Indie தமிழ் படங்கள்?


இன்று டாப் டென் தளத்தில் தமிழில் Indie படங்கள் என்று ஒரு போஸ்டை பார்த்தேன். தமிழில் Indie படங்களா என்று ஒரு நிமிஷம் அதிசயப்பட்டேன். சோகம் என்னவென்றால் இதில் நான் அந்த நாளைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. அந்த நாள் ஏவிஎம் தயாரிப்பு – அதை எப்படி Indie படம் என்று சொல்கிறாரோ தெரியவில்லை. லிஸ்ட் சவுகரியத்துக்காக கீழே தரப்பட்டிருக்கிறது. படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

எஸ் பாலச்சந்தர் – அந்த நாள் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. என் விமரிசனம், சாரதாவின் விமர்சனம், படம் வந்தபோது பார்த்த ராஜ்ராஜின் எண்ணங்கள்

கம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ. சிட்டுக்குருவி பாடுது என்ற அருமையான பாட்டு உண்டு.

ஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும் எல்லாவற்றையும் பார்க்க ஆசைதான். யாருக்காக அழுதான் சில சீன்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். பக்ஸ் புரியவில்லை என்று சொல்லி இருந்தான்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி லட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்தது. ராஜாஜியின் கதை. படித்திருக்கிறேன். எனக்கு கதை அவ்வளவு சுவாரசியப்படவில்லை.

ஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

ஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள் கேள்விப்பட்டது கூட இல்லை.

ஜெயபாரதி – குடிசை கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ அவார்ட் கூட வாங்கியது என்று நினைவு.

நிமல் கோஷ் – சூறாவளி கேள்விப்பட்டது கூட இல்லை.

மௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள் நான் படிக்கும் காலத்தில் வந்த படம். அப்போது பார்க்க முடியவில்லை.

கோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று ஒரு இந்திய கனவு கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அனல் காற்று கேள்விப்பட்டது கூட இல்லை.

சந்திரன் – ஹேமாவின் காதலர்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். க்ளப் டான்ஸ் புகழ் அனுராதாதான் ஹீரோயின்.

துரை – ஒரு மனிதன், ஒரு மனைவி கேள்விப்பட்டது கூட இல்லை.

அருண்மொழி – காணிநிலம் கேள்விப்பட்டது கூட இல்லை.

பாபு நந்தன்கோடு – தாகம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் என்று கேள்வி. அவ்வளவுதான் தெரியும்.

Parallel சினிமா என்றால் தண்ணீர் தண்ணீர், பசி, அவள் அப்படித்தான், உணர்ச்சிகள், கமல் சுஜாதா இருவரும் செவிட்டு ஊமைகளாக நடிக்கும் ஒரு படம் (ஹிந்தியில் கோஷிஷ்) – ஆஹா, பேர் ஞாபகம் வந்துவிட்டது! உயர்ந்தவர்கள்! – இதெல்லாம் ஏன் விடப்பட்டது என்று தெரியவில்லை.

நமீதாவும் உலக சினிமாவும்



வேகமாக நமக்கு பின்னால் போய்கொண்டிருக்கிற 2008 ஹாலிடேஸ்ஸில் நானும் RVயும் குடும்பத்துடன் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். திரைப்படம் பார்த்தவாரே பல கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நிகழும். (மனைவிகள் விருப்பத்தை எங்கள் விருப்பமாக்கிக் கொள்வதால் திரைப்பட செலக்‌ஷன் பற்றி அவ்வளவு தர்க்கமோ விவாதமோ எழாது. ஆனால் இப்படி எழுதியாதால் விவாதம் எழலாம்). விவாதங்கள் அதிகமாக இருந்தால் நாங்கள் பார்க்கும் படம் வெறுப்பேற்றியதென்று அர்த்தம். விவாதம் சூடு பிடித்தப் பொழுது திருப்பாச்சி அரிவாளால் சன் டிவியில் எங்களை அறுத்து கொண்டிருந்தார்கள். பல திசைகளில் போய்கொண்டிருந்தோம். அதில் ஒன்று கிட்டதட்ட இந்த தலைப்புதான்.

என்னுடைய கவலையை RVஇடம் சொல்லி வருத்தப்பட்டேன்.

“ஏன் இப்பொழுதெல்லாம் ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா மற்றும் அனுராதா போன்றவர்கள் தமிழ் திரையுலகத்தின் கவர்ச்சி சாம்ராஜ்யத்தை குத்தகைக்கு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்? என்றேன்.

என் சோகத்தை புரிந்துக் கொண்ட RV தன் கவலையை மறைத்தவாறு “கவலைப்படாதே, இப்பொழுதான் கதாநாயகிகள் முதல் எல்லோரும் கவர்ச்சி சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டார்களே! என சமாதானம் செய்தான். அவன் கவலை இதை விட பெரியது என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு “ஜம்புபோன்ற திரைபடங்கள் ஏன் வருவதில்லை என்ற ஒரே சோகம். இருவரும் மனக்கவலையை மறக்க வேறு டாப்பிக்கிற்கு தாவி விட்டோம்.

ஆம். RV சொன்னது சரிதான். மற்றவர்களும் கவர்ச்சியை தாரளமாக வினியோகிக்கிறார்கள். இப்படி எல்லோரும் short term குத்தகைக்கு எடுத்துவிட்ட தமிழ் கவர்ச்சியுலகில் நமீதா மட்டுமே ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்று long term ரகமாகத் தெரிகிறது. இப்போதைக்கு என் கவலையை தீர்த்து வைத்த நமீதாவிற்கு ஜே!

இந்த நமீதா ட்ரெண்டு அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. கால்கட்டத்திற்கு தகுந்தவாறு அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. நான் இங்கே ஒரு பெல் கர்வை (bell curve) பார்க்கிறேன். எம்ஜியார் கதாநாயகனாக தோன்றிய காலத்திலே இதற்க்காக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக துணிவு பெற்றத் தமிழ் திரையுலகம் அண்டை மானிலங்களில் இறக்குமதி செய்தார்கள். பெல் கர்வின் ஏறுமுகம் இங்கே. 80களில் எக்கசக்கமாக இது போன்ற நமீதா டிரெண்ட் இருந்தது. பெல் கர்வின் பீக் இங்கே. பின்னர் நமீதா ட்ரெண்ட் குறைய தொடங்கியது. நமீதா மட்டும் இப்பொழுது இருக்கிறார். இது பெல் கர்வின் இறங்கு முகம். இது கான்சர்வேட்டிவ் தமிழ் நாட்டிலே கான்சர்வேட்டிவ் தமிழ் ரசிகர்களுக்காக கன்சர்வேட்டிவ் தமிழ் தயாரிப்பாளர்களும், கான்சர்வேட்டிவ் தமிழ் டைரக்டர்களும் சேர்ந்து கான்சர்வேட்டிவ் தமிழ் பெண்களேயே இதில் குதிக்கவைத்துவிட்டதால் நடந்த விபத்து. இனிமேல் ஒருவர் மட்டும் குத்தகை எடுக்கும் காலம் கடந்த காலமாகி விடுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.

இந்த கவர்ச்சி தமிழ் திரையுலகத்தின் “சாபக்கேடு(?) மட்டுமில்லை. அணைத்து மாநிலங்களும் இதில் மாட்டிக்கொண்டது. ஏன் அனைத்து நாடுகளும் தான். இது போன்ற கவர்ச்சி காட்சிகள் ப்ரொட்யூசர்களுக்கு டைரக்டர்கள் கொடுக்கும் பேக்-அப் ப்ளான். கதை, இசை, சண்டை போன்றவைகள் காலைவாரி விட்டாலும் கைகொடுக்கும் ஒரே அம்சம் இந்த கவர்ச்சி நடனங்கள் தான். அதாவது இன்ஷூரன்ஸ் இல்லாத தமிழ் படங்களுக்கு இது மகத்தான இன்ஷூரன்ஸ். கவர்ச்சி நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளப் பணம் இதன் பிரீமியம்.

நமீதாக்கள் இல்லாவிட்டால் தமிழ் சினிமா மட்டும் இல்லை உலக சினிமாக்களே இல்லை.

PKS பார்க்கல? இதெல்லாம் ஒரு பழமொழி மாதிரிடா. அனுபவிக்கணும். ஆராயக்கூடாது! என்று எனக்கு RV புத்திமதி சொன்னான்.