விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I


சாரதா எம்எஸ்விடைம்ஸ் என்ற தளத்தில் எழுதி இருப்பதை அவர் அனுமதியோடு இங்கே பதிக்கிறேன். தாமதத்துக்கு சாரதா மன்னிக்க வேண்டும்.

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.

கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.

எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.

சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நாற்பத்தி மூன்று ஆண்டுகளை (2007 – 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.

இந்தப் பதிவு என் நண்பன் சிவகுருவுக்காக. சிவகுருவுக்கு இந்த பாடல் என்றால் உயிர்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பக்கங்கள், பாட்டுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
எம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு
எம்எஸ்விடைம்ஸ் தளம்

காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) விகடன் விமர்சனம்
காதலிக்க நேரமில்லை பாட்டுகள் தொகுப்பு
காதலிக்க நேரமில்லை எங்கள் விமர்சனம்,
காதலிக்க நேரமில்லை – ஸ்ரீதர் இல்லாமல்!

தோளின் மேலே பாரம் இல்லே


நண்பர் விமல் “தோளின் மேலே பாரம் இல்லே” பாடலின் வரிகளை அனுப்பி இருந்தார். ஒரு காலத்தில் மிகவும் பிடித்த, ரோடில் நடந்து போகும்போது கூட பாடிக் கொண்டே போன பாட்டு. அதையே இன்று ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

விமல் மிச்ச பாட்டுகளைப் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது, அதனால் இந்த பாட்டின் வீடியோவை பார்க்க இன்னும் தைரியம் வரவில்லை என்று எழுதி இருந்தார். அவர் வயிற்றேரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காக இங்கே வீடியோவையும் சேர்த்திருக்கிறேன்.

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ

ஏஏஏஏஏ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

லோகத்தில் ஏது ஏகாந்தம்
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன் மஞ்சம்
லோகத்தில் ஏது ஏகாந்தம்
இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம்
இது பொன் மஞ்சம்

பாதையெல்லாம் மல்லிகைப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு
பாதையெல்லாம் மல்லிகைப்பூ
வாசம் வந்தா யார் பொறுப்பு

நான் வானம் தொட்டு வாழும் சிட்டு
வாழ்க்கைக்கிங்கே சட்டமில்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா

யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னதோ
யாருக்கு நாளை சொந்தமோ
யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ
யார் சொன்னதோ
தத்துவங்கள் தேவையில்லே
சோகம் என்றால் என்ன விலை
நான் பாடும் பட்சி காமன் கட்சி
காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீ ஆமாமாமா ஆசாமியா

தொகுக்கப்பட்ட பக்கம்:
ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம்
படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்: நினைவெல்லாம் நித்யா நினைவுகள் II

ஸ்ரீதரின் “தேனிலவு” நினைவுகள்


சாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.

இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்.

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
தேனிலவு – ஆர்வியின் விமர்சனம்

ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா


இயக்குனர் ஸ்ரீதர்

தமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர். பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்குநரின் பெயரில் படம் சொல்லப்பட முதன் முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.

அது வரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச் சொல்ல வைத்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத் துவங்கிய காலத்துக்குப் பின்தான் பேசப்பட்டன.

அதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப் படங்களும், மலைக் கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்த போதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் ‘புதுமை இயக்குனர்’ ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமர தீபம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த கல்யாணப் பரிசுதான்.

கல்யாணப் பரிசு ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப் பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாணப் பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.

கோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. ‘கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா’ என்று கேட்பதற்கு பதில், ‘நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்’ என்று கேட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.

அந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ‘வசந்தி’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாஸ்கர்’ என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப் படம் மக்கள் மனத்தில் ஒன்றிப் போனது.

படம் முடிந்த பின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், ‘காதலிலே தோல்வியுற்றான்’ என்று பாடிக் கொண்டே அடிவானத்தை நோக்கிச் சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.

1959ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன்னனின் மின்னல் வெட்டும் வாள் வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.

கல்யாணப் பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது “வணக்கம்” போட்டே பழகியவர்கள் அவர்கள்.

“என்னது? கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா? கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா? கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா? இது என்ன முடிவு? நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்” என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.

அவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு கல்யாணப் பரிசு மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.

எந்தப்பக்கம் திரும்பினாலும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்’, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.

பட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் ‘பாடல் பெற்ற தலங்கள்’ ஆனது.

1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலி பரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட… என்னைக்கண்டு நீயாட’ என்னும் கல்யாணப் பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.

‘புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்’ என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது….

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
கல்யாணப் பரிசு – ஆர்வி விமர்சனம், விகடன் விமர்சனம்

பிற்சேர்க்கை: விஜயன் சொல்கிறார் – “எல்லாவற்றிலும் புதுமை. வசனம், காமிரா, உடை, ஒப்பனை, நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி. ஒரிஜினாலிட்டி. பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம், குரு தத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று எம்ஜிஆர் ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள். வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம்சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார். சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்பில் கலந்து இவரை பெருமைப்படுத்தினார்.”

கல்யாண பரிசு – விகடன் விமர்சனம்


படம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்!

என் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.

சேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா? அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு!

சந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா! உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.

சந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா? ஆங்கிலமா?

சேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க!

சந்தர்: நல்ல கதையா? சொல்லப்பா சுருக்கமாக!

சேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.

சந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா?

சேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.

சந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்?

சேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா?

சந்தர்: சரி, வில்லன் யாரு?

சேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே? ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.

சந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே?

சேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே! கௌரவமான பாத்திரமாகவே நடிக்கிறார்.

சந்தர்: நாகேசுவர ராவ்?

சேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.

சந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி?

சேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம்! மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு!

தொடர்புடைய பதிவுகள்
கல்யாணப் பரிசு – என் விமர்சனம்
ஸ்ரீதர் பக்கம்

வெண்ணிற ஆடை


விகடனுக்கு நன்றி!

சினிமா விமர்சனம்: வெண்ணிற ஆடை (9-5-1965)

மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதை அறிந்து, தனது காதலைத் துறந்து, வெண்ணிற ஆடை அணிகிறாள் அந்தப் பெண்.
கதை: ஸ்ரீதர்.

சந்தர்-சேகர்
சந்தர்: இவ்வளவு சின்னக் கதையை வைத்துக் கொண்டு படம் எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும் சேகர்.
சேகர்: கண்டிப்பாக! இன்டர்வெல் வரை யிலும் ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.
சந்தர்: ஜெயலலிதாவின் நடிப்பு ஏ.ஒன்!
சேகர்: யூ ஆர் ரைட்! ஆனால், அந்த அளவு நடிப்பை காந்த்திடமிருந்தோ, நிர்மலாவிட மிருந்தோ எதிர்பார்க்க முடியவில்லை. இருவருமே சுமார்தான்!
சந்தர்: பாட்டுக்கள் எப்படி?
சேகர்: ‘நீ என்பதென்ன…’ என்ற பாட்டும், ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல…’ என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி, வேறு எந்த டியூனும் வெளியில் வந்த பிறகு ‘ஹம்’ பண்ணும்படியாக இல்லை.
சந்தர்: இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்ணுக்குக் குளுமையா ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, இல்லையா?
சேகர்: ஆமாம். ஆனால், கதைதான் சில இடங்களிலே இயற்கையா இல்லாம இருக்கு. அதிலும் கடைசியிலே, ஷோபா வெண்ணிற ஆடை உடுத்திக்கொண்டு வந்து, ‘இதுதான் என் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்’ என்பது போல் பேசியது சரியாகப் படவில்லை.
சந்தர்: நீ சொல்வது சரிதான்! ஒரு சஸ்பென்ஸூக்காகச் செய்திருக்கிறார்கள். எனக்கு அது சஸ்பென்ஸாகவே இல்லை!
சேகர்: ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ்ப் படங்களில் ஒரு புது முயற்சி வெண்ணிற ஆடை. அதற்காக அதைப் பாராட்டத்தான் வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ராஜன் விமர்சனம்
வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்

இயக்குனர் ஸ்ரீதரின் நினைவுகள் – அவரே எழுதியது


ஸ்ரீதர் தன்னுடைய நினைவுகளை கல்கியில் தொடராக எழுதி இருக்கிறாராமே! அதிலிருந்து சில பகுதிகளை பரத் என்ற பதிவர் இங்கே எடுத்து எழுதி இருக்கிறார்.

இதை படித்த பிறகு சில ஆச்சரியங்கள்.

காதலிக்க நேரமில்லை ஆபாசம் என்று கருதப்பட்டதா? யோசித்து யோசித்து பார்க்கிறேன் – ஸ்லீவ்லெஸ் சுடிதார் ஆபாசம் என்றால் அந்த காலத்து மக்கள் ரொம்பத்தான் காய்ந்து கிடந்திருக்கிறார்கள். அந்த காலத்து மாணவரும் இந்த காலத்து இளைஞரும் ஆன டோண்டு போன்றவர்கள் கருத்து சொல்லலாம்.

யாருக்காக அழுதான் ஜெயகாந்தன் இயக்கிய படம் என்று நினைத்தேன். ஸ்ரீதருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

எம்ஜிஆர் அன்று சிந்திய ரத்தம் (பின்னாளில் சிவந்த மண் என்று வந்தது) ப்ராஜெக்டை டிராப் செய்ததற்கான காரணம் புன்முறுவலை வரவழைத்தது. அவர் ஒரு prima donna!

இறக்கி வைக்கப்பட்ட ஸ்ரீதர்


ஸ்ரீதரை பற்றி எழுத எனக்கு இனி எதுவும் மிச்சமில்லை. எப்போதாவது சுமைதாங்கி பார்த்தால் அதை பற்றி எழுதுகிறேன்.

ஸ்ரீதர்


ஸ்ரீதரை பற்றி அவர் மறைந்த போது எழுத ஆரம்பித்த மதிப்பீடு. எழுதியதை வீணடிக்க மனதில்லாமல் பதிப்பிக்கிறேன். மணிவண்ணன் மன்னிப்பாராக!

தமிழின் முதல் ஸ்டார் இயக்குனர் ஸ்ரீதர் நேற்று((இந்த போஸ்டை எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டன) மறைந்தார். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னை தொடு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

முதலில் ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்லி விடுகிறேன். இறந்தவரை பற்றி எதுவும் குறையாக சொல்லக்கூடாது என்று நமக்குள் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. இது மிகவும் போலித்தனமானது. நான் அவருக்கு eulogy எதுவும் எழுதவில்லை. எனது உண்மையான மதிப்பீடை எழுத இருக்கிறேன். அவருக்கு செய்யும் மரியாதை அதுதான் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் அவருடைய தாக்கம் பெரியது அல்ல. அவர் சில க்ளிஷேகளை உடைத்தார், ஆனால் இன்னும் சில க்ளிஷேகளை (முக்கோணக் காதல்) உருவாக்கினார். அவருடைய காலத்துக்கு (அறுபதுகளின் ஆரம்பம்) அவர் ஒரு புரட்சியாளர்தான். ஆனால் அவருடைய புரட்சி மேலோட்டமானது. அதனால் அது நீண்ட நாள் புரட்சியாக நீடிக்கவில்லை.அவரது கவனம் புதுமையான திரைக்கதை, காரக்டர்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு ஒரே செட், காமெரா, ஈஸ்ட்மன் கலர், மேக்கப் இல்லாத நடிகர்கள், யாரும் காட்டாத காஷ்மீர், முதல் முறையாக வெளி நாடுகளில் படப்பிடிப்பு போன்ற புதுமைகளில் திசை திரும்பியது துரதிர்ஷ்டம்.  சில டெக்னிகல் விஷயங்களில் (காமெரா, பாட்டுகள்) ஆகியவற்றில் அபாரத் திறமை காட்டினார். பழைய பாட்டு பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு ஸ்ரீதர் ஒரு மஹானுபாவர். அவருடைய படங்களில் பாட்டுகள் சோடை போவதில்லை. ஏ.எம். ராஜா, எம்எஸ்வி இவர்களுடன் சேர்ந்து இவர் தன் படங்களுக்கு போட்ட பாடல்கள் எல்லாம் மாணிக்கங்கள்.

அவருக்கு ஒரு வலுவான சீடர் குழு உருவாகவில்லை. அவருடைய சீடர்களான சி.வி.ராஜேந்திரன், மாதவன் போன்றவர்கள் சிவாஜி படங்கள், செண்டிமெண்ட் படங்கள் எடுத்து காலத்தை ஓட்டினார்கள். சந்தான பாரதி, உத்தரவின்றி உள்ளே வா இயக்கிய சக்கரவர்த்தி போன்றவர்களும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள்தான். அவருக்கு பிரமாதமாக அமைந்த குழு வின்சென்ட், எம்எஸ்வி, ஏ.எம்.ராஜா, கண்ணதாசன், சித்ராலயா கோபு இவர்கள்தான்.

ஸ்ரீதரின் பலம் அவர் சாதாரண மனிதர்களின் வாழ்வை படமாக்க முயன்றதுதான். அதில் அவர் அபூர்வமாகவே கலை ரீதியாக வெற்றி பெற்றார். அவரது கால கட்டத்தின் மெலோட்ராமாவை முழுவதுமாக விட முடியவில்லை. பிறகு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டார் – குறிப்பாக கலைக் கோவிலின் தோல்விக்கு பிறகு அவர் முக்கால்வாசி கமர்ஷியல் படங்களைத்தான் எடுத்தார். அவரது பொற்காலம் மிக குறுகியது – கல்யாணப் பரிசில் ஆரம்பித்து காதலிக்க நேரமில்லையில் முடிந்துவிட்டது. கலைக் கோவிலுக்கு பிறகும் அவர் தன் “புதுமை” திரைக்கதைகளை படமாக்கினாலும் அவை அவரது முழு கவனத்தையும் எடுக்கவில்லை. கல்யாணப் பரிசு, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள், கலைக் கோவில், வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை, அவளுக்கென்று ஒரு மனம் – இவ்வளவுதான் அவரது (கொஞ்சம்) வியாபாரத்தை தாண்டிய முயற்சிகள். தேனிலவு, காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், ஊட்டி வரை உறவு இவை என்டர்டெயினர்கள்.

அவரது படங்களில் கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவற்றை தமிழ் பட வரலாற்றின் மைல் கல்கள் என்று சொல்லலாம். கல்யாணப் பரிசு முதல் முறை சாதரண மனிதர்களை திரைக்கு கொண்டு வந்தது; முக்கோணக் காதல் என்ற க்ளிஷேவையும் அறிமுகப் படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம் டென்ஷன் குறையாமல் ஒரு கான்ஃப்ளிக்டை படம் முழுக்க காட்டிய திரைக் கதை. அந்த நாள் போன்ற முன்னோடிகள் இருந்தாலும் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. காதலிக்க நேரமில்லை தமிழின் முதல் யூத் படம். நல்ல பொழுதுபோக்கு படமும் கூட. நெஞ்சம் மறப்பதில்லை சினிமாவை விஷுவலாக காட்டும் அபூர்வமான தமிழ் படங்களில் ஒன்று. இவை தவிர சுமைதாங்கியும் நல்ல படம் என்று சிலர் சொல்கிறார்கள். நான் பார்த்ததில்லை.  இவற்றில் எந்த படமும் உலகத் தரம் வாய்ந்த சினிமா என்று சொல்ல முடியாது. இந்திய திரைப்படங்களில் முதல் நூறு திரைப்படம் என்று மதிப்பிட்டால் அதில் இடம் பெற சாத்தியம் இருக்கிறது.

ஸ்ரீதர் இருபது வயதிலேயே திரை உலகத்துக்கு வந்தவர். அவர் எழுதிய ஒரு நாடகம் (ரத்த பாசம்) டி.கே.எஸ். சகோதரர்களால் நடிக்கப்பட்டது. இதுதான் பின்னால் ஹிந்தியில் பாய்-பாய் என்று எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பிறகு எதிர்பாராதது படத்துக்கு கதை-வசனம் எழுதியதாய் நினைவு. அமர தீபம், புனர்ஜென்மம், உத்தம புத்திரனுக்கும் திரைக்கதை வசனம் எழுதினார்.

அவருக்கு கல்யாணப் பரிசு turning point. ஏ.எம். ராஜா, பட்டுக்கோட்டை, தங்கவேலு, சரோஜா தேவி எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டையே கலக்கினார்கள். பதினாறு வயதினிலே 77இல் ஏற்படுத்திய தாக்கத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த படம் ஏற்படுத்திய தாக்கம். இப்போது பார்த்தால் புரிந்து கொள்வது கஷ்டம் – ஆனால் நம் பக்கத்து வீட்டு மனிதர்களை திரையில் கொண்டு வந்தது இந்த படம். பராசக்தியின் குணசேகரன், நாடோடி மன்னன் எல்லாருமே கதைகளில் காணப்படுபவர்கள். நாம் பார்ப்பது சினிமா என்று நமக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் வந்தது உண்மையான சதையும் ரத்தமும் உள்ள சாதாரண மனிதர்கள். அவர்களும் அவ்வப்போது சினிமாத்தனமாக நடந்து கொள்வார்கள்தான், ஆனால் அவர்களில் நம்மை காண முடியும். சமீபத்தில் சன் டிவியின் இதை பார்த்த போது என்னை மிகவும் கவர்ந்த இடம் சரோஜா தேவி தன் காதல் தோல்வியை பற்றி பேசும் இடம்தான் – “நான் எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் போகிறேன், இப்படியே இருந்துவிட மாட்டேன்” என்று சொல்வார். நம் தமிழ் பட நாயகிகள் இதற்கு முன்னால் எந்த படத்திலும் இப்படி சொல்லி இருக்கமாட்டார்கள். ஏன், இதற்கு பிறகு கூட இப்படி சொல்வதற்கு ஒரு முப்பது வருஷம் ஆகி இருக்கலாம். (எனக்கு தெரிந்து இதற்கு முன் சாதாரண மனிதர்களை சித்தரிக்க முயன்ற ஒரே படம் கூண்டுக்கிளிதான் – முயற்சி என் கண்களில் தோல்வி)

அவரது எல்லா படங்களையும் நான் பார்த்ததில்லை. பார்த்தவற்றை பற்றி சுருக்கமான குறிப்புகள் கீழே.

மீண்ட சொர்க்கம் – கலை, கலை என்று நம்மை கொலை செய்யும் படம். உப்பு சப்பில்லாத படம். எதற்காக ஜெமினி பத்மினியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை? பார்ப்பவர்களை அவர்களது நிறைவேறாத ஆசையை காட்டி வதைப்பதற்காகத்தான்!

நெஞ்சில் ஓர் ஆலயம் – நல்ல முடிச்சு. நல்ல திரைக்கதை. நல்ல நடிப்பு. தேவிகா கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் முத்துராமன் மிக சிறப்பாக நடித்திருந்தார். கல்யாண் குமாரை விட கொஞ்சம் ஒல்லியான நடிகராக போட்டிருக்கலாம். ஆனால் இதெல்லாம் nitpicking. சுஜாதா சொன்னது போல் உலகத்தரம் வாய்ந்த படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல தமிழ் படம்!

கலைக் கோவில் – கொடுமையான கதை. முத்துராமன் நன்றி மறந்தவராக காட்டவேண்டும் என்பதற்காக குரு சபையை விட்டு வெளியே போனால்தான் வாசிப்பேன் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். நல்லதங்காள் மாதிரி நம்மை உச்சுக்கொட்ட வைப்பதற்கென்றே கதை எழுதினால் உருப்படாமல்தான் போகும்.

வெண்ணிற ஆடை – முதலில் க்ளைமாக்சை எழுதி விட்டு பிறகு கதை எழுதியது போல தோன்றும் ஒரு படம். சுவாரசியம் இல்லாத கதை.

நெஞ்சம் மறப்பதில்லை– ஷாட்களுக்காகவே பார்க்கலாம். அருமையான ஒளிப்பதிவு. படத்தை விஷுவலாக யோசித்திருப்பது தமிழ் படங்களில் அபூர்வமான விஷயம்.

தேனிலவு பாட்டுக்கும் காஷ்மீரை தமிழ் மக்களுக்கு காட்டவும் எடுக்கப்பட்ட படம். கதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அந்த முயற்சியில் வெற்றி பெற்றது.

காதலிக்க நேரமில்லை</a> ஒரு சூப்பர் பொழுதுபோக்கு படம். பாட்டுகளும் சூப்பர். இன்றைக்கும் தைரியமாக பார்க்கலாம்.

சிவந்த மண் ஐரோப்பாவை தமிழ் மக்களுக்கு காட்டவும் பாட்டுகளுக்காகவும் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கவும் எடுக்கப்பட்ட படம். அந்த முயற்சியில் வெற்றிதான்.

ஊட்டி வரை உறவு கொஞ்சம் அமெச்சூர்த்தனமான, ஆனால் அந்த காலத்தில் ரசிக்கப்பட்ட படம். பாட்டுகளும் சூப்பர்.

விடிவெள்ளி ஒரு சிவாஜி “ஃபார்முலா” படம் – ஆனால் சிவாஜி உணர்ச்சி வெள்ளத்தில் துடிக்கும் காட்சிகளை மட்டுமே நம்பி கதை அமைத்தால் அது கலை ரீதியாக வெற்றி அடையப்போவதில்லை. (சிவாஜி தன் தங்கை கல்யாணத்துக்காக ஒரு செயினை திருடி அதை தன் தங்கை கழுத்தில் போடுவார். அந்த லாக்கெட்டில் இருக்கும் படத்தை பார்த்து மைத்துனர் தங்கை மீது சந்தேகப்படுவார். சிவாஜி திருடிவிட்டோமே என்றும் தங்கை வாழ்வு பாழாகிவிட்டதே என்றும் துடிக்க, எல்லாம் சுபமாக முடியும்).

அவளுக்கென்று ஒரு மனம் ஒரு தண்டம். பெண்ணின் subtle மனதை காட்டுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொதப்பினார்.

வைர நெஞ்சத்தில் சில அதிசயங்கள் உண்டு – ஒல்லியான, அழகான சிவாஜி. அறுபதுகளுக்கேற்ற மர்மப் படம். ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் நன்றாக ஓடி இருக்கும்.

உரிமைக் குரல், மீனவ நண்பன் எல்லாம் அவர் இயக்கிய படம் என்பதை விட தயாரித்த படம் என்றுதான் சொல்ல வேண்டும். அவை (மோசமான) எம்ஜிஆர் படங்கள்.

அவர் சகாப்தம் முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற அவரது ஸ்டைல் வெற்றிப் படங்களை எடுத்தார். அவரது பல படங்களில் பார்த்த காரக்டர்கள் மீண்டும் இவற்றில் வருவார்கள். ஆனால் அவை அன்றைய யூத் படங்கள். அன்றைய யூத்துக்கு அவை பிடித்துத்தான் இருந்தன.

தென்றலே என்னைத் தொடு நான் காலேஜில் படித்த போது வந்த மற்றொரு யூத் படம். எங்களுக்கு பிடித்திருந்தது. பாட்டுக்காகவே பார்த்தோம்.

யாரோ எழுதிய கவிதை வேஸ்ட். ஆனால் ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் ஓடி இருக்கலாம்.

ஸ்ரீதர் படித்த பள்ளியில்தான் நானும் இரண்டு வருஷம் படித்தேன் – செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளி. (பிரபல நடிகர் நாசரும் இந்த பள்ளியில் படித்தவர்தான்). நாங்கள் படிக்கும்போது எங்கள் பள்ளியின் மிக புகழ் பெற்ற பழைய மாணவர் அவர்தான்.

அவர் ஹிந்தி படங்களை தயாரிக்காமல் இருந்திருந்தால் பணக் கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அகலக் கால் வைத்து விட்டார். எம்ஜிஆர் உதவியால் சமாளித்துக் கொண்டார்.

மொத்தத்தில் அவர் மேலோட்டமான புதுமைகள் செய்த ஒரு இயக்குனர். அவரால் அவரது கால கட்டத்தின் எழுதப்படாத விதிமுறைகளை மீற முடியவில்லை. ஆனால் அவர் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இயக்குனர். அவரது பட பாட்டுகளும், சில திரைப்படங்களும் நீண்ட நாள் வாழும்.

ஸ்ரீதர் – முடிவற்ற முக்கோணக் காதல்


ஸ்ரீதர் பற்றி “மங்கையர் மலர்” பத்திரிகையிலிருந்து: (நன்றி, மணிவண்ணன்!)

இந்த ஆண்டு (2008) அக்டோபர் 20ஆம் தேதி காலமான ஸ்ரீதர் பலவிதங்களில் கே. பாலச்சந்தரின் திரைப்பட வரலாற்றை நினைவுபடுத்துகிறார். இருவரும் அரசு “வெள்ளைக் காலர்’ ஊழியர்கள். நாடகம் எழுதி, அது இன்னொருவரால் திரைப்படமாக்கப்பட்டதில் திரைப்படப் பிரவேசம் சாத்தியமாகிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் புகழ்பெற்றார்கள். வசனம் எழுதுவதுதான் இருவருக்கும் முதற்படி.

வசைபாடுதல், அடுக்குமொழி ஒருபுறமிருக்க அந்த இயக்கத்துக்கு இணை கோடுகளாக இருவரும் செயலாற்றினார்கள். இருவரில் பாலச்சந்தர் அடுக்குமொழியில்லாவிட்டாலும் “ஃபைல், லைஃப்’, “பெண் கர்வமாயிருக்கலாம், கர்ப்பமாக இருக்கக் கூடாது’ போன்ற சொல் விளையாட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுகூட இல்லாமல் ஸ்ரீதர் பெயர் பதித்தார். ஸ்ரீதர் கதாநாயகியைப் புடவை கட்டியவளாகக் காட்டினால், பாலச்சந்தர் அவள் புடவை கட்டுவதைக் காட்டினார்.

ஸ்ரீதரின் தொடக்கம் நாடகத்தில் இருந்தாலும், அவர் வெகு சீக்கிரமே திரைப்படம் நாடகமல்ல என்று கண்டுகொண்டுவிட்டார். அவருடைய திரையுலக ஆரம்ப நாட்களில் அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் தேர்ந்த இயக்குநர்களால் கையாளப்பட்டன. இதில் “அமர தீபம்’, “உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய டி. பிரகாஷ்ராவ் இந்தியாவின் மிக உன்னத இயக்குநர்களில் ஒருவர். அவர் இந்தியாவுக்கேயுரிய திரைப்படமொழியின் சாத்தியங்களை மிகத் திறம்படப் பயன்படுத்தினார். “மெயின்ஸ்ட்ரீம்’ திரைப்படம் என்று விமர்சகர்கள் இளப்பமாகக் கருதினாலும் இப்படங்கள் கோடானு கோடி மக்களைப் பங்கு பெற வைத்தன. இந்தியத் திரைப்படமொழியில் பாடல்களுக்குத் தனியிடம் உண்டு. இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் கதையை எடுத்துச் செல்லும் முக்கிய வாகனங்கள். ஒரு பாத்திரத்தின் தன்மையை விளக்கி அதன் மனப்போக்கையும் உணர்த்தக்கூடியவை. திரைக்கதையில் ஆண்டுகள் பல கடந்திருப்பதைக் காட்டும் உத்தி.

ஸ்ரீதர் பாடல்களைச் சூழ்நிலையின் இறுக்கம் அல்லது முரண்பாட்டைக் காட்டப் பயன்படுத்தினார். முக்கோணக் காதல் கதைகளுக்காகவே பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டனவே? என்றுகூடத் தோன்றும். ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதைகள் கடைசிவரை அலுத்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயத்தில், கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வந்தன. ஒன்று, ருத்ரையா எடுத்த “அவள் அப்படித்தான்’. ஸ்ரீதருடையது “இளமை ஊஞ்சலாடுகிறது’ முன்னது கறுப்பு-வெள்ளைப் படம். இரண்டாவது வண்ணம். ஆனால் ஸ்ரீதரின் மகத்தான படங்கள் என்று கருதப்படுபவை பெரும்பான்மை கறுப்பு வெள்ளைப் படங்கள். இதில் “நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதலிடம் வகிக்கும். இரண்டாவது “கல்யாண பரிசு’. (எட்டு எழுத்துகளைத் தவிர்க்கத் தலைப்பை இப்படிப் பிழையுடன் ஸ்ரீதர் அமைத்தார் என்பார்கள்) மூன்றாவது “நெஞ்சிருக்கும் வரை’.

“நெஞ்சில் ஓர் ஆலயம்’ 1962இல் வெளியான முதல் வாரம், அது தொடர்ந்து ஓடாது என்றுதான் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதர் படங்களில் அதுதான் மிகப் பெரிய வெற்றியாக விளங்கியது. அதற்கு முன் (ஸ்ரீதர் சம்பந்தமில்லாத) “மலைக்கள்ளன்’ என்ற படம்தான் எந்த மொழியில் எடுத்தாலும் வெற்றிகரமாக ஓடியது. “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெற்றி கண்டது. காதல் முக்கோணம் என்பதைத் தவிர அதிலுள்ள பல செய்திகள் கேள்விக்குரியவை. அபத்தம் என்று கூடக் கூறலாம். தீவிர சிகிச்சைக்காக ஒரு நே?யாளியை அழைத்துவருபவர்கள் மருத்துவர் பற்றியும் மருத்துவமனை பற்றியும் நன்கு விசாரிக்காமல் வருவார்களா? அதை விடப் பெரிய புதிர், அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்த அந்த மருத்துவர் உயிரை விடுவார்! அதுதான் “நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்தப் படம் இந்தியிலும் மாபெரும் வெற்றியடைந்தது!

ஸ்ரீதருடைய முப்பதாண்டுத் திரைப்பட வாழ்க்கையில் எல்லாமே வெற்றி என்று கூறிவிட முடியாது. “சுமைதாங்கி,’ “கலைக்கோயில், “சிவந்த மண்’ போன்ற படங்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. “போலீஸ்காரன் மகள்’ படத்தை அவர் மிகுந்த ஆர்வத்தோடு தயாரித்தார். பி.எஸ். ராமையா என்ற “மணிக்கொடி’ எழுத்தாளர் எழுதிய அந்த நாடகத்தை சகஸ்ரராமம் நாடகமாகப் போட்டபோது நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பொதுமக்கள் ஆதரவு என்று பார்க்கும்போது பெரிய வெற்றியல்ல. ஸ்ரீதர் எடுத்த திரைப்படத்துக்கும் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆனால் படம் ஓடவில்லை.

ஒன்று கூற வேண்டும். ஸ்ரீதர் எதை முயன்றாலும் அதை முழு மனத்தோடும் சிரத்தையோடும் செய்தார். அவருடைய எந்தவொரு திரைப்படத்திலும் தயாரிப்பாளர் – இயக்குநர் கவனம் போதாமை என்றிருக்காது. சுமார் பத்தாண்டுகள் வெளிவந்த சினிமாப் பத்திரிகையான “சித்திராலயா’ அவரால் அக்கறையோடு நடத்தப்பட்டது. ஸ்ரீதர் பரந்த கல்வியறிவுடைய இளந்தொழிலாளிகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஊக்குவித்தார். அவருடைய திரைப்படங்களில் சமூகச் சீர்திருத்தம், முன்னேற்றம் போன்றவை அழுத்தம் பெறாத போதிலும் பொதுவான நட்பும் மரியாதையும் பண்பும் இருக்கும். அவருடைய ஆரம்பப் படங்களில் தீய பாத்திரமே இருக்காது.

பாரதிராஜாவின் தயாரிப்புகளில் அவருடன் பாக்கியராஜ் இருந்தவரை நகைச்சுவை ஒரு முக்கிய இழையாக இருந்தது. ஸ்ரீதருக்குக் கோபு என்பவரின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் ஸ்ரீதருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறது. படக்காட்சிகளையும் நடிகர்களையும் குறைந்தபட்ச கண்ணியம் தவறாது பார்வையாளர்களுக்கு அளித்தார். பெரிய நட்சத்திரங்களை அமர்த்திப் படமெடுக்க நேர்ந்தபோது இது சிறிது தவறியிருக்கக்கூடும். அவருக்கே கட்டுப் பாட்டின் மீதும், கண்ணியமான நடத்தைமீதும் உறுதியான நம்பிக்கை இருந்திருக்கிறது. அவர் சம்பிரதாய மதிப்பீடுகளைச் சார்ந்திருந்தாலும், இன்றைய மெயின்ஸ்ட்ரீம் தமிழ்ப் படங்களைப் போலப் பெண்களை இழிவுபடுத்திக்காட்டியதில்ல. கிட்டத்தட்ட ஆடையேயில்லாமல் அசாத்தியமான இடுப்பு, மார்பு அசைவுகளைப் பெண்களே தயக்கமின்றிக் காட்டுவதுபோலவும் எடுத்ததற்கெல்லாம் ஆண்கள் அரிவாளைத் தூக்குவதாகவும் ஸ்ரீதர் காட்டியதில்லை.

நாம் எல்லோருமே ஒரு காலத்தில் கற்கால மனித வாழ்க்கை நடத்தியிருக்கிறோம். அந்தக் கற்கால வாழ்க்கைத் தன்மைகளை இன்றைய மனிதனிடம் காட்டுவதோடு அவற்றில் அவன் பெருமை கொள்வதாகவும் காட்டுவது பெருமைக்குரியதல்ல. ஸ்ரீதர் காலத்திலும் பெரிய அரசியல் மாற்றங்களும் நெருக்கடிகளும் நேர்ந்திருக்கின்றன. அவர் சமூகத்திலிருந்து விலகியில்லாமல் அதே நேரத்தில் முழக்கமிடுவதிலும் அரசியல் தலைவர்களை முகத்துதி பாடுவதிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கான துறையாகிய திரைப் படத்தை, அச்சாதனத்தை விளக்கவும் விரிவுபடுத்தவும் ஒரு மாதமிருமுறைப் பத்திரிகையைத் தமிழில் சுமார் பத்தாண்டுகள் நடத்தியிருக்கிறார். முகத்துதியில் ஈடுபடாமல், முன்னோடிகளையும் சக திரைப்படக் கலைஞர்களையும் போற்றியிருக்கிறார்.

ஸ்ரீதர் மகத்தான திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார் எனக் கருத முடியாது. ஆனால் திரைப்படத் துறையிலும் ஒருவர் ஜனரஞ்சகமாக இருந்துகொண்டே கண்ணியத்தையும் கடைபிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று தயக்கமின்றிக் கூற முடியும்.