எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!


‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறுகிறார்…..

எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்.ஜி.ஆரைத் தத்தெடுத்து வளர்த்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.  அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.
https://i1.wp.com/www.mgrhome.org/Pictures/image005.gif
பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான  விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை  அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.  அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது!


ஆசிரியர்: ஜெயராமன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சமையல்
ISBN எண்: 978-81-8476-103-0
விலை:  ரூ. 45விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ வாங்கோ என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!
தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!
தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.
வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கூட்டாஞ்சோறு–>படிப்பு