தமிழ் மாதங்கள் – Updated


பொங்கல் அன்றைக்கு மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன். 1960-இல் வந்த தமிழ் படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த 1960-ஆம் வருஷம் அவ்வளவாக சுவாரசியப்படவில்லை. ஆஹா இந்தப் படம் பிடிக்குமே என்று தோன்ற வேண்டாமா? அதனால் இப்படி ஆரம்பிக்க வேண்டாம் என்று இன்றைக்கு வேறு மாதிரி தமிழ் மாதங்களைப் பற்றி வந்த பாட்டு லிஸ்ட் போடுகிறேன்.

மேலும் பாட்டுகளை கொடுத்திருக்கும் கோகுலுக்கும் நக்கீரனுக்கும் நன்றி!

தை
தை என்றாலே தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்தான்.
மகாநதியிலிருந்து தைப் பொங்கலும் பொங்குது (கோகுலுக்கு நன்றி!)
மாசிக்கு இரண்டு நல்ல பாட்டு.
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு (எம்எஸ்வி இதில் டொய்ங் டொய்ங் என்று ம்யூசிக் போடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஒரிஜினல் தோ ஆங்கேன் பாரா ஹாத்திலும் இதே மாதிரி டொய்ங் டொய்ங் ம்யூசிக் உண்டு.) அடுத்த வரி “பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு”, அதனால் இதை பங்குனிக்கும் வைத்துக் கொள்ளலாம்.
இன்னொன்று மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தான்.
பங்குனிக்கு ஒன்றும் தெரியவில்லை.
நக்கீரன் பங்குனி போய் சித்திரை வந்தால் பத்திரிகை வந்திடும் என்று இன்னொரு பாட்டை குறிப்பிடுகிறார். இதை பங்குனி, சித்திரை இரண்டு மாதத்துக்கும் வைத்துக் கொள்ளலாம். பாட்டைத்தான் நான் கேட்டதே இல்லை, என்ன படம் என்றும் தெரியவில்லை.
சித்திரை
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் – ராமன் எத்தனை ராமனடி எனக்கு பிடித்த சிவாஜி படங்களில் ஒன்று. சிவாஜியின் பிற படங்களையும், நாடகங்களையும் திறமையாக உள்ளே கொண்டு வந்திருப்பார்கள்.
வைகாசி?
ஆனி?
ஆடிக்கு ஒரு இரண்டு பாட்டு

ஆடி வெள்ளி தேடி உன்னை என்று ஒரு நல்ல பாட்டு இருக்கிறது. என்ன படம் என்று நினைவில்லை. ஏதோ பாலச்சந்தர் படம். மூன்று முடிச்சு! இதுவும் அந்தாதி மாதிரி (வசந்த கால நதிகளிலே மாதிரி)வீடியோவை நேரடியாக இங்கே போட முடியவில்லை, இந்த சுட்டியில் பார்க்கலாம்.
கோகுல் ஆடி மாதத்துக்கு இன்னொரு பாட்டு கொடுத்திருக்கிறார். பொன்னுமணி என்ற ஒரு படத்தில் ஆடிப் பட்டம் தேடித் பாத்து விதைக்கணும் பொன்னையா என்று ஒரு பாட்டாம். பாட்டும் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை – கேள்வியே பட்டதில்லை.
ஆவணிக்கு ஒரு இரண்டு பாட்டு
மாதமோ ஆவணி இருக்கவே இருக்கிறது. உத்தரவின்றி உள்ளே வா பக்ஸுக்கு பிடித்த படங்களில் ஒன்று.
நக்கீரன் ஆவணி மாதத்துக்கு இன்னொரு நல்ல பாட்டு கொடுத்திருக்கிறார். பாமா விஜயம் படத்திலிருந்து ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே. கவனியுங்கள் அது ஆணி முத்து, ஆனி முத்து இல்லை.
புரட்டாசி
ஐப்பசி
வில்லன் படத்திலிருந்து ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும் (கோகுலுக்கு நன்றி!). இதை ஆடிக்கும் வைத்துக் கொள்ளலாம், ஐப்பசிக்கும் வைத்துக் கொள்ளலாம். ஐப்பசிக்கு வேறு பாட்டே இல்லாததால் இங்கே போட்டுவிட்டேன். வில்லன் படம் பார்த்தேன் ஆனால் இந்த பாட்டு நினைவில்லை.
கார்த்திகை
மலைக் கோட்டை மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே (திருத்திய கோகுலுக்கு நன்றி!) வீரா படத்திலிருந்து. நல்ல பாட்டு.
தேவதை படத்திலிருந்து தீபங்கள் பேசும் திரு கார்த்திகை மாசம்(கோகுலுக்கு நன்றி!). நல்ல பாட்டு, இந்த பாட்டுதான் யோசித்து யோசித்துப் பார்த்தேன், நினைவே வரவில்லை.
மார்கழி
மார்கழிக்கு எப்போதுமே மாதங்களில் அவள் மார்கழிதான்! என்ன அருமையான பாட்டு – காலங்களில் அவள் வசந்தம்! எம்எஸ்வி நீர் ஒரு ஜீனியஸ்! ரொம்ப லைட்டான, ஆனால் சுகமான ஒரு மெட்டு. இது வெறும் லிஸ்ட் – ஆனால் கண்ணதாசனின் ஜீனியஸ் இதை எங்கேயோ கொண்டுபோகிறது. (வைரமுத்து போட்ட ஒரு லிஸ்ட் – கண்ணுக்கு மை அழகு; நல்ல மெட்டை அவ்வைக்கு கூன் அழகு என்றெல்லாம் எழுதி கொலை செய்திருப்பார்!)
சங்கமம் படத்திலிருந்து மார்கழித் திங்கள் அல்லவா (கோகுலுக்கு நன்றி!)
மே மாதம் படத்திலிருந்து மார்கழிப் பூவே (கோகுலுக்கு நன்றி!)
மௌன கீதங்கள் படத்திலிருந்து – மாதமோ மார்கழி மாதம் நேரமோ ராத்திரி நேரம்

விட்டுப் போன மாதங்கள், இல்லை பாட்டுகளை (ஆடியோ, வீடியோ சுட்டி கொடுத்தால் இன்னும் உத்தமம்) சொல்லுங்கள், இங்கே சேர்த்துவிடலாம்!

பதிவு தொகுக்கப்பட்டிருக்கும் பக்கம்: லிஸ்ட்கள்