விமர்சனம் என்றால் இப்படி!


எனக்கு எப்போதுமே சுருக்கமாக விமர்சனம் எழுத வரவில்லை என்று ஒரு எண்ணம் உண்டு. படத்தின் பங்களிப்பாளர்கள், கதை, அப்புறம் என் எண்ணங்கள், பாட்டுகள், grade போடுவது என்று எனக்கு ஒரு ஃபார்முலா காலப்போக்கில் உருவாக்கி இருக்கிறது. பதிவு எல்லாம் scroll செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு ஸ்க்ரீன் அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் ஃபார்முலாவை இந்த லட்சிய நீளத்துக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். என் போன்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க இன்றைக்கு இரண்டு விமரிசனங்கள் – குமுதம் பத்திரிகையில் படங்கள் ரிலீசானபோது வந்தவை என்று கேள்வி. வார்த்தைகள் சரியாக இருக்கின்றனவோ என்னவோ, ஏறக்குறைய இப்படித்தான் எழுதி இருந்தார்களாம்.

முதல் விமர்சனம் எம்ஜிஆர் நடித்த மாடப்புறா படத்துக்கு – நொந்து போயிருக்கிறோம். ஒன்றும் கேட்காதீர்கள்!

இரண்டாவது எஸ் எஸ் ஆர் நடித்த அவன் பித்தனா? படத்துக்கு – ஆம். யார் பித்தன், படம் பார்த்தவரா இல்லை எடுத்தவரா என்று தெரியவில்லை.

இரண்டு படத்தையும் நான் பார்த்ததில்லை. இந்த விமர்சனங்களுக்காகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவர்கள் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!

உப்பிலி ஸ்ரீனிவாஸ் இன்னும் சில சுருக்கமான விமர்சனங்களை குறிப்பிடுகிறார்.

 • பாய்ஸ் படத்துக்கு ஆனந்த விகடனில்: ச்சீய்!
 • சாவியில் சுப்பிரமணிய ராஜு எழுதிய ஒரு விமர்சனம்: படத்தில் ஒரு பெண் வருகிறாள். அவள் கல்லூரி மாணவியாம். படத்தில் ஒரு நடுவயதுக்காரன் வருகிறான். அவன் மாணவனாம். இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள். இடைவேளை. அப்புறம்? எவன் பார்த்தான்? (என்ன படம் தெரியவில்லையே?)
 • குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
  கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
  பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

  (எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)
 • நடிகர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்துக்கு கல்கி விமர்சனம் – கமர்ஷியல் கேசரி!
 • லிங்குசாமி இயக்கிய பையா படத்துக்கு விகடனின் விமர்சனம் – காதல் கொண்ட பெண் அருகில் இருக்க, மிக நீண்ட பயணம்விகடன் முழு பக்க விமர்சனம் எழுதி இருக்கிறது, நான்தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன்.
 • டோண்டு இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்களை இங்கே கொடுத்திருக்கிறார்.

  கொசுறு: உப்பிலி ஸ்ரீனிவாஸ் சரவண கார்த்திகேயன் எழுதிய யாவரும் நலம் விமர்சனத்தை ஒரு சுஜாதா பதிவுக்குள் இழுத்து போட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்!

  தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

  தொடர்புடைய பதிவுகள்:
  டோண்டுவின் பதிவு – இன்னும் சில ரத்தினச் சுருக்கமான விமர்சனங்கள்
  உப்பிலி ஸ்ரீனிவாசின் உண்மைக்கு மிக அருகில் பதிவு

  தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி – 1964இல் விகடனில் வந்த கட்டுரை


  நன்றி விகடன்!

  ‘ஔவையார்’ முருகன்!

  திவான்பகதூர் ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.

  எதிரொலி என்ற நாடகத்தின் போது, தலைமை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள்!  ஆண்கள் பள்ளியில், மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர், ”மிஸ்டர் சுப்பராமன்” என்று கூப் பிட்டு, சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார்.

  ”என்ன இது! உங்கள் நாடகத் தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்லவே இல்லையே? இது மகா தவறு!” என்றார்.

  சுப்பராமன் சிரித்தபடி, ”சார், மன்னிக்கணும். அது பெண் அல்ல! நம்ம பள்ளி மாணவன்தான் சார்!” என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை.

  அத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றி னார்.

  பின்னர், தன் தந்தை பணியாற் றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார். சில மாதங்களில் அதை ராஜிநாமா செய்துவிட்டு, நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மானேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து, நடிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

  சில வருடங்களுக்கு முன் சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை! இவரிடம் இதுவரை மொத்தம் பத்தொன்பது கார்கள் கை மாறியிருக்கின்றன.

  இவருடைய பிள்ளை சுட்டிப் பயல் சுரேஷ், நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் – பாலாஜி.