தெய்வீக ராகங்கள்


(By Saradha – Originally published in ForumHub)

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து 1980-ல் இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கதாநாயகனால் வாழ்வு சூறையாடப்பட்டு, உயிரை இழந்த மூன்று பெண்கள் ஆவியாக வந்து (?????) அவரைப் பழிவாங்கும் கதை. நம் திரைப்படங்களுக்கு கதை ‘பண்ணுபவர்களும்’ கதாநாயகன் ஒரு படத்தில் நடித்ததை மனதில் கொண்டு, அந்த மாதிரியே அவருக்குத் தொடர்ந்து கதை பண்ணுவார்கள் போலும். அல்லது இம்மாதிரி கதை என்றால், அதுக்கு ஸ்ரீகாந்த் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் போலும். இப்படி குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட முத்திரை குத்துவதால்தான் அவர்கள் உண்மையான திறமைகள் வெளிவராமல், அல்லது வெளிவர வாய்ப்பளிக்கப்படாமல் போகிறது. ஒரு படத்தில் அவன் பிச்சைக்காரனாக நடித்தால் போச்சு. அப்புறம் பிச்சைக்காரன் ரோலா? கூப்பிடு அவரை என்ற கதைதான். (‘ஞான ஒளி’யில் பாதிரியார் ரோலில் மணவாளன் என்கிற கோகுல்நாத் அருமையாக நடித்தார். சரி. உடனே ‘பாரதவிலாஸ்’ படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் பாதிரியாராக வந்து ‘நிற்பதற்கு’ அவரை தேடிப்போய் அழைத்து வந்தார்கள்). சார்லிக்கு ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் சேரன் துணிந்து கொடுத்த அற்புதமான ரோலின் மூலம்தானே சார்லியின் பன்முகத்திறமை வெளித்தெரிந்தது?. அப்படியில்லாமல், ‘கற்பழிப்புக்காட்சி கொண்ட பாத்திரமா?. கொண்டா ஸ்ரீகாந்தை’ என்று அப்போதைய இயக்குனர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக இருந்தனர், சிலரைத்தவிர. (ஸேஃப்டிக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு வச்சிக்குவோம்).

தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை கற்பை சூறையாடி, அவர்களை அருவியில் தள்ளி, தற்கொலை அல்லது விபத்துபோல செட்டப் செய்யும் ஸ்ரீகாந்தை, சட்டமோ, போலீஸோ தண்டிக்க முடியாத காரணத்தால், அவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்களே பேயாக மாறி, ஆனால் பெண் உருக்கொண்டு அவரைப்பழி வாங்குவதான (??) புதுமையான (??) கதை. அதில் ஒரு பேயாக, அதாவது ஸ்ரீகாந்தினால் ஏமாற்றப்பட்ட பெண்ணாக வடிவுக்கரசி நடித்திருந்தார். மற்ற இருவர் யாரென்பது சட்டென நினைவுக்கு வரவில்லை, எனினும் அப்போதிருந்த இரண்டாம் நிலைக் கதாநாயகிகள்தான்.

ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை ஒரு சிதார் இசைக்கலைஞனாக அறிமுகப்படுத்தி, கேட்போர் மனம் உருகும் வண்ணம் சிதார் இசைப்பவராக காண்பித்தபோது, ‘பரவாயில்லையே, நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்காங்களே என்று தோன்றும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே (அடடே நாம ஸ்ரீகாந்துக்கல்லவா கதை பண்ணுறோம் என்பது கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்) அவரை காம விகாரம் கொண்டவராகக் காண்பித்து, வழக்கமான ட்ராக்கில் திருப்பி அந்தப் பாத்திரத்தின் தன்மையையே குட்டிச்சுவர் பண்ணி, கதையை சொதப்பி விட்டனர்.

படத்தில் பாதிக்கு மேல் பேய்கள் ஸ்ரீகாந்தின் வீட்டில் வந்து டேரா போட்டுக்கொண்டு அவரை பாடாய் படுத்துவது, பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும். மூன்று பேயகளுக்குள் நல்ல கூட்டணி. அதனால் கொஞ்சம்கூட பிசகாமல் ஸ்ரீகாந்திடமிருந்து அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. பேய்களுக்கு கால்கள் இல்லையென்று யார் சொன்னது?. அதில் ஒரு பேய் பரதநாட்டியமே ஆடுகிறது. பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் பேய்களை அண்டாவுக்குள் தேடுவது நல்ல தமாஷ். அவர்களில் ஒருவர் வி.கோபாலகிருஷ்ணன், இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தியா? நினைவில்லை.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இன்னொருவர் சுருளிராஜன். பேய்களுக்குப்பயந்து தன்னுடன் இரவில் தங்க ஸ்ரீகாந்த் சுருளியை அழைத்துவர, அவரோ கனவில் பேயைக்கண்டு அலறி ஸ்ரீகாந்தை இன்னும் அச்சமூட்டுகிறார். கனவில் சுடுகாட்டுவழியே செல்லும் சுருளி, அங்கே ஒரு சமாதியின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரிடம், ‘ஏன்யா, எந்த பெரிய மனுஷன் சமாதியோ. அதுல காலையும் மேலே வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கியே’ என்று கேட்க அதற்கு அவர் (அது..?) ‘நான்தான் தம்பி, உள்ளே புழுக்கம் தாங்கலைன்னு வெளியே வந்து உட்கார்ந்திருக்கேன்’ என்றதும் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது, அங்கே நடந்து போய்க்கொண்டிருக்கும் இன்னொரு பெரியவரிடம் ‘ஏங்க இந்த பேய் பிசாசையெல்லாம் நம்புறீங்களா?’ என்று கேட்க, அவர் ‘எவனாவது உயிரோடு இருப்பன்கிட்டே போய்க்கேளு. நான் செத்து அஞ்சு வருஷமாச்சு’ என்று சொன்னதும் அலறிக்கொண்டு எழுவாரே… அந்த இடத்தில் தியேட்டரே சிரிப்பில் அதிரும்.

பேய்களுக்குப்பயந்து வீட்டைவிட்டுத் தப்பிப்போகும் ஸ்ரீகாந்தை ஒவ்வொருமுறையும் பேய்கள் வழியில் மடக்கி வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது சுவையான இடங்கள். அதுபோலவே, தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதை நியூஸ் பேப்பர் மூலம் படிக்கும் ஸ்ரீகாந்த், அப்படியானால் தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த பெண்கூட உண்மையான பெண்ணல்ல அதுவும் கூட ஒரு பேய்தான் என்று அதிர்ச்சியடைவதும் இன்னொரு சுவாரஸ்யமான இடம். பேய்களின் அட்டகாசத்துக்குத் தோதாக ஒரு காட்டு வனாந்திரத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தின் பங்களா, முடிந்தவரையில் திகிலூட்டுவதற்காக பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே (தமிழில் சொன்னால் ‘நைட் எஃபெக்ட்’) எடுத்திருக்கும் புத்திசாலித்தனம் தெரிகிறது.

நடிப்பைப்பொறுத்தவரை ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய ரோல் ஒருமாதிரியாக சித்தரிக்கப் பட்டிருந்தபோதிலும், அதிலும் தன் திறமையான நடிப்பால், ஈடுகட்டி பேலன்ஸ் பண்ணியிருந்தார். கதை இவரைச்சுற்றியே அமைந்ததாலும், படத்தில் குறைவான கதாபாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாலும், படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இவரே நிறைந்திருந்தார். இவருக்கு அடுத்து மூன்று பேய்களுமே நன்றாக நடித்திருந்தனர். மூவரும் பெண்ணாக வந்ததை விட பேயாக வந்தபோது கச்சிதமாகப்பொருந்தினர். (same side goal).

படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் சிதார் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்தைக் காண்பிக்கும்போது, அழகாக இதமான சிதார் இசையால் வருடியிருப்பார். பின்னர் பேய்கள் அட்டகாசம் துவங்கியதும் அவருக்கே உரிய அதிரடி திகில் பின்னணி இசையால் நம்மை பயமுறுத்துவார். இவரது இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆனால் முதலடிதான் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு எட்ட மறுக்கிறது. படத்தில் கேட்டதோடு சரி. பின்னர் வானொலி/தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் அல்லவா நினைவில் நிற்கும்?. அவர்கள் ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றையே திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… திரும்ப… ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள்.

எல்லாம் சரிம்மா, படம் எப்படி ஓடியதுன்னு கேட்கிறீங்களா?. இயக்குனர் (பாடலாசிரியர்/இசையமைப்பாளர்) கங்கை அமரன் (இப்படத்தின் இயக்குனர் அவர் அல்ல) தான் இயக்கிய சில படங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் ஒரு காரணம் சொல்வார். அதாவது, ‘தன்னுடைய படம் வெளியான நேரம், மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போனதால், மக்களால் அந்தப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது’ என்பார். அதுபோலவே ‘தெய்வீக ராகங்கள்’ என்ற இந்தப்படம் வெளியான நேரத்திலும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. புரிந்திருக்குமே..!

Advertisements

பற்றி Bags
Trying out

7 Responses to தெய்வீக ராகங்கள்

 1. Raji Muthukrishnan says:

  Lovely review.
  பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.
  Ghost busters kooda ithilirundu idea kidachirukkumo?

 2. BaalHanuman says:

  இந்தப் படத்தின் ‘ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்’ பாடலை (பாடகர்கள்: ஜாலி ஆபிரகாம், S. ஜானகி) கீழ்க்காணும் இணைப்பில் கேட்கலாம்….

  http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD00992&lang=ta

 3. BaalHanuman says:

  பாடல்: கங்கா யமுனா சரஸ்வதி
  திரைப்படம்: தெய்வீக ராகங்கள்
  இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
  பாடியவர்: வாணி ஜெயராம்

  கங்கா…யமுனா…சரஸ்வதி
  கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
  கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
  காரணம் உங்கள் தீய மதி
  கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
  காரணம் உங்கள் தீய மதி
  கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி

  ஆயிரம் கவிதைகள் பாடி என் அங்கங்களில் விளையாடி
  ஆயிரம் கவிதைகள் பாடி என் அங்கங்களில் விளையாடி
  தேய்கின்ற பிறையென மாற்றி கற்பு தீபத்தை அணைத்தாய் நீரூற்றி
  இல்லறம் என்பது நல்லறம் என்றிவள் எண்ணி இருந்தது
  கண்ணியமற்றது என்றாயே என் மன்னவா
  இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன்
  நல்லவன் போலொரு நாடகமிட்டவன்
  என் வாழ்வில் நீயல்லவா…என் வாழ்வில் நீயல்லவா

  கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
  கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
  காரணம் உங்கள் தீய மதி

  தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
  தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
  வாமனைப்போல் உறவாடி இன்று கலங்க வைத்தாயே வாடி
  ரம்பை திலோத்தமை ஊர்வசி என்றெனை நம்பவும் வைத்தனை
  நன்றி இழந்தனை என் வாழ்வு சோகமன்றோ
  நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள்
  உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள்
  தெய்வீக ராகமன்றோ…தெய்வீக ராகமன்றோ

  கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
  கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
  காரணம் உங்கள் தீய மதி

  ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
  ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
  காலத்தில் அருந்திய விருந்து பின் கசந்ததுவோ சுகம் மறந்து
  சொர்க்கம் இருப்பதை கண்டுபிடித்திட பக்கம் இருந்தொரு
  பாடம் உரைத்தனை அப்போது அறிவில்லையே
  அந்த சுகத்தினை நெஞ்சு நினைத்தது
  வந்த இடத்தினில் கண்டுபிடித்தது
  இப்போதும் விடவில்லையே…இப்போதும் விடவில்லையே

  கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
  கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
  காரணம் உங்கள் தீய மதி

 4. BaalHanuman says:

  ‘படகோட்டி’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ போன்ற பல்வேறு படங்களில் நடித்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவை பகுதியை எழுதித் தந்தவர் வீரப்பன்.

  பிறகு கவுண்டமணி செந்தில் காம்பினேஷனில் தமிழ்நாடே குலுங்கி சிரித்த காமெடிகளை இவர் எழுதினார். கவுண்டமணியின் ஆஸ்தான நகைச்சுவை எழுத்தாளராக இருந்த வீரப்பன் உருவாக்கிய காமெடிதான் ‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் வாழைப்பழ காமெடி. இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

  ‘தெய்வீக ராகங்கள்’ படம் இவர் இயக்கத்தில் வெளிவந்தது.

 5. D. Chandramouli says:

  Nice write up. Surulirajan’s comedy made me laugh heartily. His timing and delivery of dialogues must have enriched the scene. Wish I could see the movie at least for Surilirajan.

 6. Nagarajan says:

  பாவை நீ மல்லிகை
  பால் நிலா புன்னகை

  என்ற பாடலும் இப்படத்தில் உள்ளது.
  புலமைப்பித்தன் எழுதி, ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்
  பாடிய பாடல்.
  1980 ல் வானொலியில் அதிகமாக ஒலி பரப்பான
  பாடல்களில் ஒன்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: