நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)


நேற்று இந்த படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் பல வருஷங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். எம்ஜியார் ஆரஞ்ச் பாண்ட், மஞ்சள் சட்டை, சுருள் முடி விக் போன்றவற்றுடன் உலா வந்த காலம். கலர் படம் என்றால் எல்லாரும் அழுத்தமான கண்ணைப் பறிக்கும் கலர் உடைகளை அணிய வேண்டும் என்று கதாநாயகர்களும் டைரக்டர்களும் புரொட்யூசர்களும் நினைத்திருந்த காலம்.

எம்ஜியாரைத் தவிர கே.ஆர். விஜயா, காஞ்சனா நடித்த படம். நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் போன்ற பலரும் உப்பு சப்பில்லாத ரோல்களில் வந்து போவார்கள். படத்தின் முக்கிய காரக்டர்களுக்கு உள்ள ரோல்களுக்கு மட்டும் உப்பு சப்பு உள்ளதா என்று கேட்கக்கூடாது. 70களின் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் எம்ஜியாருக்கும் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, ராமன் தேடிய சீதை போன்ற சில படங்களுக்கு இசை அமைத்தார்கள். எம்.எஸ்.வி. அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நன்றாகவே இசை அமைத்திருந்தார்கள். அதற்கு எம்ஜியார்தான் முக்கிய காரணம் என்று சொல்லுவார்கள். எம்ஜியார் தன் படத்தின் பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துவார் என்றும் அவருக்கு திருப்தி வரும் வரை இசை அமைப்பாளர்களை விடமாட்டர் என்றும் சொல்லுவார்கள். இந்த படத்திலும் சில நல்ல பாடல்கள் உண்டு. “நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்பதுதான் தலை சிறந்த பாட்டு. அந்தப் பாட்டை கேட்டவுடன் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் காஞ்சனா எழுந்த நடக்க ஆரம்பித்துவிடுவார்! “நான் ஏன் பிறந்தேன்“, “தம்பிக்கு ஒரு பாட்டு”, “உனது விழியில் எனது பார்வை” போன்ற நல்ல பாட்டுக்களும் இருக்கின்றன.

எம்ஜியார் படத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கும் சாகசங்கள் எதுவும் இந்தப் படத்தில் கிடையாது. ஏறக்குறைய ஒரு சிவாஜி படத்தின் கதையில் எம்ஜியார் நடித்திருப்பார். படத்தின் ஒரே பலம் பாட்டுக்கள்தான். அழ்கான காஞ்சனாவை விட்டுவிட்டு ஏன் கோரமாக இருக்கும் குண்டு கே.ஆர். விஜயாவை கதாநாயகியாக போட்டார் என்று தெரியவில்லை. தன் ஆஸ்தான கதாநாயகிகளான மஞ்சுளாவையோ இல்லை லதாவையோ போட்டிருக்கலாம். படம் ஒன்றும் பிரமாதமாக ஓடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எம்ஜியாரின் படங்களுக்கு உள்ள மினிமம் காரண்டி இதற்கும் இருந்திருக்கும்.

நேற்று இந்தப் படத்தை பார்க்க முடியாத காரணம் “டார்க் நைட்” என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்க சென்றதுதான். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை கூத்தாடியதாம். சில படங்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பேக்ரவுண்ட் தேவைப்படுகிறது. Batman காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்கள், அவர்கள் சிறு வயதில் படித்த one dimensional caricatures வளர்ந்து full fledged characters ஆக மாறுவதை ரசிக்கலாம். நான் படம் எப்போது முடியும் என்று அவ்வப்போது மணியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போதைக்கு இந்தப் படம்தான் பாக்ஸ் ஆபீஸ் நம்பர் 1.

அடுத்த வாரப் படங்கள் (Week of Aug 11)


டாக்டர் சிவா, தேன் கிண்ணம்மணாளனே மங்கையின் பாக்யம்இரும்புத் திரை, நான் ஏன் பிறந்தேன்

முன் சொன்ன மாதிரி டாக்டர் சிவா ஒரு சகிக்க முடியாத சிவாஜி படம். மலரே குறிஞ்சி மலரே என்ற நல்ல பாட்டு, அழகான மஞ்சுளா தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவாஜியின் விக் வேறு ஒரு கொடுமை. (ஆனால் ட்ரெய்லரில் பார்த்த போது சிவாஜிக்கு தொப்பையும் இல்லை)

தேன் கிண்ணம் அந்தக் காலத்து நகைச்சுவை படம். எப்போதோ சின்ன வயதில் பார்த்தது. ஒன்றுமே நினைவில்லை.

மணாளனே மங்கையின் பாக்யம் செங்கல்பட்டில் 12ஆவது வகுப்பு தேர்வுகளின் நடுவே வந்த விடுமுறையில் பார்த்த படம். என்ன பரீட்சை என்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பின் 3 நாள் விடுமுறை. இரவில் படம் போகலாம் என்று திடீரென்று 9 மணிக்கு அப்புறம்தான் தோன்றியது. அப்போது செங்கல்பட்டில் 4 தியேட்டர்கள். அங்கமுத்து, ஸ்ரீனிவாசா பேர்தான் இப்போது நினைவிருக்கிறது. அங்கமுத்துதான் அப்போது புதிய தியேட்டர். அங்கிருந்து ஆரம்பித்தோம். அங்கே படமும் ஆரம்பித்துவிட்டது, டிக்கெட்டும் கிடைக்கவில்லை. அடுத்து ஸ்ரீனிவாசாவுக்கு ஓடினோம். அங்கும் அதே நிலைமைதான். பிறகு அடுத்த தியேட்டரிலும் தோல்விதான். கடைசியாக இரண்டு மனத்துடன் மிஞ்சி இருந்த ஒரே தியேட்டருக்கு வந்தோம். எங்கள் யாருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை படம் அதுவும் சாம்பார் ஜெமினி நடித்த படம் பார்க்க மூடு இல்லை, ஆனால் படம் பார்க்காமல் திரும்பினால் நாங்கள் நடந்த நடை எல்லாம் வேஸ்ட் ஆகிவிடும். பாதி படத்தில் உள்ளே போகலாமா வேண்டாமா என்று எங்களுக்குள் தகராறு வேறு. வேண்டா வெறுப்பாக, , ஆனால் ஓட்டமும் நடையுமாக இங்கே வந்தோம். மணி பத்தரை வேறு ஆகிவிட்டது. அப்போதெல்லாம் எங்கள் காங்குக்கு 5 நிமிஷம் படம் மிஸ் பண்ணினாலும் பிடிக்காது. கொடுத்த பைசா வசூல் ஆகவில்லை என்று நினைப்போம். பாதி படத்தில் உள்ளே போகலாமா வேண்டாமா என்று எங்களுக்குள் பயங்கரத் தகராறு வேறு. எங்களில் ஒருவன் மட்டும் கவுண்டருக்கு சென்று டிக்கெட் இருக்கிறதா என்று கேட்டான். கவுண்டரில் இருந்தவரோ “இதோ ஈவினிங் ஷோ முடிந்ததும் நைட் ஷோவுக்கு டிக்கெட் கொடுத்துவிடுவோம்” என்றார். அப்போது நாங்கள் சிரித்தது அடுத்த ஊருக்கே கேட்டிருக்கும். நடந்த களைப்பு, பரீட்சைக்கு கண் விழித்துப் படித்த களைப்பு எல்லாம் அந்த சிரிப்பில் போயே விட்டது.

எதிர் கடையில் டீ குடித்து விட்டு பதினோரு மணிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே போய், இரண்டரை மணிக்கு வெளியே வந்து, மூன்று மணி வாக்கில்தான் படுத்தோம். மிகவும் எஞ்சாய் செய்து பார்த்த படம். உண்மையில் காலேஜ், ஸ்கூல் நாட்களில் நண்பர்களுடன் படம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எப்போதும் வருவதில்லை. தேசுலாவுதே, அழைக்காதே போன்ற பாடல்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஆதி நாராயண ராவ் என்ற இசை அமைப்பாளரைப் பற்றி அப்போதுதான் நான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். உடன் பார்த்த சிவா, கந்தசாமி, விஜய குமார், உமாசந்திரன் எங்கேயடா இருக்கிறீர்கள்?

இரும்புத்திரை “நெஞ்சில் குடியிருக்கும்” என்ற பாட்டுக்காகவே பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு படம். தவிர, வைஜயந்திமாலா உண்மையிலேயே ஒரு அழகான நடிகை.

நான் ஏன் பிறந்தேன் ஒரு பிலோ ஆவ்ரேஜ் எம்ஜியார் படம். ஆனால் நல்ல பாட்டுக்கள் – நான் பாடும் பாடல் நலமாக வேண்டும், நான் ஏன் பிறந்தேன் போன்றவை. கே. ஆர். விஜயா அநியாயத்துக்கு குண்டாக இருப்பார்.

யாராவது செங்கல்பட்டுக்காரர்கள் இதைப் படித்தால் இப்போது அங்கே உள்ள தியேட்டர் நிலவரங்களைப் பற்றி எழுதுங்களேன்!