நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

”முருகா, அந்தப் பொட்டிய கொடுத்துடு…”


எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? சைனாவில்…என்று நினைக்கிறேன். அல்லது தாய்லாந்தில். நம்ம எம்.என்.ந்ம்பியார் தான் இப்படி வசனம் பேசியது. ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்க்காக ஒரு புத்த பிட்சு வேடமணிந்து (உண்மையான புத்த பிட்சுக்கள் இருவரை அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு) விஞ்ஞானி எம்.ஜி.ஆர்ரிடம் ”முருகா, அந்த பொட்டிய கொடுத்துடு” என்று பேசுவது இது.  இவர் இவ்வாறு வில்லத்தனமாக “பஞ்ச் டையலாக்” எத்தனையோ பேசியிருக்கிறார். கூர்ந்து கவணித்தால் தான் மனதில் நிற்க்கும். ஏனென்றால், அவருடைய வசனங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். டைலாக்கின் மத்தியில் கரைந்து போய் விட்டிருந்தது. ஆனாலும் இதை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

இவர் வில்லத்தனம் தத்ரூபமாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயர் உண்டு. இவர் ”எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் வில்லனாக நடித்தது பல எம்.ஜி.ஆர். ரசிகர்களை பாதித்திருந்தது. அந்த படம் வெளிவந்த புதிதில், ஒரு முறை ஒரு வெளிப்புர படப்பிடிப்பின் பொழுது அங்கிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் அவரை  அடிக்க போய்விட, அங்கு உடனிருந்த எம்.ஜி.ஆர்., த்னது ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். எவ்வளவு தான் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது பாசமிருந்தாலும் இந்த அளவிற்கு வெறுப்பு தெரிக்க தத்ரூபமாக நடிக்காதிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. நடக்காமலிருந்தால் நல்ல விஷயமே. ஆனால் இந்த நிகழ்ச்சி நம்பியாருடைய நடிப்பின் வெற்றியை பறை சாற்றும் ஒரு அளவுகோல் ஆக பரிமாணித்து விட்டிருந்தது.

இவர் வில்லன் வேடத்தில் மட்டும் ஜொலிக்கவில்லை. நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார். “தூறல் நின்னு போச்சு” என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இது தெரியும்.  நகைச்சுவையான் குஸ்தி வாத்தியாராக நடித்து அந்தப் படத்தின் மூலம் பல ரசிகர்களின் பெரு மதிப்பை பெற்றிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அந்தப் படத்தின் தொய்வில்லாமைக்கு இவரது கதாப்பாத்திரம் ஒரு முதுகெலும்பாக இருந்து உறுதுணை புரிந்தது. “என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே” என்று பாக்கியாராஜும் இவரும் சேர்ந்து ”மலையேறி” விட்டு அடிக்கும் லூட்டி அபாரமான பொழுது போக்கு. ஆஹா…இதெல்லாம் இனிமேல் வருமா? பாக்கியராஜ் இவரை இந்த கோணத்தில் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியதற்க்கு கிரெடிட் பெறவேண்டும்.

மேலும் இது அல்லாமல் சமீபத்தில் ஒரு குணசித்திர வேடத்தில் விஜய்யுடனும், நாகேஷுடனும் நடித்திருந்தார். அதிகம் ந்டிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்த வரை அதிலும் அவர் அருமையாக அவருடைய ரோலை செய்திருந்தார். திரைப்படத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது.

இதையெல்லாம் விட நிஜ வாழ்க்கையில் நிதானம் தவறாத ஒரு பெரியவர். பலருக்கு சபரிமலையை அறிமுகப்படுத்தி வைத்து உத்வியிருக்கிறார். எல்லோரும் அவரை மதிப்பின் மிக உயரத்தில் வைத்திருந்தார்கள். சாமான்யமான மனிதர்களுக்கு இது கர்வத்தை கொடுத்திருக்கும். ஜெயமாலா என்ற கன்னட நடிகையும் சுதா சந்திரனும் ஐயப்பனை தொட்டு வணங்கியாதாகவும், 17வதோ, 18வதோ படியில் நடனமாடியாதகவும் பிதற்றிய பொழுது, இவருக்கு இருந்த மதிப்பை பயன் படுத்தி அவர்களுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருந்தாலே போதுமாயிருந்தது. பக்தர்களும், மக்க்ளும் அவர்கள் இருவர் மீதும் ஆவேசத்துடன் பாய்ந்திருப்பார்கள். ஆனால் இவர் அவர்கள் இருவரும் ஏன் அதை செய்திருக்கமுடியாது என்பதை விளக்கியது மட்டுமல்லாமல் அப்பொழுது அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் விடக்கூடாது என்ற சொன்ன அனைவருக்கும் ”இந்த ஒரு காரணத்திற்க்காக அவ்ர்களையும் பிற பெண்களையும் ஐயப்பனின் கோவிலுக்குள் விடக்கூடாது  என்று கூற ஒருவருக்கும் உரிமை கிடையாது” என்று பெருந்தன்மையுடன்  கருத்து கூறியிருக்கிறார். பெண்களை கோவிலுக்குள் ஏன் விடக்கூடாது என்பதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம் பெண்களை அவமதிக்கும் ஒன்று அல்ல. ஆண்கள் பலவீணமானவர்கள். அவர்கள் சிந்தனை சிதறும் என்றே பெண்களை விடுவதில்லை என்ற நிலைப்பாட்டை விளக்கினார்.

மனிதர் போய்விட்டாரே!