அறுபது மார்க்!


விகடன்காரர்கள் சினிமாவுக்கு மார்க் போடும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் ரொம்ப கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். அறுபதுக்கு மேல் மார்க் வாங்கிய படங்கள் அபூர்வமே.

விமல் சொன்னதையும் எனக்கு நினைவிருப்பதையும் வைத்து பார்க்கும்போது இந்த படங்கள் மட்டுமே அறுபதுக்கு மேல் மார்க் வாங்கியவை.

  1. பதினாறு வயதினிலே – 63
  2. முள்ளும் மலரும்
  3. முதல் மரியாதை
  4. நாயகன்
  5. அஞ்சலி
  6. ஹே ராம் – 60

மேலும் இந்தியன் திரைப்படமும் அறுபதை தாண்டி இருக்கலாம் என்று விமல் நினைக்கிறார். சரவணகுமரன் ஆட்டோக்ராஃப் அறுபதைத் தாண்டியதோ என்று கேட்கிறார். நினைவிருப்பவர்கள் சொல்லுங்களேன்!

உங்களுக்கு ஏதாவது நினைவு வருகிறதா? எந்த படத்துக்கு இது வரை அதிகமாக மார்க் போட்டிருக்கிறார்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள்

நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்


சூர்யா

சூர்யா

லிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி! வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.

Crash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.

Godfather – என்ன ஒரு படம்! அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.

I am Sam – நான் பார்த்ததில்லை.

Terminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.

நாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன? நல்ல படம்.

முள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.

சேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா?

முதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.

ஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.

யுனெஸ்கோ லிஸ்ட்


யுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.

இந்திய லிஸ்ட்.

  1. 1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.
  2. 1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.
  3. 1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்
  4. 1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.
  5. 1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.
  6. 1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.
  7. 1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.
  8. 1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.
  9. 1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.
  10. 1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.
  11. பதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.
  12. ப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.
  13. மதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.
  14. மொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.
  15. சுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.

யுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.

நான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி? இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா? வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா? மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா? யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது?

எனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:

சிறந்த 5 படங்கள்:

  1. கப்பலோட்டிய தமிழன்
  2. தண்ணீர் தண்ணீர்
  3. நாயகன்
  4. தளபதி
  5. தேவர் மகன்

6 மைல் கல்கள்:

  1. சந்திரலேகா
  2. நாடோடி மன்னன்
  3. வீரபாண்டிய கட்டபொம்மன்
  4. பதினாறு வயதினிலே
  5. நாயகன்
  6. ஜென்டில்மன்

5 பொழுதுபோக்கு படங்கள்:

  1. சந்திரலேகா
  2. ஆயிரத்தில் ஒருவன்
  3. தில்லுமுல்லு
  4. மைக்கேல் மதன காம ராஜன்
  5. பஞ்ச தந்திரம்

நான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன? படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.