மண் வாசனை


பாரதிராஜாவின் சிறந்த படங்களில் ஒன்று.

உண்மையை சொல்லப் போனால் சர்வ சாதாரணமான கதை. வழக்கம் போல ஒரு கிராமம், ஒரு இளம் பெண், முறைப்பையன், காதல், கல்யாணத்தில் பிரச்சினை, காத்திருக்கும் பெண், வேறு திருமணம் செய்துகொள்ளும் ஆண், எல்லாரும் இறப்பது என்பது தமிழ்ப் படங்களில் பல முறை அரைத்த மாவு. இதிலும் பெரிய திரைக்கதை நுணுக்கம் எல்லாம் இல்லை. ஆனால் பாத்திரப் படைப்பு அபாரமானது. சாலாக்கு பேசும் கிழவி, முறுக்கும் மாப்பிள்ளை, வீரமாக பேசினாலும் உள்ளே கொஞ்சம் பயம் உள்ள ஹீரோ, சின்னப்பெண், அவளுக்கு ஒரு உயிர்த்தோழி, வீம்பு பிடித்த பக்கத்து ஊர் பிரசிடென்ட், ஊர்ப் பெரிய மனிதர் கே.கே. சவுந்தர் எல்லாருமே நிஜமானவர்கள். அவர்களை குறுக்கும் நெடுக்கும் உலாத்தவிட்டால் கதை தானாக உருவாகிவிடும். அப்படித்தான் ஆகி இருக்கிறது.

ஊசி வெடி பாசி வெடி விருதுநகர் யானை வெடி என்று நீட்டி முழக்கும் காந்திமதிக்கு இதை விட சிறப்பான ரோல் கிடைத்ததில்லை. அவரை உருப்படியாக பயன்படுத்திக்கொண்ட ஒரே இயக்குனர் பாரதிராஜாதான். கிழவிக்கு விக் சரியில்லை என்று இன்று தோன்றுகிறது. மற்றபடி கொஞ்சம் வளைந்த அந்த உருவமும், கண்ணை மேலே தூக்கிப் பார்ப்பதும், நக்கல் பேச்சும் – கலக்கிவிட்டார். வேஷப் பொருத்தம் பிரமாதம். அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.

பாண்டியன் அந்த கொஞ்சம் விருதாத்தனமான ரோலுக்கு கச்சிதமாக இருக்கிறார். அதுவும் அவர் தனக்கு செய்தி சொல்லி அனுப்பவில்லையா, இரண்டில் ஒன்று பார்க்கிறேன் என்று உதார் விட்டுக்கொண்டு ரேவதி வீட்டுக்கு முன்னால் அரிவாளுக்கு சாணை தீட்டும் இடத்தில் திரைக்கதை ஆசிரியர் மிளிர்கிறார்.

ரேவதிக்கு வேஷம் கொஞ்சம் பொருந்தவில்லை. என்னதான் அவர் innocent ஆக பார்த்தாலும் நகரப் பெண் என்பது தெரிகிறது. ஆனால் நன்றாக வருவார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அவரும் அவர் தோழியும் பிரியும் இடத்தில் இருவருமே நன்றாக நடித்திருப்பார்கள்.

அடக்க முடியாத காளை என்று முறுக்கித் திரியும் விஜயனும் பிரமாதப்படுத்திவிட்டார். அவருக்கும் வேஷம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்று முறைக்காக கூப்பிட வரும் இடத்தில் அவர் நடிப்பு குறிப்பிட வேண்டியது. அதே போல தோற்றுப் போன காளையைப் பார்த்துக் கொண்டே குத்த வைத்து உட்கார்ந்திருக்கும் இடத்தில் இயக்குனர் டச் தெரிகிறது.

ஊர்ப் பெரிய மனிதர் சவுந்தர், பக்கத்து ஊர் பெரிய மனிதர் வினு சக்ரவர்த்தி இருவரும் கொடுத்த ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். அதுவும் வினுவின் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு இறுக்கம் தான் முதலில் அடையும் “தோல்வி”, பிறகு தனக்கு கிடைத்த ஒரு “சான்ஸ்” இரண்டையும் நன்றாக வெளிப்படுத்துகிறது.

தேவை இல்லாத காரக்டர் நிழல்கள் ரவி. வெட்டியாக உருகுவதைக் கண்டால் கடுப்புதான் வருகிறது. அதே போல ஒய். விஜயா, சூரியகாந்த் இருவரும் வெட்டி. கவர்ச்சி காட்ட விஜயா என்றால் அவர் காட்டினால்தானே? 🙂

திரைக்கதை சுமார்தான். அதுவும் பாண்டியன் ஊரை விட்டு ஓடிப் போன பிறகு கதையை எப்படி நகர்த்துவது என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அனாவசியமாக இன்னொரு பெண்ணைக் கொண்டு வந்து பொறுமையை சோதிக்கிறார்.

இளையராஜாவும் ஃபுல் ஃபார்மில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரிசி குத்தும் அக்கா மகளே, ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில், பொத்தி வச்ச மல்லிக மொட்டு எல்லாம் அப்போது பிரபலமாக இருந்தாலும் சுமாரான பாட்டுகளே.

1983-இல் வந்த படம்.

நடிப்புக்காகவும், பாத்திரப் படிப்புக்காகவும், ஒரு கிராமத்து மனிதர்களை, ஒரு காலகட்டத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதற்காகவும் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

2 Responses to மண் வாசனை

 1. சாரதா says:

  டியர் ஆர்.வி.

  மண்வாசனை விமர்சனம் சூப்பர். கொஞ்சமும் பாரபட்சமின்றி மிக அருமையாக சீர்தூக்கி எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக ரேவதியைப்பற்றியும், இளையராஜாவைப்பற்றியும் இடம்பெற்றிருக்கும் வரிகள்.

  ரேவதி எல்லாப்படத்திலும் அலட்டிக்கொள்வார் என்பது தெரிந்ததுதான். ஆனால் அந்த அலட்டல் இடையில் வந்ததில்லை, முதல் படத்திலிருந்தே அப்படித்தான் என்பது இப்படத்தைப்பார்க்கும்போது தெரியும். அவர் எந்த ஒரு படத்திலும் அம்பிகா, ராதா போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. (‘எங்கேயோ கேட்டகுரல்’ படத்தில் அம்பிகா ரோலுக்கு ரேவதியைப்போடலாமா என்ற சிந்தனை பஞ்சுவுக்கு கொஞ்சம்கூட வராமல் செய்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நிச்சயம் கெடுத்திருப்பார்). சுகாசினி, ராதிகா போல ரேவதியும் எல்லா ரோல்களிலும் அறிவுஜீவித்தனம் காட்டுவார். (மற்றபடி இவர்களில் யார் ஓவராக ஆக்ட் பண்ணினாலும் அதை ‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்லக்கூடாது. அந்த வார்த்தை, தமிழ் ரசிகர்களால் ஒரே ஒருவருக்கு மட்டும் ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டு விட்டது)

  அதே போல இளையராஜா பற்றிய கருத்தும் மிகச்சரி. பாடல்கள் மிகச்சாதாரணமான, மற்ற சின்ன இசையமைப்பாளர்கள் போட்டுவிடக்கூடிய மெட்டுக்கள்தான். ஆனால், சில வி.ஐ.பி.க்கள் வழங்கும் சிறப்பு தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் ‘பொத்திவச்ச மல்லிகை மொட்டு’ பாடலைப்பற்றி குறிப்பிடும்போது, இதுபோல யாரும் போட முடியாது, தமிழில் இதுவரை வராத அதிசயப்பாடல் என்பது போல நீட்டி முழக்கி விட்டு ஒளிபரப்பும்போது கடும் எரிச்சல் வரும். (சுஜாதா சிறந்த எழுத்தாளர்தான். அதுக்காக அவர் வீட்டு வண்ணான் கணக்கைக்கூட ‘பிரமாதம்’ என்று கொண்டாட வேண்டுமா?).

  அப்பாடலின் படமாக்கலும் (செம்மொழியில் சொன்னால் ‘பிக்சரைஸேஷன்’) அப்படியே. பாண்டியன் ஒரு மரத்தின் மேல் நின்று கொண்டு, ரேவதியை ஒரு கயிறுகட்டி தூக்குவார். பாரதிராஜா இருவரையும் தனித்தனியாக மாற்றி மாற்றி காட்டுவாரே தவிர, சேர்த்துக்காட்டவில்லை, காரணம் மரத்தின் மீது பாண்டிய நிற்கும் அந்த பொசிஷனில், கீழேயிருந்து ஒரு செங்கல்லைக் கட்டிக்கூட தூக்க முடியாது. (அந்தக்கால நாயகர்கள் அரிசிமூட்டை என்று பஞ்சு மூட்டையை முதுகில் தூக்கிக்கொண்டு போவது போலவும், இக்கால நாயகர்கள் அடுத்த தெருவில் போய்க்கொண்டிருப்பவனை, பறந்துபோய் அடிப்பது போலவும்).

  காந்திமதியைப்பற்றிய கருத்தும் அருமை. நீங்கள் சொன்னதுபோல ‘சிறந்த துணை நடிகை’ அல்லது ‘சிறந்த குணச்சித்திர நடிகை’ என்ற வகையில் அவருக்கு தேசிய விருதொன்று அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ‘எலே வீரண்ணே, அந்த் கன்னுக்குட்டியை அவுத்து வுடுடா, போய் மொற செஞ்சுட்டு வரட்டும்’ என்ற இடம் ஒண்ணு போதாதா? (‘பட்டத்துராணி’ பாடலுக்கு ஈஸ்வரிக்கு வழங்கப்படாமல், ‘குயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்கு பவதாரிணிக்கு வழங்கப்பட்டபோதே ‘தேசிய விருதாவது மண்ணாவது’ என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது வேறு விஷயம்).

  வழக்கம்போல எல்லோரும் செய்யும் தவறையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். அதாவது பெயர் தெரிந்தவர்களையெல்லாம் பாராட்டி அல்லது குறை சொல்லி முடித்து விட்டீர்கள். ஆனால் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய ஒருவர் காந்திமதியின் மகளாகவும், விஜயனின் மனைவியாகவும், ரேவதியின் அம்மாவாகவும் வரும் அந்த ‘பேர் சொல்லப்படாத’ நடிகை. என்ன ஒரு நடிப்பு.

  தன் கணவன் தற்கொலைசெய்துகொண்டதை அறிந்து, அதுவரை தன்வீட்டுக்கு வராத தன் அம்மா தன்னைப்பார்க்க வந்ததும், அவரைக்கட்டிக்கொண்டு கதறும் இடத்தில் அம்மா, மகள் இருவரின் நடிப்பும் இப்போதும் நம் கண்ணில் நீரை வரவழைக்கும் கட்டம். பார்ப்போரை பதறவைக்கும் இடம்… (பாரதீ…. கொன்னுட்டேடா).

  சிறப்பான விமர்சனததை தந்தமைக்கு மீண்டும் நன்றி. (முடிந்தால் என் பதிலை, உங்கள் தாய்ப்பதிவில் சேருங்கள்).

  அன்புடன் சாரூ…

 2. Ganpat says:

  சாருஜி,
  1.விஜயன் தோற்ற காளை மாட்டை கொன்றுவிட்டு தானும் உயிர் துறக்கும் விதம்
  பாரதிராஜாவின் திறனை வெளிப்படுத்தும்
  2. ஜனகராஜ், விஜயன் போட்ட பந்தயத்தை சமாளிக்க பஞ்சாயத்து முன் சொல்லும் (அ)(உ)பாயம் தியேட்டரையே குலுங்க வைக்கும்
  3.போனமாசம்தானேடா ஓம் பொண்ணு வயசுக்கு வந்தா!.இப்போ எதுக்கு திருப்பி கூப்பிட வந்திருக்க?மாசாமாசம் வரத்திற்கு பேர் வேறடா! என்று காந்திமதி சொல்வதில் உள்ள நக்கல் superb
  4.பொத்திவைச்ச மல்லிகை பாட்டு ராஜாவின் outstanding பாடல்களில் ஒன்று.Brilliant orchestration and rendering of raga Malkauns.Extremely romantic notes.
  இதை ரசிக்க காது அவசியம் (நல்லா வாய் இருந்தால் மட்டும் போதாது)
  5.தமிழ் திரை உலகில் சுஹாசினி மற்றும் சிவகுமாருக்கென்று தனி இடங்கள் உள்ளன
  Bottom-most.. அதை யாராலும் நெருங்க முடியாது.
  ராதிகா ரேவதி எல்லாம் பலபடிகள் மேலே!
  (கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில்
  சுகாசினியை சாதாரணமாக உலாவ விட்டிருந்தால் கூட ஒருவேளை அவர் மேல் நமக்கு அனுதாபம் வந்திருக்கலாம்.ஆனால் அந்த over-makeup அனாவசியமாக போட்டு மோகன் மேல் அனைவரையும் இரக்கப்பட வைத்துவிடுவார் இயக்குனர்!)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: