பாலசந்தருக்கு அவார்ட்


பிரபல இயக்குனர் பாலசந்தருக்கு மேலும் ஒரு feather in the cap. தாதா சாகேப் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது.

மனிதர் தளாராமல் சேவை புரிந்துள்ளார்.

எனக்கு பிடித்த பாலசந்தர் சினிமாக்கள் எல்லாம் 60,70களில் தான். 80ல் கொஞ்சம் தேறும். ஆனால் அதற்கு பிறகு ஒன்றும் சரியில்லை.

பற்றி Bags
Trying out

7 Responses to பாலசந்தருக்கு அவார்ட்

 1. விமல் says:

  டெல்லி: ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

  இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது.

  கடந்த 45 ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பாலசந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.

  அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே.

  மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாஸன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்ரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பாலச்சந்தர்.

  கமல்ஹாஸன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர்.

  இவர் இயக்கிய இருகோடுகள், அபூர்வராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும், ருத்ரவீணா தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.

  பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது.

  தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்தா, சர்வர் சுந்தரம் என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம்ஜிஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்தரின் முதல் திரைப் பிரவேசம். பாலசந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார்.

  தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர்.

  சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலசந்தர் தான். தூர்தர்ஷனுக்காக இவர் இயக்கிய ரயில் ஸ்னேகம் மறக்க முடியாத ஒரு படைப்பாகும்.

  அவர்கள், 47 நாட்கள், சிந்துபைரவி ஆகியவை பாலசந்தரின் மாபெரும் படைப்புகளாகும்.

 2. ஒரு உண்மையான கலைஞனுக்குக் கிடைத்திருக்கும் பொருத்தமான சிறந்த விருது. இவ்விருதைப்பெற எல்லா விதத்திலும் தகுதியானவர் கே.பி.அவர்கள். தமிழில் பலர் பயணிக்கத்துணியாத கதைக்களங்களில் துணிந்து பயணித்து, தமிழ்சினிமாவுக்கு புதிய முகவரியைத் தந்தவர். இவர் பெயரை ஒதுக்கி விட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்கிற அளவுக்கு சீரிய இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் சிகரம் கே.பி. அவர்கள்.

  இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

 3. nellai nainar says:

  நானும்..பாக்ஸம் 90-ன் தொடக்க வருடங்களில் பாலசந்தரின் பழைய படங்களை நாகர்கோவிலில் தொடாச்சியாக பார்த்து வியந்தோம். நல்லதொரு இயக்குநர். நீர்க்குமிழி திரைப்படம் மனதை விட்டு அகலாத கதை. ஆஸ்பத்தரியின் ஓர் வார்டில் நடக்கும் முழுகதை. பாடல்களுக்காக வெளிநாடு என்றெல்லாம் போகாமல் அந்த வார்டில் வைத்து முழு கதையையும், பாத்திரங்களையும் நகர்த்தியிருப்பது மிக, மிக திறமையான விஷயம். வாழ்த்துக்கள் பாலசந்தர் அவர்களே !

 4. Bags says:

  நன்றாக நினைவிருக்கிறது nellai nainar.

  சரஸ்வதி, முத்து இரண்டு சினிமா தியேட்டர்களிலும் நாம் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவோம். நீர்குமிழி, எதிர்நீச்சல், பாமா விஜயம் போன்ற திரைப்படங்கள் பார்த்த காலம் அது.

 5. விமல் says:

  ( *** நன்றி – தமிழக அரசியல் *** )

  கவிதாலயாவின் எவர் கிரீன் ஹீரோ திருவள்ளுவர்தான். பின்புறமாக திரும்பியிருக்கும் அவர் அப்படியே ரசிகர்களை நோக்கி முன்புறமாக திரும்பும்போது ‘முதற்றே உலகு’ முடிந்து போயிருக்கும். இன்று தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் அத்தனை பேருக்கும் அகர முதலவும் திருவள்ளுவரும் யாரென்றால் அது இயக்குனர் சிகரம் கே.பி தான்!

  கடந்த சில தினங்களாக கோடம்பாக்கத்தின் எல்லா தெருக்களும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் வீட்டு வாசலில்தான் முடிகின்றன. அவர் அலுவலக வாசலில் பூச்செரியும் மரங்கள் அத்தனையும் வாழ்த்து கூற வருகிறவர்களை புன்முறுவலோடு நோக்குகின்றன. அடிப்படையில் தாவர நேசிப்பாளரான பாலசந்தரால் வளர்க்கப்பட்ட அந்த மரங்கள் இந்த நல்ல செய்திக்காக காத்திருந்த காலங்கள் சற்று கூடுதலானவைதான். கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய கவுரவம் அல்லவா இது?

  போகட்டும்… இந்த கவுரவம் அவரது சினிமா சாதனைக்காக மட்டும் வழங்கப்பட்டது அல்ல. வாழ்வும் கலையும் கலந்த மனிதர் அவர். தனது அடுத்த தலைமுறையை மனசு நிறைய பாராட்ட தெரிந்தவர். எல்லாருடைய வெற்றிகளையும் கொண்டாடுகிற மனம் படைத்தவர்.

  காதல் திரைப்படம் வெளியான நேரம். எந்த படத்தையும் தியேட்டருக்கு சென்று பார்க்கிற வழக்கமுள்ள பாலசந்தர், படம் பார்த்துவிட்டு திரும்பும் போதே பாலாஜி சக்திவேல் நம்பர் இருக்கா என்கிறார் தனது உதவியாளரிடம். அப்புறம் என்ன நினைத்தாரோ, வேண்டாம். நாளைக்கு நான் நேராவே போய் வாழ்த்துறேன். ஒரு கலைஞனுக்குரிய கவுரவம் அதுதான் என்று கூறிவிட்டு அமைதியாகிறார்.

  மீண்டும் தனது உதவியாளர் மோகனிடம், நான் பாலாஜி சக்திவேல் ஆபிஸ் எங்கேயிருக்குன்னு விசாரிச்சேன்னு அவர்கிட்டேயே கேட்டுடாதே. தெரிஞ்சா அவர் ஓடி வந்திடுவார். அது வேணாம். யாருக்கும் தெரியாம விசாரிச்சுக்கோ. எந்த நேரத்தில் இருப்பார்னும் தெரிஞ்சு வச்சுக்கோ என்கிறார்.

  மறுநாள் யாருக்கும் முன்னறிவிக்காமல் பாலாஜி சக்திவேல் ஆபிசுக்கே போய் இறங்குகிறார். பிரச்சனை என்னவென்றால் அலுவலகம் இருப்பது முதல் மாடி. ஐயா நான் வேணும்னா மேல போய் சொல்லட்டுமா? யோசனை சொல்கிற மோகனின் வாயை அடைத்துவிட்டு சிரமத்துடன் முதல் மாடி ஏறி செல்கிறார். மொத்த ஆபிசும் பதறுகிறது. சார்… நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா நானே ஓடி வந்திருப்பேனே என்கிறார் பாலாஜி சக்திவேல்.

  மிக மிக நெகிழ்ச்சியான தருணம் அது. அதன்பின் எத்தனையோ விருதுகளை அந்த படத்திற்காக பெற்றுவிட்டார் பாலாஜி சக்திவேல். எதுவும் இந்த பாராட்டுக்கு ஈடாகாது என்பது அவருக்கே தெரியும்.

  பாராட்டுகிற விஷயத்தில் பஞ்சமே வைப்பதில்லை பாலசந்தர். சஹானா என்ற தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர் தாமிரா. திடீரென்று ஒரு காட்சிக்கு டயலாக் எழுத வேண்டிய சூழ்நிலை. நான் வெளியில போறேன். இதான் சுச்சுவேஷன். எழுதி வச்சுரு. நான் அந்த பக்கம் போனதும் நீ இந்தப்பக்கம் தம்மடிக்க போயிடாத. வேணும்னா பால்கனியை திறந்து தம்மடிச்சுட்டு இங்கேயே உட்கார்ந்து எழுது. நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேணாம். எழுதி முடிச்சுட்டா கிளம்பிரலாம். நண்பனிடம் சொல்வது போல சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

  சொன்னபடியே எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பிய தாமிராவுக்கு அடுத்த சில மணி நேரத்தில் போன். எதிர்முனையில் கே.பி. ரொம்ப நல்லாயிருக்குடா. இதுல என்ன எழுதியிருக்கியோ, அதை அப்படியே எடுக்க முடியும்னு நினைக்கிறேன். அப்படியே எடுக்க ட்ரை பண்ணுறேன். நு£று படங்களை இயக்கி முடித்த ஒரு ஜாம்பவான் ஒரு உதவி இயக்குனரிடம் பேசிய வார்த்தைகள்தான் இது. அப்படியே விட்டிருந்தால் கூட அது அதிசயம் இல்லை. இலங்கைக்கு போயிருந்தார் படப்பிடிப்புக்கு. அங்கிருந்து சென்னைக்கு போன் அடித்துவிட்டார். தம்பி… நீ எழுதியிருக்கறதை அழகா எடுத்துட்டேண்டா. ரொம்ப திருப்தியா இருக்கு.

  பிறகு சென்னைக்கு வந்து அதை எடிட் செய்த பிறகும் இதே தாமிராவுக்கு போன் அடிக்கிறார் கே.பி. இப்ப வந்து பாரேன். உன் வசனத்துக்கு நான் உயிர் கொடுத்திருக்கிறேனா என்று. நம்புங்கள். இப்படியெல்லாம் பேசுவது பிதாமகர் பாலசந்தர்தான்!

  ரஜினி, கமல், சிரஞ்சீவி, நாகேஷ்… இப்படி பாலசந்தர் என்ற படைப்பாளி ஈன்றவை எல்லாமே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட புலிக்குட்டிகள்.

  ரஜினிக்கு நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அவர் இருப்பது பாலசந்தரின் வீட்டில்தான். அவரது வீட்டில்தான் ரஜினியை குழந்தையாக பார்க்க முடியும். அறுபது வயது குழந்தைக்கும் எண்பது வயது தகப்பனுக்கும் இருக்கிற அந்நியோன்னிய உறவை அந்த சந்தர்பத்தில் பார்த்து வியந்தவர்கள் அதை அடுத்த ஜென்மத்திலும் கூட நினைவு வைத்திருப்பார்கள்.

  வீட்டில் ரஜினியை குழந்தையாக பார்க்கிற கே.பி. மேடைக்கு வந்துவிட்டால் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுக்க தவறுவதேயில்லை. அந்த இடத்தில் ரஜினி வளர்ந்த நடிகர். கே.பி. அதை உணர்ந்த இயக்குனர்.

  ரஜினியை தகப்பன் மனநிலையிலும், ரசிகன் மனநிலையிலும், குருவின் மனநிலையிலும் பார்க்கக் கூடிய ஒரே தகுதி இன்று கே.பிக்கு மட்டும்தான் இருக்கிறது.

  இந்த தாதா சாகேப் பால்கே விருது எத்தனையோ காரணங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் வெற்றி தோல்வி தாண்டி பரிபூரணமாக வாழ்கிற மனிதர் அவர்.

  இந்த விருது அதற்காகவும்தான்!

  ( *** நன்றி – தமிழக அரசியல் *** )

 6. BaalHanuman says:

  ஞானி வாழ்த்துகிறார்…

  தாதா சாகிப் பால்கே விருது பெற்ற இரண்டாவது தமிழர். சினிமா என்பது இயக்குனரின் மீடியம்தான், நட்சத்திர நடிகர்களின் மீடியம் அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்த முன்னோடி கே.பி. என்பதே அவரது சாதனை.

 7. BaalHanuman says:

  சோ-வின் பாராட்டு…

  நியாயம் நடந்திருக்கிறது!

  திரு. கே. பாலசந்தருக்கு, தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது, மிகவும் திருப்தியைத் தருகிறது. திரையுலகின் மிகவும் உயர்ந்த இந்த கௌரவத்தை பாலசந்தருக்கு வழங்க முடிவெடுத்தவர்கள், இன்றும் கூட நியாயங்கள் நடக்கும் என்று நிரூபித்துள்ளார்கள்.

  பாலசந்தர் திரையுலகில் புரிந்துள்ள சாதனைகள் ஒரு சிறிய பாராட்டுரைக்குள் அடைக்கப்பட முடியாதவை. அவருடைய திறன் பற்றி 1976-ல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு சில பகுதிகளை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்:

  …தான் செய்யும் தொழிலில் தனக்கே ஒரு மனத் திருப்தி ஏற்பட வேண்டும் என்ற மனப் போக்கு, ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இருந்தால், அவர்களால் அத்தொழிலே மேன்மையுறும். ஆத்ம திருப்தி, வியாபார நோக்கம் என்ற இரண்டு துருவங்களுக்கு இடையே பாலம் அமைக்கும் திரைப்படங்கள் வெளிவருவதற்கு, இம்மாதிரியானவர்கள் காரணமானவர்கள். ஸ்ரீதர், பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு போன்றவர்கள் வெவ்வேறு வகையில் இப்பட்டியலில் இடம் பெற்றார்கள். முன்னோடிகள் அவர்கள். தமிழ்த் திரையுலகின் திருப்பு முனைகளுக்குக் காரணமாகி நின்றவர்கள். இப்போதைய தமிழ்த் திரையுலகில் இதற்கு முதல் உதாரணமாக மனதில் தோன்றுபவர் கே. பாலசந்தர்….

  …திரை என்ற மீடியத்தை, பாலசந்தர் நன்றாக புரிந்து கொண்டு, தன் உழைப்பினால் சீராகப் பயன்படுத்துவதால்தான் அவருக்கு வெற்றிகள் வந்து சேர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு திரைப்படம் பற்றியும், பலவிதமான அபிப்பிராயங்களும் இருக்கும். பாலசந்தரின் படங்களும் இதற்கு விலக்கல்ல. ஆனால், பொதுவாக அவருடைய படங்களில் அவற்றிற்குப் பின் உள்ள கவனமும் உழைப்பும் தெரியாமல் போவதில்லை.

  …தோல்விகளைக் கண்டு துவளவில்லை. வெற்றிகளைக் கண்டு உழைப்பைக் குறைக்கவில்லை. திறமை தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்டவர்களே தமிழ்த் திரையுலகில் மிக மிகச் சிலரே. இவர்களுக்கெல்லாம் வெற்றிகளும் வரலாம், தோல்விகளும் ஏற்படலாம். அதுவல்ல முக்கியம்; இவர்களைப் பார்த்து மற்ற சிலருக்கு ஏற்படக் கூடிய ஆர்வமும், தைரியமும் தமிழ்த் திரையுலகிற்கு நல்லது செய்யும்.

  …தமிழ்த் திரையுலகில் இளைய தலைமுறையினரின் எதிர் நீச்சலை ஆரம்பித்து வைத்தவர்களில் பாலசந்தருக்கு முக்கியமான இடமுண்டு. தமிழ்த் திரையிலும் அபூர்வ ராகங்கள் சில சமயங்களில் பாடப்படுவதுண்டு என்று காட்டியவர்களில் பாலசந்தரும் ஒருவர். ‘அவர்’ ஒரு தொடர்கதையாக இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

  கே. பாலசந்தர், ஒரு திரையுலக சகாப்தம். அவருக்கு ‘துக்ளக்’ சார்பாக, என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: