தெய்வ மகன் – விகடன் விமர்சனம்


படம் வெளியானபோது (1969) விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!

இரண்டு மூன்று வேடங்களில் ஒரே நடிகர் தோன்றினால் நிச்சயமாக ஆள் மாறாட்டம், அடையாளக் குழப்பம் போன்ற சிக்கல்களைப் படத்தில் எதிர்பார்க்கலாம். இவற்றில் எதுவும் தெய்வ மகனில் இல்லாதது தயாரிப்பாளர்களும் டைரக்டரும் செய்திருக்கும் சாதனை.

அப்பா, அண்ணன், தம்பி ஆகிய மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் தோன்றுகிறார். இவர்களில் தம்பி சிவாஜிதான் நடிப்பில் மூத்தவர். பணக்காரச் செல்லப் பிள்ளை பாத்திரம் திரைக்குப் புதிதல்ல; ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு இவ்வளவு மெருகும் அழகும் தந்து நடிப்பது சிவாஜியின் புதிய சாதனை. ஹோட்டல் நடத்த தந்தையிடம் பணம் கேட்கும்போதும், அண்ணனைக் கண்டு ‘தீஃப்… தீஃப்…’ (திருடன்) என்று நாகரிகமாகக் கத்தும்போதும் அவர் நடிப்பில் அப்பப்பா… அழகு கொழிக்கிறது.

அண்ணனின் பாத்திர அமைப்பு சற்று குழப்பமாக இருக்கிறது. ஆசிரமத்தில் பாபாவின் மேற்பார்வையில் வளர்ந்த பையனை – அதுவும் ஓர் இசை மேதையை – அடிக்கடி டார்ஜான் மாதிரி கொந்தளிக்க விட்டிருக்க வேண்டுமா?

தன்னைப் போலவே முக விகாரத்துடன் பிறந்துவிட்ட குழந்தையைத் தந்தை கொன்றுவிடச் சொல்வது கொஞ்சம் கொடூரமான கற்பனைதான். இருந்தாலும், அதில் ஒரு வலுவான கதை பிறக்கிறது. பணத்துக்காக பையனைப் பிடித்து வைத்து மிரட்டுவது போன்ற அடிதடிக் காட்சிகளைத் திணித்திருக்காவிட்டால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருந்தும், இந்தக் குறையே பல அழுத்தமான சம்பவங்களாக மாறி கதையின் வலுவைக் காப்பாற்றுகின்றன. ஒதுக்கப்பட்ட மகன், பெற்றோரைத் தேடி வந்து, திருட்டுப் பட்டமும், துப்பாக்கிச் சூடும் வாங்கிக் கொண்டு ஓடுவது நெஞ்சைச் சிலிர்க்க வைக்கும் காட்சி.

காதலுக்கு ஜெயலலிதா; கவர்ச்சிக்கு விஜயஸ்ரீ.

காதலனிடம் அழுதுகொண்டே ‘ஐ டூ லவ் யூ’ என்று கூறும்போதும் சரி, காதலனுக்கு சப்போர்ட்டாக அவனுடைய அப்பாவிடம் பேசும் போதும் சரி… ஜெயலலிதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

‘சென்சார் தாராளமாக நடந்து கொள்ளவில்லை’ என்று குறைப்படுபவர்கள் விஜயஸ்ரீயின் நடனத் தோற்றம் ஒன்றைப் பார்த்துவிட்டுப் பேசினால் தேவலை. இன்னும் என்ன தாராளம் வேண்டும்?

பண்டரிபாயை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எதிரியிடம் மாட்டிக்கொண்ட இளைய மகனை மீட்பதற்காக தகப்பனார் பரிதவிப்புடன் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகனைப் பிரிந்த தாய் (பண்டரிபாய்) நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டுவது பொருத்தமாக இல்லை.

பெரிய மண்டபத்தைக் கட்ட ஒரே ஒரு தூணின் பலத்தை நாடியிருக்கிறார்கள்! அந்தத் தூணின் பெயர் சிவாஜி கணேசன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

மேஜர் சுந்தரராஜன் பேட்டி


மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

விகடனுக்கு மேஜர் அளித்த பேட்டி. நன்றி விகடன்!

அப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே! இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல்? உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.

அன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.

நான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.

என் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.

நாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

அதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி!” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்?’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.

நான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.

நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.

மேஜர் திறமை வாய்ந்த நடிகர்தான். அதுவும் ஒரு கண்டிப்பான மூத்தவர் ரோல் அவருக்காகவே படைக்கப்பட்டது. அவரது ஆஜானுபாகுவான தோற்றம், குரல் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள். ஆனால் மேஜர் சந்திரகாந்தில் முறுக்கிய உடலை, முறைத்த கண்ணை, அவர் கடைசி வரைக்கும் இளக்கவே இல்லை. அந்த டெம்ப்ளேட்டையே பல படங்களில் – நீர்க்குமிழி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர் நீச்சல், நவக்ரஹம், தெய்வ மகன், ஞான ஒளி – அவர் திருப்பி திருப்பி பயன்படுத்தினார். அவரது இயக்குனர்களும் பெரும்பாலும் அதைத்தான் கேட்டார்கள், அதனால் அவர் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது. பல படங்களில் மிகை நடிப்பு வேறு. ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் இல்லை என்றால் அவரது மிகை நடிப்பை கட்டுக்குள் வைக்க முடியாது.காலம் போக போக he just sleepwalked through his roles. அவரது ரோல்களுக்கும் காலம் செல்ல செல்ல ஸ்கோப் குறைந்து கொண்டே போனது.

அவரை நன்றாக பயன்படுத்தியவர் பாலச்சந்தர்தான். எழுபதுகளில் ஏனோ அவர் பாலச்சந்தர் படங்களில் நடிப்பது நின்று போனது.

பின்னாளில் இயக்குனராகவும் ஓரளவு வெற்றி பெற்றார். அது அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ். கல் தூண் நன்றாக ஓடியது. ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் ஆகிய படங்கள் நினைவு வருகின்றன.

நல்ல நாடகங்களை போட்டார். ஞான ஒளி, கல் தூண் போன்றவை அவர் அரங்கேற்றியவைதான். அவரது நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டுக்கு வெளியேயும் வெற்றி பெற்றன.

ஒரு திறமை வாய்ந்த நடிகர் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிப் போனது துரதிருஷ்டம்.

அந்த நாள் ஞாபகம் வீடியோ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை. வரவு எட்டணா பாட்டு

மேஜரின் நடிப்பு மிக நன்றாக இருந்த படங்கள்:
மேஜர் சந்திரகாந்த்
நீர்க்குமிழி
பாமா விஜயம்
எதிர் நீச்சல்
நவக்ரஹம்
ஞான ஒளி
உயர்ந்த மனிதன்
அபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்

நினைவு வருவது அவ்வளவுதான். நீங்களும் உங்களுக்கு பிடித்த படங்களை சொல்லுங்களேன்!

மேஜர் குறிப்பிடும் டைரக்டர் கே.சி.கே. யார்? யாருக்காவது தெரிகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பிற பதிவுகள்:
மேஜர் சந்திரகாந்த்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நீர்க்குமிழி
எதிர் நீச்சல்
நவக்ரஹம்
அபூர்வ ராகங்கள், விகடன் விமர்சனம்