காற்றினிலே வரும் கீதம் – விகடன் விமர்சனம்


எழுபதுகளின் பிற்பாதியில் விகடனில் சினிமாக்களுக்கு மார்க் போட ஆரம்பித்தார்கள். அப்போது அது ஒரு புதுமையாக இருந்தது. ஏதாவது ஒரு படம் போகலாம் என்றால் விகடனில் எந்த படத்துக்கு மார்க் அதிகம் என்று ஒரு நிமிஷமாவது யோசித்துத்தான் போவோம். மார்க் போடப்பட்டதால் படங்களை ஒப்பிடுவது மிக சுலபமாக இருந்தது.

இன்றும் நினைவு இருக்கும் ஒரு விஷயம் – அண்ணன் ஒரு கோவில் படத்துக்கு நடிப்புக்கு மார்க் போட்டது. சாதாரணமாக முக்கிய நடிகர்களின் நடிப்புக்கு தனித்தனியாக மார்க் போட்டு அதற்கு ஒரு சராசரி எடுத்துப் போடுவார்கள். அ.ஒ. கோவிலுக்கு நடிப்பு என்று நாலு பேருக்கு மார்க் போட்டிருந்தார்கள். இப்படி இருந்தது.
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%
சிவாஜி – 70%

படத்தின் dominant performance சிவாஜிதான் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்.

கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். எந்த படத்துக்கும் அறுபது மார்க் கூட போட்டதாக நினைவில்லை. முள்ளும் மலரும் மட்டும்தான் அறுபதை தாண்டியது என்று நினைக்கிறேன்.

விமல் அப்படி வந்த ஒரு விமர்சனத்தை ஸ்கான் செய்து அனுப்பி இருக்கிறார். இவர் இதை எல்லாம் எங்கே பிடிக்கிறாரோ தெரியவில்லை! விகடனுக்கும் விமலுக்கும் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் 78-இலோ என்னவோ வந்தது என்று நினைக்கிறேன். பஞ்சு அருணாசலம் கதை வசனம். எஸ்.பி. முத்துராமன் இயக்கம். இளையராஜா இசை. முத்துராமன் ஹீரோ, கவிதா நாயகி. ராஜு இது கவிதாவின் முதல் படம் என்று தகவல் தருகிறார். படம் ஓடவில்லையோ?

பாட்டெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஹிட் ஆனது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இப்போது எந்த பாட்டும் நினைவில்லை. நினைவிருப்பவர்கள் சொல்லலாம். விமல் பாட்டுகளின் லிஸ்டை தந்திருக்கிறார் –

  1. கண்டேன் எங்கும் (வாணி ஜெயராம் பாடியது)
  2. கண்டேன் எங்கும் (எஸ். ஜானகி பாடியது) – இந்த பாட்டை இங்கே டவுன்லோட் செய்யலாம்.
  3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தையரே தையா (ஜெயச்சந்திரன் பாடியது)
  4. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய் (ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி பாடியது)

நண்பர் சிமுலேஷன் சித்திரச் செவ்வானம் பாட்டுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். (பாட்டுதான், வீடியோ இல்லை, பாட்டு பூராவும் இளையராஜா ஃபோட்டோ காட்டுகிறார்கள்.) அது சாவித்திரி (அபூர்வ) ராகத்தில் அமைந்த பாட்டாம். வெகு சில சினிமாப் பாட்டுக்களே இந்த ராகத்தில் உள்ளனவாம். என்னென்ன பாட்டுகள் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த சுட்டியைப் பார்க்கவும்.

விமலுக்கு கண்டேன் எங்கும் பாட்டு மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பாட்டின் வரிகளையும் தந்திருக்கிறார்.

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத்தொட்டு பேசும் தென்றல்
தொட்டில்கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே
வருவாய் அன்பே என்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ
நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாரும் இல்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இது தானே
எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டிகள்: சாவித்திரி ராக சினிமாப் பாட்டுகள்