நாம் இருவர் – விகடன் விமர்சனம்


விகடனில் ஏவி.எம்மின் நாம் இருவர் படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி… நன்றி, விகடன்!

ஆடல் பாடல் நல்ல பொழுதுபோக்கு

படங்களைத் தயாரித்து விடலாம். நூற்றுக்கணக்கில் கூடத் தயாரித்துவிடலாம். ஆனால், படிக்காத பாமரர்கள் மட்டுமின்றி, படித்த அறிவாளிகளும் கண்டு வியக்கும் முறையில் கலை நுணுக்கங்கள் நிறைந்த நல்ல படங்களாகத் தயாரிப்பது சிரமம். இந்தச் சிரமமான காரியத்தில் ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் பாராட்டக் கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது ‘நாம் இருவர்’.

எடுத்ததுமே நம்மைக் கவர்ந்து விடுகிறது, நடிகர்களின் வேஷப் பொருத்தம். அந்தந்த பாத்திரங்களுக்கு மிகவும் ஏற்ற நடிகர்களாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அநேக படங்களில் காண்பிக்கப்படுவது போல் ’40 வயது வாலிபனும்’, ’35 வயதுப் பருவ மங்கையும்’ காதல் புரியவில்லை இப்படத்தில். உண்மையிலேயே இளம் வயதுள்ள டி.ஆர். மகாலிங்கமும், டி.ஏ. ஜெயலட்சுமியும் காதலர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமது உள்ளம் அப்படியே அவர்களோடு ஒன்றுபட்டு விடுகிறது. மீசை நரைத்தும் ஆசை நரைக்காத தந்தையின் பாகத்தில் கே. சாரங்கபாணி நடிக்கிறார். பல சமூகப் படங்களில் நடித்துள்ள பி.ஆர்.பந்துலு உத்தம அண்ணனாக வருகிறார். அசட்டு ஞானோதயத்தின் பாகத்தை ஹாஸ்ய நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் ஏற்று நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நாம் இருவர் நாடகத்தில் திறமையுடன் நடித்து அனுபவம் பெற்றவர்கள்.

நல்லதொரு பொழுதுபோக்காக இருப்பதற்குப் படத்தில் ஆடலும் பாடலும் ரொம்ப அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஏவி.எம். புரொடக்ஷன்ஸார் கண்ணுக்கினிய ஆடல்களையும் காதுக்கினிய பாடல்களையும் அமைத்திருக்கிறார்கள். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ முதலிய பாரதியாரின் தேசிய கீதங்களை ஸ்ரீமதி டி.கே. பட்டம்மாள் அழகாகப் பாடியிருப்பதும், அந்தப் பாட்டுக்களுக்கு சிறுமி கமலா அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடியிருப்பதும், மனதை வசீகரிக்கக் கூடிய நல்ல அம்சங்கள். டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருக்கும் பாட்டுக்களும் படத்திற்கு ஒரு விசேஷ கவர்ச்சியை அளிக்கின்றன. சில பாட்டுக்கள், காலஞ்சென்ற கிட்டப்பாவின் பாட்டுக்களை ஞாபகப்படுத்துவதால், அவை கேட்போரைப் பரவசப்படுத்துகின்றன.

மகான் காந்தி மகான் என்ற பாட்டுக்கு “சிறுமி” கமலா இங்கே ஆடுகிறார்.

‘ஜே ஹிந்த்’, ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ முதலிய தேசிய கோஷங்களும், தேச பக்தர்களின் உருவப் படங்களும், அங்கங்கே சில சம்பாஷணைகளில் வரும் கருத்துக்களும் இக்கால மக்களின் மனப்போக்குக்கு ஏற்றவைகளாக இருப்பதால், படத்தின் வெற்றிக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

இன்னும் சிலாகிப்பதற்கு இப்படத்தில் எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே பேபி கமலாவை வைத்துக் கொண்டு, இரண்டு பேபி கமலாக்கள் நடனம் செய்வதாகக் காண்பித்திருக்கும் காமிராக்காரரின் திறமையைப் பாராட்டலாம். பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு சம்பாஷணைகளை இயற்றிக் கொடுத்திருக்கும் கதாசிரியர் ஸ்ரீ ப. நீலகண்டனின் திறமையையும் பாராட்டலாம்.

சென்ற உலக யுத்தத்தில் ஹிட்லர் பிரயோகித்த ‘வி-டூ’ என்ற ஆயுதம் அதன் வேகத்திற்குப் பிரசித்தி பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரே இப்படத்தின் ஆங்கிலப் பெயராக அமைந்திருப்பதனாலோ என்னவோ, படம் ஆரம்பம் முதல் கடைசி வரையில் விறுவிறுப்பும் வேகமும் உள்ளதாக இருக்கிறது. படத்தில் அலுப்புத் தட்டும் இடமே இல்லை!

ஸ்ரீ ஏவி.எம். செட்டியார் அவர்களின் திறமையில் நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. வசதிகள் நிறைய ஏற்படும்போது, இதை விடப் பன்மடங்கு மேம்பட்ட படங்களை அவரால் தயாரித்துத் தமிழ்நாட்டுக்கு அளிக்க முடியும் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

தொடர்புடைய சுட்டி: மாலை மலரில் இந்த படம் உருவான கதை

நினைத்ததை முடிப்பவன் – என் விமர்சனம்


படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

அறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.

மேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.

இரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்!

படம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் பரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

பத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.

சந்திரபாபு, சபாஷ் மீனா


சந்திரபாபு பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சபாஷ் மீனா விமர்சனம் இங்கே.

எழுத்தாளர் முகிலின் பதிவிலிருந்து, நண்பர் சூர்யா எடுத்துத் தந்த பகுதி கீழே.

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

1952


1952-இல் 27 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தது பராசக்தி ஒன்றுதான். அதனால் எதை பற்றி எழுதுவது என்று பிரச்சினையே இல்லை. வேறு படங்களை பார்த்திருந்தாலும் பராசக்தியைத்தான் இந்த வருஷத்தின் சிறந்த படம் என்று தேர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

சிவாஜி புயல் மாதிரி உள்ளே நுழைந்திருக்கிறார். பராசக்திக்கு பிறகு அவருக்கு இறங்குமுகம் வர 200 படங்களும், 25 வருஷங்களும் பிடித்திருக்கின்றன. அவர் நடித்த பணம் படமும் இந்த வருஷம்தான் வந்திருக்கிறது.

எம்ஜிஆர் இந்த ஆண்டு ராஜா ராணி படங்களிலிருந்து நகர்ந்து வர முயற்சி செய்திருக்கிறார் போல. என் தங்கை, குமாரி போன்ற கேள்விப்படாத சமூக படங்களில் நடித்திருக்கிறார்.

மற்ற படங்களை பற்றி அதிகம் தெரியவில்லை. அதனால் ஏ.வி.எம். செட்டியார் பராசக்தி பற்றி எழுதியதை கீழே கொடுத்திருக்கிறேன். ஓவர் டு செட்டியார்.

கே.என். ரத்தினம் என்ற நடிகர் கடலூரில் பாய்ஸ் கம்பெனி வைத்து நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். பாவலர் பி.பாலசுந்தரம் என்பவரின் கதையை நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அந்த டிராமாவைப் பார்க்கலாம், வாருங்கள்” என்று பெருமாள் என்னைக் கடலூருக்குக் கூட்டிச் சென்றார். டிராமாவைப் பார்த்தோம். மிக நன்றாக இருந்தது. அந்த நாடகம்தான் பராசக்தி. அந்தக் கதையையே வாங்கித் தரும்படி பெருமாள் கூறினார். பாவலர் பாலசுந்தரத்தை வரவழைத்துப் பேசி, பெருமாளுக்காக அந்தக் கதையை நானே வாங்கினேன்.

அந்தப் படத்தைப் பெருமாளுடன் கூட்டாகச் சேர்ந்து நாங்கள் எடுத்தோம். ஏறக்குறைய ‘ஓர் இரவு’ பாதிக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கும்போதே துவங்கிவிட்டோம். ஓர் இரவை நீலகண்டன் சொந்த டைரக்ஷனில் செய்து கொண் டிருந்தார். எம்.வி. ராமன் இந்தி பகார் டைரக்ட் செய்து வந்தார். அப்பொழுதெல்லாம் ஒரு டைரக்டர் இரண்டு படங்களை டைரக்ட் செய்வது என்பது பழக்கத்திற்கு வரவில்லை. ஆகவே, எங்களுடைய புதிய படத்திற்கு யாரை டைரக்டராகப் போடலாம் என்று யோசித்து வந்தோம். கிருஷ்ணன்பஞ்சு என்பவர்கள் நியூட்டோனில் அப்போது படம் எடுத்து வந்தார்கள். திரு அண்ணாதுரை அவர்களுடைய கதையான நல்லதம்பி படம் முடிந்த சமயம். அவர்களைக் கூப்பிட்டு எங்களுக்காக இந்தக் கதையை டைரக்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இருவரும் ஒப்புக் கொண்டார்கள். முதன் முதலாகக் கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் எங்கள் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான். அது முதல் ஏறக்குறைய எங்கள் ஸ்தாபனத்துடன் ஒன்றியிருக்கிறார்கள்.

பாவலரிடமிருந்து கதை கிடைத்துவிட்டது. அதற்குரிய வசனங்களை நமது மதிப்பிற்குரிய, தற்போது முதல்வராக விளங்கும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை விட்டு எழுதச் சொல்லலாம் என்று பெருமாள் விருப்பம் தெரிவித்தார்.

கலைஞரிடம் கேட்டோம். அவரும் ஒப்புக் கொண்டார்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார்.

அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன.

ஏறக்குறைய ஓர் இரவு கதைக்கு அண்ணாதுரை இங்கே வந்து வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே கலைஞரும் பராசக்திக்கு வசனம் எழுதித் தர எங்கள் ஸ்டூடியோவுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

வசனம் எழுதத் துவங்கி விட்டார் கலைஞர்; நடிகர்கள் தேர்வு நடைபெற வேண்டுமே?

அப்போது திரு.கே.ஆர். ராமசாமி வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் மூலமாக அதிகம் பெயர் பெற்றவராக இருந்தார். ஒரு ஸ்டார் நடிகராகவே விளங்கிவந்தார். எங்களுடைய ஓர் இரவு படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.

பராசக்தியிலும் கே.ஆர்.ராம சாமியையே நடிக்கவைக்கலாம் என்று கூறினேன். ஆனால் என்னுடைய பாகஸ்தரான பெருமாள், “ஒரு புது நடிகரைப் போட்டு எடுக்க வேண்டும். வேலூரில் சக்தி நாடக சபை நடத்தும் சில நாடகங்களைப் பார்த்தேன். ‘நூர்ஜஹான்’ நாடகத்தில் பெண் வேஷம் போட்டுக் கொண்டு கணேசன் என்கிற பையன் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறான் தெரியுமா? அந்தப் பையனைப் போட்டு இந்தப் பராசக்தியை எடுக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் வேலூருக்குப் போய் ஒருமுறை அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!” என்றார்.

வேலூரிலிருந்து சக்தி நாடக சபா தங்கள் முகாமைத் திண்டுக்கல்லுக்கு மாற்றிக்கொண்டு விட்டதால் நான் திண்டுக்கல் போய், கணேசன் என்கிற இளைஞனின் நடிப்பைப் பார்த்துவிட்டு வந்தேன்.

“டிராமாவில் நடிப்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லையே? முதன் முறையாக மெயின் ரோலில் இந்தப் பையனை நடிக்கச் சொல்லி ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்ன செய்வது? இதுவோ என்னுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். ரிஸ்க் வேண்டாம்,” என்று சொன்னேன்.

“இல்லை, இல்லை, கணேசனையே நடிக்கச் சொல்லுவோம். பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்றே தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்,” என்று பெருமாள் சொல்லிவிட்டார். சிறந்த நடிகராக இருந்தும் கணேச னுக்குச் சினிமாவின் போக்கு புது அனுபவமாக இருந்தபடியால் சரியாக வரவில்லை என்று எனக்குத் தோன்றியது. அப்போது கணேசன் மிக ஒல்லியாக இருப்பார். யாருக்குமே ஒரு காரியத்தைச் செய்வதில் ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டால் அதைச் செய்து முடிக்கும் வழியே வேறுதான். தன்னம்பிக்கை வருவதற்கு முன்னால் செய்யும் காரியங்கள் நிச்சயம் நன்றாக அமையாது. ஆரம்பத்தில் கணேசனுக்குத் தன் நடிப்பிலேயே தன்னம்பிக்கை வரவில்லை. போதாக் குறைக்கு எங்களுக்கும் அவருடைய நடிப்பில் நம்பிக்கை இல்லையா? ஆகவே அவர் நடிப்பு எங்களுக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை.

2000, 3000 அடிகள் வரை எடுத்தாகிவிட்டது. அப்போது நான் மீண்டும் பெருமாளிடம், “விஷப் பரீட்சை வேண்டாம். கே.ஆர்.ராமசாமிக்குப் பெயர் அதிகமாக உள்ளது. அவரையே போட்டு எடுத்து விடலாம்” என்று சொன்னேன்.

பெருமாள் ஒரே பிடிவாதமாக, “இல்லை, கணேசனைப் போட்டுத்தான் எடுக்கவேண்டும். பின்னாடி நன்றாக வரும் பாருங்கள்” என்று கூறிவிட்டார்.படத்தை எடுத்துக்கொண்டு போனோம். ஏறக்குறைய 10,000 அடிகள் வரை சென்று விட்டோம். பத்தாயிரம் அடி என்பது எடிட் செய்யபட்ட லெங்க்த். அதாவது முக்கால் படம். வர வர முதலில் இருந்ததை விடக் கணேசனுடைய நடிப்பு சிறப்பாக வளர்ந்து, படம் முடிவதற்குள் எங்கள் எல்லாருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்துவிட்டது. பூராப் படம் முடிந்த பிறகு ஆரம்பத்தில் முதலில் எடுத்த எந்தக் காட்சிகளில் அவர் அதிகத் தன்னம்பிக்கையோடு நடிக்கவில்லை என்று எங்களுக்குத் தோன்றியதோ அவற்றை – ஏறக்குறைய 6000, 7000 அடிகளை திரும்பவும் செட்டுக்களைப் போட்டு இரவு பகலாகத் தொடர்ந்தாற்போல் எங்களுடைய ஸ்டுடியோவின் எல்லா ஃப்ளோர்களிலும், எடுத்தோம். மேற்கொண்டு வெளியில் எடுக்க வேண்டிய அவுட்டோர் காட்சிகளையும் ஒரே மூச்சில் சுமார் 15,20 நாட்களில் எடுத்து முடித்தோம்.

இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயண கவி. ‘காக்காய் இனம் தன் இனத்தை ஒற்றுமையாகக் கரைந்து அழைத்துச் சேர்ந்து சாப்பிடுகிறது. அதைக் கூட மனிதர்களாகிய நாம் செய்வதில்லை’ என்கிற அற்புதமான கருத்து அமைந்த ‘கா..கா…கா…’ என்று பாட்டை எழுதினார். இந்தப் படத்தின் மூலம் அந்தப் பாட்டு பிரபலமாகியது.’பராசக்தி’ கதை தன் தங்கைக்காக ஓர் அண்ணன் தியாகம் செய்வதைச் சொல்கிறது. தங்கைக்குச் சமூகத்தினர் இழைக்கும் தீங்குகளைக் களையும் முயற்சியில் வெறி பிடித்து, ஆஷாடபூதியாக இருக்கும் பக்தன் ஒருவனைத் தண்டிக்கும்படியான கதையாக இருந்ததால் ஜனங்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

படம் மிகவும் அருமையாக அமைந்துவிட்டது. டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புதிய பாணியில் வசனங்களைத் தீட்டியிருந்தார். அவற்றைக் கணேசன் உச்சரித்த முறை நன்றாக இருந்தது. சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஓர் இரவு படத்திற்கு எழுதியிருந்ததை விடக் கலைஞரின் வசனங்கள் சிறப்பாக இருந்தன என்று நாங்கள் நினைத்தோம். பொது மக்களும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டனர்.

கதையின் போக்கு, கலைஞரின் வசனம், கணேசனின் நடிப்பு மூன்றுமாகச் சேர்ந்து பராசக்தி படம் முன்பு நாங்கள் எடுத்த படங்களைக் கூட மிஞ்சும்படி – எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்தது. பராசக்தி வெளியானவுடன் ஏகப்பட்ட அபிப்பிராய விரோதங்கள் உண்டாயின. அந்தப் படம் தெய்வத்தை அவமதிப்பதாகச் சிலர் நினைத்து விட்டார்கள். காளியிடம் வந்து சிலர் முறையிடுவதையும், பூசாரியைக் கொலை செய்வதைப் போல உள்ள காட்சிகளினாலும், இந்தப் படத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா பப்ளிசிடி கிடைத்துவிட்டது. படத்தை ‘பான்’ செய்யப் போகிறார்கள் என்ற பேச்சுக் கிளம்பவே இன்னும் அதிகமாக ஓடி வசூல் குவிய ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களாகிய உங்களுடன் மனம் திறந்து சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். நம் நாட்டில் – ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால் உலகத்திலேயே ஒரு சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்குக் கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம்.

என் வரையில் ‘நம் தமிழ் நாட்டின் அதிருஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை.’ வெளி நாட்டிலிருந்து கலை உலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப் படுத்துவது வழக்கம்.

சிவாஜி தம் ஐந்தாவது வயதிலிருந்தே டிராமாக் கம்பெனியில் ‘ஆக்ட்’ பண்ண ஆரம்பித்து விட்டவர். சக்தி நாடக சபை போன்ற சிறந்த நாடகக் கம்பெனியில் நடித்து அனுபவம் பெற்றார். சக்தி கிருஷ்ணசாமி, எஸ்.டி. சுந்தரம் போன்ற வசன கர்த்தாக்களிடம் பயிற்சிபெற்ற அனுபவமும் சிவாஜிக்கு இருக்கிறது. ‘தன் நடிப்புக்கு எல்லையே இல்லை’, என்கிற உணர்வோடு ஒவ்வொரு தடவையும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒன்றி நடிக்கிறார்.

பராசக்தி படத்தில் நாங்கள் அவரைப் போட்டிருக்காவிட்டாலும் கூட அவர் சிறந்த நடிகராக வந்திருப்பார். கூட இன்னும் ஓர் ஐந்தாறு வருஷம் ஆகியிருக்கும் – அவ்வளவுதான்.

(நன்றி: ஏ.வி.எம். எழுதிய “எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூல். வானதி வெளியீடு.)

ஓரிரவு


oriravu

அண்ணா 1945-இல் எழுதிய நாடகம். திராவிட இயக்கத்தை எதிர்த்த கல்கி கூட இந்த நாடகத்தை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா, இதோ ஒரு இப்சன் என்றெல்லாம் பாராட்டி இருக்கிறார். (இந்த நாடகம் ஷா, இப்சன் தரத்தில் இல்லை என்பது வேறு விஷயம்)

கே.ஆர். ராமசாமி, நாகேஸ்வர ராவ், லலிதா, பாலையா, டி.கே. ஷண்முகம், பி.எஸ். சரோஜா நடித்தது. பி. நீலகண்டன் இயக்கம். சுதர்சனம் இசை. ஏவிஎம் தயாரிப்பு.

பாரதிதாசனின் புகழ் பெற்ற “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்ற பாட்டு இந்த படத்தில் இடம் பெற்றது. இது படத்துக்காக எழுதியதா இல்லை முன்னாலேயே எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அருமையான பாட்டு. எம்.எஸ். ராஜேஸ்வரியும் வி.ஜே. வர்மாவும் பாடி இருக்கிறார்கள். யார் இந்த வர்மா? தெலுங்கரா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பாட்டை இங்கே காணலாம். காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-வை பார்ப்பதற்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

மற்றும் ஒரு புகழ் பெற்ற பாட்டு “அய்யா சாமி ஆவோஜி சாமி” அடுத்த வரி அந்த காலத்தில் தமாஷாக இருந்திருக்கும். – “அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயா”. என் மாமியார் அவ்வப்போது இந்த வரிகளை முனகி கொண்டே இருப்பார். பத்மினி குறத்தியாக வந்து நடனம் ஆடுவார் என்று நினைவு. இந்த பாட்டை நான் முதலில் ஹிந்தியில்தான் கேட்டேன் – “கோரே கோரே ஓ பாங்கே சோரே” என்ற பாட்டு. நல்ல மெட்டு. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்ததா இல்லை இங்கிருந்து அங்கு போனதா என்று தெரியவில்லை.

ஏவிஎம் அண்ணாவிடம் கதையை மாற்றாமல் எடுப்பதாக சொன்னாராம். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்றார் அண்ணா. திரைப்படத்துக்கு ஏற்றபடி கதையை மாற்றி எழுத வந்த அண்ணா, தனக்கு வெற்றிலை, பாக்கு, ஒரு செம்பில் தண்ணீர், எழுதுவதற்கு மேஜை ஆகியவை மட்டும் போதும் என்றார். நாடகத்தின் பேருக்கேற்ப ஒரே இரவில் முழு திரைக்கதை வசனத்தை அண்ணா எழுதி முடித்துவிட்டார். அதற்கு அவருக்கு 20000 ரூபாய் கொடுக்கப்பட்டதாம்.

எனக்கு வசனங்கள் எல்லாம் பெரிதாக ஞாபகம் இல்லை. ஆனால் நன்றாக இருந்தன.
மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம்பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.
என்பதை இங்கே கண்டுபிடித்தேன். (இங்கே அண்ணாவுக்கு 10000 ரூபாய்தான் கொடுத்தார்கள் என்று எழுதி இருக்கிறார்கள். அண்ணாவின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் 20000 என்று எங்கோ எழுதி இருக்கிறார் என்று நினைவு)

கதை perfect-ஆக ஞாபகம் இல்லை. தவறுகளை கண்டுபிடிப்பவர்கள் திருத்துங்கள். டி.கே. ஷண்முகம் ஒரு ஜமீந்தார். அவர் தன் முதல் மனைவியை கொலை செய்து விடுகிறார். அவரது மகளான லலிதாவை மணந்துகொள்ள இந்த விஷயத்தை வைத்து அவரை பாலையா ப்ளாக்மெய்ல் செய்கிறார். லலிதாவுக்கு நாகேஸ்வர ராவுக்கும் காதல். ஒரு நாள் இரவு திருடன் கே.ஆர். ராமசாமி லலிதாவின் அறைக்குள் திருட நுழைகிறார். லலிதா பாலையாவை துரத்த அவரை தன் காதலன் மாதிரி நடிக்க சொல்கிறார். அதை நாகேஸ்வர ராவ் பார்த்து விட, சந்தேகம் எழும்ப, கடைசியில் கே.ஆர். ராமசாமி ஷண்முகத்தின் முதல் மனைவியின் மகன் என்று தெரியவருகிறது. காதலர்கள் ஒன்று சேர, சுபம்!

கே.ஆர். ராமசாமி நன்றாக நடித்திருந்தார். ஆனால் அண்ணாதான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும்.

பார்க்கலாம். திராவிட இயக்கத்தின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமானது, நல்லது. (எனக்கு இதை விட வேலைக்காரி பிடித்திருந்தது.) அதனால் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். Of course, எனக்கு துன்பம் நேர்கையில் பாட்டு ஒன்றே போதும்.

பத்துக்கு 7 மார்க். B grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்: ஓரிரவு பற்றி கல்கி
ராண்டார்கை குறிப்பு