ஜிகிர்தண்டா


நண்பர் ராஜன் ஜிகிர்தண்டா திரைப்படத்தை விமர்சிக்கிறார்.

சினிமா சிபாரிசுகள் சில – ஜிகிர்தண்டா
———————————————————

jigirthandaதமிழ் சினிமா 60 ஆண்டுகளாக படங்கள் எடுத்தாலும் கூட இன்னும் தமிழ் சினிமா முதிர்ச்சி அடையவில்லை உருப்படியாக ஒரு ஐந்து படங்கள் கூட தமிழில் தேறாது என்பது என் தீர்மானமான முடிவு. மலையாளப் படங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாக்களை நான் மிகவும் கேவலமானதாகவும் மட்டமானதாகவும் தரமற்றதாகவும் நுட்பம் கலையுணர்வு இல்லாதவைகளாகவுமே எப்பொழுதுமே கருதுவேன். இப்பொழுதும் தமிழ் சினிமாக்கள் மீதான என் அபிப்ராயம் மாறி விடவில்லை.

கலாபூர்வமாக தமிழ் சினிமாக்கள் முன்னேறாவிட்டாலும் கூட டெக்னாலஜியிலும் நவீன படங்களுக்கு இணையாக சினிமாக்கள் எடுப்பதிலும் முன்னேறியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் கொரிய சினிமாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகின்றன. கொரியன் மற்றும் ஹாங்காங் சினிமாக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்தப் படங்கள் தொழில் நுட்பத்திலும் நேர்த்தியான கச்சிதமான கதைகள் மூலமாகவும் கொடூரமான வன்முறைகள் மூலமாகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். பல கொரிய சினிமாக்கள் ஹாலிவுட் சினிமாக்களாக ரீமேக் செய்யப் பட்டு ஆஸ்கார் அவார்ட் வரையிலும் போயுள்ளன. இண்ட்டர்னல் அஃபயர்ஸ், ஓல்டு பாய் போன்ற கொரியன் சினிமாக்கள் ஹாலிவுட் படங்களாக மீண்டும் எடுக்கப் பட்டன. இருந்தாலும் கொரியன் படங்களின் நேர்த்தியை அவை அடையவில்லை.

ஹாலிவுட் சினிமாவில் டொராண்ட்டினோ, கோயான் பிரதர்ஸ் போன்றோர் தங்களுக்கு என்று ஒரு வித பாணி வைத்து ஸ்டைலிஷ் சினிமாவை பல காலமாக எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா மலையாள சினிமாவின் ஒரு பத்மராஜனின், ஒரு ஜெயராஜின், ஒரு ஹரிஹரனின், ஒரு அரவிந்தனின் இடத்தை என்றுமே பிடிக்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா இன்று கொரியன் சினிமாக்களின் டொராண்ட்டினோ வகை அபத்தப் படங்களின் எல்லையை எட்டியுள்ளது. அந்த வகையில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும், ஜிகிர்தண்டா போன்ற படங்கள் அடைந்து விட்டன. அந்த வகை வளர்ச்சியின் ஒரு தாண்டுதலாக இந்த ஜிகிர் தண்டா அமைந்துள்ளது.

நான் அபூர்வமாக தியேட்டருக்குச் சென்று பார்த்த தமிழ் படங்களில் ஒன்று இந்த ஜிகிர்தண்டா. அருமையான ஒரு எண்ட்டர்டெயினர். இந்த வகை சினிமாக்களை எடுப்பதில் தமிழ் சினிமாவின் புது இயக்குனர்கள் அபாரமாக இயங்குகிறார்கள். அந்த வகைப் படங்களில் தமிழ் சினிமா வயசுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது

இந்த சினிமா மதுரையின் பயங்கரமான கொலைகார ரவுடிகளை அபத்தப் பார்வை பார்த்து கோமாளிகளாக மாற்றுகிறது. தமிழில் தங்களைத் தாங்களே கேலி செய்து கொண்டு சுயபார்வை பார்த்துக் கொள்வது அரிது. அந்த வகையில் இந்த சினிமா பல கோணங்களில் செல்கிறது. இதில் ரவுடிகளைக் கோமாளிகளாக்கியது போலவே பதிலாக தமிழ் சினிமாவின் பிதாமகர்களாகக் கருதப் படும் கமல் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பாலச்சந்தர் சார், சிம்பு சார் போன்ற அனைத்து சினிமாக்காரர்களையும் கேமாளிகளாக உணர வைத்து ஒரே தாண்டாக தாண்டியிருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் குழுவினர்.

தமிழ் சினிமாவில் ஒரு செம்மீனையோ, ஒரு காழ்ச்சாவையோ, ஒரு ஒழிமுறியையோ ஒரு தூவானத் தும்பிகளையோ ஒரு மூணாம் பக்கத்தையோ ஒரு அரப்பட்ட கட்டிய கிராமத்திலையோ ஒரு உத்தரத்தையோ ஒரு களியாட்டத்தையோ ஒரு தேஷாடனத்தையோ என்றுமே எதிர்பார்த்து விட முடியாது. ஆனால் ஒரு நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேனையோ, ஒரு ஃபார்காவையோ, ஒரு ரிசர்வாயர் டாக்சையோ, ஒரு செக்வஸ்ட்ரவையோ, ஒரு ஓல்ட் பாயையோ ஒரு டிஜாங்கோ அன்செயிண்டையோ ஒரு கில் பில்லையோ இனி எதிர் பார்க்கலாம் என்று இந்த இளம் இயக்குனர்களும் நடிகர்களும் இந்தப் படங்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த ஜிகிர்தண்டா நான் ரசித்த எந்தவொரு கொரியன் சினிமாவுக்கும் எந்தவொரு ஸ்டைலிஷ் வகைப் படங்களுக்கும் குறைந்தது அல்ல. 3 மணி நேர நான் ஸ்டாப் லாஃபிங் ரயாட். அவசியம் காணலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

மண் வாசனை


பாரதிராஜாவின் சிறந்த படங்களில் ஒன்று.

உண்மையை சொல்லப் போனால் சர்வ சாதாரணமான கதை. வழக்கம் போல ஒரு கிராமம், ஒரு இளம் பெண், முறைப்பையன், காதல், கல்யாணத்தில் பிரச்சினை, காத்திருக்கும் பெண், வேறு திருமணம் செய்துகொள்ளும் ஆண், எல்லாரும் இறப்பது என்பது தமிழ்ப் படங்களில் பல முறை அரைத்த மாவு. இதிலும் பெரிய திரைக்கதை நுணுக்கம் எல்லாம் இல்லை. ஆனால் பாத்திரப் படைப்பு அபாரமானது. சாலாக்கு பேசும் கிழவி, முறுக்கும் மாப்பிள்ளை, வீரமாக பேசினாலும் உள்ளே கொஞ்சம் பயம் உள்ள ஹீரோ, சின்னப்பெண், அவளுக்கு ஒரு உயிர்த்தோழி, வீம்பு பிடித்த பக்கத்து ஊர் பிரசிடென்ட், ஊர்ப் பெரிய மனிதர் கே.கே. சவுந்தர் எல்லாருமே நிஜமானவர்கள். அவர்களை குறுக்கும் நெடுக்கும் உலாத்தவிட்டால் கதை தானாக உருவாகிவிடும். அப்படித்தான் ஆகி இருக்கிறது.

ஊசி வெடி பாசி வெடி விருதுநகர் யானை வெடி என்று நீட்டி முழக்கும் காந்திமதிக்கு இதை விட சிறப்பான ரோல் கிடைத்ததில்லை. அவரை உருப்படியாக பயன்படுத்திக்கொண்ட ஒரே இயக்குனர் பாரதிராஜாதான். கிழவிக்கு விக் சரியில்லை என்று இன்று தோன்றுகிறது. மற்றபடி கொஞ்சம் வளைந்த அந்த உருவமும், கண்ணை மேலே தூக்கிப் பார்ப்பதும், நக்கல் பேச்சும் – கலக்கிவிட்டார். வேஷப் பொருத்தம் பிரமாதம். அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.

பாண்டியன் அந்த கொஞ்சம் விருதாத்தனமான ரோலுக்கு கச்சிதமாக இருக்கிறார். அதுவும் அவர் தனக்கு செய்தி சொல்லி அனுப்பவில்லையா, இரண்டில் ஒன்று பார்க்கிறேன் என்று உதார் விட்டுக்கொண்டு ரேவதி வீட்டுக்கு முன்னால் அரிவாளுக்கு சாணை தீட்டும் இடத்தில் திரைக்கதை ஆசிரியர் மிளிர்கிறார்.

ரேவதிக்கு வேஷம் கொஞ்சம் பொருந்தவில்லை. என்னதான் அவர் innocent ஆக பார்த்தாலும் நகரப் பெண் என்பது தெரிகிறது. ஆனால் நன்றாக வருவார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அவரும் அவர் தோழியும் பிரியும் இடத்தில் இருவருமே நன்றாக நடித்திருப்பார்கள்.

அடக்க முடியாத காளை என்று முறுக்கித் திரியும் விஜயனும் பிரமாதப்படுத்திவிட்டார். அவருக்கும் வேஷம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்று முறைக்காக கூப்பிட வரும் இடத்தில் அவர் நடிப்பு குறிப்பிட வேண்டியது. அதே போல தோற்றுப் போன காளையைப் பார்த்துக் கொண்டே குத்த வைத்து உட்கார்ந்திருக்கும் இடத்தில் இயக்குனர் டச் தெரிகிறது.

ஊர்ப் பெரிய மனிதர் சவுந்தர், பக்கத்து ஊர் பெரிய மனிதர் வினு சக்ரவர்த்தி இருவரும் கொடுத்த ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். அதுவும் வினுவின் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு இறுக்கம் தான் முதலில் அடையும் “தோல்வி”, பிறகு தனக்கு கிடைத்த ஒரு “சான்ஸ்” இரண்டையும் நன்றாக வெளிப்படுத்துகிறது.

தேவை இல்லாத காரக்டர் நிழல்கள் ரவி. வெட்டியாக உருகுவதைக் கண்டால் கடுப்புதான் வருகிறது. அதே போல ஒய். விஜயா, சூரியகாந்த் இருவரும் வெட்டி. கவர்ச்சி காட்ட விஜயா என்றால் அவர் காட்டினால்தானே? 🙂

திரைக்கதை சுமார்தான். அதுவும் பாண்டியன் ஊரை விட்டு ஓடிப் போன பிறகு கதையை எப்படி நகர்த்துவது என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அனாவசியமாக இன்னொரு பெண்ணைக் கொண்டு வந்து பொறுமையை சோதிக்கிறார்.

இளையராஜாவும் ஃபுல் ஃபார்மில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரிசி குத்தும் அக்கா மகளே, ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில், பொத்தி வச்ச மல்லிக மொட்டு எல்லாம் அப்போது பிரபலமாக இருந்தாலும் சுமாரான பாட்டுகளே.

1983-இல் வந்த படம்.

நடிப்புக்காகவும், பாத்திரப் படிப்புக்காகவும், ஒரு கிராமத்து மனிதர்களை, ஒரு காலகட்டத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவதற்காகவும் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

மூச்சு வாங்குகிற நேரம்


ஓடி கொண்டேயிருக்கிறோம். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது (அதென்ன மேல்-கீழ் மூச்சு என்று கேட்காதீர்கள்) கொஞ்சம் நிற்பதில்லையா? அது போல் தான் தவிர, நாங்கள் சோர்ந்துவிடவில்லை, தளர்ந்து விடவில்லை. குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்கு கோச்சாக இருப்பது எல்லாம் எங்கள் தலையில் வந்து விழுகிறது.  ஸ்கூல், காலேஜ் காலங்களில் எல்லாம் படிக்காமல் ஓப்பி அடித்தாகிவிட்டது. இப்பொழுது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டுமானால் நாமும் கொஞ்சம் படிக்க வேண்டியிருக்கிறது. (படிக்காமல் விடமாட்டர்கள் போலிருக்கிறது.)

இந்த மாதிரி கால கட்டங்களில் சாரதா, ஈஷ்வர் கோபால் போன்றோர்கள் கைகொடுத்தார்கள். சாரதா எங்கே போய்விட்டீர்கள்? சமீபத்தில் கொடிமலர் என்று முத்துராமன், ஏ.வி.எம் ராஜன், விஜயகுமாரி, காஞ்சனா நடித்த திரைப்படம் ஒன்று பார்த்தேன். நல்ல குடுமபப் படம். எழுதுவதற்கு நேரமில்லை. சாரதா, கோபால் உங்கள் ரிவ்யூ இருக்கிறதா?

 

நல்லதந்தியின் ஜெய்ஷங்கர் புராணம்


நல்லதந்தியின் பல மறுமொழிகளை இங்கே படித்திருக்கலாம். அவர் எழுதமாட்டாரா என்று நான் எப்போதும் ஆவலுடன் இருப்பேன். அவர் ஜெய்ஷங்கர் பற்றி எழுதிய ஒரு மறுமொழி மிக சுவாரசியமாக இருக்கிறது, அதையே இங்கே பதிவாக போட்டிருக்கிறேன்.

நல்லதந்தி சேலத்துக்காரர். நானும் பக்சும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள். எங்களுக்கு பொழுதுபோக்கு சினிமாதான். டவுனுக்கு போனால் (பழைய) பஸ் ஸ்டாண்டிலிருந்து சங்கீத் தியேட்டர் வரை உள்ள ஒரு மைல் ஏரியாவில் எழுபது என்பது தியேட்டர் இருக்கும். படம் பார்த்துவிட்டு பெங்களூர் பஸ் கண்டக்டர்களிடம் சண்டை போட்டு, அது பலிக்காவிட்டால் கெஞ்சி காலேஜில் இறங்குவோம். அவர் அப்சரா, உமா, பழனியப்பா, ஓரியண்டல் என்று தியேட்டர் பேரை அள்ளிவிடும்போது நாஸ்டால்ஜியா தாக்குகிறது!

நான் சின்ன வயதில் ரஜினி வருவதற்கு முன்பு ஜெய்யோட விசிறி. எனக்கு இன்னும் சேலத்தில ஓரியண்டல் தியேட்டரில் பொன்வண்டு பார்த்ததும், அத்தையா மாமியா? பார்த்ததும், ஜெயா தியேட்டரில் அக்கரை பச்சை, அப்சராவில் கல்யாணமாம் கல்யாணம் பார்த்ததும் பசுமையா நினைவிருக்கு!.

ஒருமுறை சங்கம் தியேட்டரில் ஜம்பு ரிலீஸ் ஆன முதல் நாள் படம் பார்க்கப் போனபோது (காலைக் காட்சி) (பெண்கள் பக்கம் தரை டிக்கட்) கவுண்டரில் இருந்த ஆள் எங்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். எங்கள் கும்பலுக்கு (நான், என் சித்தி பையன், எனது தாய் மாமன் பையன்கள் 2) அது A படம் அதனால் கொடுக்கவில்லை என்ற விபரம் தெரியவில்லை. A படம் என்றாலே என்ன என்கிற விபரம் எங்களுக்குத் தெரியாது. அந்த டிக்கெட் கவுண்டர் நீண்ட திறந்த நடையாலானது என்பதால் நாங்கள் வெளியே சென்று அவருக்குத் கண்ணுக்குத் தெரியும்படியாகக் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு பெண்கள் யாரும் வராததால் அவர் மனமிரங்கியோ, எதற்கு வந்த டிக்கெட்டை இழக்க வேண்டும் என்று நினைத்தோ எங்களைக் கூப்பிட்டு டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்பினார். ஆண்கள் பக்கம் உள்ளே போகாததற்குக் காரணம் நாங்கள் எங்கள் அம்மாக்களுடன் பிற சினிமாக்களுக்குப் போகும் போது அந்தப் பக்கமே போனோம் என்பதைத் தவிர ஆண்கள் பக்கம் சரியான கூட்டம். உள்ளே போய் படம் பார்க்கும் போதுதான் A படம் என்றால் என்ன என்று தெரிந்தது! .

ஜெய்சங்கருக்கு சேலம் என்றால் ரொம்பப் பிரியம் அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள் கூட்டம் உண்டு. அவர் 70களில் சிறு தயாரிப்பாளர்களின் படத்தில் நடித்து வெள்ளிக் கிழமை ஹீரோ என்று புகழ் பெற்ற காலத்தில் அவரது பெரும்பான்மையான படங்கள் சேலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டூடியோவிலேயே தயாரிக்கப்பட்டன.

ஒருமுறை குமுதம் வார இதழ் மாறு வேடத்தில் நடிகர்கள் இருக்க இரசிகர்கள் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு என்று ஒரு போட்டியை நடத்தியது. வாரவாரம் வெவ்வேறு ஊர்களில் பல நடிகர்கள் மாறு வேடமிட்டு தெருக்களில் அலையும் போது பொதுமக்கள் கண்டு பிடிக்க வேண்டும். ஜெய் வழக்கம் போல சேலத்தையே தேர்வு செய்தார். அதில் அவர் போட்டிருந்தது பிச்சைக்காரன் வேசம்!.

வண்டிக்காரன் மகன் பெருத்த வெற்றியைப் பெற்றவுடன், பிறகு தொடர்ச்சியாக கலைஞர் கைவண்ணத்தில் ஆடு பாம்பே, மாயாண்டி, காலம் வெல்லும் போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்த போது அவருக்கு தி.மு.க. முத்திரை குத்தப்பட்டது. கருணாநிதி ராசி அவரையும் தாக்கியது. அந்தக் குறிப்பிட்ட படங்கள் எதுவும் வெற்றியைப் பெறவில்லை. அந்த நேரத்தில் அவர் நடித்து வெளி வந்த (மேள தாளங்கள் சுமாரான வெற்றி சாந்தியில் வெளிவந்தது) அத்தனைப் படங்களும் காலி. எனவே பிற்காலத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி அழித்த நடிகர்களின் சகாப்தத்தை தொடங்கி வைத்த முதல் நடிகர் என்ற பெருமை மக்கள் கலைஞரை சென்றடைந்தது.(இதுவும் அந்த நேரத்தில் வழங்கப்பட்ட பட்டம்தான்).

ஒரு வருடம் சும்மா இருந்த அவரைக் கண்டு வருந்திய திரையுலகம் (ஜெய் திரைக்கு வந்த நாள் முதல் அவரை விரும்பாதவர்களே திரைஉலகில் இல்லை, என்கின்ற அளவிற்கு அவ்வளவு நல்ல பெயர் எடுத்திருந்தார். பத்திரிக்கைகள் கூட அவருக்கு படம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட ஆதரவு தந்தன. சினிமா நடிகர்களை புகழ்ந்து எழுதாத கல்கண்டு கூட அவரைப் பாராட்டியே எழுதியது) முரட்டுக் காளையில் வில்லனாக திரும்பவும் கொண்டு வந்து அவர் திரை வாழ்க்கையைப் பரபரப்பாக்கியது. அவரது இரசிகர்களுக்கு அவர் வில்லனாக நடிப்பது பிடிக்கவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கூட அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாக நடிப்பது பிடிக்காவிட்டாலும், ஜெய்சங்கருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்லை இருந்தாலும் அவரது நடிப்புத் திறமையால் அதைச் சாமர்த்தியமாக சரி செய்து ஜெயித்துவிட்டார் என்று எழுதின.

நான் முரட்டுக்காளை வெளிவந்த நேரம் தீவீர ரஜினி ரசிகனாக மாறிவிட்டிருந்தேன்.விடியற்காலை ஐந்து மணிக்கு ஓரியண்டல் தியேட்டரில் எங்கள் கும்பல் படம் பார்க்க நின்றது, ரஜினிக்காக மட்டுமல்ல ஜெய்க்காகவும்தான்.

(இந்தப் படம் வரும்போது எனக்கு பதிமூன்று வயது இருக்கும். எவ்வளவு சுதந்திரமாக நான் இருக்க வீட்டில் விட்டிருக்கிறார்கள்.அப்போது ஊரும் கொஞ்சம் நன்றாக இருந்தது. இப்போது இந்த மாதிரி பையன்கள் இருக்க முடியுமா?)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்: நல்லதந்தியின் தளம்

கோல்மால் ரிடர்ன்ஸ் (Golmaal Returns)


2008இல் வெளி வந்த படம். அஜய் தேவ்கன், கரீனா கபூர், துஷார் கபூர், அர்ஷத் வார்சி, ஸ்ரேயாஸ் தல்படே மற்றும் பலர் நடித்தது. யாரி இயக்கியது என்று பார்க்கவில்லை.

சாதாரணமாக இங்கே உள்ள இந்திய மளிகை கடையில் நாற்பது ரூபாய்க்கு மளிகை வாங்கினால் ஓர் டிவிடி இலவசம். அப்படி எடுத்து வந்த டிவிடிதான். பார்க்க வேண்டும் என்று எடுக்கவில்லை. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தோம்.

மூளையை கழற்றி வைத்துவிட்டு பார்க்க வேண்டிய படம். ஆனால் ஜாலியான படம். காலேஜில் நண்பர்களோடு பார்த்தால் குஷி கிளம்பும்! கிரேசி மோகன் நாடகம் போல.

டிவி சீரியல் பைத்தியமான கரீனாவுக்கு கணவன் அஜய் மீது எப்போதும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் அர்ஷத் வார்சிக்கு அஜய் மீது விரோதம். பிறகுதான் அவர் அஜயின் தங்கையை காதலிப்பது தெரியவருகிறது. ஒரு நாள் இரவு அஜய் வேறு ஒரு பெண்ணுடன் தங்கி விட, கரீனாவின் சந்தேகத்தை தீர்க்க ஒரு போலி அந்தோனி கண்சால்வசை உருவாக்குகிறார். அஜயின் கூட வேலை செய்பவர் ஒருவர் கொலை செய்யப்பட, அர்ஷத் வார்சி அஜயை துரத்த, நடுவில் உண்மையாகவே ஒரு அந்தோனி முளைத்து வர, போலி அந்தோனி…. அட போங்கய்யா! கதை எல்லாம் முக்கியமில்லை.

நடுவில் ஒரு முறை அஜய் இறந்துவிட்டதாக எண்ணி கரீனா துஷார், அர்ச்திடம் அடிக்கும் லூட்டி சீன், ஊமையான துஷார் ஒரு முறை அஜயிடம் ஃபோநில் பேசுவது, கடைசியில் க்ளைமாக்ஸ் தூக்கு சீன் எல்லாம் அபாரமானவை.

பாட்டெல்லாம் எனக்கு ஞாபகமில்லை.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் சும்மா சிரிக்க நல்ல படம். பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

ஓய்வு


இத்தனை நாள் நான் கலக்குவதாக் பாராட்டியதால் அதற்கு நன்றியாக இது: RV, கூட்டாஞ்சோறு ப்ளாக்கில் கலக்கிக்கொண்டிருக்கிறான். 🙂 ஜாதியை பற்றி பலர் பல குட்டைகள், ஏரிகள், குளங்கள், கடல்கள் எல்லாம் கலக்கிய பின்னரும் அது அடங்கிய பாடு இல்லை. அடங்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இப்படி கலங்கிய ”நீர் நிலைகளில்” நானும் குதித்து என்னை சகதியாக்குவதை காலவரையின்றி தள்ளிப்போடுகிறேன்.

நான் சொல்ல வந்த விஷயம் வேறு. எனது போஸ்ட்கள் இரண்டு வாரங்களாக கொஞசம் சோர்வடைந்து விட்டது. ஏதாவது ஒன்றின் மேல் பழி போடலாம் என்றால் இது வரை ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் சோம்பல் மேல் பழி போடுகிறேன். (உண்மையான காரணமான நேரமின்மையை யாரும் ஒத்துக்கொள்ள போவதில்லை என்பதால் இப்படி). இன்னும் ஒரு வாரம் ஓய்விற்க்கு பிறகு எழுதுகிறேன்.

MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR.

பாதுகாக்கப்பட்டது: வரதப்பா பதில்கள் வரதப்பா


இந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்: