கமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்


ஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி!

சைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.

ஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.

எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.

லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

பீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.

ட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

பர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

சிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.

க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.

ஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.

மாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

மாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

டிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.

காட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.

கமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே!

கமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொல்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய பதிவுகள்
கமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்

நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்


சூர்யா

சூர்யா

லிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.

Crash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.

Godfather – என்ன ஒரு படம்! அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.

I am Sam – நான் பார்த்ததில்லை.

Terminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.

நாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன? நல்ல படம்.

முள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.

சேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா?

முதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.

ஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.