ஆரூர் தாஸ் நினைவுகள் 2


தேவர்

சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர், விமல்)

தேவர் பிலிம்சின் பெண் தெய்வம் படத்திற்கு வசனம் எழுதி முடித்தேன் (ஆரூர் தாஸ்). அண்ணன் சாண்டோ சின்னப்பா தேவரிடம் படித்துக் காட்டினேன்.

ஒரு காட்சியில், “கடத்தப்பட்ட குழந்தை திரும்பவும் வேண்டும் என்றால், குறிப்பிட்ட இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயோடு வர வேண்டும்!’ என்று வில்லன் சொல்வதாக ஒரு வசனம் எழுதி இருந்தேன். அதைக் கேட்டதும் தேவர் சொன்னார்:

“எழுதறதை எழுதுறே, அஞ்சி லட்சம்ன்னு எழுதேன். அம்பதாயிரம்ன்னு பிச்சைக்காரத்தனமா ஏன் சொல்றே?’

இதைக் கேட்டு எனக்குக் கோபம் வரவில்லை; மாறாக, உரக்கச் சிரித்தேன்.

“ஏன் சிரிக்கிறே?’

“அண்ணே, ஒரு சின்ன பிளாஷ்பேக்’

“சொல்லு’

“நம்பர் ஒண்ணு, சாதுல்லா தெரு, தி.நகர் – வாடகைக் கட்டடத்துல நம்ம ஆபிஸ் இருந்தப்போ ஒரு நாள் ராத்திரி, மிலிட்டரி ஓட்டல்லேருந்து சாப்பாடு கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டுட்டு, மொட்டை மாடியிலே பழைய கோரைப் பாயில படுத்தபடி பல விஷயங்கள் பேசினோம். அப்போ நீங்க சொன்னது இன்னும் எனக்கு நல்லா நெனவிருக்கு’

“என்ன சொன்னேன்?’

“தாசு, ரெண்டு லட்ச ரூபாய் சம்பாதிச்சிட்டேன்னா, இந்த மெட்ராசை விட்டு கோயம்புத்தூருக்குப் போயிடுவேன். ஒரு லட்ச ரூபாய்க்கு நல்ல வீடு, வாசல், நகை நட்டுங்க; இன்னொரு லட்சத்துல கொஞ்சம் நில பொலம் வாங்கி வச்சிக்கிட்டு, பாக்கிப் பணத்தை பேங்குல போட்டுப் பத்திரப்படுத்திடுவேன்.

“இதுதான் நான் சினிமாவுக்கு வந்த காரணம். அந்த ரெண்டு லட்ச ரூபாயைப் பாக்குறதுக்குத்தான், இப்படி மாடு மாதிரி பாடுபடறேன். அப்படின்னு சொன்னீங்க.

அன்னிக்கு நீங்க பொருளாதார நிலையிலே ரொம்பப் பின்தங்கி இருந்தீங்க. அதனால, அந்த ரெண்டு லட்ச ரூபாய் உங்களுக்கு அவ்வளவு பெரிய தொகையா தெரிஞ்சுது. ஆனா, இன்னிக்கு உங்க பொருளாதார அந்தஸ்து உயர்ந்திடுச்சி.

அதனால்தான் இந்த ஐம்பதாயிரம் ரூபாய்ங்கிறது உங்களுக்குப் பிச்சைக்காரத்தனமா தோணுது. சிங்கிள் டீயும், டபுள் பன்னும் சாப்பிடுகிற ஒரு ஏழை, “பிளாக் மெயிலரு’க்கு, அம்பதாயிரம் ரூபாய்ங்கிறது சின்னத் தொகை இல்லேண்ணே, ரொம்பப் பெரிய தொகை!

“நீங்க சொன்னபடி அஞ்சி லட்சம்ன்னு எழுதறதுல தப்பு ஒண்ணும் இல்லே, அப்படியே எழுதறேன்.’

நிமிட நேரம் மவுனம் நிலவியது!

மூடியிருந்த அவரது விழிகளின் முனையில் தேங்கி இருந்த நீர்த் துளியை விரல் நகத்தால் விலக்கிக் கொண்டார்.

எடுத்த பேனாவைத் தடுத்தார்.

“வேண்டாம்பா, அம்பதாயிரம்னே இருக்கட்டும், மேற்கொண்டு படி” என்றார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஆரூர் தாஸ் நினைவுகள் 1
ஆரூர் தாஸ் நினைவுகள் 3
4 தயாரிப்பாளர்கள்