கலைக்கோவில்


By E. Gopal
திரைப்பட விமர்சனம் – கலைக்கோவில் (kalai kovil)

படம் வெளியான தேதி: 25.9.1964,

நடிகர்கள் : எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன்
நடிகைகள்:
சந்த்ரகாந்தா, ராஜ்ஸ்ரீ, ஜெயந்தி, எஸ்.என்.லக்ஷ்மி
பின்னனி வீணை இசை: சிட்டிபாபு
பாடியவர்கள் : டி.எம்.எஸ், பாலமுரளிகிருஷ்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்.சி.வி.
தயாரிப்பு : எம்.எஸ்.விசுவநாதன் – கங்கா (கலை இயக்குனர்)

இசை: எம்.எஸ்.விசுவநாதன்-ராமமூர்த்தி

இப்படத்தைப் பற்றிய நுணுக்கமான, சங்கீதத் தகவல்களை அள்ளித்தெளித்ததற்கும்,  இப்படத்தை பற்றிய அறிய தகவல்களைத்தந்து, அதனை பார்க்கத்தூண்டிய நண்பர் அசோக்கிற்கு நன்றி.

தன் வீணை வித்வத்தால் புகழின் உச்சிக்குப்போகும் வித்வான் தனக்கு ஏற்படும் துரோகத்தால் எப்படி வீழ்ந்து மடிகிறார் என்பதே கதை.  ஆரம்பத்திலேயே அற்புதமான கச்சேரியுடன் தொடங்கும் பகுதியில் எஸ்.வி.சுப்பையா வீணை வித்வானாகவே மாறிவிடுகிறார்.  பின் இசையில் வீணைவாசித்திருப்பவர் சிட்டி பாபு.  மிகவும் ரம்மியமாகவும், லயத்துடனும் படமாக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சுப்பையா பிரம்மசாரி. மிகப்பெரிய நாணிலம் போற்றும் வீணை வித்வான்.  தன் அக்காள் (எஸ்.என்.லக்ஷ்மி), மற்றும் அவர் மகள் (சந்த்ரகாந்தா)வுடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். கச்சேரி முடிந்த கையோடு, தன் நன்றியை கடவுளுக்கு தெரிவிக்க கோவிலுக்கு சென்று வரும் போது வெளியில் முத்துராமன் 2 நாட்களாக பசியினால் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தன் காரில் ஏற்றி, வீட்டிற்கு கொண்டுவந்து, ஊணும் உடையும் கொடுத்து பேணுகிறார்.  அவர் கூடவே வசிக்கும் முத்துராமன், காலப்போக்கில் வீணையை கற்றுக்கொண்டு கலையில் தேர்ச்சி பெறுகிறார்.  வாரிசு இல்லாத எஸ்.வி.யோ இவரை தன் மகனாகவே சுவீகரித்து தன் இசைக்கும் இவர்தான் வாரிசு என்று போற்றி வளர்க்கிறார். முத்துராமனின் அரங்கேற்றம் நடக்கிறது, எல்லோரும் எஸ்.விக்கு இதை விட ஒரு வாரிசு கிடைக்காது என்று பாராட்டுகிறார்கள்.

இதனிடையில், எஸ்.வி.சுப்பையாவின் அக்காள் மகளும் அவருக்கு பணிவிடை செய்து அங்கேயே வளர்ந்துவரும் முத்துராமனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது.  இருவரையும் தனிமையில் காணும் எஸ்.வி., அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவ்வாறே செய்கிறார்.

பிரபல நாட்டியக்காரியான (ரஜ்யஸ்ரீ), முத்துராமனின் வீணை இசைக்கு அடிமையாகிறார்.  அவரின் காரியதரசியிடம் (வி.கோபாலகிருஷ்ணன்) தம்வீட்டிற்கு எப்பாடியாவது முத்துராமனை சாப்பாட்டிற்கு அழைக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அவரும் சபாக்களில் கச்சேரி பிடித்துத்தருபவரும், சபா ஒருங்கிணைப்பாளரான  சுப்புவிடம் (நாகேஷ்) தன் கோரிக்கையை முன்வைக்கிறார்.  இது ஒன்றும் பெரிய காரியமில்லை என்று திருமணமான கையோடு – தம்பதிகளை ராஜ்ஸ்ரீ வீட்டிற்கு சாப்பாட்டு விருந்துக்கு அழைக்கிறார்.  அவர்களும் வந்து கௌரவிக்கிறார்கள்.  யாருக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் – முத்துராமனை ஒரு அரை மணித்துளிகள் வீணை வாசிக்க வேண்டுமென்று கேட்கிறார் ராஜ்யஸ்ரீ.  தன் மனைவியை தயக்கத்துடன் பார்த்தபடியே, வீணை கொண்டுவரவில்லை என்று கூற, அவரிடம் ஒரு வீணை இருப்பதாக எடுத்து வந்து வாசிக்குமாறு வற்புறுத்துகிறார்.  அவர் வாசிக்கிறார், வாசித்துக்கொண்டிருக்கும்போதே, எல்லொரும் புருவத்தை உயர்த்தும் வண்ணம், ராஜ்யஸ்ரீ வீணை வாசிப்பில் மயங்கி ஆடத்தொடங்கி, பாட்டும் பாடுகிறார் (தேவியர் இருவர் – ராகம் – ஷண்முகப்ரியா), இப்பாட்டில் உள்ள வரிகள், மிகவும் சச்சரவாக பிண்ணப்பட்டிருக்கவே, சந்தேகம் உணர்ச்சிகளில் குழைந்து முகத்தில் பீறிட, பாட்டை நிறுத்தச்சொல்லுமாறு கத்துகிறார் சந்த்ரகாந்தா.  முதல் முறை அவருக்கு எங்கே தன் கணவர் பாதை மாறிபோய்விடுவாரோ என்று பலவீன ரேகைகள் முகத்திலும், உள்ளத்திலும் இரட்டை குதிரை சவாரி செய்கின்றன. இந்நிகழ்சியிலிருந்து அவர்கள் சற்று இளைப்பாற, சுற்றுலா கிளம்பிப்போகிறார்கள்.
இதற்கிடையே – தனக்கு எல்லாத்திறமைகள் இருந்தும் ஏன் சபாக்களில் கச்சேரி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நீறுபூத்த நெருப்பாக மனதில் புகையை மூட்ட, அதை சுப்புவின் காதுகளில் போட்டு விளக்கம் கேட்க, அவரோ எல்லாம் நேரம்தான் காரணம், திறமை இருந்தாலும், ஒரு வீட்டில் இரு வித்வான் இருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், பெரியவர் இருக்கும் வரை இவர் குட்டிக்கரணம் போட்டாலும் கிடைப்பது கடினம் என்று மனதில் ஏற்பட்ட புகையில் சாம்பிராணையை தூவ – புகை, பகையாக மாறி நெருப்பாக நாக்கின் வழி எட்டிப்பார்க்கிறது.

ஒரு முறை எஸ்.வி.சு. ஒப்புக்கொண்ட கச்சேரிக்கு தன் உடல் நிலையை காரணம் காட்டி ரத்து செய்யச்சொல்லும் போது – அக்கச்சேரி வாய்ப்பை ஏன் தனக்கு கொடுக்கச்சொல்லி கோரிக்கை வைக்க, அவரோ முகமலர்ந்து அதற்கென்னா, “பேஷா செய்துடலாம்” என்று சபா ஒருங்கிணைப்பாளரிடம் இக்கருத்தை மையப்படுத்த, அவரோ மிகவும் கண்டிப்பாக,  ”நடந்தால் உங்கள் கச்சேரி, இல்லையேல் நிகழ்ச்சி ரத்து” என்று கூற – இப்போது முத்துராமனின் உடம்பின் எல்லாப்பாகத்திலும் தீ ஜுவாலை பரவுகிறது.

தன்னுடைய ஆதங்கத்தைத்தீர்க்க வடிகால் தேடி, சுப்பு, ரஜ்யஸ்ரீ கூட்டுக்குழுவினரிடம் போய் கொட்ட – அவர்கள் இவருக்கு குடியையும் பழக்கி தவறான பாதைக்கு போக அடித்தளமிடுகிறார்கள். ஒரு நாள் பூஜை நடக்கும்போது எஸ்.வி. வீணை வாசித்துக்கொண்டிருக்கும்போது அங்கு ஒரு முடிவோடு வரும் முத்துராமன், எஸ்.வி.யிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். அந்த வரம் தன் வாழ்கையையே பிறட்டிப்போடப்போவது என்பதை அறியாமல், அது என்ன கோரிக்கையானாலும், தான் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார்.  “இனிமேல் நீங்கள் வீணையை வாசிக்க்க்கூடாது” என்று சத்தியம் செய்யச்சொல்கிறார். எமாற்றமோ, கோபமோ இல்லாமல் அத்ர்ச்சியை மட்டும் தன்னுள் இறக்கிக்கொண்டு, சமாளித்து அவ்வாறே செய்து கொடுக்கிறார்.

எந்த ஒரு நாதத்தை தன் மூச்சாக கொண்டு வசித்து வந்தாரோ, அதுவே இல்லாத போது அதன் நினைவு வந்து  வாட்டுவதால் இனி அங்கிருப்பது சரியில்லை என்று, கடிதம் எழுதிவிட்டு, கோவில் மண்டபத்திற்கே – எங்கு முத்துராமனை கண்டு, தூக்கிவந்தாரோ – அங்கேயே வந்து வாழ ஆரம்பிக்கிறார்.  முத்துராமனும் இந்த அதிர்ச்சியை மறைக்க, ராஜ்யஸ்ரீ கும்பலுடன் சேர்ந்து நேரத்தைப்போக்கி, குடித்து கெடுகிறார்.  குடியை விடாவிட்டாலும், கச்சேரியால் புகழின் உச்சியை அடைகிறார். எஸ்.வி-யோ பிச்சைக்காரனை போல் வாழ்கிறார். பாதி நேரம் நாட்டியக்காரியினூடேயே வசிக்கும் முத்துராமனால் வீட்டிற்க்கு வருவதைத்தவிர்க்கிறார். இதனால், வீடும் களையிழந்து, அவர் மனைவியும் பலாக்காணம் பாடிக்கொண்டு ஓட்டுகிறார்.

இங்கு தான் இயக்குனர் பெரிய ரம்பத்தை எடுத்து நம் கழுத்தில் வைக்கிறார். இதுவரை நன்றாக போய்க்கொண்டிருந்த கதையை ஜவ்வு போல் இழுத்து அறுக்கிறார்.  ஒருபுரம் முத்துராமனின் வரட்டு கௌரவம், ஒரு புரம் எஸ்.வி.சுப்பையாவின் பிடிவாதம், இரண்டுக்கும் நடுவில் சந்த்ரகாந்தாவின் அழுகுரல் – மூன்றும் மிளகாயை அரைத்து புண்ணில் தடவுகிறது. முத்துராமனின் ஈகோவால் எல்லாம் சீரழிந்து, பின் கடைசியில் பக்கவாதம் வந்து பாதிக்கப்படுகிறார். முத்துராமனுக்கு பக்கவாதம் வந்த பின்தான் நமக்கு பக்காவாக பாதம் நகர்கிறது. கடைசியில், வரட்டுப்பிடிவாதத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே உச்சக்கட்டம்.

முத்துராமனின் வெறுப்பு, எஸ்.வி-யின் சோகம் ததும்பும் முகம், சந்த்ரகாந்தா எப்போதும் கண்களில் வாசிக்கும் ஜலதரங்கம் எல்லாம் பிற்பகுதியில் நம்மை அவர்களிடம் பரிவை ஏற்படுத்துவதற்குப்பதிலாக, எரிச்சலையே ஏற்படுத்துகிறது. கடைசிசொதப்பலால் ஒருவேளை இப்படம் தோல்வியைச் சந்தித்ததோ தெரியவில்லை.

எஸ்.வி.சுப்பையா-வின் நடிப்பு நிறைவைத்தருகிறது.  முத்துராமன், சந்த்ரகாந்தா, ராஜ்யஸ்ரீ, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தம்தம் பாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.  முதலில் விறுவிறுப்பாக போகும் படத்தில், முத்துராமன்மேல் இனம்புரியாத கோபம் வருவது திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாகேஷ் பிச்சு உதறுகிறார்.  சபா ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயந்தியின் கணவராகவும் ஜமாய்க்கிறார்.  ராஜ்யஸ்ரீயால் கைவிடப்பட்ட முத்துராமன், குடிப்பதற்க்கு நாகேஷின் உறவை தேர்ந்தெடுக்க, அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ஜெயந்தியை வாரு வாரு என்று வாருவது பிரமாதமான நகைச்சுவை.

இசையைப் பற்றி சொல்லவில்லையென்றால் முழுமை பெறாது.  மிகவும் அற்புதமான மெட்டுக்கள், தேன்சுவையை பாடல்கள் மூலம் தந்த இரட்டையர் பாராட்டுக்குறியவர்களே.  பாலமுரளியின் “தங்கரதம் வந்தது” (ஆபோகி ராகம்….) “நான் உன்னை சேர்ந்த”, தேவியர் இருவர் முருகனுக்கு (ஷண்முகப்ப்ரியா), மேற்கத்திய பாணியில் முள்ளில் ரோஜா ஆகியவை அருமை.
இப்படம் சிந்துபைரவிக்கு முன்னோடியாக்க்கருதப்படுகிறது.  படம் வந்து ஒருவாரத்தில் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் பிரதியை எல்லா இடத்திலும் தேடினோம்.  சென்னை, மதுரை என்று – கிடைக்கவில்லை.  சென்னையில் சங்கரா ஹாலில் (ஏவிஎம்) முக்கால்வாசி படங்கள் கிடைக்கும், ஆனால் இங்கும் இல்லை.  அங்கு இருக்கும் பொறுப்பாளர் கருணாகரன் இப்படம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  இப்படம் எம்.எஸ்.வியின் சொந்தப்படமாதலால், தோல்வியுற்றபோது, பிரதியை எங்கோ தூக்கி போட்டுவிட்டார் போலும். மலேசியா, சிங்கப்பூரில் விசிடி பதிப்பு கிடைக்கிறது. இந்தியாவில் எனக்குத்தெரிந்து கிடைக்கவில்லை. சிறந்த படம்– அருமையான பாட்டிற்காகவும், முன் திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.

பற்றி Bags
Trying out

20 Responses to கலைக்கோவில்

 1. இந்த படத்தை கல்லூரி காலங்களில் பார்த்தது. அப்பவே அது “பழைய படம்” தான். மேஸ்ட்ரோ சிட்டி பாபுவின் வீணை இசை அமிர்தமாக பாயும் தேவியர் இருவரும் முருகனுக்கு பாடலில். வீணை கச்சேரிகள் எங்கு நடந்தாலும் அப்போது இந்த பாடல் இல்லாமல் நிகழ்ச்சி இல்லை.

  விஸ்வநாதனுக்கும் ராம மூர்த்திக்கும் பிணக்குகள் வந்து பிரிந்ததும் இந்த படத்திற்கு பிறகுதான் என்று கேள்வி பட்டதுண்டு.

 2. கலைக்கோவில் படம் கிடைத்தால் you tube இல் போட்டு வையுங்களேன் !

 3. சாரதா says:

  கலைக்கோவில்
  ———–

  சென்னையில் இயக்குனர் ஸ்ரீதரின் கோட்டையாகத்திகழ்ந்த காஸினோ தியேட்டரில் (மற்றும் மகாராணி, உமா) வெளியானது. இதற்கு முந்திய படமான ‘காதலிக்க நேரமில்லை’ 27.04.1964-ல் வெளியாகி வெற்றிகரமாக 210 நாட்கள் ஒடியபின்னர் (மற்ற அரங்குகளான கிருஷ்ணா, உமாவில் தலா 105 நாட்கள்) , 211 வது நாளன்று கலைக்கோவில் அதே அரங்கில் வெளியானது. கா.நேரமில்லையை நினைத்துக்கொண்டு ரொம்ப எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்கள் சிறிது ஏமாந்தனர். முதல் நாள் முதல் காட்சியிலேயே படம் தோல்வியென்பது யூனிட்டாருக்கு தெரிந்துபோனது.

  இங்கே குறிப்பிட்டது போல படத்தில் டி.எம்.எஸ். பாடல் இல்லை. மாறாக இங்கே குறிப்பிடாத பி.பி.எஸ். பாடல் (நான் உன்னைச்சேர்ந்த செல்வம்) உண்டு.

  விஸ்வநாதன் ராமமூர்த்கி பிணக்கு ஏற்கெனவே பெரிய இடத்துப்பெண் படத்தின்போதே ஏற்பட்டது. அப்படத்தில் வரும் ‘அன்று வந்ததும் இதே நிலா’, ‘கட்டோடு குழலாட ஆட’ பாடல்களை விஸ்வநாதன் தனியாகவும், ‘பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை’, ‘பாரப்பா பழனியப்பா’ பாடல்களை ராமமூர்த்தி தனியாகவும் கம்போஸ் செய்தனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ராமண்ணா போன்றவர்கள் சமரசம் செய்து வைக்க இருவரும் ஒன்றாயினர். பின்னர்தான் இசையில் காவியம் படைத்த படங்களான படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, காதலிக்க நேரமில்லை, புதிய பறவை, பச்சைவிளக்கு, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வெளிவந்தன. சர்வர் சுந்தரம் வந்தபோது மீண்டும் பூகம்பம் வெடித்தது. ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் தன்னைக்காண்பிக்கவில்லை, விஸ்வநாதன் மட்டுமே தோன்றுகிறார். இது விஸ்வநாதனின் சதி எனறு முரண்டு பிடித்த ராமமூர்த்தி, இனிமேல் விஸ்வநாதனுடன் சேர்ந்து பணியாற்றுவதில்லையென்று முடிவெடுத்தார். இருவரும் சேர்ந்து இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்களை மளமளவென்று முடித்துக் கொடுத்தனர். இதனிடையே வெண்ணிற ஆடை படமும் ரிலீஸாகி பாடல்கள் சக்கைபோடு போட்டன. ஆயிரத்தில் ஒருவன்தான் (அப்போதைக்கு) இருவரும் இசையமைத்த கடைசிப்படம். அப்படத்தின் கடைசி நாளன்று ரீரிக்கார்டிங் முடிந்த பின்னர் இருவரும் கட்டித்தழுவி விடைபெற்றனர். அங்கிருந்த பந்துலு போன்றவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

  பின்னர் விஸ்வநாதனுக்கு நீ, கலங்கரை விளக்கம், நீலவானம், அன்பேவா போன்ற படங்களும் ராமமூர்த்திக்கு சாது மிரண்டால், ஆலயம், மறக்க முடியுமா படங்களும் புக் ஆயின. பிரிவுக்குப்பின்னர் விஸ்வநாதனின் விஸ்வரூபத்துக்கு முன் ராமமூர்த்தி காணாமல் போனார்.

 4. Pingback: புத்தகத்துக்கு ஒரு ப்ளாக் « சிலிகான் ஷெல்ஃப்

 5. Pingback: புல்லட்டின் போர்ட் « கூட்டாஞ்சோறு

 6. D. Chandramouli says:

  I salute Ms. Sarada. A fund of information, including intricate details, are being provided by her. It was indeed sad that MSV & Ramamurthy got separated. Together, they created classics in Tamil Cine music. After separation, even MSV, according to me, could not match the combined talent of MSV & Ramamurthy.

  At this instance, I request Ms. Sarada to write about A.M. Raja. Whenever I hear the song, “Oho Endhan Baby”, the very start of the song takes one to utter bliss. What a great romantic mood in this song, particularly when one visualizes Gemini and Vijayanthimala, very sweet faces! Why A.M. Raja could not continue his music direction in many more films? What prevented him to accept more offers? I have not found any sweeter voice than Raja’s, though TMS reigned supreme in Tamil diction. To this day, no one can match TMS in clear Tamil diction.

  Alas, these days, one cannot know what the lyric is. Even if we can understand the lyrics, the words are downright junk!

 7. eshwar gopal says:

  நான் பி.பி.எஸ். என்று எழுதுவதற்கு பதில் டி.எம்.எஸ். என்று எழுதியதற்கு மன்னிக்கவும். சாரதாவின் தகவல்களுக்கு நன்றி,இரட்டையர்கள் முதலில் பிரிந்து மீண்டும் சேர்ந்து மீண்டும் விலகிய தகவல் அறிந்திராதது. என்னிடம் இப்படத்தின் பிரதி உள்ளது, கூடியசீக்கிரம் இதுபோல் அறிய படங்களை youtube-இல் ஏற்றுகிறேன்.

 8. anonymous says:

  Deviyar iruvar song in the movie was set in “Shree” raagam not shanmughapriya.

 9. Raji says:

  This is a fantastic piece on the movie – I have only heard the wonderful songs, and knew the movie was a flop. Do please let me know when you upload the songs – especially ‘thanga ratham’

 10. தங்கரதம் வந்தது ஒரு நல்ல பாடல்.

  இந்த படத்தை என் நான்கு வயதில் அம்மா அம்டியில் அமர்ந்து பார்த்தேன். சில காட்சிகள் மனதில் ஓடுகின்றன – நான் பிறந்தது 1962ல்

 11. eshwar gopal says:

  கலைக்கோயில் படத்திலிருந்து சில பாடல்களை காணொளியியாக (வீடியோ) கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கம் செய்து ரசியுங்கள்.

  1. அறவெனும் கல்வி நீயே http://www.mediafire.com/?4cgrwexp90lgnr3

  2. தேவியர் இருவர்: http://www.mediafire.com/?atbkce64bkosk71

  3. தங்கரதம் http://www.mediafire.com/?b2vsp23m0b5pf5y

  4. வரவேண்டும் வரும்பொழுது : http://www.mediafire.com/?39jd0ovkm7mskr5

  நன்றி!

 12. surya says:

  IS it SV Subbiah or V. Nagiah. I remember seeing this filem in DD on sat/sundays in early 80s.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: