நேற்று இன்று நாளை


திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.

ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.

கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

“மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!

“விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.

கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்… ‘நேற்று இன்று நாளை’ நேர்த்தியான பொழுதுபோக்கு.

நண்பர் சிமுலேஷன் தந்திருக்கும் பாட்டு சுட்டி.

நினைத்ததை முடிப்பவன் – என் விமர்சனம்


படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

அறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.

மேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.

இரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்!

படம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் பரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

பத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.

நினைத்ததை முடிப்பவன்


விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.

அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)1975இல் வந்த படம். சிவாஜியைத் தவிர மஞ்சுளா, மேஜர், நாகேஷ், வி.கே. ராமசாமி, சுகுமாரி, காந்திமதி, மனோரமா, மௌலி, தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி. மஹேந்திரன், எஸ். ராமாராவ், சுருளிராஜன் நடித்திருக்கிறார்கள். எம்எஸ்வி இசை, வாலி எல்லா பாட்டுகளையும் எழுதி இருக்கிறார். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கம். படம் தோல்வி.

நெட்டில் “அன்பே ஆருயிரே” என்று தேடினால் எங்கே பார்த்தாலும் எஸ்.ஜே. சூர்யா, நிலா நடித்த புத்தம் புதிய திரைப்படம்தான் தெரிகிறது. பழைய டைட்டில்களை திருப்பி யூஸ் பண்ணாதீங்கப்பா! என்னை மாதிரி பழைய படத்தை பற்றி விவரம் தேடறவங்க பாடு திண்டாட்டம் ஆயிடுது!

பாட்டுக்கள் சுமார்தான். “பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு”, “மல்லிகை முல்லை பூப்பந்தல்”, “காமதேனுவும் சோம பானமும்” என்ற பாட்டுகளை கேட்டிருக்கிறேன். முதல் பாட்டு டிஎம்எஸ்ஸும் எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியது.

இரண்டாவதுதான் படத்தின் சிறந்த பாடல். வாணி ஜெயராம் பாடியது. திருமண சடங்குகளை அழகாக விவரிக்கிறது. இந்த பாட்டு காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் “நாளாம் நாளாம் திருநாளாம்” பாட்டு போல இல்லை? ஒரு வேளை ஒரே ராகத்தின் சாயலை இரண்டிலும் பயன்படுத்தி இருக்கிறார்களோ? சங்கீதம் தெரிந்தவர்கள் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு சொல்லுங்களேன்! இவை இரண்டுமே திலங் ராகத்தில் அமைக்கப் பட்டதாம். என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு யாராவது சொனால்தான் தெரியும். சரி, இப்போது திலங் ராகம் எப்படி இருக்கும் என்று ஒரு குத்துமதிப்பான ஐடியா இருக்கிறது.

“ராஜ வீதி பவனி”, “ஓசை கொள்ளாமல் நாம் உறவு கொள்வோமே” இரண்டும் நான் கேட்டதில்லை. மிச்ச எல்லா பாட்டுகளையும் டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.

திரைக்கதை இழுவைதான். மஞ்சுளாவின் அப்பா வி.கே. ராமசாமியும் சிவாஜியின் அப்பா மேஜரும் ஜென்ம விரோதிகள். அப்பாக்கள் ஜென்ம விரோதிகளாக இருந்தால் பிள்ளைகள் காதலிக்கவேண்டும் என்ற விதிப்படி சிவாஜியும் மஞ்சுளாவும் காதலிக்கிறார்கள், கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். மேஜர் இடைவேளைக்கு பிறகும் படத்தை ஓட்டுவதற்காக சிவாஜி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். சிவாஜியும் மஞ்சுளாவும் ஒத்துக்கொண்டாலும் பிறகு பெங்களூரு போவதாக டிராமா போட்டு ஒரு லாட்ஜில் போய் தங்குகிறார்கள். இந்த லாட்ஜில் தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்ககூடிய ஒரு கோமாளிக் கூட்டமே தங்கி இருக்கிறது. தங்கவேலு, வெ.ஆ. மூர்த்தி, ஒய்.ஜி., மனோரமா, மௌலி மற்றும் பலர் ஒரு அரைவேக்காட்டுத்தனமான கூத்தடிகிறார்கள். க்ளைமாக்சில் சிவாஜியும் மஞ்சுளாவும் கிருஷ்ணன் ராதா மேக்கப்பில் வேறு. க்ளைமாக்சில் சிவாஜி, மேஜர், நாகேஷ், எல்லாரும் 15 நிமிஷம் வரைக்கும் நீள நீள வசனங்கள் பேசி சுபம்!

இரண்டாம் பகுதி அமெச்சூர் நாடகம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. சென்னை நாடக சபாக்களில் யாராவது இந்த நாடகங்கள் பார்த்ததில்லை என்றால் இதில் இரண்டாம் பகுதியை பார்த்தால் போதும். எழுபதுகளில் இந்த மாதிரி அமெச்சூர் நாடகங்கள் ரசிக்கப்பட்டன, அதனால் இந்த படம் அப்போது வெற்றி அடைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த படத்திலும் சிவாஜிக்கு தொப்பை தெரிகிறது, ஆனால் தொப்பை மட்டும் தெரியவில்லை. ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கக்கூடிய லேசான குருவித் தொப்பை. கொஞ்சம் அசடாக சிவாஜி திறமையாகத்தான் நடித்திருக்கிறார், ஆனால் இந்த கதைக்கு எப்படி நடித்தாலும் ஒரு பயனும் இல்லை. மஞ்சுளா க்யூட்டாக இருக்கிறார். அவரது கவுன் “காமதேனுவும் சோம பானமும்” பாட்டில் கொஞ்சம் அபாயமான லெவலுக்கு இறங்கி இருக்கிறது.

படம் அன்றைய ரசனைக்கு – குறிப்பாக சென்னை சபா நாடகங்கள் ரசிகர்களுக்கு – சரி வந்திருக்கலாம். இன்றைய ரசனைக்கு சரிப்படாது. பாட்டுகளும் ஏ க்ளாஸ் இல்லை, பி க்ளாஸ்தான். அதனால் 10க்கு 4.5 மார்க்தான். D grade.

அடுத்த வாரப் படங்கள் (Week of Sep 1)


திங்கள் – பணம் படைத்தவன். எம்ஜிஆரின் சுமாரான படங்களில் ஒன்று. ஒல்லியான கே.ஆர். விஜயா, சௌகார் நடித்தது. “கண் போன போக்கிலே”, “பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”, “அந்த மாப்பிளே கையை புடிச்சான்”, “எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க” போன்ற பல நல்ல பாட்டுக்கள். படம் ஒன்றும் சுகமில்லை என்று நினைவு.

செவ்வாய் – நாலும் தெரிந்தவன். கேள்விப்பட்டதே இல்லை. சன் டிவிக்கு படங்கள் எங்கிருந்துதான் கிடைக்குமோ தெரியவில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்ததாம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையாம்.

புதன் – பிள்ளையார் சதுர்த்தியினால் இந்த ப்ரோகிராம் கட். விஷால், பிரபு, நதியா நடித்த புத்தம் புதிய திரைப்படமான தாமிரபரணி திரையிடப்படுகிறது.

புதன் வியாழன் – அன்பே ஆருயிரே. எஸ்.ஜே. சூர்யா படம் இல்லை! சிவாஜி, பெரிய சோடா புட்டி கண்ணாடி போட்ட மஞ்சுளா நடித்தது. தோல்வி படம். “மல்லிகை முல்லை பூப்பந்தல்” பாட்டுதான் தெரியும்.

வியாழன் வெள்ளி- மகாதேவி. “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி” பி.எஸ். வீரப்பாவின் பிரபலமான வசனம் கேட்டிருக்கலாம். “கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே”, “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்ற நல்ல பாட்டுக்கள். கண்ணதாசன் கதை வசனம்!

இந்த முறை 4 படங்கள்தான் அறிவிக்கப்பட்டன. (பிள்ளையார் சதுர்த்தியினால் என்று தெரிந்துகொண்டேன்.) திரையிடப்படும் படங்கள் வேறு மோசமாகிகொண்டே போகின்றன. இத்தோடு ப்ரோகிராமை முடிக்கப் போகிறார்களோ என்னவோ தெரியவில்லை. I hope not.

டாக்டர் சிவா (Dr. Siva)


74, 75ஆம் ஆண்டு வாக்கில்தான் எம்ஜியாரின் ரசிகனாக இருந்த நான் சிவாஜியின் “நடிப்பு” ரசிகனாக மாறி இருந்தேன். நாங்கள் அப்போது ஒரு குக்கிராமத்தில் வசித்தோம். கமலும் ரஜினியும் அந்த கிராமத்தில் நுழைய இன்னும் 3, 4 ஆண்டுகள் இருந்தன. அப்போது எம்ஜியார் சிவாஜிக்கென்று எங்கள் வயது (5இலிருந்து 15) சிறுவர்களுக்குள் கோஷ்டிகள் உண்டு. மிகச் சிலர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கரின் ரசிகர்கள். எம்ஜியார் ரசிகர்கள் “ஒரு உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு சூப்பர் சிவாஜி படம் சொல்லுடா” என்றால் சிவாஜி கோஷ்டியை சேர்ந்த நாங்கள் கொஞ்சம் தலை குனிந்த படியே “வெயிட் பண்ணுடா, டாக்டர் சிவா, இளைய தலைமுறை, அவன் ஒரு சரித்திரம் எல்லாம் வருதுடா” என்போம். ஏனென்றால் சிவாஜியின் சமீபத்திய படங்களை (மனிதனும் தெய்வமாகலாம், ராஜபார்ட் ரங்கதுரை) நாங்கள் யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை. மூன்றுமே தாமதமாகத்தான் வந்தன. மூன்றுமே எங்கள் சிவாஜி கோஷ்டியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டன. டாக்டர் சிவாவை பார்த்து விட்டு தீவிர சிவாஜி ரசிகர்களே சுமார் என்றுதான் சொன்னார்கள் என்று ஞாபகம். இளைய தலைமுறை ஓடவே இல்லை. அவன் ஒரு சரித்திரமும் ஓட வில்லை என்று ஞாபகம்.

வயிறு எப்படி எரியாமல் இருக்கும்? சிவாஜி full form-இல் இருக்கிறார். அவர் “ஏஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”(Yes) என்று உறுமும்போதும், “ஓ மை காட்” என்று அலறும்போதும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான் என்று தோன்றியது. எல்லாரும் – மேஜர், பண்டரிபாய், மஞ்சுளா, நாகேஷ் – அப்படியே பல படங்களில் உபயோகப்படுத்திய அச்சையே மீண்டும் ஒரு முறை அலட்டிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். அதுவும் மேஜர் மஞ்சுளாவை வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் சிவாஜிக்கே ஓவர் ஆக்டிங்கில் சவால் விடுகிறார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜி என்றதுமே படத்தின் காட்சிகள் எல்லாம் ஏறக்குறைய முடிவாகிவிடுகிறது. டைரக்டருக்கு அவரது சாமர்த்தியத்தைக் காட்ட ஸ்கோப்பே இல்லை. அவர் கவர்ச்சிக் காட்சிகளில்தான் தனது திறமையைக் காட்டி இருக்கிறார். டைரக்டருக்கு மஞ்சுளாவை டூ-பீஸ் நீச்சல் உடையில் நீண்ட நேரம் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? ஒரு கழுதை மஞ்சுளாவின் உடையைத் தூக்கிகொண்டு ஓடி விடுகிறது! என்னே டைரக்டரின் சாமர்த்தியம்! பற்றாக்குறைக்கு ஜெயமாலினி (முதல் படமாம்) வேறு. அவர் எப்போதும் தொடை தெரிய அரை ட்ரவுசரும் எவ்வளவு மேலே தூக்கிக் கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிக் கட்டிய சட்டையுமாக சுற்றுகிறார்.

அந்தக் காலத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் கன்டின்யூடி எல்லாம் பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. சிவாஜி முதல் ஒரு மணி நேரத்திலேயே 4-5 விக்குகள் அணிந்துகொண்டு வருகிறார். எல்லாமே பொருந்தாமல் இருப்பதுதான் கொடுமை. சிம்பு இந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும். சிவாஜியின் கையில் உள்ள மணி மாலையும், அவர் முதலில் சில காட்சிகளில் போட்டுக் கொண்டிருக்கும் தொப்புள் வரை வரும் செயினும் அவருக்கு பல ஐடியாக்களை கொடுக்கக் கூடும்.

25 வருஷங்களுக்கு முன்னால் வேண்டுமானால் மஞ்சுளாவையும் ஜெயமாலினியையும் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கலாம். இப்போது எல்லா படங்களிலுமே அவர்களை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சி காட்டப்படுவதால், நேரத்தை வீணடிக்காமல் “மலரே குறிஞ்சி மலரே” பாட்டை மட்டும் கேளுங்கள். (சிவாஜியும் மஞ்சுளாவும் பூஜை செய்யும் இடம்தான் தலைக் காவேரியாம்.)