பார்த்திபன் கனவு


இது பழைய படம். ஸ்ரீகாந்த், ஸ்னேஹா நடித்தது இல்லை. ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, ராகினி, அசோகன், குமாரி கமலா, ஜாவர் சீதாராமன் என்று பலரும் நடித்தது. இசை வேதா. கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவலை படமாக்கி இருக்கிறார்கள். இயக்கம் யோகநாத். 1960-இல் படம் வெளிவந்திருக்கிறது.

நான் பார்த்தது விஜய் டிவியில். படத்தை கன்னாபின்னா என்று வெட்டிவிட்டார்கள். முன்னால் வர வேண்டிய சீன் பின்னால் வருகிறது, பின்னால் வர வேண்டிய சீன் முன்னால் வருகிறது. கிராம டெண்டு கொட்டாய்களில் அபூர்வமாக ஆபரேட்டர் தூங்கிவிடும்போது ரீல்கள் வரிசை மாறிவிடும். சின்னப் பசங்க நாங்க ஆய் ஊய் என்று ஜாலியாக சத்தம் போடுவோம். ஆபரேட்டர் எழுந்து மாற்றுவார். விஜய் டிவிகாரர்களை என்ன செய்வது?

சரோஜாதேவி மற்றும் பாலாஜியின் பெயர் டைட்டிலில் பார்த்தேன், ஆனால் படம் பூராவும் இவர்கள் வரவே இல்லை. வில்லன் யார் பி.எஸ். வீரப்பாவா? அடையாளம் காண முடியவில்லை, ஆனால் டைட்டிலில் வீரப்பா பேர் இல்லை. நாவலை சில நாட்கள் முன்னால்தான் படித்திருந்தேன், அதனால் சீன்கள் என்ன சீக்வென்சில் வரவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் இவ்வளவு கொடுமை பண்ணக் கூடாது சார்!

கதை தெரிந்திருக்கும். மாமல்லருக்கு (ரங்காராவ்) கப்பம் கட்ட மறுத்து பார்த்திப சோழன் (அசோகன்) போர் புரிந்து இறந்துபோகிறார். இறக்கும் தருவாயில் ஒரு சிவனடியார் பார்த்திபனைப் பார்த்து உன் மகனை வீரனாக வளர்ப்பேன் என்று வாக்குத் தருகிறார். மகன் விக்ரமன் (ஜெமினி) வளர்ந்து புரட்சி செய்து சிறைப்படுகிறான். மாமல்லர் விக்ரமனை நாடு கடத்துகிறார். அதற்குள் அண்ணலும் நோக்கினார், மாமல்லரின் மகள் குந்தவையும் நோக்குகிறாள். நோக்குவது மட்டும்தான், அதிலேயே இரண்டு பேருக்கும் காதல் வந்துவிடுகிறது. நாடு கடத்தப்பட்ட விக்ரமன் செண்பகத்தீவுக்கு அரசன் ஆகிறான். தன குல சொத்தான வாளை எடுத்துப் போக திரும்பி வருகிறான். அங்கே காபாலிகர் கூட்டம் அவனை தாக்குகிறது. பல்லவ ஒற்றர் தலைவன் அவனைக் காப்பாற்றுகிறான். பிறகு அவனுக்கு அடிபட அவன் குந்தவையால் காப்பாற்றப்படுகிறான். இந்த முறை காதலை இருவரும் சொல்லிவிடுகிறார்கள். பின்னே! விட்டுவிட்டால் இன்னும் மூன்று வருஷம் போய்விடுமே! காபாலிகர் கூட்டம் சிவனடியாரை பலி கொடுக்கும்போது எல்லாரும் சரியாக அங்கே போய் அவரைக் காப்பாற்றுகிறார்கள். யார் அந்த சிவனடியார் என்ற சின்னப் பிள்ளைகள் கூட யூகிக்கக் கூடிய பெரும் மர்மம் அவிழ்கிறது. பிறகு, கல்யாணம், சுபம்!

ரங்காராவ் சிறப்பாக நடித்திருந்தார். ஜெமினி, வைஜயந்திமாலா இருவரும் அழகாக இருந்த நாட்கள். ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது.

வேதா கலக்கிவிட்டார். பின்னாளில் ஹிந்திப் பட மெட்டுகளை காப்பி அடித்தே காலத்தை ஓட்டியவர் இவர்தான் என்று நம்பவே முடியாது. கண்ணாலே நான் கண்ட கணமே, இதய வானில் உதய நிலவே, பழகும் தமிழே பார்த்திபன் மகனே என்ற அருமையான பாட்டுகள். ஏ.எம். ராஜா குரல் ஜெமினிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

பாட்டுகள், வீடியோக்கள் கிடைக்காதது துரதிருஷ்டம். ஸ்டில் கூட கிடைக்கவில்லை.

படம் ஒன்றும் பிரமாதமில்லை. (நாவலும் கூட பிரமாதமில்லை.) பழைய பாட்டு, பழைய படம் என்றால் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு மட்டும்.