அவர் எனக்கே சொந்தம்


திரைப்பட விமர்சனம் – By Eashwar Gopal


படம் வெளியான தேதி: 1.1.1977


நடிகர்கள் ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், விஜயகுமார், வெண்ணிறாடை மூர்த்தி – வி.கே.ராமசாமி,
குலதெய்வம் ராஜகோபால், டைபிஸ்ட் கோபு, கே.விஜயன், வி.கோபாலகிருஷ்ணன்
நடிகைகள் ஸ்ரீவித்யா, ஃபடாபட் ஜெயலட்சுமி, Y.விஜயா, பேபி பபீதா, பேபி வந்தனா மற்றும் பலர்
பின்னணி டி.எம்.சௌந்திரராஜன்,.கே.ஜே யேசுதாச், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி, பி.சுசீலா, பூரணி, ரேணுகா, இந்திரா
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம்
பின்னணி இசை இளையராஜா புகைப்படம் டி.எஸ்.விநாயகம்
கதை, வசனம் பஞ்சு அருணாசலம் தயாரிப்பு பி.ஏ.ப்ரொடக்ஷன்ஸ்
படத்தொகுப்பு பி.கந்தசாமி கலை இயக்குனர் பாபு
திரைக்கதை, இயக்கம் பட்டு


கதை ஒரு சிறு குப்பியில்

ஒரு ஒழுக்கமில்லாமல் வாழும் இயல்பைக்கொண்ட நாயகனுக்கும், எல்லாவற்றிலும் ஒரு ஒழுக்கம், நேர்த்தியை கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையுடைய நாயகிக்கும் ஏற்படும் உரசல்களும், இது போன்ற எண்ணங்கள் சேர்ந்து வாழும்போது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் சுவையாக காட்டியிருக்கிறார்கள்.

விரிவான கதை

ஜெய்சங்கர் ஒரு மாடலிங் நிறுவனம் நடுத்துகிறார். புகைப்படங்கள் எடுக்கும்போதும், பழகும்போதும் இயல்பாகவே பெண்கள் கூட பழகும் வாய்ப்பு வந்துபோனாலும், வேறு கெட்ட எண்ணங்களோ, பழக்கங்களோ ஏற்படுவதில்லை. இந்நிலையில், அவரின் சித்தப்பா அவருக்குப் பெண்பார்க்கிறார். ஒரு வரன் மலர்ந்து வந்திருப்பதாகவும், அப்பெண்ணை காண மறுநாள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு வருமாறும் கூறுகிறார். சரி என்று தலைஅசைத்து, தலையணைக்குள் தன்னைப்புதைத்து மறக்கிறார். பெண்பார்க்க போகும் இடத்தில் ஸ்ரீவித்யாவைத்தான் பெண்பார்க்க ஏற்பாடு. குறித்த நேரத்தில் வராததால், ஸ்ரீவித்யாவோ, “இப்பவே அவரால் நேரத்தை கடைபிடிக்க முடியாதவர் ஒழுங்கீனத்தை கடைபிடிப்பவராகவே இருப்பார் அதனால் இந்த மாப்பிள்ளை வேண்டாமென்று அப்பாவிடம் கூற, அவரோ, “சரி ஒருவேளை வந்தால் பார்த்துவிட்டு போகட்டும், பின் ஜாதகம் சரியில்லை என்று தட்டிக்கழித்துவிடலாம்” என்றும் கூற சமாதானம் அடைகிறார்.  அங்குவரும் நாயகன், உன்மையான காரணத்தை கூற, பின் சில பல சமுதாய வழக்கங்கள் கைப்பந்து விளையாட, உள்ளத்திலே நாயகிக்கு அவரை பிடித்துப்போகிறது.  நாயகனின் வசீகரத்தில்  முன் கூறிய கறார் ஆணையை அரசியல்வாதி கொடுக்கும் வாக்குறுதி போல் நாயகி மறக்க, இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணமான புதிதிலிருந்தே இருவரும் இரு துருவமாக இருக்கிறார்கள்.  நாயகிக்கு எதிலும் ஒரு ஒழுக்கம் தேவை, சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் எழுந்து எல்லா வேலைகளையும் செய்து, இராணுவ மிடுக்குடன் கையாள்வது பிடிக்கிறது.  நாயகரோ, நினைத்த நேரத்தில் எழுந்து, குளித்து, அலுவல் பணிகளை முடித்து, நினைத்த நேரத்தில் வீடு வந்து சேருவது வாடிக்கை. தொடக்கத்தில் பெருங்காய டப்பாவாக மணக்கும் நாயகியின் மோகத்தால், அவர் செயல்முறைப்படுத்தும் கட்டுப்பாடுகளை பொறுத்துக்கொள்ளும் நாயகன், நாளாக நாளாக அவைகள் தன்னையறியாமலே பெரும் தலைவலியாக உருவாவதை உணர்கிறான். இதனிடையில், அவன் அலுவலகத்தில் பெண்களும் வேலைபார்ப்பதால், சந்தேகம் பொறிதட்ட, தன் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாளை அய்யாவுக்கு திருமணத்திற்கு முன் ஏதாவது பொம்பளை தொடர்பு உண்டா என்று வினவ, விசுவாசியான அவன் அவரிடம் போட்டுக்கொடுக்க, பழங்காலச்சுவரின் நடுவில் செடிவ ளர்ந்தது போல் கருத்துவேறுபாடு துளிர்விடுகிறது.  இந்த வண்டி குறிப்பிட்ட இலக்கை அடையுமா என்று சந்தேகம் வருகிறது நாயகனுக்கு.

ஒருமுறை வேலைக்காரன் துடைக்கும்போது ஒருபொருளை தவறுதலாக கீழே நழுவ விட்டு அது உடைய, கடிந்து கொள்ளும் ஸ்ரீவித்யா, அவனை வேலையை விட்டு தூக்க, அவனுக்கு ஆதரவாக நாயகன் அங்கு வந்து பேச சண்டை வலுக்கிறது.  அவனே வேலையை விட்டு நின்று விடுகிறான். இதற்கிடையில், இவர்கள் அடிக்கும் ‘லூட்டியில்’, இரு குழந்தைகளும் பிறந்து வளர்கின்றன. அவர்களிடமும் கண்டிப்பு காட்டுகிறார் நாயகி.  வெளியில் சாப்பிடக்கூடாது, நேரத்திற்கு சாப்பிடவேண்டும், விளையாட்டு நேரத்தில் விளையாட்டு, படிப்பு நேரத்தில் படிப்பு, ஐஸ்கிரீம் உண்ணக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டால், குழந்தைகள் அப்பாவிடம் வடிகால் தேடுகின்றன.  அப்பாவோ இதிலிருந்து தப்பிக்க, புதிதாக வந்த டைபிஸ்ட்டான ஃபடாபட் ஜெயலட்சுமியிடம் வடிகால் தேடுகிறார். அவரின் அன்பு, சிரித்துப்பேசும் குணம், எப்பொழுதும் உல்லாசமாக இருக்கும் குதூகலம் இவையெல்லாம் பிடித்துபோக, அவரை தன் உள்ளத்தை பகிர்ந்து கொள்ளும் சுமைதாங்கியாக எண்ணுகிறார் நாயகன்.  வெ.மூர்த்தியின் காதலிக்கு டைபிஸ்ட் வேலை கிடைக்காத்தால், சாப்பாடு கொண்டு வரப்போகும்போது நாயகியிடம் தன் பங்குக்கு தீக்குச்சியை உரசி விடுகிறார். இதற்கிடையில், இவர்களில் பக்கத்து வீட்டு வளாகத்தில், குழந்தைக்கு பாட்டு பாடிக்கொண்டே அமுதூட்டும் கைம்பெண்ணாக ஒய்.விஜயா.  குழந்தைகளை வேடிக்கைகாட்ட உப்பரிகைக்கு போகும் அவர், அவரின் குழந்தையையும் குதூகலப்படுத்த பாட்டுப்பாட, “நீங்கள் அருமையாகப் பாடுகிறீர்களே” என்று பாராட்ட, அந்த சமயத்தில் நாயகி அங்கு வர, தகாத வார்த்தைகளால் ஒய்.விஜயாவை திட்ட, ஆத்திரத்தில் அடித்துவிடுகிறார் நாயகன்.  இப்போது செடி, மரமாக வளர்ந்து, வீட்டைவிட்டு போய்விடுகிறார்.

ஸ்ரீவித்தியாவின் தந்தை சமாதானப்படுத்தி கூட்டிவருகிறார். இருந்தும் நீருபூத்த நெருப்பாக பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க, ஒருமுறை குழந்தைகளுக்கு பணத்தை எடுத்த்தற்காக சூடு போட, அவர்களை கூட்டிக்கொண்டு ஃபடாபட் வீட்டிற்கு போகிறார் நாயகன்.

ஃபடாபட்டிற்கும் ஒரு சோகம், அவர் காதலித்த நபருக்கு, இவருக்கும் விபத்து ஏற்பட, இவர் பிழைக்க, அவர் மரிக்க, காதலினின் நாட்களையே மனதில் ஏந்தி காலம் தள்ளுகிறார். இவருக்கு அப்பொழுது மண்டையில் ஏற்பட்ட அடியினால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அமரிக்கா சென்றால்தான் (அப்போது வந்த படங்களில் எழுதப்படாத விதி இது) பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூற, நாயகன் அதற்குண்டான செலவை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார். நாயகி மீண்டும் தந்தைவீட்டுக்கு நடையைக்கட்டுகிறார், இனி திரும்புவதில்லை என்ற உறுதியோடு.

பின் உன்மை விளங்க, ஃபடாபட்டை அமரிக்கா போக அவரும் வற்புறுத்த, ஒரு மருத்துவரோடு விமானநிலயத்திற்கு ஓடிப்போக, அங்கு ஏற்கனவே குறிப்பிட்ட விமானம் ஓடுதளத்தில் ஊர்ந்துபோக, கட்டுப்பாட்டு அறைக்கு போய் விமானத்தை நிறுத்தச்சொல்ல (இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்ன?), பின் அதை நிறுத்தி அதில் ஏறும் ஃபடாபட் உயிரைவிட, இருவரும் சேர்ந்து “மங்களம்”.

நடிப்பு

கதாநாயகனாக ஜெய்சங்கர் நன்றாக நடித்துள்ளார். அவரின் கடைசிக்கால பட வரிசையில் இவை வருகிறது போலும். இருதலைக்கொள்ளி எறும்பாக நன்றாக அபிநயத்துள்ளார். ஸ்ரீவித்யாவும் தன் பங்குக்கு கண்டிப்பானதொரு மனைவியாகவும், தாயாகவும் நடித்துள்ளார்.  குமாஸ்தாவாக வரும் தேங்காய், வெண்ணீராடை மூர்த்தி வந்து போகிறார்கள். ஃபடாபட் ஜெயலட்சுமிக்கு கிருஸ்துவப் பெண் வேடம்.  அவர் கிரிஸ்துவர் என்று நமக்கு எப்படி தெரிவிப்பது? அதற்காக, கிட்டத்தட்ட எல்லாக்காட்சிகளிலும் – ஒரு பெரிய சிலுவையை எப்பொழுதும் வெளியில் தெரியும்படி அணிந்து கொண்டு வருகிறார்(விஜயகுமாரும் அப்படியே, கோட், சூட் அதற்குமேல் சங்கிலி). ஃபடாபட் நல்ல நடிகை என்பதில் சந்தேகமில்லை. விஜயகுமார் ஒருபாட்டுக்கு வந்து போகிறார். அதேபோல் ஒய்.விஜயாவும் பக்கத்துவீட்டு கைம்பெண்ணாக வந்து ஒரு பாட்டு பாடிவிட்டுப்போகிறார்.  ‘சுராங்கனி’ பாட்டு தொடங்குவதற்க்கு முன்பு ஆரம்பமாகும் கர்நாடக இசையை ரசிக்கும் நாயகியின் முகபாவத்தை குதூகலமாக காட்டி  நாயகனின் வாடிய பாவத்தையும், பின் ‘துள்ளல்’ பாட்டு தொடங்கியவுடன் இருவர் முகபாவனைகளை மாற்றிக்காட்டுவதும் நல்ல இயக்கச் சிந்தனை.

பாடல்கள்

பாடல்கள் அருமை. இப்படம் இளையராஜாவின் ஐந்தாவது படம் என்று நினைக்கிறேன். அருமையானதொரு இசையை, தேனை நூல்போல் திரித்து செவியில் பாய்ச்சியிருக்கிறார்.  தத்துவப்பாடல்களை எழுத வேண்டுமென்றால், ‘இருட்டுக்கடை அல்வாவை’ சாப்பிடுவது போல் சுவையுடன் கூடிய வெறி வந்துவிடும்போல நமது அற்புதக்கவிஞருக்கு.  அவருக்கு ஈடு இணை அவரே. இப்பாடலைக் கேளுங்கள்.  “குதிரையிலே நான் அமர்ந்தேன் கிழக்குப்பக்கம் போவதற்கு” அருமை,

http://www.mediafire.com/?ef6dyxqg32jy9rw

கதாநாயகனின் இயலாமையை பாட்டில் கொட்டியிருக்கிறார்.

ஒரு வீடு இரு உள்ளம்’ (எஸ்.பி.பி) பாட்டிலும் தன் நிலையையும், தன் குழந்தைகளின் நிலையையும் சோகமாக கொடுத்திருக்கிறார்.

http://www.mediafire.com/?dk5v26x1pvq7l7d

இளையராஜா ராஜங்கம் புரிந்திருக்கிறார். ‘தேவன் திருச்சபை மலர்களே” பாட்டில் வரும் பிண்ணனி ‘கிடார்’ இசையில் பட்டையை கிளப்புவதோடு, எல்லா முக்கிய சோக, குதூகுலக் காட்சிகளின் பிண்ணனியிலும் ‘கிடாரை’ மெல்லிய இழையாக வாசித்து அற்புதமாக லயிக்கச்செய்திருக்கிறார்.  ‘ப்ரதித்வானி’ என்ற கன்னட படத்திற்கு இசையமைத்த திரு.ஜி.கே.வெங்கடேஷுக்கு இதே ‘கிடார்’ வாத்யத்தை வைத்து பாட்டின் கட்டுரையை வாசித்ததாக எங்கோ படித்தேன்.

சுராங்கனி பாடல் ‘பாய்லா’ பாட்டுப்போல் உள்ளது. இப்பாடல்களில் இருவரின் ரசனையையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.  ‘கபி கபி மேரே தில்மே’ என்ற ஹிந்தி பாட்டுடன் தொடங்கும் வி.கே.ராமசாமியின் ஒரு நகைச்சுவை பாடல் கதாகாலட்சேபமாக உள்ளது.  “ஒரு வீடு இரு உள்ளம்” எஸ்.பி.பி. (இதை எழுதியவர் பஞ்சுஅருணாசலம்), “தேனில் ஆடும் ரோஜா”, “தேவன் திருச்சபை மலர்களே” (இரண்டு முறை) – எல்லாமே திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் சுகம்.

வேதம் ஒலிக்கின்ற மலரிது……http://www.youtube.com/watch?v=ZnN9FKddpTI

கபி கபி மேரே தில்மே (இளையராஜா/டிஎம்.எஸ்) http://www.youtube.com/watch?v=SzxVaAj7Y_Y

சுராங்கனி சுராங்கனி…(மலே.வாசு, பூரணி ) http://www.youtube.com/watch?v=5lUFTMXNzPM

தேவன் திருச்சபை மலர்களே…..(பூரணி) http://www.youtube.com/watch?v=MZuraxUzmsA

கடைசி ஒரு 30 நிமிடம் தமிழ் படத்துக்கேஉள்ள கலாச்சார, மாற்றமுடியாத, அந்நாளைய நடைமுறையை கத்தி எடுத்து கழுத்தில் பதம் பார்க்கிறார்கள். இதை தவிர்த்துப்பார்த்தால், பாட்டிற்க்காகவும், முன்பாதிக்காகவும் படத்தை பார்க்கலாம்.

இப்படன் ஓடியதா சுத்தமாக நினைவில்லை. இப்பாடல்களை இலங்கை வானொலியில் பல முறை கேட்டிருக்கிறேன்.  இப்பட்த்தில் பிரதி மதுரையில் கிடைக்கிறது (modern cinema). பொதுவாக, படங்களின் கதைகள் திருமணத்திற்கு பின் தொடங்கினால், அப்படம் நன்றாக வரும். இப்படமும் அந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.

பற்றி Bags
Trying out

12 Responses to அவர் எனக்கே சொந்தம்

 1. RV says:

  கோபால், கலக்கிவிட்டீர்கள்! அதுவும் அந்த வீடியோக்கள் பிரமாதம்!

 2. Bags says:

  சுராங்கணி பாட்டு பாடுவது மலேசியா வாசுதேவன். திரையிலும் அவரா பாடுகிறார்?

 3. BaalHanuman says:

  >>‘கபி கபி மேரே தில்மே’ என்ற ஹிந்தி பாட்டுடன் தொடங்கும் வி.கே.ராமசாமியின் ஒரு நகைச்சுவை பாடல் கதாகாலட்சேபமாக உள்ளது.

  இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா.

 4. BaalHanuman says:

  ஒய்.விஜயா – இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள்.

  இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

  அப்படியொரு படமே “அவர் எனக்கே சொந்தம்”. ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். சுசீலாவின் அமுதக் குரலில் “தேனில் ஆடும் ரோஜா” என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார்.

 5. சாரதா says:

  கோபால் & Bags

  ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்துக்கான (காட்சியமைப்புகளுடன் இணைந்த) ஆய்வுக்கட்டுரை அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ரீமிக்ஸ் என்ற (படுமோசமான) கலாச்சாரம் தோன்றாத அந்தக்காலத்தில் (அதாவது எங்காவது ஒரு மெட்டு திருப்பி கையாளப்பட்டிருந்தால் அதை சுலபமாகக் கண்டுபிடித்து விடக்கூடிய காலத்தில்) இப்படத்தில் இடம்பெற்ற ‘குதிரையில் நான் அமர்ந்தேன் கிழக்குப்பக்கம் போவதற்கு’ பாடலின் மெட்டை அப்படியே, Action King அர்ஜுன் நடித்த ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் ‘ஏலே இளங்கிளியே… அடடா தோளிரண்டும் தாமரையே’ என்ற பாட்டில் பயன்படுத்தியிருந்தார் இசைஞானி இளையராஜா.

 6. eshwar gopal says:

  ஆம் சுராங்கனி பாட்டு பாடுபவர் அச்சுஅசல் மலேசியாதான். பாலஹனுமான் குறிப்பிட்டதுபோல் – ஒய்.விஜயாவிற்கு யதார்த்தமான் பாத்திரம் கொடுத்துள்ளார்கள். பின் வரும் படங்களில் அவரை உப்புச்சப்பில்லாத பாத்திரம் கொடுத்து வீணாக்கி விட்டார்கள். இப்படத்தில் இந்த பாட்டோடு வீட்டுக்கனுப்-பப்படுகிறார். “தேவன் திருச்சபை மலர்களே” பாடலை தனியாக கேட்டுப்பாருங்கள். அதில் வரும் “வின்மீனை உன் கண்களில் பார்க்கிறேன், பொன்மானை உன் நடையினில் பார்க்கிறேன்” வரிகளை கண்ணைமூடிக்கொண்டு கேளுங்கள், மனதை வருடும். ‘கிடாரை’ எப்படா வாசிப்போம் என்று காத்திருப்பதுபோல் ‘பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே” என்று முடித்த இடைவெளியில் அடித்து லயிக்கச்செய்திருப்பார் இளையராஜா. இன்னொருமுறை கேளுங்கள், ரசியுங்கள்.

 7. Ganpat says:

  சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான “அவர் எனக்கே சொந்தம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மிக விரிவான விமரிசனத்தை திரு கோபால்சார் அவர்கள் இங்கு எழுதியுள்ளார்கள்.அதை நான் படித்து, மிக மகிழ்ந்தேன்.துரதிருஷ்டவசமாக இந்த திரைப்படம் இப்பொழுது எந்த திரையரங்கிலும் ஓடுவதாக தெரியவில்லை.எனவே உடனே வெள்ளித்திரையில் இதை பார்த்து மகிழ வேண்டும் என்ற என் பொங்கிவரும் ஆசையை கட்டுப்படுத்திக்கொண்டேன்.ஒரு நல்ல விஷயத்திற்கு பல வருடங்கள் காத்திருப்பதிலும் ஒரு சுகம் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது என்பது என் தாழ்மையான கருத்து .இதையும் அனைவரும் உய்த்துணர்ந்திருப்பார்கள் என்பதும் திண்ணம்.
  இதைப்போலவே இதை படித்து மகிழ்ந்து உடனே தங்கள் கருத்தினை தெள்ளத்தெளிய பின்னூட்டமாக இட்டுள்ள RV சார் அவர்கள் ,சாரதா மேடம் அவர்கள் ,BAGS சார் அவர்கள் ,BAALHANUMAN சார் அவர்கள்,இதற்கு பதிலளித்துள்ள கோபால் சார் அவர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள் கோடி.
  சுருக்கமாக சொன்னால் இந்த பின்னூட்டங்கள் சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல இருந்தன என்றால் அது மிகையாகாது.
  ஆங்காங்கே ‘YOUTUBE’ இணைப்பும் கொடுத்துள்ளது மிகவும் மெச்சத் தக்கது.
  முடிவாக இங்கு RV சார் அவர்கள் ,சாரதா மேடம் அவர்கள் ,BAGS சார் அவர்கள் ,BAALHANUMAN சார் அவர்கள், கோபால் சார் அவர்கள் ஆகியோர் ஆற்றி வரும் சீரிய பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை
  நன்றி

 8. BaalHanuman says:

  தேவன் திருச்சபை மலர்களே — இன்னொரு வெர்ஷன்…

 9. Raju-dubai says:

  கோபால்
  அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்சிகளின் curtain raiser பாடல் “தேவன் திருச்சபை மலர்களே ” பாடல் தான் .

  ராஜு-துபாய்

 10. Raju-dubai says:

  கோபால்

  மீண்டும் ஆர்வத்தோடு விமரிசனம் படித்தேன் ,பாடல்கள் பார்த்தேன் கேட்டேன். phataphat ஜெயலக்ஷ்மி ,என் கணிப்பில் ,perfect foil for Ranjikanth . அநியாயமாக சிறு வயதிலேயே போய் விட்டாள். Really a tragedy

  ராஜு-துபாய்

 11. BaalHanuman says:

  அன்புள்ள ராஜு-துபாய்,

  நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி phataphat ஜெயலக்ஷ்மி தான். சிறந்த உதாரணம் : முள்ளும் மலரும் திரைப்படம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: