ராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)


முன்னால் எப்போதோ இந்த ப்ரோக்ராமில் டெலிகாஸ்ட் ஆனது. 1973இல் வந்த படம். சிவாஜி, உஷாநந்தினி, ஸ்ரீகாந்த், வி.கே. ராமசாமி, டி.கே.பகவதி, மனோரமா, ஜெயா, குமாரி பத்மினி நடித்து, எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பி. மாதவனின் இயக்கத்தில் வெளியானது. நூறு நாட்கள் ஓடி இருக்கிறது.

வந்த புதிதில் இந்த படத்தை காஞ்சிபுரத்தில் பார்த்திருக்கிறேன். ஒன்றும் சரியாக நினைவில்லை. சிவாஜி பல தேச பக்தர்கள் வேஷத்தில் வருவார் என்பது மட்டும் மங்கலாக ஞாபகம் இருக்கிறது. திருப்பூர் குமரனாக நடிக்கும்போது அவரும் இறந்துவிடுவாரோ?

“மதன மாளிகையில்” நல்ல பாட்டு. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் நன்றாக பாடி இருப்பார்கள். கண்ணதாசனோ?

“அம்மம்மா தம்பி என்று நம்பி”, “ஜிஞ்சினுக்கான் சின்னக் கிளி” என்று இன்னும் இரண்டு பாட்டுகள். முதல் பாட்டுக்கு இரண்டு version. இரண்டும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

பாட்டுக்களை இங்கே கேட்கலாம்

நான் இப்போது இந்த படத்தை பார்க்கவில்லை. கீழே இருப்பது விகடனிலிருந்து சுட்டது. காப்பிரைட், டீரைட் ப்ராப்ளம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் எடுத்துவிடுவேன்.

அர்ஜுனனாக வந்தாலென்ன, அரிச்சந்திரனாக வந்தாலென்ன; வேலன், நந்தன், பகத்சிங், திருப்பூர் குமரன் – எந்த வேடமானாலும் சரி, சிவாஜியின் நடிப்பு சுடர் விட்டுத் தெறிப்பதற்குச் சொல்லவா வேண்டும்? நேரத்திற்கொரு தோற்றம் காட்டுகிறார்; நிமிடத்திற்கு ஓர் உணர்ச்சியைப் படைக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ ஆயிற்றே!

பிரசவிக்கப்போகும் தங்கையைப் பார்க்க வரும்படி, பணக்காரரின் மருமகனாகிவிட்ட தன் தம்பியை (ஸ்ரீகாந்த்) அழைக்கப்போன இடத்தில் சிவாஜி நாடகமாடுவதும், பாடுவதும் நெஞ்சைப் பிழிந்தெடுக்கின்றன. தம்பியை அழைத்து வரமுடியாத நிலையில் தங்கை ஜெயாவிடம் சமாதானம் சொல்கிறாரே, அது மட்டும் சளைத்ததா என்ன? தன்னுடைய மாமனாருக்கு முன்னால் வந்து, ‘ராஜபார்ட் ரங்கதுரை தன் அண்ணன் அல்ல’ என்று நாடகமாடும்படி ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டபடி நடக்கிறாரே, அது சிகரமான காட்சி!

கல்யாண வீட்டில் வெறும் பார்வையினால் மௌனப் புரட்சி நடத்துவதும், தங்கைக்குக் கொள்ளி வைத்துவிட்டுத் திரும்பும்போது சசிகுமாரிடம், ”நீங்கள்ளாம் ஒரு மனுஷனாடா, சீ போடா!” என்று சொல்லிவிட்டு வருவதும் சிவாஜிக்கே உரிய முத்திரை!

ராஜபார்ட்டின் வாழ்க் கையில் ஸ்திரீ பார்ட்டை ஏற்கும் உஷாநந்தினி சிறிதும் சோபிக்கவில்லை. தமிழ்த் திரை உலகில் அவர் ஏனோ எடுபடவே இல்லை! ஆனால், நாடக ஸ்திரீ பார்ட்டான மனோரமா சற்று அழுத்த மாகவே சிரிக்க வைக்கிறார். ரங்கதுரையின் தம்பியான ஸ்ரீகாந்தும் குமாரி பத்மினியும் வரும் காட்சிகளில் வார்த்தைப் பஞ்சம் இருந்தாலும், கலகலப்பு இருக்கிறது.

கதைப் போக்கில் வரும் காட்சி களை விட நாடக மேடைக் காட்சிகளே திரும்பத் திரும்பத் வருகின்றன. நவரசக்காட்சிகளாக அவை அமைந்திருக்கின் றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், துண்டுத் துண்டாகத் தனித்து நிற்பது போல் உணரத் தோன்றுகிறது. டைரக்டர் இன் னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். கடைசி நாடகக் காட்சியான ‘கொடி காத்த குமரன்’ நாடகப் பின்னணிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதையைப் பொறுத்தவரை ராஜபார்ட் ரங்கதுரை இறந்து போவது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால், ‘ஒரு நாடக நடிகனின் கதி இப்படித் தான் ஆகும்’ என்று சொல்லிக் காட்டுவது போல் இருக்கிறது. வேறு வழியில்லைதான்!

‘அம்மம்மா… தம்பி என்று நம்பி’ பாடல் மனத்தை உருக்கு கிறது.

‘ராஜபார்ட் ரங்கதுரை’ நடிப்பில் அசல் ‘ராஜபார்ட்!’

சாரதா இதற்கு ஒரு நீண்ட மறுமொழி அளித்திருந்தார். அதில் வெளியிடப்பட்டபோது காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி ஒரு நல்ல அறிமுகம் அளித்திருந்தார். அதையும் இத்துடன் இணைக்கிறேன். அவர் ஆட்சேபிக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அவரது அனுமதியை கேட்டதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு “மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி” என்ற பழமொழி இப்போது பயனுள்ளதாக இருக்கிறது.
சாரதா சொல்வதென்னவென்றால்:
செப்டம்பர் 18, 2008 at 11:51 மு.பகல்
(முன்பு சன் டிவியின் முத்தான திரைப்படங்கள் வரிசையில் இப்படத்தைப்பார்த்த மறுநாள், நான் எழுதிய குறிப்பு. இங்கே தருவதில் தவறில்லை என்பதால் பதிக்கிறேன்)

நேற்றிரவு நானும் “ராஜபார்ட் ரங்கதுரை” திரைக்காவியத்தை, கண்கொட்டாமல் கண்டு ரசித்தேன். (எத்தனையாவது முறை என்று தெரியவில்லை…). இன்னொரு விசேஷம், இப்படத்தை என்னோடு அம்ர்ந்துபார்க்க என் தந்தையை அழைத்திருந்தேன். அவரும் மயிலையில் இருந்து அண்ணா நகர் வந்திருதார். காரணம் இத்திரைப்படம் வெளியானபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருந்தவர் அவர். அதை அவர் விளக்க நானும் என் கணவரும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நடிகர்திலகத்தின் மற்ற படங்களைப்போல் அல்ல இது. பெருந்தலைவரின் தீவிர தொண்டனாக இருந்த நேரம், பல்வேறு அரசியல் சுவாரஸ்யங்களைப்போர்த்தி வந்த படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை’.

‘இங்குலாப் ஜிந்தாபாத்’ பாடல் காட்சியிலும், கொடிகாத்த குமரன் காட்சியில் இடம் பெற்ற வசனங்களிலும் அன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறு பாடல் வரிகளும், வசனங்களும் கையாளப்பட்டிருந்தன. ஸ்தாபன காங்கிரஸின் சார்புப் பத்திரிகைகளாக விளங்கிய ‘நவசக்தி’, ‘அலை ஓசை’ பத்திரிக்கைகளும் பாடலில் நுழைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் வந்திருந்த ‘எங்கள்தங்கராஜா’ வும் ‘கௌரவமும்’ நடிகர்திலகத்தின் நடிப்பை பொதுப்படையாக விரும்புவோர்க்கு விருந்தாக அமைந்திருந்தன என்றால், ‘ராஜபார்ட் ரங்கதுரை’ சிவாஜி மன்றத்தோடும், காங்கிரஸ் பேரியக்கத்தோடும் ஒன்றியிருந்த ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது.

வழக்கமாக திரைத்துறையினருக்கு மட்டுமே ஸ்பெஷல் காட்சிகள் காண்பிக்கப்படும் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுக்காக ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பெருந்தலைவர் காமராஜ், குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, மணிவர்மா, எம்.பி.சுப்பிரமணியம், இளையபெருமாள், சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை, எழுத்தாளர் சாவி, ஜெயகாந்தன், தமிழ்வாணன், சோ, கண்ணதாசன், ஜி.உமாபதி போன்றவர்கள் கலந்துகொண்டு படத்தைப்பார்த்து பாராட்டினராம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தியவாறு நடிகர்திலகம் இறக்கும் காட்சியைப்பார்த்து பெருந்தலைவர் கண்கலங்கினாராம்.

இந்த விவரங்கள் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களுக்கு எட்டப்போக, அவர்கள் உற்சாகத்துடன் படத்தை வரவேற்க சென்னை ‘பைலட்’ தியேட்டரில் கூடினராம். ‘ஹேம்லெட்’ நாடகத்தில் நடிகர்திலகம் கையில் வாள் பிடித்து நிற்கும் காட்சி பெரிய கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்ததாம்.

இன்குலாப் ஜிந்தாபாத் பாடல் முடிவில், நடிகர்திலகம் தூக்கில் தொங்கும் காட்சியைக்கண்டு அவரது மனைவி உஷா நந்தினி அலற… அதைத்தொடர்ந்து நாடகம் பார்க்கும் ரசிகர்களும் ‘இன்குலாப்’ கோஷம் போட அதோடு நாடகத்தில் திரை விழும். உடனே பைலட் தியேட்டரில் இருந்த ரசிகர்களும் எழுந்து நின்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்.. இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட, திரையரங்கமே அதிர்ந்ததாம். இப்படி பல்வேறு உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகளை அப்பா சொல்லிக்கொண்டே இருந்தார்.

கடைசியில் இயற்கை எய்தும் காட்சியில் நடிகர்திலகம் பேசும் வசனம் “யாரும் அழக்கூடாது. இந்த மேடையில் இந்த கொடியோடு சாகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்”. (மேடை என்று குறிப்பிட்டது அவரது உயிர்மூச்சான நடிப்புக்கலையும், கொடி என்று குறிப்பிட்டது அவர் கண்ணாக மதித்த காங்கிரஸ் பேரியக்கமும் தான்).

படம் முழுக்க பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அதனால் இடையிடையே நமது பரிதாபத்தை கிளறிவிடும் காட்சிகளும் வந்துபோகும். அதில் ஒன்று, தன் நாடகத்துக்கு எதிராக தன் மாமனாரே திரைப்படக் கொட்டகைபோட்டு தன் தொழிலை நலிவடைய செய்ய, நாடகம் பார்க்க வந்திருக்கும் மிக சொற்பமானவர்களுக்காக, தன்னுடைய ‘அரிச்சந்திரா’ வசனத்தை பேச ஆரம்பிக்க, கூட்டத்தின்ர் சினிமா பாடல் பாடும்படி வற்புறுத்த, “ஐயா எனக்கு அந்தப்பாட்டெல்லாம் தெரியாது” என்று அவர் பரிதாபமாக கூறிநிற்கும் இடமும், அதைத்தொடர்ந்து, ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்துப்போட்டு விட்டுப்போக, அவர் மௌனமாக அவற்றின் நடுவே நடந்து வரும் இடமும் கண்க்களில் நீரை வரவழைக்கும் பல கட்டங்களில் ஒன்று.

இன்னொரு விசேஷம், ‘மிகை நடிப்பு’ என்று யாரும் சொல்ல இடம் கொடுக்காத படம் இது.