அன்பே நூறுயிரே


இது வரை எழுதியவற்றில் மிகவும் பிரபலமான போஸ்ட் அன்பே ஆருயிரே. நூற்றுக்கும் அதிகமான ஹிட்கள். ஏன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு வேளை எஸ்.ஜே. சூர்யாவின் படத்தைப் பற்றி தேடி இங்கே வந்துவிட்டீர்களோ? இல்லை என்றால் படங்களின் பட்டியலில் முதலில் இருப்பதால் வந்த விளைவோ?

நூற்றுக்கு மேல் ஹிட் கிடைத்த இன்னொரு போஸ்ட் சுப்ரமணியபுரம்.

நானே மிகவும் ரசித்த போஸ்ட் நான் பெற்ற செல்வம். அவ்வளவு பிரபலம் அடையவில்லை.

சூடான போஸ்ட் எம்ஜிஆர் குதிரை… நிறைய திட்டு வாங்கினேன். ஜாலியாக இருந்தது.

ஒரு digression. சிறு வயதில் எங்கள் கிராமத்தில் சிறுவர்கள் பாடும் பாடல்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
எம்ஜிஆர் குதிரை பறக்கட்டுமே
சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே
காமராஜர் வந்து அடிக்கட்டுமே
அண்ணா வந்து சிரிக்கட்டுமே

இப்போது இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம், எதற்காக பாடினோம் என்றே புரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் எல்லாரும் பாடுவோம். இந்த பாட்டு பிரபலமாய் இருந்தபோது நான் எம்ஜிஆர் கோஷ்டியிலிருந்து சிவாஜிக்கு மாறி விட்டிருந்தேன். (எட்டு வயதிலிருந்து பத்து வரைக்கும் எம்ஜிஆர், பத்திலிருந்து பன்னிரண்டு, பதிமூன்று வரைக்கும் சிவாஜி, பிறகு கமல், ரஜினி இருவரும்) காமராஜர் அடிப்பது ஏன்? அண்ணா சிரிப்பது ஏன்? இந்த பாட்டுக்குள் புதைந்திருக்கும் மர்மங்கள் என்ன?

கிராமத்தின் பேர் மானாம்பதி. பக்கத்து ஊர்கள் பெருநகர், களியாம்பூண்டி. பக்கத்தில் இருந்த சின்ன “பெரிய ஊர்” உத்தரமேரூர். புதுப் படங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் தொலைவிலுள்ள காஞ்சிபுரத்துக்கு போகவேண்டும். பாடம் சொல்லிக்கொடுத்த வேல்முருகன் சார், தமிழரசு சார், பி.டி. வாத்தியார் அந்தோணிசாமி சார் மற்றும் நடேச நாராயணன் சார், அவரது மனைவி கிரிஜாம்பாள் டீச்சர், லைலா டீச்சர், சுப்பையன் சார், அவரை மணந்து கொண்ட பி.டி. டீச்சர் தேஜோபாலா, தையல் டீச்சர் ரமாபாய், எம்.ஆர். என்று அழைக்கப்படும் எம். ராமசாமி சார், எல்லா ஃபங்ஷநிலும் “மேரே சப்னோன் கி ராணி கப் ஆயேகி து” என்று பாட்டு பாடும் செல்வராஜ் சார் ஆகியோரைத் தெரிந்தவர்கள் யாராவது இதைப் படிக்கிறீர்களா? நான் படிக்கும்போது என் அப்பாதான் ஹெட்மாஸ்டர். ரொம்ப சவுகர்யம். :-))