பானுமதிக்கு கல்யாணம் ஆன கதை


விகடனில் 72 ஃபெப்ரவரியில் தனக்கு திருமணம் ஆன கதையை பானுமதி எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. ‘கிருஷ்ண பிரேமா’ என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.

“ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா! நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன்.

என் தந்தை திடுக்கிட்டுப் போனார். ஆனால், சமாளித்துக் கொண்டு, “அவருக்கும் அந்த விருப்பமிருக்கிறதா?” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது. நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றேன்.

என் தாயார் எதிர்த்தார்கள். இருந்தாலும், என் தந்தையின் ஏற்பாட்டில் அவர் என்னைப் பெண் கேட்க வந்தார். வந்தவர் மிகவும் கண்டிப்பாகப் பேசினார்: “என்னிடம் பணம் இல்லை. படிப்பும், திறமையும் இருக்கிறது. இஷ்டமிருந்தால் உங்கள் பெண்ணைக் கொடுங்கள். என் வருமானத்துக்கேற்ப அவளை வசதியாக வைத்திருப்பேன். என்னோடு ஓர் ஓலைக் குடிசையில் வாழ்வதற்கும் அவள் தயாராக இருக்கவேண் டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

என் தந்தை பயந்து, “இப்போதே இவ்வளவு கண்டிப்பாகப் பேசுபவர், பின்னாளில் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரை மறந்து விடு!” என்று கூறினார்.

“சரி, மறந்து விடுகிறேன். ஆனால், இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். எப்போது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேனோ, அப்போதே நான் அவருக்கு மனைவியாகி விட்டேன்!” என்றேன்.

அப்போதும் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு? பெற்றோருக்குத் தெரியாமல் எங்கள் திருமணம் நடந்தது.

மணமக்கள் கோலத்தோடு ஆசி பெற வந்தோம். என் தாயார் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. தந்தையோ அழுதபடியே, “அப்பா அப்பா என்று சுற்றிச் சுற்றி வருவாயே… இப்போது அந்த அப்பாவிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படியம்மா மனம் வந்தது?” என்று கேட்டார்.

நானும் அழுதேன். அழுதபடியே, “அதுதான் விதி!” என்று சொன்னேன்.

நன்றி விகடன்!

பின்குறிப்பு: பானுமதி 15 16 வருஷம் கழித்து அளித்த ஒரு பேட்டியில் அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று சொல்லி இருக்கிறார்! எது நிஜமோ யானறியேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
திரை உலக வாழ்வைப் பற்றி பானுமதி
பானுமதியின் மாஸ்டர்பீஸ் – அன்னை

திரை உலக வாழ்வை பற்றி பானுமதி


bhanumathi

ஒரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன். தன் திரை உலக வாழ்வை பற்றி பானுமதி விகடனில் சொன்னது. நன்றி, விகடன்!

பானுமதி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்னை. அதைப் பற்றி எழுதியதை இங்கே காணலாம்.

நான் நடிக்க வந்து 46 வருஷம் ஆகுது. எங்கப்பாவோட இன்ட்ரஸ்ட், எனக்கிருந்த மியூசிக் இன்ட்ரஸ்டாலதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

நான் 39, 40-ல்தான் இந்த சினிமா ஃபீல்டுக்கு வந்தேன். முதல் படம் வரவிக்ரம் தெலுங்குல. அப்போ எங்கப்பாவோட நண்பர் சி.புல்லய்யா, எங்காப்பாகிட்ட வந்து என்னை நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்துல நிறையப் பாட்டு இருக்குன்னு சொன்னார். எங்கப்பா சங்கீதப் பைத்தியம். கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா, சினிமாவில் பாடினா, எல்லோரும் கேக்க முடியுமேனு சினிமாவில் நடிக்கறதுக்கு என்னை கல்கத்தாவுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு.

அப்போ நான் அழுதேன். ஏன்னா, அந்தக் காலத்தில சினிமாவில் நடிக்கறவங்களை சொஸைட்டில கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க. இப்போ மாதிரி இல்ல. இப்போ எல்லோருமே சினிமாவில நடிக்கலாம்னு இருக்கு. அப்போ சினிமாவில் நடிச்சா கல்யாணம் ஆகறது கூட கஷ்டம்னு இருந்தது. எங்கப்பா சொன்னாரு – “எந்த ஃபீல்டுதான் ஒழுங்கா இருக்கு? எந்த ஃபீல்டா இருந்தாலும் நாம நடந்துக்கற முறைலதான் இருக்கு. உன்னை நான் என் கண் இமை மாதிரி காப்பாத்துவேன்”னு சேலன்ஞ் பண்ணினாரு. எங்கப்பாவுக்கு ரொம்ப வில் பவர்! அதுதான் பின்னால எனக்கு வந்தது. அவர் போட்ட அந்த உறுதியான அஸ்திவாரத்தினாலதான் என்னால் எல்.ஐ.சி. பில்டிங் அளவுக்கு வாழ்க்கையிலே உயர முடிஞ்சுது.

அந்தக் காலத்துல, லவ் ஸீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சுக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேல லவ் ஸீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்ப தெரியாது. படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே “ஹீரோ என் கையைப் பிடிக்கக்கூடாது. தோள்ல சாயக்கூடாது”ன்னெல்லாம் எங்கப்பா கண்டிஷன் போட்டாரு. இப்போ எடுக்கற லவ் ஸீன் எல்லாம் பாத்தா, கண்ணு சுத்தறது. (ஆர்வி: இது 85, 86-ஆம் வருஷத்தில்)

ஆடம்பரங்களோ, சினிமா ஸ்டார்ங்கிற ஜிகுபிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி! என்னை நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாத்தான் எப்போதும் நினைச்சுக்கறேன். அதானாலதான் இன்னும் எங்க வீடு மத்த வீடுகள் மாதிரி சாதாரணமாத்தான் இருக்கும். ஒரு சினிமா ஸ்டார் வீடுங்கற மாதிரி ஒரு ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கறேன்.

41-ல மெட்ராஸூக்கு வந் தோம். பக்திமாலானு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தாரு. அதுல மீராபாய் மாதிரி கேரக்டர். அந்தப் படத்துக்காகத்தான் நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அந்தப் படத்துல நான் டான்ஸ் நல்லா பண்ணலை. அதானலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.

அதுக்கப்புறம் கிருஷ்ண ப்ரேமம். அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, அதிலதான் என் கணவரா வரப்போறவர் அசோசியேட் டைரக்டரா இருந்தாரு. அப்போ என் கல்யாணப் பேச்சு வந்தது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன். அவர் பேசறது எந்த மொழி, என்ன சாதின்னு கூட எனக்குச் சரியாத் தெரியாது.

எங்கப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு. 1943-ல டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கப்புறம் சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம்.

கல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம் வீட்டுலேயே சமைச்சுக்கிட்டிருந்தேன். பி.என்.ரெட்டி வந்து சொர்க்க சீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்பமாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்ப்பெல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.

படவுலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. எல்லா ஹீரோவும் என்கிட்ட நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என்கிட்ட ஒரு மரியாதையோட தூரத்திலதான் இருப்பாங்க. அப்பத்தான் மொதல் தடவையா எம்.ஜி.ஆர். என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு. அதிலேர்ந்து நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் அம்மா ஆயிட்டேன். 30 வயசிலியே! சரி, இதுவும் ரொம்ப சௌகரியமா போச்சுனு நெனைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சாரு.

நான் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துல நடிக்கும்போது, சிவாஜி ஷூட்டிங்குக்கு வந்திருந்தாரு. அப்போ, இந்தம்மாவோட ஒரு படம் நான் ஆக்ட் பண்ணா நல்லாயிருக்குமேனு காமிராமேன் டபிள்யூ.ஆர். சுப்பாராவ்கிட்ட சொன்னாரு. உடனே கள்வனின் காதலி புக் ஆச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரங்காராவ்னு என் கூட நடிச்சவங்கள்லாம் நல்ல ஆர்டிஸ்ட்டா இருந்தாங்க.

58-லே எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குதான் கொடுப்பாங்கனு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. ஆனா, அப்ப அப்படி செஞ்சதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன். அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையானு எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் கலைமாமணி பட்டம் கொடுத்துட்டாங்க. சரி, சரி என்னை மன்னிச்சுக்குங்கோ. இதுக்கு மேலே நான் இன்னிக்குப் பேசக் கூடாது. உபவாசம்!