நாடோடி – என் விமர்சனம்


நாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?

ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!

இதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.

இவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.

  1. அன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா
  2. அன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
  3. உலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா
  4. திரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா
  5. நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா
  6. ரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா
  7. பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா
  8. கண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)

சாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.

பாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.

தொடர்புடைய பதிவுகள்
விகடன் விமர்சனம்

நாடோடி – விகடன் விமர்சனம்


படம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!
.
முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.

மாணிக்கம்: அடப் பாவமே! ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே! எந்தக் காலத்துக் கதை இது?

முனு: கிராஸ் பண்ணாதே! கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.

மாணி: இது என்ன சவால்? இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா?

முனு: பார்த்தியா! பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே! நீ என்னமோ…

மாணி: சரி, அப்புறம்?

முனு: ஒரு வில்லன்.

மாணி: நம்பியார்தானே?

முனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே! வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு! அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.

மாணி: முடிவா என்னதான் சொல்றே?

முனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.