நேற்று இன்று நாளை
பிப்ரவரி 7, 2011 4 பின்னூட்டங்கள்
திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.
மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!
நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?
“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.
நண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.
‘நேற்று இன்று நாளை’ எம்.ஜி.ஆர். அண்ணா தி,மு,க,வைத்துவங்கிய புதிதில் வெளியான படம் (அப்போது கட்சியின் பெயருக்கு முன் ‘அனைத்திந்திய’ என்ற அடைமொழி கிடையாது). புதுக்கட்சி துவங்கியபோது அவரோடு சட்டையைப் பிடித்துக்கொண்டு உடன் சென்றவர்கள் யாரும் இப்போது அக்கட்சியில் இல்லை. அவர்களுக்கெல்லாம் பழைய நினைவுகளைக் கிளறிவிடும் படம். புதிய கட்சி துவங்கி மும்முரத்தில் இருந்ததால் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த முடியாத நேரத்தில், பட்டிக்காட்டு பொன்னையாவுக்குப்பின் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அவரது புதிய படங்களுக்காக ஏங்கியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்க்க வந்த படம்.
பாடல்களில், வசனங்களில், காட்சியமைப்புகளில் அரசியல் நெடி சற்று தூக்கலாக இருந்தபடம். அ.தி.மு.க. கொடியை நேரடியாக படத்தில் காண்பித்தது ரசிகர்களின் ஆரவாரத்தைப்பெற்றது. குறிப்பாக ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ பாடலில் அரசியலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வானொலியில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டது. (அப்போது சென்னையில் தொலைக்காட்சி தோன்றியிருக்கவேயில்லை). இப்பாடலுக்கு நிகராக எஸ்.பி.பி.யின் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ பாடலும் ‘அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ’ பாடலும் பாப்புலராகியிருந்தன. டி.எம்.எஸ். சுசீலா இணைந்து பாடிய ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’, ‘இன்னொரு வானம் இன்னொரு நிலவு’, ‘நெருங்கி நெருங்கி பழகும்போது’ பாடலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன.
(இவையெல்லாவற்றுக்கும் சேர்த்து விகடன் விமர்சனத்தில் கடைசியில் ஒரே வரி ‘காதுக்கினிய இசை’ என்பது மட்டுமே. அந்த இசையைத் தந்த இசையமைப்பாளர் பெயரைச் சொல்லக்கூட விகடன் விரும்பவில்லை. இதுவே 1976-க்குப்பிறகு என்றால் இசையைப்பற்றி பாராக் கணக்கில் நீட்டி முழக்கியிருப்பார்கள். அதென்ன 1976 என்கிறீர்களா?. அது உள்ளங்கை நெல்லிக்கனி. அன்றைய விமர்சகர்களின் சோற்றிலும் கூட மெல்லிசை மன்னர் மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது).
இப்படத்துக்கும், சென்னை வால்டாக்ஸ் ரோடு, பேசின் ப்ரிட்ஜ் சந்திப்பு, கறீம் பீடி பேக்டரி, தங்கசாலை கிருஷ்ணா, மகாராணி தியேட்டர்கள், வண்ணாரப்பேட்டை மேம்பாலம், மு.க.முத்துவின் ‘சமையல்காரன்’ திரைப்படம் இவற்றுக்கும் என்ன சம்மந்தம்?. யாருக்காவது தெரியுமா?.
சாரதா
எனக்கு ஒன்று மட்டும் தெரியும்.
இந்த படம் பண்ணும் போது M .G .R க்கும் அசோகனுக்கும் கருத்து வேறு பாடு வந்து ,மக்கம் திலகம் பட பிடிப்புக்கு ஒத்துழைக்காமல் தாமதம் பண்ண அசோகன் பண கஷ்டத்தில் திணறினார் என்பது மட்டும் தெரியும்.
மு. க. முத்து சமாசாரம் என்னவாக இருக்கலாம்? புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி மக்கள் திலகத்தை கவுன்ட்டர் பண்ண கலைஞர் செய்த முயற்சி . சரி தானே !
ராஜு-துபாய்
நேற்று இன்று நாளை அரசியல் நெடி சற்று அதிகமுள்ள எம்.ஜி.ஆர். படம் இது. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்- தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் என்று தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில் எம்.ஜி.ஆர். பாடுவதாக உள்ள வரிகள் தி.மு.க ஆட்சிக்கெதிரான வலுவான பிரச்சாரமாக அமைந்தது. இந்தப் படமும் பல கெடுபிடிகளுக்கிடையில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. வெற்றியும் கண்டது.
– நண்பர் ஜெகதீஸ்வரனின் தளம் —
http://lordmgr.wordpress.com/
பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த அருமையான பாடலின் சுட்டி இங்கே. பதிவில் இணைக்க முடியுமா?
– சிமுலேஷன்