மறக்க முடியவில்லை


மறக்க முடியுமா பாட்டுக்களில் இரண்டு இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

மனிதர்களின் தேவைகளை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு என்றுதான் வழக்கப்படுத்துவோம். இந்த வழக்கத்தினால் பாட்டை இப்படி எழுதி இருக்கலாம். மோனையும் இருந்திருக்கும்.

காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
வானும் நிலமும் வீடு
வாழ்வு ஏழைக்கு சிம்பிள்

எழுதப்ப்பட்டிருக்கும் வரிகளில் வரிசை இல்லை, எதுகை மோனை இல்லை.
வானும் நிலமும் வீடு
காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்

சோகமும் இல்லை, ஒரு சுதந்திரம் தெரிகிறது. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை தெரிகிறது. சிம்பிள் என்று சொல்லும் அலட்சியத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. இந்த சுதந்திரத்துக்கு வரிசைப்படுத்தாத தேவைகள் மிக நன்றாக பொருந்துகின்றன. வரிசைப்படுத்தி இருந்தால் தப்பாக இருந்திருக்காது – ஆனால் இதில் புதுக் கவிதை போல ஒரு rebellion தெரிகிறது. மெட்டில் உள்ள துள்ளல் இந்த சுதந்திரத்தை அருமையாக வெளிப்படுத்துகிறது. வரிகள் மெட்டுக்கு மெருகு சேர்க்கின்றன. சுத்தி வளைப்பானேன், ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க!

காகித ஓடம் பாட்டில் ஒரு அமானுஷ்யத்தனம் இருக்கிறது. நடு இரவில் தனியாக காட்டுப்பகுதியில் இந்த குரலை கேட்டால் கதி கலங்கிவிடும். எஸ்.எஸ்.ஆர் தேவிகாவை சந்திக்கவரும்போது என்ன அனல் பறக்கும் வசனம் பேசியிருந்தாலும் இந்த எஃபெக்ட் வந்திருக்காது. ஒரு குறை – டி.எம்.எஸ். பாடுவது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் சுசீலாவுக்கும் ஹை பிட்ச் கொஞ்சம் பிசிரடிக்கிறமாதிரி இருக்கிறது. ஜானகியின் குரல் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? டி.எம்.எஸ்., சுசீலா சேர்ந்து பாடுவதை விட சுசீலா தனியாக பாடுவதுதான் எனக்கு பிடித்திருக்கிறது

இந்த வாரம் (Week of Sep 15)


முன் ஒரு போஸ்டில் சொன்ன மாதிரி இரண்டு மூன்று நாட்களாக படங்களை பார்க்கமுடியவில்லை. மீண்டும் இன்று துவக்கலாம் என்றிருக்கிறேன், டச்வுட்.

மிஸ் செய்த படங்கள் கீழ்வானம் சிவக்கும், புனர்ஜன்மம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். இந்த சன் டிவி படங்களை உலகத்தில் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பத்து பேராவது இந்த ப்ளாகை படிக்கமாட்டீர்களா? அதில் ஒருத்தராவது மிஸ் ஆன படங்களை பற்றி எழுத முன்வரக்கூடாதா? (சமீபத்தில் சுஜாதாவின் கணேஷ்(வசந்த்) கதை ஒன்றை – ஒரு விபத்தின் அனாடமி – படித்த பாதிப்பால் இப்படி ஸ்டாடிஸ்டிக்ஸாய் பொழிகிறது)

இந்த வாரப் படங்கள்:

திங்கள்: புனர்ஜன்மம். நான் சின்ன வயதில் பார்த்திருக்கலாம். ஒன்றும் நினைவில்லை. ஹிந்தியில் திலிப் குமார் நடித்த டாக் என்ற படத்தின் மறுபதிப்பு என்று நினைக்கிறேன். டாக் என்றால் கறை என்று அர்த்தம். சிவாஜி, பத்மினி நடித்தது. ஸ்ரீதர் இயக்கியதா? இசை அமைப்பாளர் யார்? ஹிந்தியில் “ஏ மேரே தில் கஹி அவுர் சல்” என்ற அருமையான பாட்டு ஒன்று உண்டு. தமிழில் இந்த பாட்டும் மறு பதிவு செய்யப்பட்டதா என்று பார்த்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கு ட்ரெய்லர் பார்த்து நினைவு வந்த பாட்டு “உள்ளங்கள் ஒன்றாகி“.

செவ்வாய்: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். மணாளனே மங்கையின் பாக்யம் என்ற படத்தை பார்க்க நேர்ந்தது எனக்கு ஒரு அருமையான அனுபவம். பெயரை வைத்தும், சிடி கவரை வைத்தும் அதே டீம்தான் இந்த படத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்து நாஸ்டால்ஜியாவில் சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை எடுத்துப் பார்த்தேன். எனக்கு வீட்டில் அடி விழாதது ஒன்றுதான் குறை. படம் பயங்கர போர். ஒரு பாட்டு கூட நினைவில் வைத்துக்கொள்ளும்படி இல்லை. இசை ஆதி நாராயண ராவாகத்தான் இருக்க வேண்டும். அஞ்சலி தேவி, ஜெமினி, எம்.ஆர். ராதா, ஜெயந்தி, நாகையா, மற்றும் பலர் நடித்தது.

புதன்: நவக்ரகம். பாலச்சந்தரின் அவ்வளவாக வெற்றி அடையாத படங்களின் ஒன்று. எதிர் நீச்சல் பாணியில் பெரிய கூட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். எனக்கு தெரிந்த பாட்டு “உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது” என்பதுதான். அருமையான பாட்டு. சில சமயம் சன் டிவியில் இரவுகளில் போடுவார்கள், போட்டால் ராத்திரி 2 மணியானாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.

வியாழன்: மறக்க முடியுமா புகழ் பெற்ற “காகித ஓடம் கடலலை மீது” பாட்டு இதில்தான். எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்தது. கலைஞரின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன்

பாக்தாத் திருடன்: எம்ஜிஆர் வைஜயந்திமாலாவுடன் நடித்த ஒரே படம். நான் என் வாழ்க்கையில் பார்த்த மூன்றாவது படம். (முதல் படம் தங்க சுரங்கம், இரண்டாவது நாங்கள் இருந்த எண்டத்தூரில் டென்ட் கொட்டாய் திறந்து முதல் முதலாக போட்ட திருவருட்செல்வர்). வீட்டில் சண்டை போட்டு எட்டு வயதில் தனியாக பார்த்த முதல் படம். அப்போதெல்லாம் எனக்கு சண்டைக் காட்சிகள், சோகக் காட்சிகள் கண்டால் ஒரே பயம். சேருக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். அதுவும் சண்டை என்றால் யாராவது என்னை அடித்துவிடுவார்களோ என்று பயம். இந்த பயம் என் அப்பாவின் நண்பர்கள் நிறைய பேருக்கு தெரியும். டென்ட் கோட்டையில் வழக்கம் போல பெஞ்ச்சுக்கு அடியில் நான் ஒளியும்போது வேறு எங்கிருந்தோ பார்த்த கிட்டு மாமா இந்த மாதிரி ஒளிவது உலகத்தில் இவன்தானே என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எனக்கு தைரியம் கொடுத்தார். அதிலிருந்துதான் நான் எம்ஜிஆர் ரசிகன் ஆனேன். நாஸ்டால்ஜியாவுக்காக இந்த படம் பார்க்கவேண்டும், ஆனால் அன்று இரவு வெளியூருக்கு புறப்படுகிறோம், பார்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது!