நாகேஷ்–25


அனுப்பிய விமலுக்கும், விகடனுக்கும் நன்றி!

நாகேஷ் மாறும் உடல் மொழி, ஏறி இறங்கும் குரல் ஜாலம், தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!

 1. பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்.
 2. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் – குண்டப்பா.
 3. பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
 4. இளம் வயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
 5. முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
 6. கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலர வைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
 7. ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால் தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
 8. இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
 9. முதல் படம் `தாமரைக்குளம்’ ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர். ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
 10. `அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
 11. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
 12. எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
 13. திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி. நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
 14. நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’-ல் வில்லன், ‘மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக் கட்டியவர்!
 15. `அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங், பாலசந்தர் ஆக்‌ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ் கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல, படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்சுக்கு இது ஒரு சாம்பிள்!
 16. இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்.
 17. டைரக்‌ஷன் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்‌ஷனில் வெளிவந்த திரைப்படம்.
 18. பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறுதானே’ என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
 19. `சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி.
 20. `நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமலஹாசன்.
 21. பஞ்சதந்திரம்’ ஷூட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
 22. `தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured–டா கமல்!’
 23. தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்.
 24. இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்.
 25. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாகேஷ் பக்கம்

நாகேஷ் பக்கம்


நாகேஷ் பற்றிய பதிவுகள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

நாகேஷ், ராஜநாயகம்


நாகேஷை இன்னொரு முறை சந்தித்ததை நினைவு கூர்கிறார் ராஜநாயகம்.

அப்படியே நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்த ஒரு விஷயம் – காதலிக்க நேரமில்லையில் சச்சுவின் அப்பாவாக வருபவர் பேர் பிரபாகராம்.

நாகேஷ் அஞ்சலி கூட்டம்


நண்பர் தாஸ் ஒய்.ஜி. மகேந்திரனின் பாரத் கலாச்சார் நடத்திய நாகேஷ் அஞ்சலி கூட்டத்தை பற்றி செய்தி தந்திருந்தார்.
// Here is a function to pay homage to nAgEsh. Anyone in Madras may be able to go.
Bharat Kalachar is organising a memorial meeting, ‘Salutations to the King of Comedy’ on February 14, 6.30 p.m. at Sri YGP Auditorium, Thirumalai Road, T. Nagar. Cho Ramaswamy, Manorama, Dr. (Mrs) Y.G. Parthasarathy, Y.Gee. Mahendra, V. S. Raghavan, ‘Chithralaya’ Gopu, ‘Vietnam Veedu’ Sundaram and Kumari Sachu will share their thoughts on the veteran actor. There will also be a brief audio-visual presentation. //

அந்த கூட்ட விவரத்தை இங்கே காணலாம்.

நாகேஷ் பற்றி ராஜநாயகம் எழுதி இருக்கும் இன்னொரு போஸ்ட் இங்கே. அவரது மிகை நடிப்பை பற்றி இங்கே குறிப்பிட்டிருக்கிறார். பூவா தலையா படத்தில் நாகேஷ் கொஞ்சம் அதிகமாகவே நடித்தது உண்மைதான். ஆனால் கமல் போன்றவர்களும் இந்த கருத்தை சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது.

நாகேஷ் பற்றி ஆர். பி. ராஜநாயகம்


ஆர். பி. ராஜநாயகம் நாகேஷ் பற்றி சில நினைவுகளை இங்கே மற்றும் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

நாகேஷ் பற்றி ஓ பக்கங்களில் ஞானி


ஞானியின் அருமையான கட்டுரை. ((நன்றி மணிவண்ணன்)

// அவர் நான்கு வருடங்கள் முன்னால் ஒரு பத்திரிகை நடத்திய பாராட்டு விழாவிலும், தனக்கு எந்த அரசாங்க தேசிய விருதும் கிடைக்காத வேதனையையும் சொன்னார். நாகேஷுக்கு இனிமேல் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தால் கூடப் பயனில்லை. அவர் பங்களிப்பை அரசு கௌரவிக்கிறது என்று தெரிந்துகொள்ள அவர் இல்லாத போது என்ன செய்து என்ன பயன்? //

// சிவாஜி, நாகேஷ் இருவரையும் அவர்களுடைய கடைசி நாட்களில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம். //

குறிப்பாக மேலே கோட் செய்யப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை.

நன்றி: குமுதம் ஓ பக்கங்கள் ஞானி

கலைவாணர் முதல் கஞ்சா கருப்பு வரை தமிழ் சினிமா பெற்ற நகைச்சுவை நடிக-நடிகையர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரசிகர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்குமே பிடித்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் நாகேஷ் ஒருவர்தான்.

என் வாழ்க்கையில் நாகேஷ் இரு முக்கியமான தருணங்களில் (அவரையறியாமலே) இடம் பெற்றார். பள்ளிக்கூட நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் நான் அவரைப் போலவே ஒல்லியானவனாக இருந்தேன். அப்போதெல்லாம் எல்லா நாடகங்களிலும் நான் நகைச்சுவை நடிகன்தான். பள்ளியில் எனக்கு நாடகம் கற்றுத் தந்த ஆசிரியர்கள் வசனம் பேசவும் மேடையில் ஓடியாடவும் கற்றுத் தந்த ஒவ்வொரு அசைவிலும் உச்சரிப்பிலும் நாகேஷ்தான் இருந்தார்.

எப்படி சிவாஜிதான் நாடக ஹீரோக்களுக்கு ரோல் மாடலோ அதே போல காமெடியன்களின் ஆதர்சம் நாகேஷ்தான். கல்லூரியில் ஒரு நாடகத்தில் முழு நீள நகைச்சுவை பாத்திரமொன்றை எனக்கு முதலில் கொடுத்து விட்டு பின்னர் அதில் வெளியிலிருந்து தொழில்முறை நடிகர் ஒருவரைப் போட்டார் என் ஆசிரியர். நான் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நாடக ஆரம்பத்தில் மூன்று நிமிடம் வருகிறமாதிரி ஒரு `சோலோ’ நகைச்சுவை சமையற்காரப் பாத்திரம் ஒன்றை எனக்காக எழுதிக் கொடுத்தார். அதை நடிக்கும் போது, அதிர்ச்சியான ஒரு போன் காலை கேட்டு நான் ஓடி வந்து சோபா முதுகின் மீது குறுக்காக விழுந்து கை கால்களை ஆட்டியபடி பேலன்ஸ் செய்து கைதட்டல் வாங்கினேன். அதற்கு ரோல் மாடல் நாகேஷ்தான்.

இதை விட சிக்கலான பல `ஸ்லேப்ஸ்டிக் காமெடி’ உடல் அசைவுகளை நாகேஷ் செய்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் கடும் உழைப்பும் பயிற்சியும் தேவை. காமெடி நடிகர்களுக்குத் தேவையான சர்க்கஸ் உடல்மொழி, வேகம், நடனத் திறமை, வசன உச்சரிப்பின் நேரக் கச்சிதம் என்று எல்லாவற்றுக்கும் நாகேஷின் படங்கள்தான் இலக்கணப் புத்தகங்கள். நாகேஷுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தமிழ்த் திரையில் இதர நகைச்சுவை நடிகர்கள் எல்லாரிடமும் ஓர் ஒற்றைத் தொனி (`மொனாட்டனி ஸ்டைல்’) இருக்கிறது, நாகேஷிடம் மட்டும்தான் வெரைட்டி உண்டு.

எனக்கு இன்றும் பெரிய ஆச்சரியம், மேடை நிகழ்ச்சிகளில் எந்த மிமிக்ரி கலைஞரும் நாகேஷ் குரலை மட்டும் மிமிக்ரி செய்வது இல்லை என்பதுதான். ஒரு விதத்தில் இதற்கு அவருடைய வெரைட்டியும் காரணமாக இருக்கலாம்.

ஒரு நடிகராக நாகேஷுடைய தன்னம்பிக்கை ஒவ்வொரு நடிகனுக்குமான பாடம். எந்த வகைப் பாத்திரமாக இருந்தாலும், தன்னால் அதைச் செய்துவிட முடியும் என்று அவர் நம்பி உழைத்ததால்தான், அவருடைய பட வரிசையைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சர்வர் சுந்தரம் படத்தில் வசீகரமான தோற்றம் உடைய ஹீரோ நடிகர் முத்துராமன் இருந்தபோதும், சினிமாவில் ஹீரோவாக ஜெயித்த நடிகன் பாத்திரத்தை முத்துராமனுக்கு நிகரான தோற்றப் பொலிவு இல்லாத நாகேஷ் ஏற்று நடித்து வெற்றி பெற்றிருப்பது, நடிப்புத் திறமைக்கு மட்டுமே கிடைத்த வெற்றி.

வெவ்வேறு ஜாதிகள் அதையொட்டிய பழக்க வழக்கங்கள் உள்ள தமிழ்ச் சமூகத்தில், மிகச் சில நடிகர்களுக்கு மட்டுமே எந்த ஜாதிப்பாத்திரத்துக்கும் பொருந்திப் போகும் உடல்மொழியும் நடிப்பாற்றலும் உண்டு. அதில் முதன்மையானவர் நாகேஷ். அதனால்தான் தூத்துக்குடியின் ஏழைத் தொழிலாளியாகவும், தஞ்சாவூரின் சவடால் புரோக்கராகவும் அவரை ஏற்க முடிந்தது. வாழ்க்கையிலும் ஜாதிக்கு அப்பாற்பட்டவராக அவர் கலப்புத்திருமணம் செய்தவராகவும் தன் பிள்ளைகளுக்கும் கலப்புத்திருமணங்கள் செய்தவராகவும் விளங்கினார்.

நாகேஷ் என் வாழ்க்கையில் இரண்டாவது முறை இடம் பிடித்தபோது அவருடைய இன்னொரு பரிமாணத்தை நான் தெரிந்துகொண்டேன். எழுத்தாளர் அறந்தை நாராயணனின் நாவலை நான் டெலிவிஷன் தொடரக இயக்கியபோது, அந்தத் தொடரை அறிமுகம் செய்து பேசும்படி நாகேஷை நானும் அறந்தையும் அணுகினோம். முதலில் அறந்தையின் நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றார். கொடுத்தோம். படித்தபின் என் உதவி இயக்குநரை அனுப்பிவைக்கச் சொன்னார். அவரை ஒரு கொயர் நோட்டுப் புத்தகத்துடன் வரச் சொன்னார். அதன்படி கணேஷ் சென்றதும், நாகேஷ் டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். கணேஷ் எழுத எழுத நோட்புக் தீர்ந்து போய்விட்டது.

எனக்கும் அறந்தைக்கும் ஒரே குழப்பம். டி.வி தொடரை அறிமுகம் செய்து பேசவேண்டியது சில நிமிடம்தான். எதற்காக இவ்வளவு நீளமாக உரை தயாரித்திருக்கிறார்? இதைப் பதிவு செய்து எப்படி ஒளிபரப்புவது ? உதவி இயக்குநர் கணேஷ் சொன்னார்: இந்த முன்னுரையை பிரிண்ட் பண்றதுக்கு முன்னே என்கிட்ட ப்ரூஃப் கொண்டு வந்து காட்டுன்னு சொல்லியிருக்கார் சார். டி.வி.யில் தோன்றி அறிமுகம் செய்யவேன்டும் என்று நாங்கள் கேட்டதை அவர் புத்தகத்துக்கு முன்னுரை என்று எடுத்துக் கொண்டு விட்டதே தவறுக்குக் காரணம். (மறுபடியும் நாகேஷை தொல்லை செய்யவேண்டாம் என்று அறந்தை சொன்னதால், பின்னர் அந்த டி.வி. அறிமுகத்தை நடிகை ஸ்ரீவித்யா செய்தார்.)

அப்போது நாகேஷ் டிக்டேட் செய்த `முன்னுரை’ அவருடைய எழுத்தாற்றல் பரிமாணத்தைக் காட்டியது. விண்ணிலிருந்து மண்ணுக்கு என்ற கதையில் தலைப்பை வைத்துக் கொண்டு ஒரே தத்துவ மழைதான். தத்துவமாகப் பேசுவது, எழுதுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்ப காலங்களில் சினிமாவில் அவருடைய நகைச்சுவைப் பகுதிகளை எழுதுவதில் அவரும் பங்கேற்றிருக்கிறார். நிறைய படிக்கிற பழக்கமும் உடையவர்.

ஒரு நகைச்சுவை நடிகன் மிக சீரியஸான ஒரு எழுத்தாளன் பாத்திரத்தை நடித்தால் எப்படியிருக்கும் என்ற பரிசோதனையைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. ஜெயகாந்தனின் சாயல் உள்ள எழுத்தாளர் பாத்திரத்தை `சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நாகேஷ் செய்திருப்பது மிக சுவாரஸ்யமானது.

தத்துவங்கள் பேசுவது , விரக்தியும் நம்பிக்கையும் கலந்த நகைச்சுவை தொனிக்கப் பேசுவது எல்லாம் நாகேஷின் மேடை முத்திரைகள். வாழ்க்கையில் அவர் சந்தித்த வறுமை, பணம் சம்பாதித்த பிறகும் சந்தித்த பிரச்சினைகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் மீறி அவர் நடிப்பில் தோய்ந்தவராக இருந்தார். நானும் அறந்தையும் அவரை எங்கள்டி.வி.தொடரை அறிமுகம் செய்துவைக்க அழைக்க ஒரு பின்னணி இருந்தது.

அறந்தையின் நாவல், கொடி கட்டிப் பறந்து பெரும் புகழும் பணமும் சம்பாதித்து பலரால் ஏமாற்றப்பட்டு வாய்ப்புகள் போய் நொடித்துப் போய் போதைப் பழக்கத்துக்கு ஆளான ஒரு நடிகையின் கதை. மரணத்தை எட்டிப் பார்த்து விட்டு அவள் திரும்பி வந்து புது வாழ்க்கையைத் தொடங்குவதுதான் கதை.

அதுதான் அந்த நடிகைக்கும் நாகேஷுக்கும் இருந்த ஒற்றுமை. அவரும் மரணத்தை தொட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து பல வருடம் மறுபடியும் நகைச்சுவை செங்கோலைக் கையில் பிடித்தவர். தூக்கம் இல்லாமல், இரவு பகல் பார்க்காமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தன் உடலைக் கடுமையாக வருத்திக் கொண்ட நாகேஷுக்கு அந்தக் கட்டத்தில் மது மட்டுமே ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் அவர் மயங்கி விழுந்து வாரக்கணக்கில் நினைவின்றி மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது சில மாலைப் பத்திரிகைகள் கொடூரமாக நடந்துகொண்டன. மருத்துவர்கள் நாகேஷ் உயிருக்கு இன்னும் இரண்டு மணி நேரம்தான் கெடு வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் தலைப்புச் செய்திகளை தினமும் கொட்டை எழுத்தில் போட்டு பரபரப்பாக விற்றார்கள். மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த நாகேஷ் அத்தனை பேப்பர்களையும் பின்னர் படித்துவிட்டு வருத்தப்பட்டதாக அறந்தை சொன்னார். “இவங்களை யெல்லாம் ஏமாத்திட்டேன் போலருக்கே” என்று சிரித்துக் கொண்டே தன் வேதனையைச் சொல்ல நாகேஷால்தான் முடியும்.

அப்படி சிரித்துக் கொண்டேதான் அவர் நான்கு வருடங்கள் முன்னால் ஒரு பத்திரிகை நடத்திய பாராட்டு விழாவிலும், தனக்கு எந்த அரசாங்க தேசிய விருதும் கிடைக்காத வேதனையையும் சொன்னார். நாகேஷுக்கு இனிமேல் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தால் கூடப் பயனில்லை. அவர் பங்களிப்பை அரசு கௌரவிக்கிறது என்று தெரிந்துகொள்ள அவர் இல்லாத போது என்ன செய்து என்ன பயன் ?

சிவாஜி, நாகேஷ் இருவரையும் அவர்களுடைய கடைசி நாட்களில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டோம். இருவரும் இளம் நடிகர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்க வேன்டியவர்கள். டெல்லி முன்வந்தபோதும் கூட நம் அரசுகள் சென்னையில் நாடகப் பள்ளியை ஏற்படுத்தத் தவறிவிட்டன. திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பாடமே கிடையாது. வர்த்தக சபை, நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் முதலான துறை சார்ந்த அமைப்புகளுக்கு வேறு எத்தனையோ வேலைகள் பாவம்.

சிவாஜி, நாகேஷ், இயக்குநர் ஸ்ரீதர் என்று பலரிடம் கற்றுக் கொள்ள இளம் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு எவ்வளவோ இருக்கிறது. வாய்ப்பை பறிகொடுத்துவிட்டோம்.

இன்னும் சிலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். காக்கா ராதா கிருஷ்ணன், மனோரமா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், சௌகார் ஜானகி, எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், சிவகுமார், பாரதி ராஜா, பாலு மகேந்திரா…. என்று கொஞ்சம் நீளமான பட்டியலை சினிமாவின் எல்லா தொழில்நுட்பப் பிரிவுகளிலிருந்தும் போடலாம்.

இவர்களெல்லாம் அவரவர் துறை சார்ந்து மாதம் ஒரு முறை ஒரு வகுப்பை சினிமாவின் அந்தந்தப் பிரிவின் இளைய தலைமுறைக்கு எடுப்பதற்கான ஏற்பாட்டை முறையாக ஸ்தாபனரீதியில் ஏற்பாடு செய்ய முடிந்தால், நூறாண்டு காணப் போகும் தமிழ் சினிமாவின் வரலாற்று அனுபவப் பிழிவு அடுத்த நூறு ஆண்டுக்கான வேரில் ஊற்றிய நீராக அமையும். நாகேஷுக்கு, சிவாஜிக்கு, ஸ்ரீதருக்கு அதுதான் அசல் மரியாதை..

நாகேஷ் பற்றி பாலசந்தர், மனோரமா


(தொகுப்பு: தாஸ் – நன்றி)

Das Says:
பெப்ரவரி 6, 2009 at 8:29 பிற்பகல் e

From vikatan

‘ஆச்சி’ மனோரமா:

”நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘நாகமலை அழகி’. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். ‘அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி… நிச்சயம் பெரிய ஆளா வருவார்’னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல ‘தெய்வத்தின் தெய்வம்’ படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் ‘நாகேஷ் டான்ஸ்’னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.

பாலசந்தர் சாரின் ‘நவக்கிரகம்’ படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, ‘இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ‘ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்’னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, ‘ஆனா நீங்க நடிச்ச ‘வைத்தி’, ‘தருமி’ கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது’ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.

ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக் குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, ‘சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ’ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!” கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.

Das Says:
பெப்ரவரி 6, 2009 at 8:23 பிற்பகல் e

From bAlu (aka. bAlachandar)

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல் லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக். டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம். ‘இனி நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!” பாலசந்தரிடமிருந்து கனத்த பெருமூச்சு!