திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை


(இது ஈஷ்வர் கோபால் அனுப்பியுள்ள செய்தி)
திரு. உமர் எழுதிய ‘கலை உலகச் சக்கரவர்த்திகள்’ என்ற நூலிலிருந்து சில சுவாரசியமான தொகுப்புகள் :-

‘நாதசுவரச் சக்ரவர்த்தி’ டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, ரயிலிலும் சரி, காரிலும் சரி, கச்சேரிக்குச் செல்லும்போது ஒரு பெரும்படையுடன்தான் செல்வார்.  ஒருதரம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அவர் வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்கள் சாரதா (அவர் மனைவிகளுள் ஒருவர், அவருக்கு ஐந்து மனைவிகள்), 2 அல்சேஷன் நாய்கள், 1 தாளம் போடுபவர், 1 ஒத்து ஊதுபவர், 2 தவில் வித்வான்கள், 1 நாதசுவர வித்வான், 2 எடுபிடிகள் ஆக பத்து நபர்களுடன் வந்திறங்கினார். பிரயாணத்திலும் கூட அவரது ஆடம்பர வாழ்வு தெரிந்தது.

இவர் ஒரு தனிப் பிறவி! சுகபோகங்களின் சிகரம்.  கேவலம், கையொப்பம் இடட்டும் – கொட்டைக் கொட்டை எழுத்துகள். அரைப் பக்கம் நிரம்பிவிடும். லெட்டர் பேப்பரும் வால் நோட்டீஸ் மாதிரித்தான். அதன் ஜோடி கவர் 15 அங்குலம் நீளமாகவும் இருக்கும். தபால் இலாகாவுக்கு நல்ல லாபம். கவரின் மேல் அச்சிட்டுள்ள பட்டம், பதவிகளின் போக்கும் கொஞ்சமும் இளைத்தவையல்ல, ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட. ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’, ‘ அகில உலக ஜோதி’…

மோட்டார் கார் பெரிய ரதம், காலனுக்கு (gallon) எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்குப் பிரயாணம் செய்யும்போது,பக்கவாத்திய பரிவாரம், குடும்பம் சகலமும் காரில் அடங்கிவிடும். காதுகளில் மோட்டார் ‘ஹெட் லைட்’டுக்குச் சமமான வைரக் கடுக்கன் ஜோடி, அதை எஸ்.ஜி. கிட்டப்பாவிடம் விலைக்கு வாங்கி அணிந்துகொண்டதாகச் சொல்லுவார்கள், ஜரிகை மயமான ஆடை, அழுத்த வர்ணங்களில் பட்டுச் சட்டை, கவுன் போலவும் கழுத்து முதல் பாதம் வரை சில சமயங்களில் அணிந்துகொள்வார், முதலாளி மட்டுமேயல்ல, செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமான வேஷத்துடந்தான் இருப்பார்கள்.

பொடி டப்பி, பேர் பொடி டப்பியானாலும், டிரங்க் என்றுதான் சொல்லவேண்டும். பாப்பா கே.எஸ்.வெங்கட்ராமையா, வெள்ளியும் பொன்னும் கலந்த பெரிய பொடி டப்பியைப் பிரத்தியேகமாகத் தயாரித்து, ராஜரத்தினம் பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வெற்றிலைப் பெட்டி, ஒரு கூட்ஸ் வண்டி மாதிரி இருக்கும். கூஜா ஒரு வெள்ளி டிரங்க். இவ்வளவையும் தூக்கிக்கொண்டு, ரயில் பிரயாணம் முதல் வகுப்பில் வருவார்.

டி.என்.ஆர். ஓட்டல் தாசப்பிரகாஷில் தங்கியிருந்தபோது உஸ்தாத் கான்சாகிப் படே குலாம் அலி கான் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் ஜி.என்.பியை அழைத்துக் கொண்டு டி.என்.ஆர். இருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவர் வரவையும் கண்டு பூரித்துப் போனார் டி.என்.ஆர். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த்தும், கான்சாகிபின் பாட்டைக் கேட்க ஆசைப்பாட்டார் டி.என்.ஆர். டி.என்.ஆரின்  ஆசையை ஜி.என்.பி. சொன்னது, ‘மாண்ட்’ ராகத்தில் அற்புதமாக அரை மணி நேரம் பாடினார் உஸ்தாத். கான்சாகிப் பாட்டைக் கேட்டதும் ஜி.என்.பி. அப்படியே மயங்கிவிட்டார். ராஜரத்தினம் பிள்ளைக்கு குஷி வந்துவிட்ட்து. விடுவாரா பிள்ளை, படே குலாம் வாசித்த அதே ‘மாண்ட்’ ராகத்தை தனது நாதசுவரத்தில் இரண்டு மணி நேரம் வாசித்தார். ஜி.என்.பி-யும் படே குலாம் அலி கானும் வியந்துவிட்டார்கள்.

“நாதசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார்.

நாகப்பட்டினத்தில் ஒரு நாதஸ்வர வித்வான். அவர் கையில் நாதஸ்வரம், வாசிப்பில் அபஸ்வரம், ஆனால் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்பட்டமாகக் காப்பியடித்துக் கொண்டிருந்தார். முன்பு அவர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கிராப்புத் தலை ஆனார்.  அதே ஜொலிப்புக் கடுக்கன், அதே டால் வீசும் மோதிரங்கள் போதாக்குறைக்கு “ஏகலைவன் மாதிரி அண்ணாச்சியை மனசிலே வச்சுக்கிட்டு வாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிற்காமல் ராஜரத்தினத்துக்கு நாதஸ்வரம் செய்து தரும் ஆசாரியைப் பிடித்து, அவருடைய வாத்தியத்தின் பிரத்தியேக அமைப்பையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அண்ணாச்சி வாத்தியம் இருபத்தேழு இஞ்சு தானே, என்னுடைய வாத்தியத்தை இருபத்தெட்டரையாகப் பண்ணிவிடு” என்று வேறு சொல்லி வைத்தார். இது எப்படியோ பிள்ளைவாளின் காதுக்கு எட்டிவிட்டது.  அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.  கொஞ்ச நாள் கழித்து ராஜரத்தினம் பிள்ளை நாகப்பட்டினம் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஒரு கச்சேரி. போன உடனேயே உள்ளூர் நாதஸ்வரத் தம்பிக்கு சொல்லியனுப்பினார். தம்பிக்கு ஒரு புறம் சந்தோஷம், இன்னொரு புறம் பயம். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ராஜரத்தினத்தின் முன் தயங்கித் தயங்கி நின்றார்.

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா”?

“இருக்கேன், உங்க ஆசீர்வாதம்”.

“அசப்பிலே பார்த்தா என்னை மாதிரியே இருக்கே. என்னைப் போலவே ஊதறியாமே? பேஷ், பேஷ், யாருகிட்டே பாடம்”?

“உங்களையே குருவா மனசிலே எண்ணிக்கிட்டேனுங்க, கேட்கப் போனா இந்த வட்டாரத்திலே என்னை எல்லோரும் ‘சின்ன ராஜரத்தினம்’னுதான் சொல்லுவாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!”

“அது சரி நீ என்னவோ ஆசாரிகிட்டே உன் வாத்தியத்தை இன்னும் கொஞ்சம் நீளமாகச் செய்யச் சொன்னயாமே, என்ன ரகசியம் அதிலே”?

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, மந்தர ஸ்தாயியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பேச வைக்கலாம்னு ஓர் இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க”.

“அது போவட்டும், டிரஸ், கிரஸ், ஆபரணங்கள் எல்லாம் என்னைப் போலவே போட்டுகிட்டு இருக்கியே?”

உள்ளூர்த்தம்பி ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். தம்பிக்கு நிறைய காப்பி, பலகாரம் வாங்கிக் கொடுத்த பின், இருவரும், ஒரு காரில் ஏறி, வெளியே போனார்கள். ராஜரத்தினம் தன் ஓட்டுனரை விளித்து, “நேரே சலூனுக்கு ஓட்டப்பா!” என்றார். கார் சலூன் போய்ச் சேர்ந்த்து. தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளூர்த் தம்பியைப் பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார். தம்பிக்கு பகீரென்றது. “என்ன விபரீதம் நடக்குமோ”? என்று தயங்கினார்.

“சும்மா உட்காருப்பா!” என்றதும் தயங்கித் தயங்கி நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தார். முடி திருத்தும் கலைஞரைப் பார்த்து, “இரண்டு பேருக்கும் மொட்டை அடி, திருப்பதி ஸ்டைலில்” என்றார். உள்ளூர்த் தம்பி அலறி, “என்னங்க இது! நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கதறியே விட்டார். “பின்னே என்னவென்று நினைச்சுகிட்டே? எல்லாத்திலேயும் நீ என்னைக் காப்பி அடிக்கிறே. நான் கடுக்கன் போட்டா நீ கடுக்கன் போடறே. நான் தோடா போட்டா நீயும் ‘தோடா’ போடறே. கழுத்து சங்கிலியிலே பாதியை
ஜிப்பாவுக்கு வெளியே எடுத்து விடுக்கிறே. கட்டுக்குடுமி வச்சுக்கிடா கட்டுக்குடுமி வச்சுக்கிறே, கிராப்பு வச்சிக்கிட்டா கிராப்பு வச்சிக்கிறே. வாத்யம் பண்றதிலே என்னை ஒரு படி மிஞ்சி ஒன்றரை இஞ்ச் கூட வைச்சு ஆர்டர் பண்றே. நான் இப்ப மொட்டை அடிச்சுக்கப்போறேன். நீயும் அடிச்சுக்க!” என்றார். தம்பிக்கு புத்தி வந்து சரணாகதி அடைந்த பிறகுதான் சலூனை விட்டு வெளியே வந்தார்.

டி.என்.ஆர். 1956ஆம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார். இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு அக்காலத்திலேயே கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பார்கள். ஒரு கச்சேரிக்கு 1950ம் ஆண்டிலேயே பத்தாயிரம் ரூபாய் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு பணம் குவிந்தும் சிக்கனமாகச் செலவு செய்யாது மிகவும் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இவரின் இறப்புச் சடங்குகளை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ஏற்றுக்கொண்டார்.

பற்றி Bags
Trying out

2 Responses to திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

 1. BaalHanuman says:

  On a related note….

  விகடன் — காலப் பெட்டகம் – 1998

  நாகஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினத்துக்கு இது (1998) நூற்றாண்டு!

  ”நீங்கள் ராஜா; நான் சக்கரவர்த்தி!”

  27.8.1898 – ‘அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி’ திருவாவடு துறை டி.என்.ராஜரத்தினம்பிள்ளை பிறந்த தேதி! வரும் வியாழனன்று அந்த மாமேதைக்கு நூறாவது ஆண்டு!

  திருமருகல் என்கிற ஊரில் பிறந்து திருவாவடுதுறைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்த பையன், ராஜரத்தினம். ரத்தத்தில் ஹீமோகுளோபினோடு ஏழு ஸ்வரங்களும் கலந்து ஓட, எந்நேரமும் வாயில் பாட்டு ததும்பிக் கொண்டேயிருக்கும். சின்னப் பைய னாக இருக்கும்போதே கச்சேரிகளில் வாய்ப்பாட்டு பாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும், திருவாவடு துறை மடத்தின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாக இருந்த நடேச பிள்ளையின் நிழல் கிடைத்தவுடன் தனது ஜீவன் இந்த நீண்ட, கறுத்த நாகஸ்வரம் என்கிற வாத்தியத்தில் தான் இருக்கிறது என்று கண்டு கொண்டான் பையன்.

  அப்புறமென்ன, வாழ்க்கை முழுக்க ஆரோகணம்… அதாவது ஏறுமுகம்தான்! போன இடமெல்லாம் சிறப்பு. அதனால் வந்த கித்தாய்ப்பு!

  ”ராஜரத்தினத்துக்கென்ன, அர்ஜுன மகராஜா. ஊருக்கு நூறு ரசிகாள். ஜில்லாவுக்கு ஒரு பொண் டாட்டி!” – சக வித்வான்களின் சந்தோஷ விமரிசனம் இது.

  ராஜரத்தினத்துக்கு ஐந்து மனைவிகள்!

  ஒரு கச்சேரிக்கு, தான் வரும் போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன் னாராம்… ”ஏம்ப்பா! நான் இந்த கச்சேரிக்கு மட்டும் 3,000 ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரிய வனா?”

  கலெக்டர் என்ன, மைசூர் மகா ராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட் டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ”கணக்குப் பிள்ளை! பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடும்!” என்றாராம். உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ”மேளக்கா ரரே, பணத்தை வாங்கும்!” என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம் ”நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி” என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகா ராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்.

  இதுபோன்ற – இருக்க வேண்டிய திமிர்க்குணத்தாலேதான் அவர் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக்கொண்டதும், அக்ர ஹாரத்தில் ஆனாலும், அரண்மனை யில் ஆனாலும் செருப்பு போட்டுக் கொண்டு நடந்ததும்!

  இந்தக் குணம் கொஞ்சம் எல்லை மீறியபோதுதான், இவர் ஒப்புக் கொண்ட இடங்களுக்கு கச்சேரிக்குப் போகாததும், ‘லைட்’டாக ‘சுதி’ ஏற்றிய நிலையிலேயே எல்லாரையும் தூக்கியெறிந்து பேசியதும் நடந்தி ருக்கவேண்டும். மாலை 7 மணிக்கு வருவதாகச் சொன்ன இடத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குப் போவார். ஜனம் இவரைச் சபித்தபடி உட்கார்ந் திருக்கும். மேடையில் பக்கவாத்திய தோரணைகளோடு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்ததும், மோகனாஸ்திரம் விழுந்த லாகிரியில் மயங்கிக் கிடக் கும் ஊர். விடிகாலை ஏழோ, எட்டோ… கச்சேரி முடிந்ததும், கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போகும்.

  ‘ராஜரத்தினம் பிள்ளை’ என்றதும் அவருக்கு நெருக்கமானவர்களின் முதுமையில் தளர்ந்த கண்கள் இப் போதும் பிரகாசமாகிவிடுகின்றன.

  ”சுதந்திரம் கிடைச்ச நாள். குடியர சுத் தலைவர் மாளிகையில் கொடி யேறிய நாளன்று நேருவின் முன்னி லையில் நாகஸ்வரம் வாசிச்சார் பிள்ளைவாள். சொக்கிப் போயிட்டார் நேரு” என்று பெருமையாக ஆரம் பித்தார் திருவிடைமருதூரில் வசிக்கும் டி.எஸ்.மகாலிங்கம் பிள்ளை. அந்த விழாவில், பிள்ளை வாசித்த நாகஸ் வரத்துக்கு இவர்தான் தவில்.

  ”பிள்ளைவாளோட வாசிப்பைக் கேட்ட நேரு, ‘உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டார். உடனே ராஜரத்தினம் பிள்ளை, ‘எங்க ஊர்லே திருட்டுபயம் ஜாஸ்தி. கரன்ட் வேணும்’னு சொன்னார். நாங்க நிகழ்ச்சி முடிஞ்சு ஊருக்கு வரும்போது திருவாவடுதுறை முழுக்க லைட் எரிஞ்சது. நேருவைப் பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் அந்த மாதிரி ஷெர்வானி, ஓவர்கோட்டு, ஷூன்னு இவர் தன்னோட தோற் றத்தையே கொஞ்ச நாள் மாத்திக்கிட்டது வேற விஷயம்” என்றார் மகாலிங்கம் பிள்ளை.

  அப்போதெல்லாம் ரயில், ராஜ ரத்தினம் பிள்ளையின் ஊரில் நிற்காது. அதனால் வெளியூர் சென்று திரும்பும் சமயம், தன் வீட்டின் பின்புறமாக ரயில் ஓடும் போது, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி ஐம்பது ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வீட் டுக்குப் போவது இவருடைய வழக் கம்.

  இதுமாதிரியான சுபாவம் உச்ச கட்டத்தை அடைந்தபோது, அவரது ஊருக்கே ஆபத்தைக் கொண்டு வந்தது ஒரு சம்பவம். பின்னால் வந்த பஸ்ஸுக்கு வழிவிடாமல் சில நிமிடங்கள் தாமதம் செய்துவிட்டார் பிள்ளை. பஸ்ஸில் வந்துகொண்டி ருந்த எஸ்.பி. குரல் உயர்த்திப் பேச, அவருடைய முகத்தில் தாம்பூலத்தை உமிழ்ந்துவிட்டு வந்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து, ‘தெருவில் கண்டால் சுடும்’ உத்தரவுடன் போலீஸ் படை ஒன்று பிள்ளையின் வீட்டை முற்றுகையிட்டது. தான் செல்லமாக வளர்த்து வந்த ஏராள மான நாய்களை அவிழ்த்துவிட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே பதுங்கி யிருந்தார் பிள்ளை. இவருடைய மருமகனான கக்காயி நடராஜ சுந்தரம் என்பவர் மூலம், நாகஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்பிர மணியத்துக்கு தாக்கீது போயிற்று. திருவெண்காட்டார் வந்து எஸ்.பி- யின் காலில் விழ, ராஜரத்தினம் பிள்ளை உயிர் தப்பியது.

  – ரமேஷ் வைத்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: