டி.கே. பட்டம்மாள் பாட்டு லிஸ்ட்


D.K. Pattammal

டி.கே. பட்டம்மாள்

டி.கே. பட்டம்மாளின் அஞ்சலி பதிவில் அவர் பாடிய சினிமா பாட்டுகளை ஒரு லிஸ்ட் போட வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இப்போது அவர் பாடிய சினிமா பாட்டுகள் பற்றிய ராண்டார்கை எழுதிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. நல்ல கட்டுரை.

பட்டம்மாள் சினிமாவில் குறைவாகத்தான் பாடி இருக்கிறார். தியாக பூமி (1939), நாம் இருவர் (1947) , மகாத்மா உதங்கர் (1947), பிழைக்கும் வழி (1948), வேதாள உலகம் (1948), ராம ராஜ்ஜியம் – டப்பிங் படம் (1948), வாழ்க்கை (1949), லாவண்யா (1951). அவ்வளவுதான். மொத்தமே ஒரு இருபது இருபத்தைந்து பாட்டுதான் இருக்கும் போலத் தெரிகிறது. இதில் நாம் இருவர், வேதாள உலகம், வாழ்க்கை பிரின்ட் இருக்கிறது என்று தெரியும். அதனாலா பாட்டுகள் நினைவு வருகின்றன. மிச்சம் எல்லாம் என்ன ஆச்சோ? நான் மிச்ச படங்களில் எந்த பாட்டையும் கேட்டதில்லை. இளைஞர்கள், இளைஞிகள், யாராவது கேட்டிருந்தால் சொல்லுங்கள்! ஆடியோ/வீடியோ இருந்தால் இன்னும் விசேஷம்!

இப்போதைய லிஸ்ட்:

தியாக பூமி (1939) – இசை பாபநாசம் சிவன்
தேச சேவை செய்ய வாரீர் – பாடல் கல்கி (கேட்டதில்லை)
நாம் இருவர் (1947) – இசை ஆர். சுதர்சனம்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே – பாடல் பாரதியார்
வெற்றி எட்டுத் திக்குமெட்ட கொட்ட முரசே – பாடல் பாரதியார்
மகாத்மா உதங்கர் (1947) – இசை எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். ராமநாதன்
காண ஆவல் கொண்டெங்குமென் இரு விழிகள் – பாடல் பாபநாசம் சிவன், பாபநாசம் ராஜகோபால் ஐயர் (கேட்டதில்லை)
குஞ்சிதபாதம் நினைந்து உருகும் – பாடல் பாபநாசம் சிவன், பாபநாசம் ராஜகோபால் ஐயர் (கேட்டதில்லை)
பிழைக்கும் வழி (1948) – இசை ஜி. அஸ்வத்தாமா
எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு – பாடல் மதுரை ஜி. சுந்தர வாத்தியார் (கேட்டதில்லை)
வேதாள உலகம் (1948) – இசை ஆர். சுதர்சனம்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
தூண்டிற்புழுவைப் போல – பாடல் பாரதியார்
தீராத விளையாட்டுப் பிள்ளை – பாடல் பாரதியார்
வாழ்க்கை (1949) – இசை ஆர். சுதர்சனம்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
பாரத சமுதாயம் வாழ்கவே – பாடல் பாரதியார்
லாவண்யா (1951) – இசை எஸ்.வி. வெங்கட்ராமன்
பழம் பாரத நன்னாடு – பாடல் பாபநாசம் சிவன் (கேட்டதில்லை)
தங்க ஒரு நிழல் இல்லையே – பாடல் பாபநாசம் சிவன் (கேட்டதில்லை)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
ரண்டார்கையின் கட்டுரை
டி.கே. பட்டம்மாள்
“இளம்” பாடகி டி.கே. பட்டம்மாள் பற்றி கல்கி
பட்டம்மாள் பற்றி ஜடாயு

குமாஸ்தாவின் பெண்


ராண்டார்கை திரும்பவும் ஒரு ரொம்ப பழைய படத்தை பற்றி ஹிந்துவில் வரும் Blast from the Past பத்தியில் எழுதி இருக்கிறார். குமாஸ்தாவின் பெண். 1941-இல் வந்திருக்கிறது. படத்தின் பேரை எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது. “Remembered for: its interesting storyline, impressive performances by Rajamma, Shanmugham and KRR.” என்று எழுதுகிறார். இவர் இந்த படத்தை, performance-ஐ எல்லாம் பார்த்தாரா இல்லை எங்கேயாவது படித்ததை வைத்து ஓட்டுகிறாரா என்று தெரியவில்லை. இந்த மாதிரி பழைய படம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பிரிண்ட் இருக்கிறதா?

டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி, கே.ஆர். ராமசாமி, எம்.வி. ராஜம்மா (இவர் பந்துலுவின் மனைவி என்று நினைக்கிறேன்), எம்.எஸ். திரௌபதி நடித்திருக்கிறார்கள். நாடகமாகவும் சக்கைப்போடு போட்டதாம். இயக்குனர் ஏ.பி. நாகராஜன்தான் நாடகத்தில் ஸ்த்ரீபார்ட்!

ராண்டார்கையின் account சுவாரசியமாக இருக்கிறது. இதில் ஒரு டைரக்டரை வேறு கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களாம். அவர் எழுதியதை படித்தால் மெலோட்ராமா நாவலாக, சினிமாவாக இருக்கும் போல தோன்றுகிறது.

நான் பார்த்த மிக பழைய தமிழ் படம் 1941-இல் வந்த சபாபதிதான். 40-களில் வந்த மங்கம்மா சபதம், நந்தனார் (தண்டபாணி தேசிகர் நடித்தது, கே.பி. சுந்தராம்பாள் நடித்தது இல்லை) நாம் இருவர், வேதாள உலகம், அபூர்வ சகோதரர்கள் (அமேரிக்காவில் வீடியோ கிடைத்தது), சந்திரலேகா, நல்லதம்பி பார்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்த மிக பழைய தமிழ் படம் எது? உங்களுக்கு ஞாபகம் இருப்பதை எழுதுங்களேன்!

தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை பத்திகள் – அபிமன்யு, ராஜி என் கண்மணி
சபாபதி (Sabapathi)
சந்திரலேகா

டி.கே. பட்டம்மாள் அஞ்சலி


டி.கே. பட்டம்மாள் மறைந்தார். என் அஞ்சலி.

அவருக்கு கிட்டத்தட்ட 90 வயது. பல மாற்றங்களை இந்த 90 வருஷங்களில் அவர் பார்த்திருக்க வேண்டும். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட எம்.எஸ்., எம்.எல்.வி., இவர் ஆகிய மூவரில் நான் இவருக்கு மூன்றாவது இடத்தைத்தான் கொடுப்பேன். ஆனால் அவரது இசை இன்னும் பல வருஷம் நிலைத்து நிற்கும்.

டி.கே. ஜெயராமன் அவரது தம்பி. நித்யஸ்ரீ அவரது பேத்தி.

அவருடைய ஒரு கச்சேரி வீடியோ கீழே. என்ன அற்புதமான குரல்!

எனக்கு தெரிந்து அவர் நாம் இருவர் படத்தில்தான் நிறைய பாடி இருக்கிறார். எனக்கு எல்லா பாட்டுகளும் நினைவு வரவில்லை. ஆனால் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாட்டு நினைவு இருக்கிறது. அதிலும் அவர் ஆடுவோம் ஆடுவோம் என்று கடைசியில் பாடுவது மிக நன்றாக இருக்கும். அப்புறம் தீராத விளையாட்டு பிள்ளை. அது எந்த படம் என்று ஞாபகம் இல்லை. வேதாள உலகமா?

இது சினிமா தளம். அதனால் அவர் சினிமாவில் பாடிய பாட்டுகளை ஒரு லிஸ்ட் போடுவோமா? எனக்கு ஞாபகம் வரும் பாட்டு ஆடுவோமே, தீராத விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான். படிப்பவர்கள் உதவி தேவை!