எம்.கே. தியாகராஜ பாகவதரின் இறுதி நாட்கள் – சோகமான கதை !


(ஈஸ்வர் கோபால் அனுப்பியுள்ள பதிவு – இது ஒரு மீள் பதிவா என்பது தெளிவாகத்த் தெரியவில்லை. உரிய courtesyக்கள் செலுத்தாததற்கு  சம்பந்த பட்டவர்கள் மன்னிக்கவும். தகவல் தெரிந்தவுடன் இணைக்கிறோம். ஓவர் டு) ஈஸ்வர் கோபால்)

Re: IDHAYA VEENAI by Dr. M.K.R.SANTHARAM

Postby mkrsantharam » Mon Nov 01, 2010 3:47 pm

தொகுப்பு எண் : 56 

Image

” ஹேய்…….

வாழ்விலோர் திரு நாள் ! …… “

பாய்ந்தோடும் வெள்ளைக் குதிரை யில் இரு கால்கள் அசைந்தாடுவது
முதலில் தெரிய , பின்னர் காமிரா மெல்ல மெல்ல மேல் நோக்கி
நகர்ந்து ………..

பாகவதரின் சிரித்த முகத்தை ” போகஸ் “செய்கிறது !

Image

ஆமாம் …..

16 – 10 – 1944 , அன்று தீபாவளி !

” ஹரிதாஸ் “

அன்றைய தினம் ” ரிலீஸ் ” செய்து , படத்தின் ஆரம்பக் காட்சியில்
பாகவதர் மேற்கண்டவாறு பாடிக்கொண்டே வந்ததைப் பார்த்து மக்கள்
கைகளைத் தட்டியும் , ” விசில் ” அடித்தும் மகிழ் வடைந்தனாறாம் !
( அப்போது அடியேன் …… இல்லே ..இல்லே … என் அண்ணன் கூட
பிறக்கவில்லை ! )

அது மட்டுமா !

பாகவதர் இந்த பாடலைப் பாடிக்கொண்டே ……..

கண்ணடிக்கிறார் !

இந்த காட்சியில் பெண்கள் சொக்கிப் போனாராம் !

தமிழ் சினிமா வரலாற்றில் :

” ஹீரோவுக்கான அசத்தலான அறிமுகக் காட்சியை
அறிமுகம் செய்தது இந்த படம்தான் !

” குடும்பப் பெண்கள் ” பாகவதரின் அழகிலும் பாடலிலும் மயங்கி
அவரைக் காண பின் தொடர்ந்து செல்லும் நிலை உருவானதால்
பல குடும்பத்தலைவர்கள் , அந்த பெண்களை தங்கள் தங்கள்
வீட்டுக்கு அழைத்து செல்வதில் மிகுந்த சிரமம் அடைந்தனராம் !

பாகவதருக்கு ” காதல் காய்தம் ”
( நடிகர் நாகேஷ் , தான் நடிக்கும் படங்களில் ” காதல் கடிதம் ” என்று சொல்லும் இடங்களில் இப்படித்தான் சொல்லுவார் ! ) எழுதிய பெண்கள் ஏராளம் !

இந்த விஷயங்களை அடியேன் மிகைப் படுத்தி எழுதவில்லை !
நடந்தது நடந்தபடி எழுதினேன் !

” ஹரிதாஸ் ” படம் வெளி வந்த பிறகு பாகவதரின் புகழ் உச்சியில்
இருந்தது உண்மை !

இன்னொன்று :

ஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதர்க்கென்று மக்கள் கூட்டம்
கூட்டம் ஆக வருவது , பாகவதருக்கு பின்னர் தான் ஏற்பட்டது !

ஒரு முறை பாகவதர் கொச்சின் போய் விட்டு இரயில் இருந்து
திரும்பும் போது , பாகவதரைப் பார்த்தே ஆகா வேண்டும் என்று
மக்கள் இரயில் நிலையத்திற்கு வந்து அவரை ” தரிசித்து ” விட்டுத்தான்
இரயிலை ஓட்ட விட்டார்கள் ! இதனால் இரயில் ஐந்து அல்லது ஆறு
மணி நேரம் தாமதம் ஆவதுண்டு ! பாகவதர் வருவதை அறிந்த மக்கள்
இரயில் நிலையத்திற்கு வருவர் ! ” பிளாட்பாரம் டிக்கட் ” அனைத்தும்
விற்று விடுமாம் ! இரயில் நிற்கத் தேவை இல்லாத நிலையங்களுக்குக்
கூட இரயில் வண்டி நிறுத்தப்படுமாம் ! மக்கள் பாகவதரை ” வழி
அனுப்பி விட்டால்தான் ” இரயில் கிளம்பு அனுமதி கிடைக்குமாம் !

சுருக்கமாக சொல்லப் போனால் :
மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்த பின்னர் அவரைப்
பார்ப்பதற்கு கூடிய கூட்டம் போல் , பாகவதருக்கு ஏற்பட்டது !

” ஹரிதாஸ் ” படம் ” சூப்பர் ஹிட் ” !

எப்போதும் ஒரு சமயத்தில் ஒரே படத்தில் நடிக்கும் பழக்கம் உள்ள
பாகவதர் , ” ஹரிதாஸ் ” வெற்றிக்கு பிறகு நிறைய படங்களை ஒத்துக்
கொண்டார் ! ” அட்வான்ஸ் ” வாங்கிக் கொண்டார் !

அந்த படங்கள் :

1 ” ராஜ யோகி ” 2 . ” வால்மீகி
3 . ” பில்ஹணன், 4″ ஸ்ரீ முருகன்”
5 . “உதயணன் ” 6 .” பக்த மேதா”
7 .” ஜீவகன்” , 8 .. ” காளிதாஸ்”
9 ” நம்பியாண்டார் நம்பி “

இத்தனைப் படங்களை ஒத்துக்கொண்டு புகளின் உச்சியில் இருந்த

பாகவதருக்கு ……


ரி
வு

ஏற்பட்டது !
எப்படி ?

” ஹரிதாஸ் ” வெளியான அதே தீபாவள் நாள் , தான் தங்கியிருந்த
திருச்சி பங்களாவை விட்டு தன நண்பர்களை சந்திக்க குதிரை
வண்டியில் ( அந்த கால ” பென்ஸ் ” கார் ! ) கிளம்பி வண்டியில்
கிளம்பிப் போன பாகவதருக்கு விபத்து நேர்ந்தது ! சாலையில்
குவித்து வைத்திருந்த கருங்கற் கற்களில் ( அந்த காலத்திலும்
இதே ” கர்மாந்திரம் ! ” ) வண்டி சக்கரம் மாட்டிக்கொண்டு வண்டி
குடை சாய்ந்தது . பாகவதரின் இரு முழங்கால்களில் பலத்த அடி !
” ஹரிதாஸ் ” படத்தில் , இறுதியில் வருவது போல் பாகவதர்
தவழ்து நடக்கிறார் என்று அந்த காலப் பத்திரிகைகள் ” அவல ”
சாப்பிட்டன ! இந்த சம்பவத்தை பாகவதர் ஓர் அபசகுனம்
என்றே நினைத்தார் !

அவர் நினைத்தது உண்மையானது !

” ஹரிதாஸ் ” படம் 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கும்போது , போர் முனைச் செய்திகளைக் கேட்பதற்காக
வானொலியை நாடும் அந்த கால மக்கள், அந்த ” BREAKING NEWS ”
கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் !

அந்த செய்தி :

” லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நடிகர்
எம். கே. தியாகராஜா பாகவதர் கைது செய்யப்பட்டார் ! ”
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பாகவதர் மட்டும் அல்ல ,
பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் , மற்றும் பிரபல
படத்தயாரிப்பாளர் ” பட்சி ராஜா ” எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாய்டு –
ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் . தமிழ் நாட்டை கலக்கிய

இந்த கொலை வழக்கு அந்த காலத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டது .

( ” இந்த கொலை வழக்கு பற்றி ஒரு தனித் தொகுப்பு ஆகா
எழுத அடியேனும் விருப்பம் ! எனவே , அந்த கொலை வழக்கு பற்றிய
விவரங்களை இங்கே இப்போது கொடுததால் , அடியேன் எழுத ஆரம்பித்த
தலைப்பில் இருந்து விலகிச் சென்ற மாதிரி ஆகிவிடும் ! “

இந்த வழக்கில் பாகவதர் சிக்கியது அவரது ” இமேஜ் ” ஐ மிகவும் பாதித்தது !
வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பாகவதர் பெரும் பொருட்
செலவு செய்தார் ! ஆனால் எல்லாம் வீண் ஆனது !

பாகவர் உட்பட ஆறு பேருக்கு ” ஆயுட் தண்டனை ” வழங்கப்பட்டது !

பாகவதர் இடிந்து போனார் ! கையில் இருந்த பணமெல்லாம் கோர்ட் ,

கேஸ் என்று என்று கரைய ஆரம்பித்தது .

போட்டிப் போட்டுக்கொண்டு ” அட்வான்ஸ் ” பணம் கொடுத்து படங்களை

” புக் ” செய்த படத் தயாரிப்பாளர்கள் , தங்கள் பணத்தை திருப்பித்
தரும்படி ” டார்ச்சர் ” செய்ய , வீட்டையும் நகைகளையும் விற்று
அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுமாறு தன வீட்டில்
உள்ளவர்களிடம் சொல்லி விட்டார் , பாகவதர் !

பாகவதர் நடித்துக்கொண்டிருந்த ” உதயணன் வாசவதத்தா ”
படம் அப்படியே நிறுத்தப் பட்டது ! அதற்கு பதில் அந்த படத்தில்

ஜி . என். பாலசுப்பிரமணியம் ஒப்பந்தம் செய்யப்பட்டார் .
அது போல் :

” ஸ்ரீ வள்ளி ” படத்திற்கு தி .ஆர்.மகாலிங்கம் அவர்களும் ,

” வால்மீகி ” படத்திற்கு ஹொன்னப்பா பாகவதரும் நடிக்க

ஆரம்பித்தனர் ! பாகவதர் பாடி ஒரு படத்தில் சேர்க்கவேண்டிய பாடல்

ஒன்றை இயக்குனர் கே. சுப்ரமணியம் , பி. யு . சின்னப்பா , டி. ஆர். ராஜகுமாரி

நடித்த ” விகட யோகி ” என்கிற படத்தில் சேர்த்துவிட்டார் !

அந்த படத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா ஏதோ ஒரு ரசாயனக் கலைவையை

தெரியாமல் குடித்து பின்னர் குரல் மாறி ” பாகவதர் குரலில் ” பாடுவதாக கதை !

பாகவதர் ” உள்ளே ” இருப்பதால் வந்த வினை !

ஆனால் ……..

இந்த தடைகளையும் மீறி ” ஹரிதாஸ் ” படம் மூன்று தீபாவளிகளையும்

கடந்து ஓடிக் கொண்டிருந்தது !

Image

இரண்டு வருடங்கள் ! பாகவதரும் என்.எஸ் . கிருஷ்ணன்

ஆகிய இருவரும் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தனர் !

இந்த தண்டனையை எதிர்த்து ” அப்பீல் ” செய்தார் பாகவதர்

அப்போதைக்கு லண்டனில் உள்ள பிரிவியு கவுன்சில் தான் இந்தியாவுக்கு

” சுப்ரீம் கோர்ட் ! ” லட்சுமிகாந்தன் கொலையில் பாகவதரும் , என். எஸ்.

கிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது சரியாக உறுதி செய்யப்படவில்லை

என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது !

1947 , ஏப்ரல் மாதம் , ஒரு நாள் பாகவதரும் , என்.

எஸ் . கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டு

வெளியே வந்தனர் .

கிட்டத்தட்ட முப்பது மாத சிறை வாசத்தின் சோர்வு பாகவதரின் முகத்தில்

தெரிந்தது ! அந்த பொன்னிற தேகத்தில் பொலிவு இல்லை ! அன்றைய

வானொலியில் பாகவதர் விடுதலை ஆனது தான் தலைப்பு செய்தி !

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் தன தம்பியுடன் உடனே

சென்றது வடபழனி முருகன் கோவில் தான் ! பின்னர்

இரயில் ஏறி திருச்சிக்கு போனார் . வாசலில் அவர் குடும்பத்தினர் வெளியே

நின்று அவரை வரவேற்றனர் !

ஆனால் ……………… !

முன்பு போல் பாகவதரைக் காண வரும் ரசிகர்களின் கூட்டம்

இல்லை ! பாகவதரின் கண்களில் கண்ணீர் !

புகழை அடைய மிகவும் எளிது !

ஆனால் அதனைக் கட்டிக் காப்பது மிக அரிது !

இப்போதைய ” எந்திரன் ” ரஜினிக்கும் அந்த கவலை உண்டு !

ரொம்ப நாளைக்குப் பின்னர் குடும்பத்தோடு உணவு உண்டார் பாகவதர் !

மறு நாள் :

பட உலகில் உள்ள பல பட அதிபர்கள் அவரைப் பார்க்க வந்தனர் !

” அட்வான்ஸ் ” தொகையை வறுப்புரித்தி திருப்பி வாங்கிப் போன பட

அதிபர்களும் அதில் அதிகம் பேர் உண்டு ! யாரிடமும் நேரிடையாக

பாகவதர் பேசவில்லை ! அமைதியாக இருந்தார் ! எல்லோரும் அமைதியாக

உட்கார்ந்திருக்க , பத்திரிகையாளர்கள் பலர் அங்கே இருக்க பாகவதரின்

அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க பாகவதர்

பேச ஆரம்பித்தார் !

” இந்த இரண்டரை வருடங்களில் உலகத்தை புரிந்து கொண்டேன் !

சினிமா உலகத்தையும் தெரிந்து கொண்டேன் ! இனிமேல் நான் சினிமாவில்

நடிப்பதாக இல்லை ! அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்துவான் ! எனவே

சங்கீதத்தில் கவனம் செலுத்தப் போகிறேன் ! “

இந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது !

ஆனால் இசை உலகம் பாகவதரை ஏற்றுக்கொள்ளவில்லை !

காரணம் ?

” ஜெயில் – க்கு போய் வந்தவருக்கெல்லாம் எப்படி பாட

அனுமதிக்கலாம் ? ” என்று சபாக்கள் அவரைப் பற்றி இகழ்ந்து பேசின !

பாகவதர் நொந்து போனார் !

ஆனாலும் பாகவதர் மனம் தளராமல் கோவிலுக்கு சென்று ஆண்டவனின்

சன்னதிக்கு சென்று பாட ஆரம்பித்தார் !

விரைவில் பாகவதர் :

1 . ரேடியோ கச்சேரி

2 . கோவில் திரு விழா

3 . கல்யாண கச்சேரி

போன்ற நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார் !

ஓரளவு , அதில் வெற்றியும் பெற்றார் !

” ஆனால் இது மாதிரியான ” குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை ” விட

திரைப் படங்களில் மறுபடியும் நடித்தால் உங்களின் புகழ் மறுபடியும் பெருகும் !

ஒரு ” சுப்பர் ஹிட் ” கொடுத்த பின்னர் பட உலகில் இருந்து விலகி விடலாம் !

பின்னர் இசைத் துறையை நீங்கள் நாடலாம் ! “

என்று அவரின் ” நலம் விரும்பிகள் ” கேட்டுக்கொண்டனர் !

பாகவதர் யோசித்தார் !

அதில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார் !

மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் !

முன்னர் போல் மற்றவர்கள் முன்னாள் கைகளைக் கட்டி வேலை செய்வது

பாகவதருக்குப் பிடிக்கவில்லை !

தாமே சொந்தப் படங்களை எடுப்பது என முடிவு செய்தார் !

இதுதான் அவர் செய்த மாபெரும் தவறு என்று கூட சொல்லலாம் !

” ராஜ முக்தி “

பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்


இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
  2. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
  3. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
  4. 1957, குரு தத்தின் ப்யாசா
  5. 1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா
  6. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
  7. 1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா
  8. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்
  9. 1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்
  10. 1951, ராஜ் கபூரின் ஆவாரா

எனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.

ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.

மொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.

நிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்!)

அம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.

இது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):

  1. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
  2. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
  3. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க?
  4. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.
  5. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
  6. 1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்!
  7. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
  8. 1957, குரு தத்தின் ப்யாசா
  9. 1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)
  10. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்

“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)

  1. 1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.
  2. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
  3. 1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.
  4. 1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.
  5. 1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.
  6. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்
  7. 1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள்! தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
  8. 1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.
  9. 1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!
  10. 1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.

இவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:

  1. 1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.
  2. 1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
  3. 1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை
  4. 1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்
  5. 1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்
  6. 1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention
  7. 1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?
  8. 1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention
  9. 1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.
  10. 1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.
  11. 1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்
  12. 1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்?
  13. 1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.
  14. 1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.
  15. 1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.
  16. 1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.
  17. 1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention
  18. 1992, மணிரத்னத்தின் ரோஜா – Honourable mention
  19. 1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.
  20. 1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.
  21. 1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது!) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது?
  22. 1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா?
  23. 1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க?
  24. 2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

சந்திரலேகா
கப்பலோட்டிய தமிழன்
மந்திரி குமாரி (Mandiri Kumari)
முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
பராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்
தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்

சந்திரலேகா (Chandralekha)


நினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.

தமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா?) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.

யுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.

இந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.

சொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)

சபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.

படத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்!

இந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.

கதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.

தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை?


எல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள்? அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)

கிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.

எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.

என்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.

எல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.

வி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா?

கட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

P.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.

மஹாதேவி (Mahadevi)


1958இல் வந்த படம். எம்ஜிஆரைத் தவிர பி.எஸ். வீரப்பா, சாவித்ரி, எம்.என். ராஜம், சந்திரபாபு, ஓ.ஏ.கே. தேவர், ஏ. கருணாநிதி, கே.ஆர். ராம்சிங், டி.பி. முத்துலக்ஷ்மி நடித்திருக்கிறார்கள். கண்ணதாசனின் கதை-வசனம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. சுந்தர் ராவ் நட்கர்னி என்ற மராத்தியர் இயக்கம்.

எம்ஜிஆருக்கு ஒரு வெற்றிப் படம். நல்ல பாட்டுக்களும், கண்ணதாசனின் சூடு பறக்கும் வசனங்களும், பி.எஸ். வீரப்பாவின் ரசிக்கத்தக்க வில்லன் நடிப்பும், அழகான எம்ஜிஆரும், கத்தி சண்டைக் காட்சிகளும் வெற்றிக்கு பின் பலமாக அமைந்தன.

கண்ணதாசனின் வசனங்கள் சிறப்பாக இருந்தன. எல்லாருக்கும் சுருக்கமான வசனங்கள்தான். ஆனால் பொருத்தமாக இருந்தன. கலைஞரின் மனோகரா வசனங்களின் வேகம் இதிலும் தெரிகிறது. மனோகரா வசனங்களில் அனல் பறக்கும், ஆனால் கொஞ்ச நேரத்துக்கு பிறகு திகட்டிவிடுகிறது. உண்மையில் சிவாஜி மனோகராவில் ராஜ சபையில் பேசும் நீள வசனத்தின் கடைசி பகுதிகள் வரும்போது எனது மூளை ஆஃப் ஆகிவிடுகிறது. என்றாவது ஒரு நாள் கான்சென்ட்ரேட் செய்து கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதாவது வசனப் புஸ்தகம் படிக்க வேண்டும். இதில் எல்லாரும் ஒரு சமயத்தில் ஒன்று இரண்டு வாக்கியங்கள்தான் பேசுகிறார்கள். அது ஒரு பெரிய நிம்மதி!

டைட்டில்களில் மூலக்கதை ராம் கணேஷ் கட்கரி எழுதிய புண்யப்ரபாவ் என்ற நாடகமாம். இது எங்கே இருந்து வந்தது என்று நெட்டில் தேடினேன். இவர் 1885இல் பிறந்த ஒரு மராத்தியர். 34 வயதிலேயே இறந்துவிட்டார். இவர் எழுதிய நான்கே நாடகங்களும் அங்கே வெற்றி அடைந்தன. அதிலும் 1916இல் எழுதப்பட்ட புண்யப்ரபாவ் நம்மூர் மனோகரா போல புகழ் பெற்ற ஒன்றாம். டைட்டில்கள் பார்க்கும் வரை இது எனக்கு தெரியாது. பார்த்த பிறகு நெட்டில் சும்மா ராம் பிரகாஷ் கட்கரி, புண்யப்ரபாவ் என்று தேடினேன். 1916இல் எழுதிய நாடகம் என்று தெரிந்ததும் அசந்துவிட்டேன். ஒரு மராத்தி நாடகம் – அதுவும் 40 வருஷங்களுக்கு முன் வந்தது. அதை எம்ஜிஆரும் கண்ணதாசனும் எங்கே கேள்விப்பட்டார்கள்? எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? இந்த படத்தில் என்னை fascinate செய்யும் விஷயம் இதுதான்.

கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. கட்கரி இதை அனேகமாக தன் நண்பரும் அப்போது ஸ்திரீ பார்ட் புகழ், நாடகங்களின் ராஜா, (ஸ்திரீ பார்ட் நடிகரை ராணி என்று சொல்ல வேண்டுமோ?) பால் கந்தர்வாவுக்காக இதை எழுதி இருக்கிறார். கதையில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம். அவளுடைய கஷ்டங்கள்தான் கதையின் ஃபோகஸ். கதை இன்று போரடிக்கிறது. நமது சூழ்நிலையில் சொல்ல வேண்டுமென்றால் சாரங்கதாரா சங்கரதாஸ் ஸ்வாமிகள் எழுதியபோது மிகவும் சுவாரசியமான நாடகமாக இருந்திருக்கும். இன்று பார்க்கும்போது கதை போரடிப்பது இல்லையா? (BTW, சாரங்கதாரா நாடகம் இப்போது சாகித்ய அகாடெமியில் “இரு நாடகங்கள்” என்று கிடைக்கிறது.)

இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னிதான் ஹரிதாஸ் படத்தையும் இயக்கி இருக்கிறார். மங்களூர்காரரான இவரை ஏ.வி. மெய்யப்ப செட்டியார்தான் தமிழ் சினிமா உலகுக்கு அழைத்துவந்தாராம். இவர்தான் இந்த மராத்தி நாடகத்தைப் தேடிப் பிடித்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இது பி.எஸ். வீரப்பாவின் படம். சாவித்ரி, ஏன் எம்ஜிஆருக்கு கூட இரண்டாவது இடம்தான். அவரது வில்லத்தனம்தான் படத்தை முன்னால் நகர்த்தி செல்கிறது. வீரப்பா சிவாஜி ரேஞ்சுக்கு நல்ல நடிகர் அல்லர். ஆனால் அவருக்கு ஒரு presence இருக்கிறது. அவரது கனத்த குரலும் உடல்வாகும் வில்லன் ரோல்களுக்கு நன்றாக பொருந்துகின்றன. இந்த படத்தில் எப்போதும் அவர் கண்களில் தெரியும் புன்சிரிப்பு அவரது வில்லத்தனத்தை இன்னும் எடுத்துக் காட்டுகிறது.

எம்ஜிஆரும் வீரப்பாவும் நண்பர்கள். வீரப்பா சாவித்ரி எம்ஜிஆரை மணந்த பின்னும் சாவித்ரியை விரும்புகிறார். அதற்காக பல சூழ்ச்சிகள் செய்து சாவித்ரியை ஜெயிலில் அடிக்கிறார், எம்ஜிஆரை குருடாகுகிறார், பன்ச் டயலாக் அடிக்கிறார், சாவித்ரியின் குழந்தையை கொள்கிறார். கடைசி காட்சியில் எம்ஜிஆர் குருடாக நடித்தார் என்றும், இறந்தது வீரப்பாவின் குழந்தை என்றும் தெரிகிறது. மனம் திருந்தி வீரப்பா தற்கொலை செய்துகொள்ள சுபம்! (தற்கொலை செய்துகொள்வதை சுபம் என்று வர்ணிப்பது நான் மட்டும்தான்)

பாட்டுகளை பொருத்த வரையில் “கண் மூடும் வேளையிலும்” சிறந்த பாட்டு. ஏ.எம். ராஜா, சுசீலா பாடியது. கண்ணதாசன். கண்ணதாசன் இந்த சிச்சுவேஷனுக்கு முதலில் “நானன்றி யார் வருவார்” என்ற பாட்டை எழுதினாராம். எம்ஜிஆர் அது ரொம்ப ஸ்லோ என்று சொல்லிவிட்டதால் “கண் மூடும்” என்று எழுதினாராம். ஆனால் “நானன்றி யார் வருவார்” பாட்டை மாலையிட்ட மங்கை படத்தில் உபயோகப்படுத்திக்கொண்டார்.

என்னுடைய ரசனைப்படி மிச்ச எல்லா பாட்டும் பி க்ளாஸ்தான். “சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா” எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” பாட்டை நினைவுபடுத்துகிறது. இந்த பாட்டில் சொற்குற்றம் இல்லாவிட்டாலும் பொருள்குற்றம் இருக்கிறது. சிங்காரப் புன்னகையை பார்க்கிறோம், சங்கீத வீணையை கேட்கிறோம். இவை இரண்டையும் எப்படி ஒப்பிட முடியும்? வள்ளுவர் “குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள் அழகு முகம் பார்க்காதவர்” என்றா எழுதி இருக்கிறார்? “சிங்கார மழலையை காதார கேட்டாலே” என்றல்லவா எழுதி இருக்கவேண்டும்?

சந்திரபாபுவுக்கு இரண்டு பாட்டு. “தந்தனா பாட்டு பாடனும், துந்தனா தாளம் போடணும்”, “உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு”. இரண்டுமே feet tapping numbers. இந்த காலத்து குத்துப் பாட்டு எதுவும் கிடைத்திருந்தால் சந்திரபாபு கிழி கிழி என்று கிழித்திருப்பார். கூட ஆடும் நடிகை யார்? கூட பாடுவது ஜமுனா ராணியா இல்லை ரத்னமாலாவா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்” பட்டுக்கோட்டை எழுதி டி எம் எஸ் பாடிய ஒரு பாட்டு. எனக்கு ரொம்ப பிடித்தமானது. யூட்யூபில் இருந்தது, தூக்கிவிட்டார்கள்.

மேலே உள்ள எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

“காக்கா காக்கா மை கொண்டா” எம்.எஸ். ராஜேஸ்வரி பாடியது. இங்கே கேட்கலாம்.

“சேவை செய்வதே ஆனந்தம்” டிஎம்எஸ், எம்.எஸ். ராஜேஸ்வரி பாடியது. “தாயத்து ஐயா தாயத்து” டிஎம்எஸ் பாடியது. இவற்றை இங்கே கேட்கலாம்.

இதை தவிர “ஏரு பூட்டுவோமே நாளை சோறு ஊட்டுவோமே”, “காமுகர் நெஞ்சில்”, “மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு” ஆகிய பாட்டுக்களும் இருக்கின்றன.

சாவித்ரிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலும் எம்ஜிஆருக்கும் ஏ.எம். ராஜாவின் குரலும் பொருந்தவில்லை. ஆனால் பாட்டாக கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

10 பாட்டில் ஒன்று டாப், 5 தேறும்.

பி.எஸ். வீரப்பாவுக்காகவும், கண்ணதாசனின் வசனங்களுக்காகவும், பாட்டுக்களுக்காகவும் பார்க்கலாம். 10க்கு 6 மார்க். C Grade.

ராண்டார்கையின் குறிப்பு