ஓடுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான் பாட்டைப் பற்றி எழுத வேண்டுமா என்ன? நல்ல பாட்டுகள், அதைப் பற்றி ஒரு வரி எழுதி இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: