காற்றினிலே வரும் கீதம் – விகடன் விமர்சனம்


எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.

இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%

படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.

கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். எந்த படத்துக்கும் அறுபது மார்க் கூட போட்டதாக நினைவில்லை. முள்ளும் மலரும் மட்டும்தான் அறுபதை தாண்டியது என்று நினைக்கிறேன்.

விமல் அப்படி வந்த ஒரு விமர்சனத்தை ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார். இவர் இதை எல்லாம் எங்கே பிடிக்கிறாரோ தெரியவில்லை! விகடனுக்கும் விமலுக்கும் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் 78-இலோ என்னவோ வந்தது என்று நினைக்கிறேன். பஞ்சு அருணாசலம் கதை வசனம். எஸ்.பி. முத்துராமன் இயக்கம். இளையராஜா இசை. முத்துராமன் ஹீரோ, கவிதா நாயகி. ராஜு இது கவிதாவின் முதல் படம் என்று தகவல் தருகிறார். படம் ஓடவில்லையோ?

பாட்டெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஹிட் ஆனது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது எந்த பாட்டும் நினைவில்லை. நினைவிருப்பவர்கள் சொல்லலாம். விமல் பாட்டுகளின் லிஸ்டை தந்திருக்கிறார் –

  1. கண்டேன் எங்கும் (வாணி ஜெயராம் பாடியது)
  2. கண்டேன் எங்கும் (எஸ். ஜானகி பாடியது) – இந்த பாட்டை இங்கே டவுன்லோட் செய்யலாம்.
  3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தையரே தையா (ஜெயச்சந்திரன் பாடியது)
  4. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் (ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி பாடியது)

நண்பர் சிமுலேஷன் சித்திரச் செவ்வானம் பாட்டுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். (பாட்டுதான், வீடியோ இல்லை, பாட்டு பூராவும் இளையராஜா ஃபோட்டோ காட்டுகிறார்கள்.) அது சாவித்திரி (அபூர்வ) ராகத்தில் அமைந்த பாட்டாம். வெகு சில சினிமாப் பாட்டுக்களே இந்த ராகத்தில் உள்ளனவாம். என்னென்ன பாட்டுகள் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த சுட்டியைப் பார்க்கவும்.

விமலுக்கு கண்டேன் எங்கும் பாட்டு மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பாட்டின் வரிகளையும் தந்திருக்கிறார்.

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே
வருவாய் அன்பே என்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ
நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாரும் இல்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இது தானே
எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: சாவித்திரி ராக சினிமாப் பாட்டுகள்

திரிசூலம் (Thirisoolam)


1979-இல் வந்த படம். அன்றைய சிவாஜி ரசிகர்களுக்கு நல்ல தெம்பூட்டிய படம். உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரலுக்கு பின்னால் எம்ஜியார் படங்கள் பெரிய வெற்றி அடையவில்லை. சிவாஜியின் பல படங்கள் (தீபம், அண்ணன் ஒரு கோவில், அந்தமான் காதலி, தியாகம், என்னைப் போல் ஒருவன், பைலட் ப்ரேம்னாத்) வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி அடைந்திருந்தன. அவரது நடிப்பும் அண்ணன் ஒரு கோவில், தியாகம் போன்ற பல படங்களில் ரசிக்கப்பட்டது. அவரது நீண்ட நாள் போட்டியாளரான எம்ஜியார் முதல் அமைச்சராகி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் திரிசூலம் அடைந்த மகத்தான வெற்றியும், ஒரு ரோலில் அன்றைய இளம் கதாநாயகர்களான கமல், ரஜினி ஆகியோரொடு போட்டி போடும் அவரது “இளமைத் துள்ளலும்” ஒரு ரோலில் அவரது ட்ரேட் மார்க் நடிப்பும், சிவாஜி ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தின. அவர்தான் ராஜா, கமல் ரஜினி போன்றவர்கள் வெகு தூரத்தில் இருக்கிறர்கள் என்று தோன்றியது.

இன்று யோசித்துப் பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. இந்தப் படத்துடன் சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் நடித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை. அப்படி அபூர்வமாக வெற்றி பெற்ற படங்களில் அவர் வயதானவராகத்தான் நடிதிருந்தார். (கீழ்வானம் சிவக்கும், ரிஷிமூலம், கல் தூண்). அவரது படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. அதற்கு பிறகு அவரது நடிப்பு பரவலாக ரசிக்கப்பட்டது அபூர்வமே. முதல் மரியாதையில் அவர் மிகவும் அடக்கி வாசித்தது நினைவிருக்கலாம். அதையே மிகை நடிப்பு என்று என் நண்பன் பாலமுரளி சொல்லுவான். (இன்னும் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறாயா, பால்ஸ்?) எப்படி மக்களின் ரசனை இவ்வளவு விரைவில் மாறியது என்பது ஒரு பெரிய புதிர்தான்.

77, 78 வாக்கில்தான் நான் மெதுவாக ரஜினி/கமல் ரசிகனாக மாறிக்கொண்டிருந்தேன். குறிப்பாக பைரவி படத்தின் போஸ்டர்களில் ரஜினி ஒரு உள்ளெ சட்டை ஏதும் போடாமல் ஒரு கறுப்பு கோட்டு அனிந்திருந்த கோலத்தை பார்த்தபோது “ஸ்டைலு ஸ்டைலுதான்” என்று தோன்றியது. அதே போல் “என்னடி மீனாட்சி” டான்ஸைப் பார்த்து கமல் ரசிகர்கள் ஆனவர்கள் அனேகம். இதில் சிவாஜியும் அதே ஸ்டைலில் தன்னை சாட்டையால் அடித்துகொள்ளும் காட்சியில் சட்டை ஏதும் இல்லாமல் நீண்ட, திறந்த ஓவர்கோட்டுடன் வருகிறார். கொடுமையடா சாமி!

கன்னடத்தில் ராஜ்குமார் நடித்து பெரிய hit ஆன “சங்கர் குரு” படத்தின் ரீமேக். 3 சிவாஜிக்கள். ஒருவர் பாரம்பரிய சிவாஜி ரசிகர்களுக்காக “சுமதீஈஈ” டயலாக்குடனுடனும், இன்னொருவர் புது ஜெனரேஷனுக்காக நக்கல் வசனங்களுடனும், ஒருவர் சும்மா டம்மியாகவும் வருவார்கள். அன்றைய கவர்ச்சிக் கன்னியான ஸ்ரீப்ரியா முதன்முதலாக சிவாஜிக்கு ஜோடியாக நடித்த படம். வழக்கம் போல கையை பிசையும் நம்பியார், ஆ என்று கத்தும் வி.கே. ராமசாமி, காண்பவர்கள் கண்களை குளமாக்கும் கே.ஆர். விஜயா, புஷ்பலதா, மேஜர், ஜெய்கணேஷ் முதலானோரும் நடித்திருக்கிறர்கள்.எம்.எஸ்.வி.யின் இசையில், கண்ணதாசன் பாடல்களுடன், கே. விஜயன் இயக்கத்தில் வந்த படம்.

பாட்டுக்கள் எல்லாம் சுமார்தான். “மலர் கொடுத்தேன்” பாட்டு சிவாஜியை பல வருஷங்கள் கிண்டல் செய்ய பயன்பட்டது. “காதல் ராணி”, “திருமாலின் திருமார்பில்”, “இரண்டு கைகள்” போன்ற பாட்டுக்களும் உண்டு.

கதை இன்று cliched ஆக தெரிகிறது. 79இல் அப்படி தோன்றவில்லை. தன் மனைவி கே.ஆர். விஜயாவை விட்டு ஓடிவிடும் சிவாஜி காஷ்மீரில் பெரிய எஸ்டேட் அதிபர் ஆகிவிடுவார். தன் மனைவியை தவிக்கவிட்ட குற்றத்துக்காக வருஷத்துக்கு ஒரு முறை திதி கொடுப்பது போல் சாட்டையடி வாங்குவார். கே.ஆர். விஜயாவின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை டாக்டர் புஷ்பலதா மேஜரிடம் கொடுத்துவிடுவார். அந்தக் குழந்தை குறும்புக்கார குருவாக வளரும். இன்னொரு குழந்தை கே.ஆர். விஜயாவிடம் – போலிஸ் அதிகாரி சங்கர். அவர் போலிஸ் அதிகாரி என்பது யாருக்கும் தெரியாது. 25 வருஷம் கழித்து எல்லாரும் காஷ்மீருக்குப் போவார்கள். குரு ஸ்ரீப்ரியாவைக் காதலிக்க போவார். சங்கர் துப்பு துலக்கப் போவார். ஓடிப் போன சிவாஜி கூப்பிட்டதால் கே.ஆர். விஜயாவும் வருவார். வில்லன்களும் அங்கே இருந்தால்தான் அடி வாங்க முடியும் என்று அங்கே போவார்கள். டாக்டர் புஷ்பலதாவும் குருவுக்கு ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் உண்டாக்கவும், எல்லா உண்மைகளையும் சொல்லி சங்கரையும் குருவையும் அம்மாவையும் இணைக்க அங்கே போவார். எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்திருந்தால் நான் என்ன வேண்டாமென்ற சொல்லப் போகிறென்?

எங்கோ கொள்ளை அடித்த நெக்லஸ் சங்கர் கையில் சிக்கி, அதை வில்லன்கள் தேடி அலைந்து இரண்டு சிவாஜிகளும் இணைந்து “இரண்டு கைகள் நான்கானால்” என்று பாட்டெல்லாம் பாடி, வில்லன்களை அடித்து உதைத்து எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்! (எனக்கென்னவோ சுபம் என்று எழுதினால்தான் நிறைவு!)

எல்லாரும் அடிக்கடி காஷ்மீருக்கு போகிறேன் என்பார்கள். ட்ரங்க் கால் கூட ஸ்ரீநகருக்கோ குல்மார்க்குக்கோ புக் செய்ய மாட்டார்கள் – காஷ்மீருக்குத்தான் செய்வார்கள். அந்தக் கால டெலிஃபோன் ஆபரேட்டர்கள் பாடு படுகஷ்டம்!

சிவாஜியும் கே.ஆர். விஜயாவும் நடத்தும் டெலிஃபோன் உரையாடல் புகழ் பெற்றது. இன்னும் கூட அவ்வப்போது அசத்தப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் “சுமதீஈஈஈ” என்ற அலறலை கேட்கலாம். எஸ்.வி. சேகரின் “காட்டுல மழை” நாடகத்தில் இது மிகவும் கிண்டல் செய்யப்பட்டது.

ஆனால் படம் வந்தபோது எல்லாருக்கும் – பள்ளி கல்லூரி மணவர்களுக்கும் – குரு காரக்டர் பிடித்துத்தான் இருந்தது. சும்மா கலக்கிவிட்டார் என்றுதான் நானும் 13 வயதில் நினைத்தேன். The story just hasn’t aged well.

தீவிர சிவாஜி ரசிகர்கள் பார்க்கலாம்.