இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்



(சாரதா விமர்சனம் எழுதுவதில் சிறிது முன்னேற்றம். ‘திரைக்கு வந்து பல வருடங்கள் ஆன’ படங்களைப் பற்றி எழுதியது போக ‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ படங்களைப் பற்றி எழுதினாலும், பெரும்பாலும் திரையரங்குகளில் இருந்து படங்கள் எடுக்கப்பட்ட பின்னரே பதியப்படுவதால், டிவிடியில் பார்ப்போருக்கு மட்டுமே அவளது பதிவு பயன்படுகிறது. அதாவது நிஜமாகவே அப்படி பயன்பட்டால்)

தமிழில் கௌபாய் படங்கள் வந்து நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருவதால், இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு (அப்படங்களை விரும்புவோர் மத்தியில்) இருந்தது உண்மை. அதே சமயம் சிம்புதேவனின் ஆக்கம் என்பதால் ’23-ம் புலிகேசி’ போல நகைச்சுவை அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் என்பதும் எதிர்பார்த்ததுதான். அவ்வகையில் சிம்பு தேவன் ஏமாற்றவில்லை. ஆனால் கௌபாய் படங்களுக்குரிய சாகசங்கள் குறைவு. குறைவு என்ன அறவே இல்லையென்றுகூடச் சொல்லலாம்.

ஆரம்பத்தில் ‘ஷோலேபுர’த்தில் அமிதாப்ஜி படம் மாட்டப்பட்டிருக்கும் கோர்ட்டில், வாதாடிக்கொண்டிருக்கும் மோகன்ராம், முள்ளங்கி வைரத்தைத் திருடியதற்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிங்காரத்துக்கு மரண தண்டனை (????) விதிக்கும்படி கேட்கும்போதே படம் களை கட்டுகிறது. தொடர்ந்து, அந்த முள்ளங்கி வைரம் தங்களிடம் இருப்பதாகவும், அதைத் தர வேண்டுமானால் ‘கோழை சிங்காரம்’ தங்களிடம் இருந்து மறைந்துபோன ‘மாவீரன் சிங்கமாக’ (இருவருக்குமான உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி) நடித்து எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்த வேண்டும் என்று (பில்லா கதை போல இல்லே?) ‘ஜெய்சங்கர்புரத்’தைச்சேர்ந்த மௌலியும், வையாபுரியும் அழைத்துப் போக, கதை நகரத் துவங்குகிறது.

கௌபாய் படங்களுக்கேயுரிய செட்டுக்களுக்காக வெளிப்புறத்தில் ஒரு நகரத்தையே மர வீடுகளால் உருவாக்கியுள்ளனர். ஒண்ணுமில்லே ஜஸ்ட் ஒரு தெருதான். இருந்தாலும் செட்கள் மனதைக் கவர்கின்றன. போக்குவரத்துக்காக முழுக்க முழுக்க குதிரைகள்தான். ஆனால் குதிரைகளை வைத்து முன்பு இயக்குனர் கர்ணன் கௌபாய் படங்களில் செய்துகாட்டிய சாகசங்கள் அனைத்தும் மிஸ்ஸிங். அந்த சாகசங்கள் ‘அவரது பாட்டன் சொத்து’ என்பதால் இருக்கலாம்.

செட் அமைத்தவரையும், காஸ்ட்யூம் டிசைனரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். முன்பெல்லாம் கௌபாய் படங்களில் கதாநாயகன், நாயகி, வில்லன், அவனது அடியாட்கள் என்று ஒரு சிலர் மட்டுமே கௌபாய் ட்ரெஸ் அணிந்திருக்க மற்றவர்கள் சாதாரண உடைகளில்தான் அலைவார்கள். இப்படத்தில் அப்படியல்ல. படத்தில் தோன்றும் அனைவருமே (அவர் பிரேமுக்கு அப்பால் சும்மா நிற்பவராக இருந்தாலும்) கௌபாய் உடையிலேயே வருகிறார்கள். அது போல லொக்கேஷன்களும் நல்ல வறட்சியான இடங்களாகப் பார்த்து ஷூட் பண்ணியுள்ளனர்.

மர வீடு செட்கள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன. அதுபோல புதையல் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தின் உட்புற செட் அமைக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கும் ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு தடைகளைத்தாண்டி உள்ளே போய் புதையல் எடுக்கப்போனால், அங்கிருக்கும் துண்டுச் சீட்டில் இருக்கும் சஸ்பென்ஸ் சரியான தமாஷ்.

கதாநாயகன் ராகவா லாரன்ஸைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே ஒரு கோமாளி போன்ற தோற்றத்தையும் நடிப்பையுமே வெளிப்படுத்துகிறார். இறுதிக் கட்டத்தில் கொஞ்சம் வீரம் கொப்பளிக்கிறது. இருப்பினும் வில்லன் நாஸரிடம் இருக்கும் முறைப்புக்குத் தகுந்த பதிலடி இவரிடம் இல்லை. கௌபாய் படங்களுக்கே உரிய சவாலான சண்டைக்காட்சிகளும் இல்லை. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதால் இருக்கலாம்.

மூன்று கதாநாயகிகள் பத்மப்ரியா, லக்ஷ்மி ராய் மற்றும் சந்தியா. ஆனால் யாருக்கும் போதுமான பங்களிப்பு இல்லை. மூவரும் சிங்கம் லாரன்ஸைப் பார்த்து உருகுகிறார்கள். ஆளுக்கொரு பாடலும் பாடுகிறார்கள். சந்தியா செவ்விந்தியர் பாஸ்கரின் மகள். செவ்விந்தியர்களிடமிருந்து தப்பிக்க, சந்தியாவை மணந்துகொள்வதாக வாக்களிக்கிறார். அதோடு சரி, அப்புறம் படம் முடியும் வரை அதைப் பற்றிய பேச்சே இல்லை. பத்மப்ரியாவை மட்டுமே லாரன்ஸ் விரும்புகிறார்.

லக்ஷ்மி ராய் வீணடிக்கப்பட்டிருக்கிறார். வில்லன் நாஸர் பக்கத்தில் கௌபாய் உடையில் கால்களை அகல விரித்து நின்று கொண்டு ‘எஸ் பாஸ், எஸ் பாஸ்’ என்று சொல்வதோடு இவர் பணி முடிந்துவிடுகிறது. புதையலைத் தேடி போகும்போது, அருவியில் குளிக்கும் சீன் ஒன்று இருந்திருக்கும் போலும். சென்ஸாரில் கட் ஆகியிருக்கலாம். காரணம் ஸ்டில்களில் இடம் பெற்ற காட்சிகள் படத்தில் இல்லை.

படத்தில் புதையலைத் தேடிப் போகும் பயணம் சுவாரஸ்யமான ஒன்று. இந்த பயணத்தில் லாரன்ஸ், இளவரசு, சாய்குமார், பாஸ்கர், சாம், வையாபுரி என எல்லோரும் கலக்குகிறார்கள். கலக்காதவர் லக்ஷ்மி ராய் மட்டுமே. ‘மேப்’பில் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் ஒவ்வொன்றும் அதனதன் வடிவத்தில் நிஜமாக இருப்பதாகக் காட்டியிருப்பது அருமை. குறிப்பாக மலையின் பக்கத்தில் நிற்கும் அந்த பிரம்மாண்ட சிலை சூப்பர்.

இவர்கள் தவிர மௌலி, டெல்லி கணேஷ், மனோரமா, வி.எஸ்.ராகவன் ஆகியோரும் தங்கள் பங்கை நன்றாகச் செய்துள்ளனர். (இப்படத்தில் இருந்திருக்க வேண்டிய ஒருவர் மிஸ்ஸிங் என்றால் அது வெண்ணிற ஆடை மூர்த்தி).

படம் சுவாரஸ்யமாகப் போவதால், எந்த இடத்தில் வெளியில் சென்று வருவது என நினைப்பவர்களுக்கு பாடல் காட்சிகள் துணை புரிகின்றன. மனதில் ஒட்டாத பாடல்கள். (கௌபாய் படங்களில் வரும் பாடல்கள் எப்போதுமே மனதில் ஒட்டுவதில்லையென்பது வேறு விஷயம்).

அரங்க அமைப்பாளர்களும், உடையலங்கார நிபுணர்களும், ஒளிப்பதிவாளருமே 80 சதவீதம் மனதில் இடம் பிடிக்கிறார்கள். மிச்சமுள்ள 20 சதமே மற்ற எல்லோருக்கும். ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம் இவற்றோடு ஜெய்சங்கர், அசோகன் ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் என்று அமைத்து சிறப்பு சேர்த்துள்ளனர். (கூடவே எம்.கர்ணன் வளாகம், ராஜ்கோகிலா காலனி என்று காண்பித்திருக்கலாம்). இடங்களுக்கும் தெருக்களுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் கூட நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம்.

மொத்தத்தில் மனதளவில் சிறுவர்களாக மாறி, கவலைகளை மறந்து சிரித்து ரசிக்க ஒரு படம் ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’.

ஆர்வி: எனக்கு படம் பிடிக்கவில்லை. சிம்புதேவனிடம் நான் நிறைய எதிர்பார்த்துவிட்டேனோ என்னவோ. ஆனால் செட், ஆர்ட் டைரக்ஷன், உடைகள் எல்லாமே மிக நன்றாக இருந்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம், திரைப்படங்கள்

Advertisements

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

3 Responses to இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

  1. சாரதா says:

    டியர் RV,

    முதல்முறை நிறைய எதிர்பார்ப்புக்களோடு நீங்கள் பார்த்திருப்பதால், சற்று பிடிக்காமல் இருந்திருக்கக்கூடும். இப்போது ‘படம் இப்படித்தான்’ என்று தெரிந்துவிட்ட மனநிலையோடு இன்னொருமுறை (?) பாருங்கள். நீங்கள் விரும்பக்கூடும் என்று நினைக்கிறேன்.

  2. சாரதா says:

    லட்சுமிராயை வீணடித்து விட்டனர் என்று நான் சொன்னதற்குப்பதில், அவரை சரிவர பயன்படுத்திக்கொள்லவில்லை என்று சொல்லலாம். (கௌபாய் படங்களில் பொதுவாக நாயகிகளுக்கு வேலையிருக்காது என்பது உண்மைதான். ஜஸ்ட் ஒரு கவர்ச்சி இணைப்பு அவ்வளவுதான், அதற்கு லட்சுமிராய் ஒ.கே).

    ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். கடைசியில் வில்லன் நாஸரைத் தீர்த்துக்கட்டுவது அவர்தான். அந்த இடத்தில் Hero வேலையையும் எடுத்துக்கொள்கிறார்.

    தவிர, மூன்று கதாநாயகிகளிலேயே அட்டகாசமாக கௌபாய் உடையணிந்து, கம்பீரமாக குதிரையில் வருவதும் லட்சுமிராய் மட்டுமே. புதையலைத்தேடிப்போகும் ஏழுபேரில் இவர் ஒருவரைத்தவிர மற்ற அறுவரும் ஆண்களே. இருப்பினும் அவர்களுக்கு இணையாக சளைக்காமல் குதிரைச்சவாரி செய்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: