நான் கடவுள் (Naan Kadavul)


naankadavul

2009 ஜனவரியில் வந்தது. கரம் மசாலா. ஒரு வித்தியாசம். பல படங்களில் சாதாரண மனிதர்களுக்கு கொடுமை இழைக்கப்படும். “இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமேயில்லையா?” என்று ஒரு பெண் கதறுவார். “என்னம்மா, என்ன அநியாயம்?” என்று ஸ்டைலாக ஹீரோ ரஜனிகாந்த் தட்டிக் கேட்க வருவார். பிறகென்ன? டிஷ்யும், டிஷ்யும் தான். அநியாயம் நியாமாகும். எல்லோரும் சந்தோஷமாக சிரிப்பார்கள். அநியாயம் நடந்தால் காப்பாற்றுவதற்கு ரஜனிகாந்த் இருக்கிறார் என்று நிம்மதியாக வீட்டிற்கு போய் தூங்குவார்கள். இதிலும் அநியாயம் இழைக்கப்படுகிறது. தட்டிக் கேட்கப்படுகிறது. ஹீரோ பரிதாபமான பெண்ணைக் கொல்வது நியாயமா? இறுதி விகாரக் காட்சிகளை பார்த்து நிம்மதியாக தூங்கமுடியாதென நினைக்கிறேன்.

டைரக்டர் பாலா இந்த படத்தை மூன்று வருடங்களாக எடுத்தாராம். பொதுவாக சினிமா எடுக்கும் பொழுது எப்பொழுது ப்ராஜெக்ட் முடியும் என்று தவிப்பார்கள். ஹாலிவுட்டில் மூன்று வருடம் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. தமிழில் இது பெரிய விஷயம்தான். கஷ்டப்பட்டிருப்பது சில காட்சிகளில் தெரிகிறது.

மனித மாமிசம் சாப்பிடும் (cannibal) அஹோரிகளை காசி பயணத்தின் போது பார்த்திருக்கிறார் பாலா. அஹோரி உடலின் ஒரு பகுதியை சாப்பிட்டால் அந்த உடலின் சொந்தக்காரர் (அல்லது சொந்தக்காரராக இருந்தவர்) சொர்க்கத்துக்கு செல்வார்களாம். உங்களுக்கு சொர்க்கத்துக்கு போகவேண்டுமா? இறுதி காலத்தில் காசிக்கு போங்கள். ஆனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தான் சொர்க்கத்திற்கு டிக்கட். ஏனென்றால் அஹோரி எல்லாருடைய உடலிலிருந்தும் சாப்பிடுவதில்லயாம். இவர்கள் புகைப்பது கஞ்சா, சாப்பிடுவது நரமாமிசம். (குடிப்பது இரத்தமா?) ஆச்சரியம் தான்.

அஹோரிகள் உலகத்திற்கும் ஜெயமோகனின் ஏழாம் உலகம் கதையில் வரும் பிச்சைக்காரர்கள் உலகத்திற்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தி ஒருவாறு சமாளித்திருக்கிறார் பாலா.

அஜித் நடிப்பதாக இருந்தது ஏதோ பிரச்சனைகளால் மாற்றப்பட்டு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய மேக்கப் கொஞ்சம் நம்மை கஷ்டப்படுத்துகிறது. பத்மாசனமும், சிரசாசனமும் சேர்ந்தவாறு செய்கிறார்.

கதாநாயகி பூஜா பாராட்டப் படவேண்டியவர். திறமையான நடிப்பும் இருக்கிறது. மிகுந்த சகிப்புத் தன்மையும் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு லென்ஸை கண்ணில் ஒட்டிக் கொண்டு குருட்டுப் பிச்சைக்காரியாக விழுந்து எழுந்து நடித்திருக்கிறார். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார்கள். ஆர்யாவும், பூஜாவும் இணைந்து நடிக்கும் நான்காவது திரைப்படம் இது.

கிட்டத்தட்ட 450 ஊணமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பிச்சைக்கார கும்பலாக நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றப்படி அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் அந்தக் கஷ்டம் நம்மை தாக்காமல் ஒரளவு காப்பாற்றுகிறது.

காஞ்சிபுரம், தேனி, பழனி போன்ற இடங்களில் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்களின் ஹெட்குவாட்டர்ஸாக ஒரு பங்கர் வருகிறது. அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

ஆர்தர் வில்சன் படப்பிடிப்பு. சிங்கம் புலி (இப்படி ஒரு பெயர்), ராசய்யா கண்ணன், ஆச்சார்யா ரவி ஆகிய மூன்று உதவி டைரக்டர்கள் பாலாவுடன் சேர்ந்து உயிரை விட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கிறார். வாலி – பாடல்கள், இளையராஜா – இசை, உத்தம் சிங் – ரீரிக்கார்டிங், சூப்பர் சுப்பராயன் – சண்டைப் பயிற்சி.

”இதோ எந்தன் தெய்வம்” போன்ற இனிமையான பழைய பாடல்களை கேட்க முடிகிறது. படத்தின் ஒரிஜினல் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. இதில் ஒரு சமஸ்கிருத பாடல் வேறு. நல்ல அர்த்தமுள்ள பாடலாக இருக்கவேண்டும் – சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு.

காவல்நிலையத்தில் ”எம்ஜியார்”, ”சிவாஜி”, ”ரஜனிகாந்த்” எல்லோரும் வந்து நடிப்பது நல்ல பொழுதுபோக்கு அம்சம்.

”கருணைக் கொலை” மூலம் அஹோரி ஆர்யா, பூஜாவிற்கு இன்னல்களிலிருந்து விடுதலை கொடுக்கிறார். கொலைதான் கருணையான முறையில் இல்லை. பூஜாவே அப்படி ஒரு முடிவு தனக்கு வரும் என்று எதிர்ப்பார்த்திருக்கமாட்டார். பத்துக்கு 6.5