மாமன் மகள் இல்லை ஆயுதம் செய்வோம் (Maman MagaL illai Aayutham Seyvom))


இன்று வீட்டில் ஸ்ட்ரைக். என் இரண்டு பெண்களுக்கும் ஏதோ Hannah Montana பார்க்க வேண்டுமாம், என் மனைவிக்கோ பழைய கறுப்பு வெள்ளை தமிழ் படத்தை சகித்துக் கொள்ளும் பொறுமை போய் விட்டது. இதனால் எனக்கு மாமன் மகள் பார்க்க ஒரு டிவியும் கிடைக்கவில்லை. கடைசியில் ஆயுதம் செய்வோம் என்ற படத்தைப் பார்த்தோம். இது ஒரு டைம் பாஸ் படம். லகே ரகோ முன்னாபாயின் ((என் தமிழ் எழுத்தியால் h என்ற மெய் எழுத்தை சரியாக கையாள முடியவில்லையே? எப்போதும் h k ஆகிவிடுகிறதே!) பாதிப்பு தெரிகிறது. இதைப் பற்றிதான் இன்று விமர்சனம் எழுத வேண்டிய நிலைமை.

மாமன் மகளை முன்னால் எப்போதோ பார்த்திருக்கிறேன். இது 1955-இல் ஒரு யூத் படமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜெமினி கணேசன், சாவித்திரி, சந்திரபாபு நடிக்க, எஸ்.வி. வெங்கட்ராமன் இசை. ஒரே ஒரு பாடல்தான் நினைவிருக்கிறது – கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு. ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய பாட்டு அல்ல.

ஆயுதம் செய்வோம் சுந்தர், விவேக், விஜயகுமார், நாசர் நடித்துள்ள படம். ஸ்ரீகாந்த் தேவா இசை. படத்தில் காமெடி இழைந்து வருகிறது. விவேக்கின் மார்கெட்டை உயர்த்தும். சுந்தருக்கும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் காலேஜில் படிக்கும் போது இந்த மாதிரி படங்களைத்தான் பார்க்க ஆசைப்படுவோம். அது இன்றும் மாறி இருக்காது என்று நினைக்கிறேன். மாளவிகாவை வைத்து காந்தியை மார்க்கெட் செய்யும் காட்சியில் வாய் விட்டு சிரித்தேன். சுந்தரின் பலம் அவர் அலட்டிக் கொள்ளாமல் வந்து போவதுதான். கடைசியில் வில்லன் மனம் மாறும் காட்சியை டைரக்டர் கூட நம்ப மாட்டார். படத்தை முடித்தாக வேண்டுமே? எல்லா பாட்டுக்களும் எங்கோ கேட்டது போலவே இருந்தன. முதல் பாட்டு “கைகே பானு பனாரஸ்வாலா” மெட்டின் காப்பி என்பது மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு முறை பார்க்கலாம். அதுவும் வீடியோவில் பார்ப்பது உத்தமம். காலேஜை கட் அடித்து விட்டு பார்க்க உகந்த படம்.