சினிமா சினிமா பதிவு


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில் என்று நினைவு இல்லை. பெருக்கி வகுத்துப் பார்த்தால், ஒரு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம். நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா “திருமலை தென்குமரி”. (இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள் – ஒரு பேருந்தில் பயணிகள் ஏறும் காட்சி, ”திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று ஒருவர் பாடும் காட்சி. (சீர்காழி கோவிந்தராஜனா? – இந்த இரண்டு காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இல்லை என்றால் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் இந்த திரைபடம் இல்லை எனத் தெரிகிறது. நல்லா மாட்டிக்கொண்டேன்!)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி, த பாஸ். (நண்பர் RVயுடன், மற்றும் மனைவியுடன்). நல்ல காமடி. (என் மனைவி இந்த படத்தில் லாஜிக் தேடியதை சொல்கிறேன்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இக்காலத்தில் இதற்கு நூற்றுக்கு தொன்னூறு பேர் சொல்லும் அதே பதில் தான். ”டி.வி.யில் தான்”.

அன்னையும் பிதாவும்

”பெரிசா ரீல் விட்டால் எந்தப்படமும் பெட்டிக்குள் ரீலாகவே இருக்கும்” என்று நினைத்தேன். குடும்பம் என்ற சமுதாய ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் எத்தனை விதமாக கதை மற்றும் பணம் பண்ணியிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

ஒடஓட தாக்கிய திரைபடங்கள் எத்தனை எத்தனையோ!

என் உடல் வீங்கும் அளவிற்கு தாக்கிய சினிமாக்கள் Dr. சிவா, தீ, நெருப்பு,  போன்ற எண்பதுகளில் வந்த சிவாஜி, சிவாஜி ராவ் சினிமாக்கள். கமலும் விட்டுவைக்கவில்லை. அவரும் சில படங்கள் மூலம் கும்மாங் குத்து குத்தினார்.

ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியது பத்தில் ஐந்து தமிழ் சினிமாக்கள்.

இப்படி தாக்கப்பட்டு குற்றுயிராக எழுந்து நின்றால் அவ்வப்பொழுது சில சினிமாக்கள் லேசாக மனதை தாக்கியது. (நீங்கள் குறிப்பிடும் தாக்குதல் இது). வெவேறு காலகட்டங்களில் வெவ்வேறு சினிமாக்கள் வெவ்வேறு விதமாக தாக்கியதுண்டு. இதை எப்படி பட்டியல் போட?  அட, பட்டியல் கூட என்னை தாக்கியதுண்டு.

விவரமாக எந்த வகையில் தாக்கியது என்று சொல்லாவிட்டாலும், சிலவற்றை பட்டியலிடுகிறேன்:

அன்பே சிவம்

யாருக்காக அழுதான் – (பாதிக்கு மேல் புரியவில்லை – அது நல்ல சினிமா தானே 🙂 )

உன்னால் முடியும் தம்பி

அந்த நாள்

வீடு

உச்சக் கட்டம்

இன்னும் எத்தனை எத்தனையோ! ஆனால் என் வாழ்க்கையையோ, சிந்தனையையோ மாற்றும் அளவிற்க்கு தாக்கிய படம் நான் எடுத்தால் தான் உண்டு (போட்ட பணமெல்லாம் காணாமல் திவாலானால் வாழ்க்கையும் மாறும், சிந்தனையும் மாறும்)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றுமிலலை. ஒன்று இருந்தால் அது “குப்பி”

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பம் காலம் சம்பந்தப்பட்டது. காப்பி அடித்தாலும் அது வேகமாக காப்பி அடிக்கப்பட்டால் ஒரளவு தாக்கம் இருக்கும். ஆனால் காலம் கடந்து தரப்பட்டால் அதுவே கடுப்பாகி போகும்.

உதாரணங்கள்:

வேகமாக காப்பி அடிக்கப்பட்டு தாக்கியது: சமீபத்தில் பார்த்த அந்த நாள் – படம் எடுக்கப்பட்ட காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் இது ஒரு ஹை-டெக் படம்.

மெதுவாக காப்பியடிககப்பட்டு கடுப்படித்தது –  சிவாஜி, த பாஸ்(2007). “மாட்ரிக்ஸ்”(1999) டெக்னிக் பழைய கஞ்சி. அதுவும் க்ளைமாக்ஸில் போய சோகப்படுத்தியது.

”பாய்ஸ்” (2003) படத்தில்  “மாட்ரிக்ஸ்” யுத்திகளை அப்படியே காப்பி அடிக்காமல் பாடல்களுக்கு டிரான்ஸிஷன் செய்தது நன்றாக இருந்தது. சண்டை காட்சிகளை விட பாடல்களுக்கு மிகவும் பொருந்தியது போன்று எனக்குத் தோண்றியது.

எனக்கு யாரேனும் வாய்ப்பு கொடுத்தால் (அதாவது பணம் கொடுத்தால்) “சந்திரேயன்” என்ற ஹை-டெக் படம் எடுப்பேன். (நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஒருவர் கூட கொடுக்கமாட்டார்கள் என்று. அப்படி ஒருவர் நிதானம் தவறிவிட்டால் 4 ஆம் வினாவின் பதிலில் கடைசி வாக்கியத்தை படிக்கவும்; பின்னர் கொடுப்பதை பற்றி மறுபரிசீலனை செய்யவும்)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

”பேசும் படம்” என்று ஒரு பத்திரிக்கை வந்தது. அப்பொழுது வாசித்தது. இப்பொழுது இணைய தளம் மற்றும் ப்ளாக் முலம். இப்பொழுது ஆர்வம் அதிகம் இருப்பதால் புத்தகங்கள் கிடைத்தால் படிப்பேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?

விரும்பிக் கேட்பதுண்டு. அதற்க்காக “ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே, நான் புடிச்ச சிண்டு தானே” போன்ற பாடல்களையெல்லாம் சகிக்க முடியாது. பழைய SPB பாடல்கள் மிகவும் பிடித்தாமானது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி சினிமாக்கள் பார்ப்பதுண்டு. (புரிந்தால் தானே தாக்கம் இருக்கும்) இப்பொழுதெல்லாம் ஆங்கில சப்-டைட்டில் வருவதால் பிரச்சனை குறைந்து விட்டது. ”சக் தே இந்தியா” (Longest Yard என்ற ஹாலிவுட் படத்தின் வேரியன்ட் இது), ”கோஷ்லா கா கோஸ்லா” (தமிழில் இப்பொழுது ”பொய் சொல்லப் போறோம்”) போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்தவை. பழைய படங்கள் பார்ப்பதுண்டு. சப்-டைடில் இருந்தால் இன்னும் உற்சாகமாக பார்ப்பேன்.

ஆங்கில மொழி படங்கள் பார்ப்பதுண்டு. ஓட, ஓட, உடம்பு வீங்க, ரத்தம் வர தாக்கிய படங்கள், மனதை தாக்கிய படஙகள் இங்கேயும் உண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.  எதாவது செய்யவேண்டும் என் நினக்கிறேன். இப்பொழுது முடிந்தது திரைப்படம் பற்றிய ப்ளாக் எழுதுவதுதான்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விஜிலாண்டிஸ்ம், சண்டை மற்றும் பாட்டு இவை இல்லாமல் சினிமா இல்லை என்ற காலகட்டத்தில் பவணி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம். இந்த ஃபேஸ் (phase) முடிந்து (கொஞ்சம் நீநீநீநீநீநீநீளமான ஃபேஸ – அநியாயத்துக்கு தமிழ் மக்கள் ஆக்‌ஷன் மூவீஸ் என்ற அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்கள்) அடுத்த ஃபேஸ் (யதார்த்தம் dominate செய்யும் ஃபேஸ்) வரும் பொழுது தரமான படங்கள் வரவாய்ப்பு இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படம் பார்ப்பது அதிகமாகும்.

தமிழர்கள் பல விதமாக வகைப்படுத்தலாம். குழந்தைகள், இளைய தலைமுறை, மாணவ சமுதாயம், வேலைக்குப் போவோர், வேலையற்றவர்கள், வேலை தேடுவோர், பெண்கள், குடும்பத்தலைவிகள், குடும்பத்தலைவர்கள், குடும்பத்தலைவலிகள்…இப்படி எத்தனையோ வகைகள்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று ஆகலாம். அனைத்தையும் இங்கே அலச முடியாது. ஆனாலும் சில…

1. மாணவத் தமிழர்கள் தங்கள் பொன்னான நேரத்தை தங்கள் அறிவை மேம்படுத்த செலவழிக்கலாம். அதனால் சராசரி மாணவ அறிவு பெருகும்.

2. வேலையற்ற சோம்பேறித் தமிழர்கள் வேறு வழியின்றி வேலை தேடச் சென்றாலும் செல்லலாம். அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் கண்ணில் படலாம்.

3. பொழுது போகாத குடும்பத் தலைவி தமிழர்கள் பக்கத்து வீட்டில் அரட்டை அடிப்பது அதிகப்படலாம். அதனால் சண்டை சச்சரவு அதிகப்படலாம். அல்லது ஒரு வீட்டில் வாழும் மக்களுக்கு எதிர், பக்கத்து வீட்டில் வாழ்பவர்கள் யாரென்றாவது தெரியவரும் ஒரு நல்ல பயன் கிடைக்கலாம். அழுது வடியும் டி.வி. மெகா சீரியல்கள் டிராமாகவாக வரலாம். அதைப் பார்த்து இவர்கள் மேலும் அழலாம்.

4. திரைப்படத் தொழிலில் உள்ள தமிழர்கள் வேலை இல்லாமல் கையை பிசைந்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு தொழிலுக்குத் தாவலாம். (இது தியேட்டரில் டிக்கட் கிழித்து கொடுப்பவரையும், முறுக்கு விற்ப்பவரையும் பாதிக்கலாம்; எடிட்டிங், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், டைரக்டர்கள், நடிகர்கள் போன்ற தமிழர்களையும் பாதிக்கலாம்). மொத்தம் ஒரு பத்து லட்சம் இருக்க மாட்டார்களா?

5. அரசாங்கம் நடத்தும் தமிழர்கள் பத்து லட்சம் தமிழர்கள் உண்டாக்கும் தலைவலியால் அவதி படலாம்

6. ஜண்டு பாம் மற்றும் அனாசின் விற்கும் தமிழர்கள் விற்பனை பெருகி இந்த பத்து லட்சத்தில் ஒரு பத்தாயிரம் பேரை வேலைக்கு சேர்த்துகொள்ளலாம். ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.

வேண்டுமா இந்த விபரீதக் கற்பணை?

(சின்னத்தம்பி திரைப்படம் வெளி வந்த போது ஒரு மூன்று மாதத்திற்க்கு இந்த பிரச்சனை சிறிய அளவில் வந்ததாக ஒரு ஞாபகம். அதாவது தமிழ் திரையுலகம் மட்டும் பாதிக்கப்பட்டது. ஒன்றும் குடி மூழ்கி விடாது. நாம் உயிரோடு தான் இருக்கிறோம். மனிதர்கள் அட்ஜஸ்ட் செய்யத்தெரிந்தவர்களே. மனிதர்களின் DNA, Survival of the fittest என்ற சித்தாந்தத்தினால் ப்ரோக்ரம் செய்யப்பட்டுள்ளது.)