பல்லாண்டு வாழ்க – என் விமர்சனம்


பல்லாண்டு வாழ்க காலேஜில் ஆடிட்டோரியத்தில் நண்பர்களோடு பார்த்த படங்களில் ஒன்று. என்ஜாய் செய்து பார்த்த படங்களில் ஒன்று. லதா வந்தால் போதும், எல்லாருக்கும் குஷி கிளம்பிவிடும். பாட்டுகளை திரும்பி திரும்பி பார்த்தோம் – பாட்டை கேட்டு ஒரு இருபது வருஷம் ஆகிவிட்டாலும் மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு வயலினில் வரும் டொய்ங் டொய்ங்கும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

திருப்பி திருப்பி எம்ஜிஆர் கண்களை காட்டுவார்கள். அதில் எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதை கைதிகளால் மீற முடியாமல் இருப்பதாகவும் காட்டுவார்கள். தப்பித்துப் போகும் கைதிகள் கூட அண்ணா சிலையின் கண்களையோ, என்னவோ பார்த்து திரும்பிவிடுவார்கள் என்று ஞாபகம். ஹிந்தியில் சாந்தாராம் பற்றி அப்படி காட்டுவது இன்னும் பொருத்தமாக இருந்தது.

நம்பியார், மனோகர், வீரப்பா, வி.கே. ராமசாமி, தேங்காய், குண்டுமணி ஆகிய ஆறு குற்றவாளிகளை திருத்த முயற்சிக்கும் ஜெயிலராக எம்ஜிஆர். அவரை காதலிக்கும் பெண்ணாக லதா. கனவு காட்சிகள், பாட்டுகள். இன்னும் விவரங்களுக்கு விகடன் விமர்சனத்தை பார்த்து கொள்ளுங்கள்.

படம் நன்றாகத்தான் இருந்தது. தோ ஆங்கெனை விட சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ரொம்ப அதிகம் இல்லை.

பாட்டுகள் சூப்பர்! மாசி மாசக் கடசியிலே, ஒன்றே குலமென்று பாடுவோம், சொர்கத்தின் திறப்பு விழா, போய் வா நதி அலையே, செல்லப் பாப்பா, புதியதோர் உலகம் செய்வோம் எல்லாமே அருமையான பாட்டுகள். செல்லப் பாப்பா பாட்டில் தகதகதைதை தகதகதைதை என்று வரும் கோரஸ் மிக அபாரமாக இருக்கும்.மாசி மாசக் கடசியிலே பாட்டில் வயலின் கொஞ்சும்.

பாட்டுகளை இங்கு கேட்கலாம்.

1975-இல் வந்த படம். மணியனின் சொந்த படம். இயக்கம் யாரென்று நினைவில்லை. இசை எம்எஸ்விதான் என்று நினைக்கிறேன், கே.வி. மகாதேவனோ என்று ஒரு சந்தேகம். ஹிந்தியில் தோ ஆங்கேன் பாரா ஹாத் என்று சாந்தாராம் எடுத்த படம். சாந்தாராம் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் உரிமையை கொடுக்க தயங்கினாராம் – மணியன் சொல்லி இருக்கிறார். பல்லாண்டு வாழ்க படம் சிறப்பு காட்சி அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டதும் தமிழ் உரிமையை மணியனுக்கு கொடுத்தது பெரிய தவறு என்று சொன்னாராம். தெலுங்கிலும் என்டிஆர், ஜெயசித்ரா நடித்து மணியன் தயாரித்தார். தெலுங்கில் தோல்வி. அதற்கு காரணம் ஜெயசித்ரா சரியாக நடிக்காததுதான் என்று மணியன் குறை சொன்னது நினைவிருக்கிறது.

பார்க்கலாம். எம்ஜிஆருக்கு வித்தியாசமான படம். 6.5 மார்க். C+ grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்

என் விமர்சனம் – சொல்லத்தான் நினைக்கிறேன்


எப்போதோ பார்த்த படம். துல்லியமாக எல்லாம் நினைவில்லை.

விகடனில் வந்த விமர்சனம் இங்கே.

1973-இல் வந்த படம். சிவகுமார், ஸ்ரீவித்யா, சுபா, ஜெயசித்ரா, கமல், பூர்ணம் விஸ்வநாதன், ஜெயசுதா, எஸ்.வி. சுப்பையா நடித்தது. எம்எஸ்வி இசை. மணியன் விகடனில் தொடர்கதையாக எழுதியது. டோண்டுவும் உஷா ராமச்சந்திரனும் தொடர்கதையின் பெயர் இலவு காத்த கிளி என்று தகவல் தருகிறார்கள். பாலச்சந்தர் இயக்கம்.

சுப்பையாவுக்கு மூன்று பெண்கள் – சுபா, ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா. அவர்கள் வீட்டுக்கு கல்யாணம் ஆகாத சிவகுமார் குடி வருகிறார். மூன்று பேரும் அவர் மேல் ஆசைப்படுகிறார்கள். சிவகுமார் ஜெயசித்ராவை விரும்புகிறார். எல்லாரும் தங்கள் ஆசையை சொல்லத்தான் விரும்புகிறார்கள், ஆனால் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறார்கள். சிவகுமாரின் விருப்பம் தெரிய வரும் மற்ற இருவரும் நாசுக்காக விலகிக் கொள்கிறார்கள். சற்று பொருத்தம் இல்லாத கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கமல் ஒரு ப்ளேபாய். பெண்களை வளைப்பதிலேயே குறியாக இருப்பவர். ஜெயசித்ரா தன் லிஸ்டில் இருப்பதாக தைரியமாக அவரிடமே சொல்வார். ஜெயசித்ரா நான் உன் வலையில் விழ மாட்டேன் என்று சவால் விடுவார். கமல் கொஞ்சம் வயதான பூரணத்தின் மனைவி ஜெயசுதாவை தன்னுடன் வர சம்மதிக்க வைக்கிறார். ஜெயசித்ரா கமலை போகவிடாமல் தடுப்பதற்காக தன் கற்பை பணையம் வைக்கிறார். ஜெயசுதாவை காப்பாற்ற தன் கற்பை இழந்தது புரிந்ததும் கமல் திருந்தி ஜெயசித்ராவை மணக்க, சிவகுமார் இலவு காத்த கிளி ஆகிறார்.

ஜெயசித்ரா மிக சிறப்பாக நடித்த படம் இதுதான். அப்போதெல்லாம் பாலச்சந்தர் படத்தில் எல்லாரும் நன்றாக நடிப்பார்கள், மற்ற படங்களில் சொதப்புவார்கள் என்று ஒரு கருத்து பரவலாக இருந்தது. சுஜாதாதான் மற்ற படங்களிலும் நன்றாக நடித்தார் என்று பேர் வாங்கினார். ஜெயசித்ரா வேறு எந்த படத்திலும் நன்றாக நடித்ததாக எனக்கு நினைவில்லை.

கமலின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. அவர் முதலில் கண்டுகொள்ளப்பட்ட படம் இதுதான் என்று நினைக்கிறேன்.

சிவகுமார், சுப்பையா, ஸ்ரீவித்யா, சுபா எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள்.

இரண்டு பாட்டுகள்தான் நினைவிருக்கிறது. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வி கலக்கிய பாட்டு ஒன்று (உஷா ராமச்சந்திரன் எம் எஸ்வி நன்றாக பாடிய ஒரே பாட்டு இதுதான் என்று சொல்லி இருந்தார்). கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு என்ற பாட்டு இன்னொன்று. அதுவும் நன்றாக இருக்கும்.

பார்க்கலாம். சுவாரசியமான படம்தான். பத்துக்கு ஏழு மார்க். B- grade.

சொல்லத்தான் நினைக்கிறேன் – விகடன் விமர்சனம்


சொல்லத்தான் நினைக்கிறேன் படம் வந்த போது(30-12-73) விகடனில் வந்த விமர்சனம். நன்றி விகடன்!

கதையாகவும் நாடகமாகவும் வந்து ஒருமுகமான பாராட்டைப் பெற்ற ஒரு கதையைப் படமாக்கும்போது பிரச்னைகள் உண்டு. அவற்றைக் கடந்து பாராட்டுக்குரிய படமாக அதைப் பரிமளிக்கச் செய்யமுடியுமா? பாலசந்தரால் அது முடியும் என்பதற்கு அருமையான உதாரணம் – சொல்லத்தான் நினைக்கிறேன்.

மணியனின் கதையை மணி மணியான உத்திகளைக் கையாண்டு மனங்கவரும் குடும்பச் சித்திரமாகப் படைத்துத் தந்திருக்கிறார் பாலசந்தர். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நுழைந்து, அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்கூடாகப் பார்ப்பது போன்ற உணர்ச்சி ஒவ்வோர் அடியிலும் இழைந்திருக்கிறது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் மூன்று பெண்களின் சுபாவமும் மூன்று விதம். மூத்தவள் வாத்தியாரம்மாவும் சரி, அடுப்படியை அடைக்கலமாகக் கொண்ட இரண்டாவது பெண்ணும் சரி, கடைக்குட்டியான கல்லூரி மாணவியும் சரி… ஆசையை வளர்த்துக் கொண்டிருப்பதில் ஒரே ரகம்தான். வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்த மானேஜரின் மனத்திலும் இடம் பிடிக்கத் துடிக்கிறார்கள். இவர்களில் யாராவது நடிக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? அக்கம்பக்கத்தில் சந்தித்து உரையாடுகிறோமே, அப்படிப்பட்ட இயல்பான ஆத்மாக்களாகத்தான் இவர்களைப் பார்க்கிறோம். அவ்வளவு ஜீவனுள்ள பாத்திர சிருஷ்டிகள்!

மானேஜரின் பார்வையைத் தன் பக்கம் திருப்புவதற்காக அலைமோதும் ஆவலுடன், பாத்திரத்தை ணங்கென்று வைத்து வித்யா ஒலி எழுப்புவதும், குச்சியால் தட்டித் தட்டி சத்தம் எழுப்பி சிவகுமாரை அழைப்பதும் புதுமையான உத்தியல்லவா? தான் சமையலில் எக்ஸ்பர்ட் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமின்றி, தன் மனக் கோலத்தையும் ஜாடையாகப் புலப்படுத்துவது போல் சிவகுமாருக்குப் பிடித்தமான பாகற்காய்ப் பொரியலை வித்யா தன் தங்கையின் மூலம் கொடுத்தனுப்ப, அதைக் கொடுத்துவிட்டு வந்து அக்காவை அவள் டீஸ் பண்ணும் நளினம் இருக்கிறதே..!

பேசும்போது திக்குகிற பெண்ணைப் பாடச் சொன்னால்..? பெண் பார்க்க வந்தவர்களின் முன் சுபா பாடும்போது திக்கித் திணற, மீரா பாடிய பாடலைக் கேட்கக் கண்ணன் வரவில்லையோ? என்று குரல் கொடுத்து வித்யா துணைக்குப் பாட வரும் போது கண்களில் நீர் மல்குகிறதே!

நூறு அடிக்கு மேல் இருட்டையே படமாகக் காட்டிய உத்தியையும், வாணி ஜெயராமின் ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாட்டையும், முதலில் மூணு வார்த்தை பேசி பிறகு இரண்டு வார்த்தை பேசும் சுப்பையாவின் குணசித்திரத்தையும் ரசிக்காமல் இருக்க முடியுமா?

நடிப்பில் வித்யா எங்கோ உயரப் போய் நிற்கிறார். படுசுட்டியான கடைக் குட்டிப் பெண் ஜெயசித்ரா தமக்கைகளுடன் போட்டி போடுகிறார்; காதலில் மட்டுமல்ல, நடிப்பிலும்!

மானேஜர் சிவகுமார் ஜென்டில்மேன் என்று வித்யாவிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் பெயரெடுக்கும்படி கம்பீரமாக வருகிறார். கண்ணியமான பாத்திரத்தை நயம்படச் செய்திருக்கிறார்.

கவர்ச்சியான இன்னொரு பாத்திரம் கமல். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞன் தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் என்னென்ன செய்வான் என்பதற்கு உதாரணம். லவ் டாலர் போட்டுக்கொண்டு யூ டோண்ட் நோ பாட்டுப் பாடிக்கொண்டு மது அருந்துவது, இளம்பெண்களைக் குறி வைத்து வீழ்த்துவது என அருமையான பாத்திரத்தை லாகவமாக ஏற்று நடித்து சபாஷ் பெறுகிறார் இளம் நடிகர் கமலஹாசன்.

ஒவ்வொரு சிறு அசைவுக்கும், உணர்ச்சிக்கும், பாவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வே நமக்கு ஏற்படாத வண்ணம் மிக இயற்கையாகப் படம் அமைய வேண்டும் என்று பாடுபட்டிருக்கும் டைரக்டர் பாலசந்தர் ஏன் சிலவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பதை எண்ணும்போது, கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

உதாரணமாக, படத்தில் சர்ச்சைக்குரிய கட்டமான மூன்றாவது பெண் புஷ்பா கற்பைப் பணயம் வைக்கும் முக்கியமான காட்சியை எடுத்துக் கொள்வோம். கமலஹாசனைத் திருத்துகிறேன் என்று முதலில் சவால் விட்ட புஷ்பா, அந்த சவாலைக் காப்பாற்றவே ஒரு புதிய உறவை அவனிடம் ஏற்படுத்திக்கொண்டு மேலும் அவன் தவறு செய்யாமல் தடுத்திருக்கலாம்; அவனைத் திருத்தும் ஒரே காரணத்திற்காகத் தன்னை அவள் இழந்திருக்கலாம்; அல்லது, ஜெயசுதாவின் திருமண வாழ்க்கை உடைந்துவிடப் போகிறது என்று தெரிந்ததனால், இப்போது நடப்பது போலவே தன்னை அவனுக்குத் அர்ப்பணித்து அவனை மாற்ற முயற்சித்திருக்கலாம். இப்படியெல்லாம் நேரிடையாக இதைச் சொல்லியிருந் தால், சர்ச்சைக்கே இடம் இருந்திருக்காதே! அதை விட்டுவிட்டு ஒரு மணி நேரத்தைக் கடத்துவதற்காக என்றும், விமானம் போய்விட வேண்டும் என்பதற்காகவும் அவள் தன்னை இழக்கத் தீர்மானித்தாள் என்றெல்லாம் சம்பவங்களை ஜோடித்து, அதன்பிறகு ‘நேரமும் போச்சு, என் பெண்மையும் போச்சு, விமானமும் போச்சு’ என்று அவளை ஏன் அழ வைக்கவேண்டும்? சொல்லவேண்டியதை தைரியமாகச் சொல்லாமல் ஏன் தயங்குகிறார் டைரக்டர்?

இறுதியில், ஒன்றை மட்டும் கண்டிப்பாகச் சொல்லத்தான் நினைக்கிறோம். இது பாலசந்தர் படைத்துள்ள மிக இனிய குடும்பச் சித்திரம். முற்றிலும் புதுமையான திரை விருந்து!