ஜெயகாந்தனும் சினிமாவும்


அம்ஷன்குமார் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் ஒரு டஜன் சினிமாவில் பங்கு பெற்றிருந்தால் அதிகம். ஆனால் அந்த படங்களின் தரம் உயர்வாக இருக்கிறது!

கட்டுரையிலிருந்து தெரிய வரும் அவர் பங்களிப்பு உள்ள படங்கள்:

 1. உன்னைப் போல் ஒருவன்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
 2. யாருக்காக அழுதான்: திரைக்கதை, இயக்கம். தயாரிப்பும் அவர்தானோ?
 3. சில நேரங்களில் சில மனிதர்கள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
 4. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்: மூலக்கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். இயக்கம் பீம்சிங்.
 5. கருணை உள்ளம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம். இயக்கம் பீம்சிங்.
 6. எத்தனை கோணம் எத்தனை பார்வை: வசனம்
 7. புதுச்செருப்பு: இயக்கம்
 8. காவல் தெய்வம்: மூலக்கதை, திரைக்கதை, வசனம்
 9. ஊருக்கு நூறு பேர்: மூலக்கதை
 10. பாதை தெரியுது பார்: தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாட்டு
 11. காத்திருந்த கண்கள்: ட்ரீட்மென்ட்?
 12. நேற்று இன்று நாளை: (எம்ஜிஆர் படம் இல்லை) குறும்படம், 67-இல் வந்ததாம். இயக்கம்+தயாரிப்பு?
 13. நல்லதோர் வீணை: தொலைகாட்சி படம், மூலக்கதை
 14. அவர் யாருக்காக அழுதான் படத்தை விமர்சித்திருக்கிறார்.

  தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.

  தான் இயக்கிய படத்தையே இப்படி கிழிகிழி என்று கிழிக்கும் மனிதரின் integrity பிரமிக்க வைக்கிறது.

  அம்ஷன்குமார் சொல்லும் பல படங்களை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்களேன்! சாரதா, காவல் தெய்வம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

  இன்னும் பெரிய பங்களிப்பாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நமக்குதான் அதிர்ஷ்டம் இல்லை.

  தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

  தொடர்புடைய பக்கம்:
  அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை
  ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
  சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
  ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to ஜெயகாந்தனும் சினிமாவும்

 1. சாரதா says:

  டியர் RV,

  ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ வண்ணத்திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக்கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒருமுறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

  சாருஹாசன், வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, சுரேஷ், நளினி, தியாகராஜன், வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் என நிறைய பழையமுகங்களே நடித்திருந்தபோதிலும், உருவாக்கத்தில் புதுமையிருந்தது. தி.க.தலைவர் வீரமணி போல கருப்புச்சட்டையில் வரும் பத்திரிகை ஆசிரியர் வி.கோபாலகிருஷ்ணன் மட்டும் படம் முழுக்க செந்தமிழில் பேசுவது மிக நன்றாக இருக்கும். மனைவியை விட்டுப்பிரிந்து, இசைக்காக தன்னை அர்ப்பணித்து தன் தோழர்களுடன் தனியாக வாழும் சாருஹாசன்தான் படத்தின் முதுகெலும்பு. மது அருந்துவதை ஒரு தவ்றாக எண்ணாமல் அன்றாட சடங்காக கருதும் கூட்டம் அது.

  தியாகராஜனுக்கும், ஸ்ரீபிரியாவுக்கம் நடக்கும் சுயமரியாதை திருமணம் எல்லாம் ரொம்ப இயற்கையாக, தெருமுனையில் பந்தல்போட்டு நடத்தப்படுவது போன்ற பல காட்சிகள் மனதுக்கு இதமாக அமைந்தவை. பாடல்களும் ஜெயகாந்தன் எழுதியதாக நினைவு. ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ என்ற பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஆனால் அப்பாடலின் நடுவே, துறைமுகத்தில் பெரிய பெரிய இரும்பு பிளேட்கள் இறக்கப்படுவதை ஏன் காண்பித்தனர் என்பது தெரியவில்லை. இதுபோக தேங்காயும், கிருஷ்ணாராவும் பாடும் ‘என்ன வித்தியாசம’ என்ற பாடலும், சாருகாசன் பாடும் ‘அலைபாயுதே கண்ணா’ பாடலும் உண்டு.

  அதிர்ஷ்டவசமாக இப்படம் பார்க்கநேர்ந்தது ஒரு கதை. எங்கள் குடும்ப நண்பரொருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது அவரைப்பார்க்க நானும் என் கணவர் பிரகாஷும் சென்ற இடத்தில், ‘ஏதாவது திரைப்பட வீடியோ கேஸட் இருந்தால் கொடுங்கள் (அப்போது சி.டி.வரவில்லை) பார்த்துவிட்டு தருகிறோம்’ என்று கேட்டபோது, மூன்று பட கேஸட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் இந்த ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ படமும் ஒன்று. கேள்விப்படாத படமாக இருக்கிறதே என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துச்சென்று படத்தைப்பார்த்தபோது படம் அருமையாக இருந்தது.

  ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 31 தினத்தந்தி செய்தித்தாளில், அந்த ஆண்டு வெளியான படங்களைப்பற்றிய விவரமான கட்டுரை வெளியாகியிருந்தது. (வருடா வருடம் தினத்தந்தியில் வருடக்கடைசியில் இப்படி ஒரு கட்டுரை போடுவார்கள்). அதில் ‘சென்ஸார் ஆகியும் இன்னும் வெளிவராத திரைப்படங்கள்’ என்ற தலைப்பில் மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றாக ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ பெயரும் இருந்தது.

  My GOD… இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் பார்த்துவிட்ட படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லையா?. என்ன கொடுமை?. இவ்வளவு நல்ல படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லையா?. தயாரிப்பாளரே வெளியிடத்தயக்கமா?. இப்படியிருந்தால் நல்ல் படங்கள் எப்படி நம் பார்வைக்கு வரும்?. இன்றுவரை அப்படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை. வெளியாகியிருந்தால் எப்படி ஓடியது?. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

 2. அன்புள்ள RV வணக்கம். நீண்ட நாள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சியும் கூட.
  நீங்கள் தமிழ்மண நட்சத்திரமாய் சென்ற வாரம் ஜொலித்த போதே வாழ்த்த நினைத்தும் கணினியின் சதியால் முடியவில்லை. இன்று அதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நீங்கள் பட்டியலிட்ட ஜெயகாந்தன் திரைப்படங்களில் யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், காவல் தெய்வம் ஆகியவைகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
  நாகேஷ் நடித்த யாருக்காக அழுதான் என்ற படம் சீரியஸாக நினைத்து எடுக்கப் பட்டு எல்லோரையும் சிரிக்க வைத்த காமெடிப் படம். எல்லோருமே ஓவர் நடிப்பை அள்ளி வழங்குமாறு செய்த இயக்குனருக்கே அந்தப் பெருமைப் போய்ச் சேரவேண்டும்.
  சில நேரங்களில் சில மனிதர்களும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இரு படங்கள் நல்ல படங்கள். என்னதான் கதை எழுதினாலும் ஒரு திறமை வாய்ந்த இயக்குனரால் மட்டுமே எழுத்தை காட்சியாக்க முடியும் என்று ஜெயகாந்தனுக்கே நிரூபித்து, புரிய வைத்த படங்கள். இந்த படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் ஜெயகாந்தன் பீம்சிங்கின் தீவிர ஆதரவாளராகவே மாறச் செய்த படங்கள். பீம் சிங்கும் சிவாஜி காலகட்டத்திற்கு பின் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து தன்னை நிரூபித்தப் படங்கள். துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த நேரத்தில் காலம் தவறினார்.
  காவல் தெய்வத்தைப் பொறுத்தவரை, S.V.சுப்பையா இந்தக் கதைக்காக தயாரிப்பாளராக மாறி எடுக்க விரும்பிய படம். பிற்காலத்தில் சிவாஜியின் பல வெற்றிப் படங்களை இயக்கிய K.விஜயன் இயக்குனராக அறிமுகமான படம். இந்தப் படமும் எழுத்தாளரின் எண்ணத்தை திரைக்கு கொண்டு வந்ததில் வெற்றி அடைந்தாரென்றே நினைக்கிறேன்.
  இங்கிருந்து இடுகைக்கு சம்பந்தமில்லாத விஷயம்……
  இந்தப் படச் சம்பந்தமான சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் படத்திற்கு தூணான சிவாஜி கதாபாத்திரம் (சாமுண்டி)மிகவும் சிறியது.சுப்பையா சிவாஜியை இந்தக் காதாபாத்திரத்திற்க்கு அணுகும் காலத்தில் சிவாஜி சாப்பிடக்கூட நேரம் இல்லாத மிகவும் பிஸியாக இருந்த நேரம்.சுப்பையாவிற்காகவும், இந்த பாத்திரத்தை வாழ நினைத்தும் சிவாஜி ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பளம் பேசவில்லை. சிவாஜி சுப்பையாவிற்காக இந்தப் படத்தில் இலவசமாகவே நடிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டு இருந்தார்.
  பிறகு படம் முடிந்ததும் சிவாஜிக்கு பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்று எண்ணிய சுப்பையா ஒரு டிஃபன் கேரியரினுள் பத்தாயிரம் ரூபாய் பணத்தை வைத்து சிவாஜியிடம் உள்ளே பலகாரம் இருப்பதாகவும் தயவு செய்து அதை சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  படப் பிடிப்பு முடிந்தவுடனோ அல்லது இடைவெளியிலோ சிவாஜி அதை சாப்பிட திறந்த போது உள்ளே பத்தாயிரம் ரூபாய் பணமுள்ளதைப் பார்த்து கோபமடைந்து என்னுடைய இன்றைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?. அதைக் கேட்டால் நீ தாங்குவாயா? எனக்குச் சம்பளம் கொடுக்கிறாயா? என்று கோபித்து சுப்பையாவிடமே அந்தப் பணத்தைத் திருப்பித் தந்து விட்டாராம். இப்படியும் மனிதர்கள் இருந்தது ஒரு காலம்!!!

 3. சாரதா says:

  //சாரதா, காவல் தெய்வம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா? //

  ஜெய்சங்கர் திரியில் நான் எழுதிய கட்டுரையில், காவல் தெய்வம் படம் பற்றிய தகவல் இடம் பெற்ற பகுதி:

  பல நாவலைப்படித்துவிட்டு படம் பார்க்கச்செல்லும்போது, திரைக்கதையில் செய்யப்படும் மாற்றங்களால் பார்ப்பவர்களுக்கு சிறிது ஏமாற்றம் ஏற்படுவதுண்டு.

  காவல்தெய்வம் படத்தில் கூட, சிவகுமார் ஏற்றிருந்த மாணிக்கம் கதாபாத்திரம், கிராமத்துக்குச்சென்றவன், தானே சிறைக்கு திரும்பி வந்துவிடுவது போல முடித்திருந்தது ‘சப்’பென்றிருந்தது. ஆனால் ஜெயகாந்தன் எழுதிய ‘காவல் தெய்வம்’ நாவலில், மாணிக்கம் திரும்பி வராமல் போகவே, புதிய ஜெயிலரின் உத்தரவின் பேரில் ஒரு சி.ஐ.டி. ஆஃபீஸர் கிராமத்துக்குச்சென்று, ஒளிந்திருக்கும் மாணிக்கத்தைக் கைது செய்து, முன்னைவிட தீவிர தண்டனைக் கொட்டடியில் அடைப்பதாகவும் பழைய ஜெயிலர் சிறையில் வந்து அவன் தலையைத்தடவி ஆறுதல் சொல்வதுபோலவும் எழுதியிருந்தது சுவையாக இருந்தது. ஆனால் படத்தில் முடிவு ஏமாற்றமளித்தது. (அப்படியும் படத்தை ஓரளவு காப்பாற்றியது, இடையில் வந்து போன ‘சாமுண்டிக் கிராமணி’தான்)

  நாவலில் சாமுண்டி கதாபாத்திரம் இருந்தது. இவ்வளவு விரிவாக இல்லை. சாமுண்டியின் கதையை ஜெயிலர் இன்னொருவரிடம் சொல்வது போல அமைந்திருக்கும். அதே சமயம் மறுநாள் தூக்கிலிடப்படுவதற்கு முன், முதல் நாளிரவு சக கைதிகளைப் பாடச்சொல்லிக் கேட்கும் சம்பவங்களெல்லாம் நாவலிலும் உண்டு.

  “சுவருக்கு அந்தப்பக்கம் இருக்கும் முகம் தெரியாத ஐயாமார்களே, நாளைக்கு நான் இருக்க மாட்டேன்யா. அதனால எனக்காக எல்லோரும் ஆளுக்கொரு பாட்டுப்பாடுங்கய்யா. அதைக்கேட்டுக்கிட்டே நான் போயிடுறேன்” என்று மனம் உருக வேண்டும் வசனம் நாவலில் உள்ளதுதான்.

  அந்த ஆனைக்குன்றம் சப்-ஜெயில் பற்றி வரி வரியாக நாம் படிக்கும்போது, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அந்த ஜெயிலுக்குள் கொண்டுபோய் உட்கார வைத்துவிடுவார். அதுதான் ஜெயகாந்தன்.

 4. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

 5. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்

 6. Pingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: