நூத்துக்கு நூறு


திருப்பி கொஞ்சம் விமர்சனங்களை ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன்.

நூத்துக்கு நூறு கொஞ்சம் புத்திசாலித்தனமான படம். அன்றைக்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்த முடிச்சு, காட்சி அமைப்பு இன்றைக்கும் புத்திசாலித்தனமாக இருப்பதில்லைதான், ஆனாலும் ஒரிஜினல் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது, பாராட்ட வேண்டிய முயற்சி.

ராஷோமான், அந்த நாள் மாதிரி காட்சி அமைப்பு. ஒரு சம்பவம் இப்படி நடந்தது என்று ஒருவர் ஃப்ளாஷ்பாக்காக சொல்வார்; இல்லை இப்படித்தான் நடந்தது என்று அடுத்தவர் சொல்வார். காமெரா கோணம் விரிந்துகொண்டே போய் இன்னும் இன்னும் காட்சிகள் தெரிவது போல ஒரு உணர்வு.

கல்லூரியில் பாப்புலர் ப்ரொஃபசர் ஜெய்ஷங்கர். ஆங்கிலோ-இந்தியர் வி.எஸ். ராகவன் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். ராகவனோடு நல்ல உறவு. தன் மாணவன் நாகேஷின் சகோதரி லக்ஷ்மியோடு நிச்சயதார்த்தம் ஆகிறது. திடீரென்று அவர் மீது ஒருவர் மாற்றி பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவி ஸ்ரீவித்யா ஜெய் தன்னை கெடுக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார். இன்னொரு மாணவி தனக்கு அவர் லவ் லெட்டர் கொடுத்தார் என்கிறார். வி.எஸ். ராகவனின் மகள் விஜயலலிதா ஜெய்தான் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்கிறார். ஜெய் கைது செய்யப்படுகிறார். பிறகு?

பழைய படம், எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதனால் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். கதையின் முக்கியமான முடிச்சு – தன்னை கெடுக்க முயலும் ப்ரொஃபசரிடமிருந்து தப்பி ஓடும் பெண் பாடப்புத்தகங்களையும் பையையும் கவனமாக எடுத்துக் கொண்டு போகமாட்டாள் என்ற பாயின்ட் – நன்றாக வந்திருக்கிறது. அதில் நான் மிகவும் ரசித்தது இயக்குனரின், அன்றைய ரசிகர்களின் tacit முடிவு – அப்படி புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் என்று பெண்ணின் அம்மா உண்மையைத்தான் சொல்வாள், பொய் சாட்சி சொல்லமாட்டாள் என்பதுதான். கதாபாத்திரங்கள் பொதுவாக உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது அன்றைக்கு ஒரு unspoken assumption ஆக இருந்திருக்கிறது.

ஜெய் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் ஸ்ரீவித்யா என்ன நடந்தது என்று சொல்லும்போது ஃப்ளாஷ்பாக்கில் அவர் விடும் ரொமாண்டிக் லுக்கும், தானே விவரிக்கும்போது அவர் முகத்தில் காட்டும் கண்டிப்பும் நல்ல கான்ட்ராஸ்ட். நாகேஷை மாணவனாக ஒத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சம் மிகை நடிப்புதான். ஆனால் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் அவரை விசாரிக்கும்போது அவர் பேசுவது நன்றாக இருக்கும். காலேஜ் பிரின்சிபால் ஜெமினி கணேசன் சின்ன ரோலில் திறமையாக நடித்திருப்பார். வி.எஸ். ராகவனுக்கு over the top ரோல். சிவாஜி சாயல் அடிக்கிறது. அது சரி, இன்றைக்கும் கூட சிவாஜி சாயல் இல்லாத நடிப்பைப் பார்ப்பது கஷ்டம்தான்.

சில வசனங்களில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஜெய் மீது எல்லாரும் குறை சொல்லும்போது நாகேஷ் வெள்ளை சுவரில் ஒரு கறுப்புப் புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். கறுப்புப் புள்ளி என்று சஹஸ்ரநாமம் சொன்னதும் இவ்வளவு பெரிய வெள்ளைச் சுவர் தெரியவில்லையா என்பார்.

சில இடங்களில் இயக்குனர் கோட்டை விடுகிறார். ஜெய் ஸ்ரீவித்யா தன் மேல் ஆசைப்படுகிறார் என்ற உண்மையை முதலில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது வெளியே தெரிந்தால் அவளை எல்லாரும் கேவலமாகப் பார்ப்பார்கள் என்பார். ஆனால் அவரே இதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறேன் என்று ஸ்ரீவித்யாவை மிரட்டுவார். அதனால்தான் ஸ்ரீவித்யா பொய்யாக அவர் மேல் பழி போடுவதே!

1970-இல் வந்த படம். ஜெய், லக்ஷ்மி, நாகேஷ், வி.எஸ். ராகவன், விஜயலலிதா, ஜெமினி, ஸ்ரீகாந்த் தவிர எஸ்.வி. சஹஸ்ரநாமம், வி. கோபாலகிருஷ்ணன், நீலு, ஒய்.ஜி. மகேந்திரன் (முதல் படம்), மனோகர், சுகுமாரி, எஸ்.என். லட்சுமி முகங்கள் தெரிகிறது. ஒரு சின்ன அம்மா ரோலில் வருவது ஜெயந்தி மாதிரி இருக்கிறது, ஆனால் 70-இலேயே ஜெயந்திக்கு அம்மா ரோலா என்று சந்தேகமாக இருக்கிறது. கதை வசனம் இயக்கம் பாலச்சந்தர். பாடல்கள் வாலி என்று நினைக்கிறேன். இசை வி. குமார்.

படத்தில் இரண்டு ஹிட் பாட்டுகள் – நான் உன்னை மாற்றிப் பாடுகிறேன் ஒன்று. அதுவும் மூன்று முறை வரும். ஒரு முறை விஜயலலிதா முதலில் விவரிக்கும் கோணத்தில், ஒரு முறை ஜெய்யின் கோணத்தில், இன்னொரு முறை முழு உண்மையாக. இப்போது கூட புத்திசாலித்தனமான காட்சியாகத்தான் தெரிகிறது.

இன்னொன்று நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம். இதுவும் அன்றைக்கு புதுமையான முறையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. Silhoutte உத்தி நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாட்டில் இருக்கும் துள்ளலும் பொருத்தமாக இருக்கிறது.

பூலோகமா என்று தொடங்கும் ஒரு நாடகப் பாட்டு ஒன்று. நாகேஷ் சத்தியவான் சாவித்திரி நாடகம் போடுகிறார். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் பார்க்கலாம், கேட்கலாம்.

உங்களில் ஒருவன் நான் என்று இன்னொரு பாட்டு. மறந்துவிடலாம்.

சுருக்கமாக பாலச்சந்தரின் சிறந்த படங்களில் ஒன்று. பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். பி க்ரேட்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to நூத்துக்கு நூறு

 1. சாரதா says:

  டியர் RV,
  வழக்கம்போல மிக அருமையானதொரு விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.

  சின்னத்திருத்தம்: விஜயலலிதாவின் பாடல் “நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்”. அதை நீங்கள் ‘மாற்றிப்பாடி’ விட்டீர்கள்.

  ‘நூற்றுக்கு நூறு’ படத்துக்கான எனது விமர்சனம், சென்ற ஆண்டு கிட்டத்தட்ட இதே நாளில் எழுதியது, இந்த இணைப்பில்…

  http://www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13518&postdays=0&postorder=asc&start=90

 2. Das says:

  நானும் அதை கவனித்தேன்!!

 3. BaalHanuman says:

  R P ராஜநாயஹம் கூறுகிறார்….

  இசையமைப்பாளர் வி குமார் ( ஏ .ஆர் .ரஹ்மானின் அப்பா சேகர் இவரிடம் உதவியாளராக இருந்தவர் ) பாலச்சந்தரின் படம் ‘ நூற்றுக்கு நூறு ‘ படத்திற்காக போட்ட பாடல்
  ” நித்தம், நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடுவேன் .
  இளமை பொங்கும் எழில் தலைமை தாங்கும் உனை என்றும் நாடுவேன் ”

  இந்தப் பாடலின் மெட்டில் தான் ‘ ரயில் பயணங்களில்’
  டி .ராஜேந்தர் பாட்டு _
  “வசந்தம் பாடி வர, வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா ?”

  • சாரதா says:

   டியர் சீனிவாஸ்,
   ஒரு காலத்தில் எந்தப்பாடலில் இருந்து எந்தப்பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று கண்டுபிடித்து சொல்வது எங்களிடையே ஒரு வழக்கமாக இருந்தது. (உ-ம்: ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது’ பாடலில் இருந்து ‘வச்சுக்கவா உன்னை மட்டும்’, ‘மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி’ பாடலில் இருந்து ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’, ‘தங்கப்பதக்கத்தின் மேலே’ பாடலில் இருந்து ‘என்ன விலை அழகே’ இப்படி நிறைய).

   ஆனால் த்ற்போது, ‘ரீமிக்ஸ்’ என்ற கேலிக்கூத்து கலாச்சாரப்படி, பழைய பாடலை அப்படியே எடுத்து குட்டிச்சுவர் பண்ணுவது என்ற நிலை வந்தபிறகு, யார் எதிலிருந்து காப்பியடித்தார்கள் என்று கண்டுபிடிப்பதில் ஆர்வம் போய்விட்டது. அதான் பாடல்களை அப்படியே கபளீகரம் செய்யத்துவங்கி விட்டார்களே. இன்றைக்கு ரகுமான், யுவன்சங்கர் ராஜாவெல்லாம் கூட இதைச்செய்யும்போது இன்னமும் காப்பி என்றால் வேதாவையும், தேவாவையும் மட்டுமே சொல்வது அநியாயம்.

   நான் சொல்வது தவறல்ல என்று நினைக்கிறேன். ரீமிக்ஸ் செய்யும் இசையமைப்பாளர்களின் கீ-போர்டெல்லாம் பார்க்கும்போது ‘பெரிய சைஸ் திருவோடாக’த்தான் தெரிகிறது.

   கேடுகெட்ட ரீ-மிக்ஸ் கலாச்சாரத்தை ராஜநாயகம் போன்றவர்கள் ஒரு பிடி பிடிக்கலாமே.

   • BaalHanuman says:

    சாரதா,

    நீங்கள் சொல்வது மிகச் சரியே. யார் இந்த ரீ-மிக்ஸ் கலாச்சாரம் என்னும் நோகாமல் நோன்பு கும்பிடும் பழக்கத்தை உருவாக்கியது என்று தெரியவில்லை. ராஜநாயகம் இதைப் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. இதோ அவர் குறிப்பிட்டுள்ள வேறு சில பாடல்கள் (ஒரே மெட்டு ரெண்டு பாட்டு)

    ‘தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே ‘ என்ற எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய பெஹாக் ராக பாடலின் மெட்டில் அப்படியே மாற்றம் இல்லாமல் மதுரை வீரனில் எம்ஜியாருக்காக
    டி .எம் .எஸ் ” ஏச்சு பொழைக்கும் தொழிலே சரி தானா ” என்று ஒரு பாட்டு பாடியிருக்கிறார் .

    இப்படி மெட்டு சுலபமாக கண்டு பிடிக்கும் விதமாக அப்படியே போடாமல்,சில பாடல்கள் கொஞ்சம் புரியாதபடி திரும்ப போடப்படுவதுண்டு.

    அப்படி ஒரு பாடலை மெலடியாக, மென்மையாக தன்னால் போடப்பட்ட பாடலை பின்னால் சரியான டப்பாங்குத்தில் போட்டு செம ஹிட் ஆக்கியிருக்கிறார் கே .வி . மகாதேவன். 1965 ல் வந்த படம் ‘ எங்க வீட்டுப் பெண் ‘. ஜெய்சங்கர் ,
    ஏ .வி.எம் ராஜன் நடித்த படம் .அதில் இந்த பாடல் –

    ” கால்களே நில்லுங்கள் . கண்களே சொல்லுங்கள் .
    காதல் என்பது காவியமா ? இல்லை கண்ணீர் வரைந்த ஓவியமா ?”

    இந்த பாடல் அவ்வளவாக பிரபலமாகவில்லை .
    அதே படத்தில் பி .பி .எஸ் பாடிய நல்ல பாடல் ” சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி “.
    பி.பி .எஸ் பாடினாலே எந்த பாட்டும் ஹிட் தானே !

    1970ல் வந்து சக்கைப் போடு போட்ட எம்ஜியார் படம் ” மாட்டுக்கார வேலன் “.
    ஹிந்தியில் ஜிதேந்திரா நடித்த ‘ஜிக்ரி தோஸ்த் ‘ படத்தின் ரீமேக் . அந்த படத்தில் மகாதேவன் ஹிட் ஆகாத தன் ‘ கால்களே நில்லுங்கள்,கண்களே சொல்லுங்கள் ‘ மெட்டை நல்ல டப்பாங்குத்தில் போட்டு ஹிட் ஆக்கி காட்டினார்.
    “பட்டிக்காடா ?பட்டணமா ?ரெண்டுங்கெட்டான் லட்சணமா !”

    கமல் ஹாசன் -குட்டி பத்மினி ஆடிப்பாடும் பாடல் தேவரின் ‘ மாணவன் ‘ படத்தில் சங்கர் -கணேஷ் இசையில்
    டி .எம் .எஸ் – எல் .ஆர் ஈஸ்வரி பாடியது
    ” விசிலடிச்சான் குஞ்சுகளா ! குஞ்சுகளா ! வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா! பிஞ்சுகளா!”

    இந்தப் பாடல் மெட்டு மீண்டும் எவ்வளவு வருடங்கள் கழித்து,உலகநாதன் பாடி ஹிட் ஆகி, ஊரே பாடிக்கொண்டு திரிந்தது !

    ” வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் ”

    இதே மாதிரி “பேசும் மணி முத்து ரோஜாக்கள், பிள்ளைகள் ….” பாட்டும் “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, சிவந்த கண்ணங்கள் …” பாட்டும் ஒண்ணுதான்.

  • RV says:

   சாரதா, ஸ்ரீனிவாஸ், எந்த பாட்டிலிருந்து எந்த பாட்டு என்பதையே ஒரு பதிவாக போடலாம் போலிருக்கிறது!

 4. gopal.e says:

  Dear R.V, உங்கள் தலைப்பு நூத்துக்கு நூறு என்று உள்ளது, வேண்டுமென்றே போட்டதா, இல்லை சரிதானா? நூற்றுக்கு நூறு என்று நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: